பொது வேட்பாளர் யாருக்காக?

29-04-2024

0

0

சிறிலங்காவில் அதிபர் தேர்தல் இவ்வாண்டின் இறுதிப் பகுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேர்தலில் யார் யார் போட்டியிடுவார்கள் என்ற விபரம் உறுதியாகத் தெரியவராவிட்டாலும் தற்போதைய அதிபர் இரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் போட்டியிடுவார்கள் என்ற ஊகத்தை ஊடகங்கள் வெளியிடுகின்றன. இவர்களில் அனுரகுமார மட்டுமே தான் போட்டியிடவிருப்பதாக வெளிப்படையாக அறிவித்து, பரப்புரைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.  வழமைபோலவே, இத்தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது பற்றி தமிழ் அரசியற் தரப்புகளும் பேச ஆரம்பித்திருக்கின்றன. தமது தரப்பில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவது பற்றியும் சில தமிழ் அரசியல்வாதிகள் பேசுகின்றனர். அதனை தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பேசுபொருளாக மாற்றுவதற்கு சில ஊடகங்களும், பத்தி எழுத்தாளர்களும் எத்தனிக்கின்றனர்.

1978 இல் இலங்கைத் தீவில் புதிய யாப்பு கொண்டு வரப்பட்டதிலிருந்து, இன்று வரை ஒன்பது அதிபர் தேர்தல்கள் நடந்திருக்கின்றன, ஆறுபேர் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். இரண்டு பேர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் ஒரிருவருக்கு தமிழர்கள் பெருமளவில் வாக்களித்திருக்கிறார்கள். இவர்களது ஆட்சிக் காலத்திற்தான் ஈழத் தமிழினம் மிகப்பெரிய இனவழிப்பிற்கு முகங்கொடுத்தது. இருப்பினும் இத்தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் தம்மால் ஒர அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை தமிழ் மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டிருக்கிறது. ஆதலால் தமிழர்களில் பெரும்பாலானோர் ஒவ்வொரு தேர்தலிலும் ஆர்வத்துடன் வாக்களிக்கிறார்கள். தமிழர்கள் மத்தியில் இவ்வளவு நம்பிக்கையிருக்கும்போது நாட்டின் வாக்காளர் தொகையில் 75 விழுக்காட்டினைக் கொண்டிருக்கும் சிங்களவர்கள் தாங்களே தங்கள்
தலைவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று நம்பியிருப்பதனைக் குறை கூற முடியாது. 

இன்றைய சூழலில் தாம் விரும்பிய ஒரு வேட்பாளரை தெரிவு செய்யும் வலு இலங்கைத் தீவில் வாழும் மக்களுக்கு இருக்கிறதா?  இன்னொரு வகையில் கூறுவதானால், மேற்குலகஅரசுகளும், இந்தியாவும் விரும்பாத ஒரு வேட்பாளரைத் தெரிவு செய்யும் வாய்ப்பு  இலங்கைத் தீவிலுள்ள வாக்காளர்களுக்கு இருக்கிறதா? அவ்வாறு ஒருவரைத் தெரிவு செய்தால் அவரால் அதிபர் பதவியில் தனது பதவிக் காலம் வரை தொடர முடியுமா? இவ்வினாக்களுக்கு விடை காணாமல் சிறிலங்காவின் அதிபர் தேர்தல் பற்றிப் பேசுவதில் பயனில்லை.

சிறிலங்காவின் அரசியல் நிலவரத்தை புரிந்து கொள்வதற்கு, 2019 ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலும் அதற்குப் பின்னரான நிகழ்வுகளையும் ஆய்வு செய்தாலே போதுமானதாகவிருக்கும். இத்தேர்தலில் தமிழ் மக்கள் பெருமளவில் (வாக்களித்தவர்களில் சற்றேறக் குறைய 70 விழுக்காடு வாக்களார்கள்) சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்தார்கள். தேர்தலில் 52 விழுக்காடு வாக்குகள் பெற்று அமோக வெற்றியீட்டிய கோத்தாபாய இராஜபக்ச, தான் தனித்து சிங்கள மக்களின் வாக்குகளினால் வெற்றி பெற்றதாக் கூறினார். சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு சிறுபான்மை தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களின் வாக்குகள் அவசியமில்லை என்பதனை இத்தேர்தலின் முடிவு மீள ஒரு தடவை உறுதி செய்தது. 

