பண்டையகாலத்தில், மன்னர்கள் எதிரிநாட்டின் மீது போர் தொடுத்து வேற்றுநாட்டு மக்களை அடிமைகளாகச சிறைப்பிடித்துவருவது போல், வன்னியில் போர் நடைபெற்ற பிரதேசங்களிலிருந்து, மூன்று இலட்சம் தமிழ் மக்கள் பிடித்து வரப்பட்டு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களது சொந்த இடங்களிற்கு செல்வதற்கு சிறிலங்கா அரசு இப்போதைக்கு அனுமதிக்கும் அறிகுறிகள் தென்படவில்லை.
ஈழத்தில் செயற்பட்டுவந்த ஆட்சியமைப்பும், அதன் கட்டமைப்புகளும் நிர்மூலமாக்கப்பட்டு, மக்களும் போராளிகளும் என ஆயிரக்கணக்கானோர்; படுகொலை செய்யப்பட்டுள்ளனர். எஞ்சியவர்கள் வதை முகாம்களில் அடைக்கப்பட்டு கொடிய சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இராணுவ ஆக்கிரமிப்பிற்குள் எமது தேசம் உள்ள நிலையில், விடுதலைப்போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவே சிறிலங்கா அரசதரப்பினரும், அவர்களின் ஆதரவாளர்களும் பரப்புரை செய்து வருகின்றனர்.
இலங்கைத்தீவில் தமிழர்கள் மீது நடத்தப்பட்டுவரும் தாக்குதல்கள், வதை முகாம்களில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்டுவது போன்றவற்றை காரணங்காட்டி, அங்கு பல சுற்றாக இனப்படுகொலை நடைபெறுவதாக பிரித்தானிய பல்கலைக்கழகப் பேராசிரியர் மாட்டின் ஷோ அண்மையில் எழுதிய கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருக்கிறார். சர்வதேச விவகாரம், மானிடவியல் ஆகிய துறைகளில் புலமைபெற்ற இந்தப் பேராசிரியர் கடந்த மாதம் வரை இலங்கைத்தீவில் நடைபெறும் வன்முறைகளை இனவழிப்பு என தவறாக பரப்புரை செய்யப்படுகிறது எனக்குறிப்பிட்டு வந்தார்.
சர்வதேசப் பயங்கரவாதம், இனவழிப்பு ஆகியவற்றை கையாளும் விடயத்தில், மேற்கு நாடுகளும் அதனுடன் அணி சேர்ந்திருக்கும் மற்றய நாடுகளும், ஒத்தகருத்துடன் செயற்பட்டு வருகின்றன. அவை ஆயுதம் ஏந்திப்போராடும் அரசுகள் சாராத அனைத்து அமைப்புக்களையும் பயங்கரவாத அமைப்புகளாக வகைப்படுத்தி வருகின்றன.
சொந்த நாட்டு மக்களின் மனிதவுரிமைகளினை மீறும் அல்லது இனவழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அரசுகள் மீது பொருளாதார அழுத்தத்தினைப் பிரயோகிப்பதிலும், மிகுந்த தயக்கம் காட்டப்படுகிறது. சிறிலங்காவிற்கு வழங்கப்பட்டு வருகிற GSP plus எனும் ஏற்றுமதி வரிச்சலுகையை நிறுத்துவதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கைக்கொண்டுவரும் அணுகுமுறையிலிருந்து இதனை தெரிந்து கொள்ளலாம்.
தமீழீழத்தின் பெரும் நிலப்பரப்புக்களை சிங்கள இராணுவம் வல்வழைப்புச் செய்துவருகின்ற இன்றைய நிலையில், எஞ்சியிருக்கிற பிரதேசங்களும் பறிபோய்விடுமாயின், முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நீண்டு செல்லும் ஈழத்தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் அதன் இலக்கையடையாமலே முறியடிக்கப்பட்டுவிடும் என்ற பயம் நம்மிடையே சிலருக்கு ஏற்பட்டிருக்கிறது. வெற்றிச்செய்திகளை மட்டுமே எதிர்பார்ப்பவர்களாக இருப்பவர்கள், தோல்விகள், சோதனைகள் ஏற்படும்போது துவண்டு விடுகிறார்கள். அவர்கள் மற்றவர்களுக்கும் அவநம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். சித்தாந்தக் கனவுகளில் வாழும் கையாலாகாதவர்களோ, இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, தமது தத்துவ விளக்கத்தினை அளித்து மக்களை குழப்பி வருகிறார்கள்.
