வணக்கம்!
கனகாலத்திற்கு பிறகு வெளியிடப்பட்ட கடந்த பேப்பருக்கு பெரிய அளவிலை வரவேற்பிருந்தது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கு. அதாலை பெருத்த வசதியீனங்களுக்கு மத்தியிலை இந்தப் பேப்பரை வெளிக் கொண்டாறம். தவிர்க்க இயலாத காரணங்களாலை எமது ஆசிரியர் குழுவில் முதகெலும்பாக இருக்கிற மணிவாசகன் இந்த பேப்பரிற்கு பங்களிக்க முடியவில்லை. சபேசன் சோதனைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். (வேறொன்றுமில்லை பரீட்சைக்கு தயாராகுகிறார்). அதாலை அவரும் எழுத முடியவில்லை.
வணக்கம்!
கன காலத்திற்குப் பிறகு சந்திக்கிறம். உங்களை சந்திச்சு ஆறு கிழமையாகிறது இடையில மூன்று பேப்பர்கள் வரேல்லை. தாள முடியாத சோகம். எங்களுக்கு நேசமான ஆக்கள் கனபேரை இழந்து விட்டோம். இந்நிலையில் எங்களால் முடியவில்லை அதனாலை ஒரு பேப்பர் வெளியிடேல்லை.
ஒரு பேப்பர் வெளிவராததையிட்டு பலர் அக்கறையுடன் விசாரிச்சினம், சில மெல்லிற வாயாள் வேறவிதமான வியாக்கியானங்கள் கொடுத்திச்சினம். உண்மையில் எங்களால் முடியவில்லை அவ்வளவுதான்.
வணக்கம்!
தமிழக நடிகர்களின் ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டம் தொடர்பாக கட்டுரை ஒன்றை மீள் பிரசுரம் செய்திருந்தோம. அதனால் நாங்கள் அவர்களது போராட்டத்தை கொச்சைப்படுத்தி விட்டதாக, பலர் அதிருப்தி தெரிவிச்சு வருகிறார்கள்;. தமிழக நடிகர்களையோ, நடிகைகளையோ அவமதிக்கும் எண்ணம் எங்களிட்டை கொஞ்சமும் இல்லை. கடவுள் எப்பிடியிருப்பார் எண்டே எங்களுக்கு காட்டினவையளை நாங்கள் அவ்வளவு சீப்பா நினைக்கேல்லை. வீக்கென்டுகளிலை நிகழ்ச்சி வைக்கவே எங்களிட்டை சொந்தமா சரக்கு இல்லை. இதுக்கிள்ளை அவையளை விட்டா எங்களுக்கு வேறை என்ன பொழுது போக்கு இருக்கு?
வணக்கம்!
இது மாவீரர் வாரம் ஆதலால் நாங்கள் எங்களை உற்சாகப்படுத்திக் கொண்டு, ஒரு நாள் முன்னதாகவே பிரித்தானியாவில் பேப்பரை வெளியிடுகிறோம். கனடாவிலை விசேட பதிப்பு ஒண்டு வெளியிடுறம். அதாலை வேலைப்பழு அதிகரிச்சுட்டது. பேப்பரிலை பிழையள் இருந்தால் மன்னியுங்கோ. இதென்ன வழமையான விசயந்தானே எண்டு நீங்கள் சொல்லிறது விளங்குது. இருந்தாலும் சொல்ல வேண்டியது எங்கடை கடமை எல்லோ!
சினிமா நடிகர்களைப்பற்றி தரக்குறைவாக எழுதாதேங்கோ எண்டு ஒரு சில விசிலடிச்சான் குஞ்சுகள் குறைப்படிருக்கினம். ஆரோ தல எண்ட ஆளை நாங்கள் அவமதிச்சுப்போட்டமாம். ஆர் அந்த தல எண்டு எங்கட சினிமாப்பகுதியை கேட்பம் எண்டால் அவையயை பிடிக்கேலாமல் இருக்கு. அவை வேறை கலை நிகழ்ச்சியளிலை பிசியாயிட்டினம்.
வணக்கம்! கடந்த பேப்பரில் ஒரு மாறுதலுக்காக ஒரு “கருத்து}ண்” (காட்டுனுக்கு இதுதான் தமிழாம்) உடன் பயோடேற்றாவும் பிரசுரித்திருந்தோம். அது பற்றி பலரும் தமது கருத்துக்களை எங்களுக்கு தெரிவித்திருக்கிறார்கள். அந்த சிறுபத்தியில் கொஞ்சம் கியூமருடனும், எள்ளலுடனும் நிரம்ப விசயங்கள் கலந்திருந்தாலும் எங்களுக்கு கிடைத்த கருத்தக்கள் ஒன்றுக்கு ஒன்று வேறுபட்டனவாக இருந்தன. கருத்துச்சுதந்திரத்தை மதிக்கும் ஒரு சனநாயகவாதி மட்டும் கொஞ்சம் குழம்பிப்போய் எங்களது பணியக தொலைபேசியை தொல்லைபேசியாக மாற்றியிருந்தார்.
வணக்கம்!