சிங்கள மக்களின் அபிமானத்தைப் பெற்றிருந்த போதிலும்,  கோத்தாபாயவினால் இரண்டு வருடங்களுக்கு மேல் ஆட்சியில் தாக்குப் பிடிக்க முடியவில்லை. 2020ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியடைந்து, தேசியப் பட்டியலிருந்து தெரிவான  ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் இரணில் விக்கரமசிங்க முதலில், பிரதமராகவும் பின்னர் அதிபராகவும் தெரிவானார்.  இன்றைக்குக் கூட தேர்தலில் இறங்கினால் வெற்றி பெற முடியாத நிலையிலிருக்கும் இரணில் மேற்குலக - இந்திய அரசுகளின்  ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையின் காரணமாகவே பதவியில் அமர்த்தப்பட்டார் என்பதனை எண்ணிப் பார்த்தால், சிறிலங்காவின் ஜனநாய முறையின் சீர்கேட்டினைப் புரிந்து கொள்ள முடியும். தங்களுடையது இறைமையுள்ள ஒரு நாடு என நம்பிக் கொண்டிருக்கும் சிங்கள மக்களுக்கு தாங்கள் வல்லாதிக்கங்களின் பிடியில் சிக்கியிருப்பது தெரியாது மீண்டும் ஒரு தேர்தலில் வாக்களிக்கத் தயாராகுகிறார்கள்.

கோத்தாபாயவும், இரணிலும் தமது ஆட்சிக் காலத்தில் IMF என்று மூன்று எழுத்துகளால் அழைக்ப்படும் சர்வதேச நாணய நிதியத்தை கையாண்டவிதத்தில் வேறுபடுகின்றனர்.  கோத்தபாய இந்நிறுவனத்திடன் உதவிபெற அஞ்சினார். இரணில் இந்த நிறுவனத்திடன் உதவிபெற்று அதன் நெறிப்படுத்தலுடன் ஆட்சி நடத்துகிறார்.  

அடுத்த அதிபர் தேர்தலில் வாக்காளர்களால் தெரிவு செய்யப்படுபவர்,  சர்வதேச நாணய நிதியத்தின் 'புதுத் தாராளவாத' நிகழ்ச்சி நிரலில் இலங்கையை ஆட்சி செய்யப் போகிறாரா இல்லையா என்பதுதான் இங்குள்ள தெரிவு. இரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திசாநாயக்க ஆகியோரில் எவரும் சர்வதேசநாணய நிதியத்தினை விரட்டப் போவதில்லை. ஆனால் இப்போதைக்கு அந்நிறுவனத்தின் நெறிப்படுத்தலில் அட்சரம் பிசகாமால் ஆட்சி செய்யக் கூடிய ஒரே நபர் இரணில் விக்கிரமசிங்க மாத்திரமே. கருத்துக் கணிப்புகளில் மிகக் குறைந்த விழுக்காடு வாக்குகளைப் பெற்று வரும் இரணில் விக்கிரமசிங்கவை அடுத்த தேர்தலில் வெற்றிபெற வைப்பதே மேற்குலக - இந்திய அரசுகளின் இலக்கு. அதற்கான தந்திரோபாயங்களை அவை வகுத்து வருகின்றன. தேர்தல்களில் வாக்களிப்பதில் இலங்கை மக்கள் காட்டும் ஆர்வம் இவ்வரசுகள் தமது அரசியற் சித்து விளையாட்டுகளை அரங்கேற்றுவதற்கு ஏதுவான சூழலைத் தோற்றுவிக்கிறது.