“கருணா” என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் மகிந்த இராஜபக்ச தலைமையிலான பொதுசன ஐக்கிய முன்னணியின் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆயுதவழியிலான போராட்டப்பாதையை கைவிட்டு சனநாயகவழியில் கிழக்க மாகாண மக்களுக்காக பணிபுரிவதற்காக தான் பாராளுமன்றப்பாதையை தேர்ந்தெடுத்திருப்பதாக அவரது கன்னிப்பேச்சில் குறிப்பிட்டிருக்கிறார். தனக்கு விரும்பிய அரசியல் பாதையை தெரிவு செய்வதற்கு அவருக்கு உரிமையுள்ளபோதும், அண்மைக்காலத்தில் அவர் புரிந்த குற்றச்செயல்களிலிருந்து தப்பிக் கொள்வதற்கு பாராளுமன்றப்பதவியை பாவிப்பதனை நாகரிக சமூகம் அனுமதிக்கக்கூடாது.
இலங்கைத்தீவில் கடந்த முப்பது ஆண்டுகளாக தொடரும் யுத்தத்தில், ஈழத்தமிழ்மக்கள் பல்வேறுபட்ட பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்துள்ளனர். ஆனால்,
இன்று அவர்கள் வரலாற்றில் என்றுமில்லாதளவிற்கு, பாரிய மனிதஅவலத்திற்கு உள்ளாகியுள்ளனர். தமிழினத்தின் இருப்பே கேள்விக்குறியாகியுள்ளது.
விடுதலைப் புலிகளின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை நோக்கி அகோர எறிகணைத்தாக்குதல்களையும், விமானத்தாக்குதலகளையும் நடாத்தி வரும் சிறிலங்காப்படைகள் அவர்களுக்கு, அத்தியாவசியமான பொருட்கள் சென்றடைவதனை தடுத்து வருகின்றனர். மக்களை அங்கிருந்து வெளியேற்றி, தமது ஆக்கிரமிப்பில் உள்ள பகுதிகளில், அகதி முகாம்களில் முடக்கி விடுவதற்கு, எல்லாவிதமான முயற்சிகளையும் சிறிலங்கா அரசு மேற்கொண்டு வருகிறது.
இலங்கைத்தீவின் இனப்பிரச்சனை விடயத்தில் வெளிப்படையாகத் தலையிடுவதனை தவிர்த்து வந்த இந்தியா, தனது அணுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளமையை அவதானிக்க முடிகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய மத்திய அரசின் அதிமுக்கிய அதிகாரிகளான, பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயண், வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனன், பாதுகாப்புச் செயலாளர் விஜய் சிங் ஆகியோரின் அண்மைய கொழும்புப் பயணம் அமைந்திருக்கிறது. கொழும்பில் இவர்கள் சிறிலங்கா சனாதிபதி இராஜபக்ச, தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், சிறிலங்கா அரச ஆதரவுத் தமிழ்க் குழுக்கள் எனப் பலரையும் சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடாத்தியிருக்கிறார்கள்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் குழுவில் அங்கத்துவம் பெறுவதற்கான தெரிவில் சிறிலங்கா தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. அப்பட்டமான மனிதவுரிமை மீறல்களைப் புரிந்து வரும் சிறிலங்கா அரசு அனைத்துலகப் பரப்பில் ஒரு தவறான உதாரணமாக அமைந்துவிடும் என்பதால், இக்குழுவில் சிறிலங்கா இடம் பெறுவதை பல நாடுகள் விரும்பவில்லை.
நாளை நடைபெறவிருக்கும் பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல், அப்பிரதேசத்தில் சுமூக நிலையை மீளக்கொண்டுவரும் எனவும், இனி அங்கு சனநாயகமுறையிலான ஆட்சி அலகுகள் செயற்படத் தொடங்கும் எனவும் சிறிலங்கா அரசு பரப்புரை செய்து வருகின்றது. மனிதவுரிமை மீறல்கள் உச்ச நிலையை அடைந்துள்ள நிலையில், அனைத்துலகப் பரப்பில் ஒரளவு தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் சிறிலங்காவுக்கு இத்தகைய பிரச்சாரம் அவசியமாக உள்ளது. ஆனால் கிழக்கின் உண்மை நிலையை புரிந்து கொண்டவர்களுக்கு இப் பிரச்சாரங்களில் மறைந்திருக்கும் அபாயத்தை பகுத்தறிந்து கொள்வதில் சிரமமேதும் இருக்காது.