ஒரு பேப்பர் தொடங்கின காலத்திலிருந்தே அதுக்கு ஒரு பரந்த வாசகர்தளம் ஏற்பட்டுட்டுது. இது நாங்களே எதிர்பார்க்காத ஒண்டு. இருந்தாலும் உங்களை நாங்கள் எண்டைக்குமே குறைச்சு மதிப்பிடேல்லை. அதுபோல எங்களோடை இணைஞ்சு செயற்படுகிற ஆக்களின்ரை நேர்மையையும் உழைப்பையும் எப்பவுமே நாங்கள் மதிக்கிறோம். எல்லாரையும் எல்லாநேரமும் திருப்திப்படுத்தி கொண்டிருக்கிறது அல்லது முதுகு சொறிந்து கொண்டிருக்கிறது எங்கடை நோக்கமில்லை. ஒரு சமூகப் பேப்பர் எண்ட வகையிலை சமூகத்திலை நடைபெறுகிற விசயங்களைத்தான் எழுதுகிறோம், பிரசுரிக்கிறோம்.
வணக்கம்!
நூறாவது பேப்பர் பற்றி .. அதுவும் நூறு வரை வந்து விட்டதையிட்டு பலரும் எங்களுக்கு வாழ்த்துகள் தெரிவிச்சினம். மேற்கொண்டு என்ன செய்யோணும் எண்டு சின்ன சின்ன அட்வைசுகளும் தந்தினம். எல்லாருக்கும் நன்றி. முடிந்தவரை உங்கடை அட்வைசுகளை சிரமேற்கொள்ள முயற்சிக்கிறோம்.
நூறாவது பேப்பர் வந்திடுத்து எங்யைடியப்பா உங்கடை ஒரு விழா எண்டு பலர் கேட்டிச்சினம். கொஞ்சம் பொறுங்கோ! நாட்டு நிலமையள் சரியில்லை இப்ப விழாக்கள் வைக்கிறது நல்லாத் தெரியேல்லை இதுதான அவையளுக்கு நாங்கள் சொன்ன பதில். உங்களுக்கும் அதைத்தான் சொல்லிறம்.
வணக்கம்!
இது 96வது பேப்பர். நாங்கள் விளையாட்டு விளையாட்டாய் உங்களை அறுக்க ஆரம்பித்து நாலு வருசம் முடிஞ்சிட்டது. திரும்பிப்பார்த்தால் மலைப்பாய்த்தான் இருக்கு.
ஆண்டுகணக்கில் பெரிய பத்திரிகைகளில் பணிபுரிந்த அனுபவமோ, ஊடகத்துறை பற்றின படிப்போ எங்களிடமிருக்கவில்லை. ஒரு கொம்பியூட்டரும் பத்திரிகை வடிவமைக்கிற சொப்ற்வெயாரும் இருந்தால் பேப்பர் அடிக்கிறது ஒண்டும் சிரமமில்லை எண்டுதான் தொடங்கினம். இவ்வளவுத்துக்கு வந்து நிக்குது. உங்கட அன்பும் ஆதரவும் தான் எங்களை உற்சாகப்படுத்தியது. (இதை பப்பாவிலை ஏற வைத்தது மாதிரி எண்டு உதாரணம் சொல்லி உங்களை கோபப்படுத்தக்கூடாது.)
வணக்கம்!
“ஒரு விழா” அதான் உங்கடை திருவிழா பற்றின அறிவித்தலோடை உங்களை சந்திக்கிறம். செப்ரெம்பர் மாதம் நடத்துவம். இன்னமும் வடிவா முடிவெடுக்கேல்லை அதாலை உங்கடை ஐடியாக்களை தொடர்ந்து எங்களுக்கு தெரிவிக்கலாம். முக்கிய குறிப்பு ஒண்டையும் சொல்லோணும் நாங்கள் ஒருதருக்கும் பொன்னாடை போர்க்கிறதாய் இல்லை. ஆனால் நீங்கள் விழாவுக்கு வரும்போது பொன்னாடையை போர்த்திக் கொண்டு வந்தீங்கள் எண்டால் அதை கழட்டச் சொல்லி கேட்க மாட்டம்.
வணக்கம்!
கனடாக்காரர் ஒரு பேப்பருக்கு ஆக்கங்களை அனுப்பிறது குறைஞ்சிட்டுது எண்டு போன பேப்பரிலை எழுதினதாலேயே என்னவோ, இந்தமுறை ரொறன்ரோவிலிருந்தே ஒரு பேப்பர்காரன்கள் காரிகளின்ர ஒப்பாரியை எழுத வேண்டியதாய் போயிட்டு;து (ஏன் அபசகுனமாய் ஒப்பாரி எண்டு தொடங்கிறியள் நினைக்கிறவை அதை பூபாளம் எண்டு அல்லது விரும்பினமாதிரி மாத்தி வாசியுங்கோ). சும்மா சொல்லக்கூடாது சுத்திவர சினோவை பாத்துக் கொண்டு ரிம் ஹோட்டன் கோப்பியை குடிச்சுக் கொண்டு எழுதிறது நல்லாய்தான் இருக்கு.