தற்போது மேற்கு ஆபிரிக்க நாடுகள் சிலவற்றில் தோன்றியிருக்கும் அரசியல் நிலமையை இலங்கை நிலவரத்துடன் ஒப்பிடும்போது  இரண்டும் வேறுபட்டுக் காணப்படுகின்றன. முன்னர் பிரஞ்சுக் காலனித்துவத்துக்கு உட்பட்டிருந்த மாலி, நைஜர், பேர்கினா பாசோ ஆகிய நாடுகள் தற்போது பிரான்சின் செல்வாக்கிலிருந்து விடுபட்டுச் செல்ல விழைகின்றன. இந் நாடுகளின் ஆட்சியிலிருந்த சிவிலியன் அரசாங்கங்கள் இராணுவ சதிப் புரட்சியில் அகற்றப்பட்டபோது இந்நாடுகளில் உள்ள மக்களில் கணிசமானோர் வெளிப்படையாகவே ஆதரவு வழங்கினர். ஐனநாயக முறையான தேர்தல்களில் நம்பிக்கை கொள்ளாமல், தங்கள் நாடுகளுக்க சிறந்த ஆட்சியே தேவையானது எனற கருத்து இந்நாடுகளிலுள்ள இளையவர்கள் மத்தியில் கருக் கொண்டிருக்கிறது. தமது நாடுகளிலுள்ள கனிமவளங்கள் மேற்குலக நாடுகளினால் கொள்ளையிடப்படுவதாக இவர்கள் எண்ணத் தலைப்பட்டுள்ளமையால்,  இரஸ்சியா, சீனா போன்ற மேற்குலக நாடுகளுடன் முரண்படும் நாடுகளுடன் இந்நாடுகள் உறவினைப் பேண விரும்புகின்றன.

மேற்குறித்த மேற்கு ஆபிரிக்க நாடுகளிலுள்ள நிலைமை இலங்கையில் இல்லை. மேற்குலக நாடுகளிடமும் - இந்தியாவிடமும் தங்கியிருக்கின்ற நிலையையிட்டு இலங்கை மக்கள் கலவரப்படுவதாகத் தெரியவில்லை. மேற்குலக அரசாங்கங்களின், குறிப்பா ஐக்கிய அமெரிக்காவின் செல்வாக்குக்குட்பட்ட சர்வதேச நாணய நிதியத்தினை வெறுமனே உதவி வழங்கும் நிறுவனமாகவே இலங்கை மக்களில் பெரும்பகுதியினர் பார்க்கிறார்கள்.

இத்தகைய பின்புலத்தை வைத்தே இலங்கையில் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலைப் பார்க்க வேண்டியிருக்கிறது. 'தமிழ் பொது வேட்பாளர்' என்ற கோரிக்கை என்பது அரசியல் மயப்பட்ட ஒன்றாகத் தோன்றினாலும், அது யாரை தேர்தலில் வெல்ல வைப்பது என்பதனை நோக்கமாகக் கொண்டது. இரணில் விக்கிரமசிங்கவை வெல்ல வைக்க முயலும் மேற்குலக - இந்திய அரசுகளின் நோக்கத்திற்கு இது பெருமளவில் உதவும். தமிழ் மக்களில் பெரும் பகுதியானர்வர்கள் இரணிலுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பிருந்தால் இக்கோரிக்கை கைவிடப்பட்டுவிடும். இரணிலுடன் நெருங்கிய போட்டியிலிருப்பவருக்கு தமிழ் மக்களில் கணிசமானவர்களின் வாக்குகள் கிட்டும் என்ற நிலை உணரப்படுமாயின், பொது வேட்பாளர் கோரிக்கை வலுப் பெறும். தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணிக்காமல் தடுப்பதற்கும் இக்கோரிக்கை உதவும்.

பொது வேட்பாளரை நிறுத்துவதன் நோக்கம் இவ்வாறிருந்தாலும், இக்கோரிக்கையை வைத்து அரசியல் செய்வதற்கு தமிழ் மக்கள் மத்தியிலுள்ள பல்வேறு தரப்புகளும் முயற்சி செய்யும். தமிழ் மக்களின் ஒற்றுமையை நிலைநாட்டவே இக்கோரிக்கை முன்வைக்கப்படுவதாகவும், இதனை எதிரப்பவர்கள் தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளரிடமிருந்து பெட்டியை பெற்றுக் கொண்டதாகச் செய்தி பரப்பப்படும். பொது வேட்பாளரைத் தேர்தலில் நிறுத்துவதன் மூலம் எவ்வாறு தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற கணித நெறிமுறையை யாராவது ஒருவர் கூறக் கூடும். ஆனால் இவையெதுவும்  எமக்கு உதவாது என்பதனை வரலாறு எமக்குக் கற்றுத் தந்திருக்கிறது.