மனிதவுரிமை மீறல்கள் உச்சகட்டத்திலிருக்கும் சிறிலங்காவின் அரசு சர்வதேசமட்டத்தில் தனிமைப்படுத்தபடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தமது நாட்டு மக்களை பாதுகாக்கும் பொறுப்பினை சிறிலங்கா சரிவரச் செய்யவில்லை எனக்காரணங்காட்டி, மக்களை பாதுகாக்கும் உரிமை என்ற அடிப்படையில் வெளிநாடுகளின் தலையீடு ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் சிறிலங்கா அரசினை தொற்றிக் கொண்டுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக கொசோவோ நிலை அங்கு தோன்றி விடுமோ என்ற அச்சத்தை சில சிங்கள அரசியல்வாதிகள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
விடுதலைப் போராட்ட இயக்கங்களை, அவை வன்முறைகளில் ஈடுபடுகின்றன எனக் குற்றஞ்சாட்டி, அப்போராட்டங்களில் உள்ள நியாயத்தன்மையை சர்வதேச உலகம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. வன்முறையினால் ஏற்படும் மனித அவலங்களை கருத்திற்கொண்டு ஆயுதப்போராட்டங்கள் நாகரீக உலகினால் வெறுக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் விடுதலைப் போராட்ட இயக்கங்கள் பயங்கரவாத அமைப்புகளாக பட்டியலிடப்பட்டுள்ளன. வன்முறையை கைவிட்டு சனநாயக வழிமுறைகளை கடைப்பிடிக்குமாறு அவற்றின் மீது பல்வேறு அழுத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
அண்மையில் தமிழ்நாட்டில் சில ஈழத்தமிழர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தைக் ;காரணங்காட்டி, கைதுசெய்யப்பட்டவர்களுக்கு புலி முலாம் பூசி, விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டை தளமாக பாவிக்கத் தொடங்கியுள்ளார்கள் என்ற பிரசாரத்தை இவ்விடயத்தில் அக்கறை கொண்ட சில வட்டாரங்கள் மேற்கொள்கின்றன. இதனை வாய்ப்பாக பயன்படுத்தி திரு. கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு சட்;டசபையை கலைத்துவிட தமிழ்நாட்டுத் அரசியல்வாதிகள் சிலர் எத்தனிக்கின்றனர். மீளவும் விடுதலைப்புலிகள் விவகாரத்தை அவர்கள் தங்களது அரசியல் நலன்களுக்காக பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.
யுத்த நிறுத்த ஒப்பந்த்திலிருந்து ஒருதலைப்பட்சமாக விலகிக்கொண்ட சிறிலங்கா அரசு சர்வதேசநாடுகளின் கண்டனங்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அவசர அவசரமாக சிறிலங்கா அரசியலமைப்பின் 13வது திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் தனக்கேற்றவகையில் தீர்வுத்திட்டமொன்றை வெளியிட்டுள்ளது. மாகாணசபைகள் மூலம் இனப்பிரச்சனைக்கு தீர்வுகாண்பதே அந்த தீர்வுத் திட்டத்தின் உள்ளடக்கமாக இருக்கிறது.
சிறிலங்கா அரசாங்கம் போர் நிறுத்த உடன்பாட்டிலிருந்து உத்தியோகபூர்வமாக விலகிக்கொண்ட சிலமணிநேரத்திலேயே இலங்கைத்தீவில் உள்ள மக்கள் அழிவுகளை சந்தித்துள்ளார்கள். மொனராகல மாவட்டத்தில் பயணிகள் பேருந்துமீது நடாத்தப்பட்ட தாக்குதலும், நேற்றய தினம் கிளிநொச்சி கனகபுரம் பகுதியிலுள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது நடாத்தப்பட்ட மோசமான விமானக்குண்டுத் தாக்குதல்களும் தீவு எதிர்நோக்கியுள்ள பாரிய மனித அவலத்தை கோடிகாட்டி நிற்கின்றன.
தாங்கள் போரில் வென்று வருகிறோம் என்ற நினைப்பு சிங்கள மக்களுக்கு இருக்கும்வரை சிறிலங்கா அரசின் போர் முயற்சிகளுக்கு அவர்கள் தமது ஆதரவினை வழங்குவார்கள். அங்கு குறைந்த எண்ணிக்கையாக இருக்கிற சமாதான ஆர்வலர்களினால் இந்நிலையில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது.
Recent comments
3 weeks 3 days ago
3 weeks 3 days ago
3 weeks 3 days ago
3 weeks 3 days ago
3 weeks 3 days ago
14 weeks 1 day ago
14 weeks 2 days ago
1 year 5 days ago
1 year 6 days ago
1 year 6 weeks ago