வணக்கம்!
மூன்று வார கால இடைவெளியில் சந்திக்கிறோம். பெப்பிரவரி 29 வெள்ளியன்று வந்ததால் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை 7ம் திகதியாகி வி;ட்டது. இந்த இடைவெளியை பொறுக்க முடியாமல் என்னடியப்பா இன்னமும் பேப்பரைக் காணேல்லை .. என்ன செய்யிறியள்.. எண்டு கேட்டு போன் அடிச்ச ஆக்களுக்கு நன்றி. இப்பிடியான நாட்களிலைதானே எங்களுக்கு ஊர்லாப் (urlaub) கிடைக்கிறது. (அனுபவிக்க விடுறியள் இல்லை)
ஒரு பேப்பரின் ஆண்டுவிழாவை எப்பிடிக் கொண்டாடிறது எண்டு சிலர் தங்கடை ஐடியாக்களை எங்களுக்கு அனுப்பியிருக்கினம். அவற்றைபற்றி எங்கடை குழுவோடை கலந்தாலோசித்து என்ன செய்யப்போறம் என்பதை சீக்கிரம் அறிவிக்கிறம். அதுக்கிடையிலை மற்றாக்களும் உங்கட அபிப்பிராயங்களை எழுதி அனுப்புங்கோ.
வணக்கம்!
நேற்று காதலர் தினம், ஒரு பேப்பர் தயாரிப்பு பிசியில் அதை மறந்தே போனோம் வழமையாக வரும் தபாற்காரரும் கடந்த இரண்டு நாட்களாய் எங்கள் அலுவலகப்பக்கம் எட்டிப்பார்க்கவில்லை. கூரியரிலும் எதுவும் வரவில்லை என்ற எங்கட வயிற்றெரிச்சலைக் கொட்டாமல் மேலே தொடர்கிறோம்.
பிரான்சில் ஒரு பேப்பர் விநியோகம் ஒரளவு சீராகி விட்டது. ஜேர்மனியில்தான் இன்னமும் சரிவரவில்லை, தொடர்ந்து முயற்சிக்கிறோம். மற்றய ஐரோப்பிய நாடுகளில் ஒரு பேப்பரை விநியோகிக்க் அல்லது சந்தாதாரராக சேர்ந்து கொள்ள நீங்கள் விரும்பினால எங்களது லண்டன் பணிமனையில் பாலாண்ணையுடன் தொடர்பு கொள்ளுங்கள்.
வணக்கம்!
ஒரு புறம் குளிர் வாட்டினாலும், பேப்பரை நேரத்துக்கு உங்களிடம் கொண்டு போய் சேர்க்கவேண்டும் என்ற நோக்கத்தில் விசைப்பலகையை தொடும் போது பேப்பரை படித்து விமர்சிக்கப்போகின்ற அல்லது மகிழ்வடையப்போகின்ற உங்கள் முகங்களே தெரிவதால் வேறெதுதும் தெரிவதில்லை.
அண்மைகாலமாக ஒரு பேப்பர் பற்றிய விமர்சனங்கள் அதிகரித்துள்ளமை தெரியுது. இப்பத்தான் நாங்கள் பரந்த வாசகர் பரப்பை அடைந்திருக்கிறம் என்பது மகிழ்ச்சி தரும் விடயமே. ஒரே ஒரு கவலை, அந்த விமர்சனங்களை எங்களுக்கு அனுப்பினால் அதனை நாங்கள் பிரசுரித்து மற்றவர்களையும் வாசிக்க வைக்கலாம்.
வணக்கம்!
பொங்கல் இண்டைக்கோ அல்லது நாளைக்கோ எண்ட குழம்பமிருந்தாலும் பொங்கி மகிழந்திருப்பீர்கள். எங்களுக்கும் மறவால் பொங்கல், பலகாரங்களை கொண்டு வந்து தந்து அசத்தி விட்டீர்கள். நெஞ்சார்ந்த நன்றி.
ஐரோப்பாவில் பேப்பர் விநியோகத்தில் ஏற்பட்ட சில சிரமங்கள் காரணமாக போனமுறை பேப்பர் எல்லா இடமும் அனுப்பேலாமல் போயிடுத்து. இப்போது ஐரோப்பாவில் ஒரு பேப்பர் விற்பனைக்கு விடப்பட்டுள்ளதால், பேப்பரை விற்பதற்கும் விநியோகிப்பதற்கும் விரும்புவர்கள் லண்டனிலுள்ள எங்கள் தலைமை பணியகத்துடன் தொடர்பு கொள்ளுங்கள். அதுபோல் வடஅமெரிக்காவில் சந்தாதாரகி ஒரு பேப்பரை அஞ்சலில் பெற்றுக் கொள்ள விரும்புவோர் ரொறான்ரோவிலுள்ள எமது பணியகத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்.
Recent comments
3 weeks 4 days ago
3 weeks 4 days ago
3 weeks 4 days ago
3 weeks 4 days ago
3 weeks 4 days ago
14 weeks 2 days ago
14 weeks 3 days ago
1 year 6 days ago
1 year 1 week ago
1 year 6 weeks ago