படம் காட்டுகிறார் நிர்மலா

by:
தேவபுத்திரன்

“No More Tears Sister”

போரின் கொடுரத்தின் மத்தியில் மரணம் தவிர்க்க முடியாததாக இருந்தாலும், நாங்கள் அன்புசெலுத்துபவரை இழக்கின்றபோது அதனை தாங்கிக்கொள்ள முடியாததாகி விடுகிறது. கொல்லப்பட்ட தங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவரை மீள நினைத்து பார்க்கும் ஓரு குடும்பத்தின் கதைதான் “No More Tears Sister”.  ”.  கனேடிய தேசிய திரைப்பட சபையால் தயாரிக்கப்பட்ட இவ்விபரணப்படம், 1989ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம், இனந்தெரியாதவர்களால் யாழ்ப்பாணத்தில் சுட்டுக்கொல்லப்பட்;ட மருத்துவபீட விரிவுரையாளர் டொக்டர் ராஜினி திரணகம பற்றியது.  கடந்த 13ம்திகதி Paddington  லிலுள்ள Frontline Club  ல் இவ்விபரணத்தை பார்க்கக்கிடைத்தது.

ராஜினியின் வாழ்க்கை வரலாற்றை அவரது குடும்பத்தினர் கூறுவதுபோல திரைப்படம் நகருகிறது. படத்தின் பெரும்பாகத்தை ராஜினியின் மூத்த சகோதரி நிர்மலா (நித்தியானந்தன்) ராஜசிங்கம் ஆக்கிரமித்துக் கொள்கிறார். ஆங்காங்கே ராஜினியின் முன்னாள் கணவர் தயாபால திரணகமவும், பிள்ளைகளும் அவரது ஏனைய சகோதரிகளும், பெற்றோரும் கதை கூறுகிறார்கள். இறந்துபோன ராஜினியாக அவரது மகள் சரிகா நடிக்க மற்றயபாத்திரங்களில் பெரும்பாலும் அவரவரே தோன்றுகிறார்கள்.

விவரணம் முழுக்க முழுக்க உண்மையானது என தயாரிப்பாளரும், இது பக்கச்சார்பில்லாமல் சொல்லப்படுகின்ற கதை என அமெரிக்க Human Rights Watch ஐ சேர்ந்த Jim Ross  என்பவரும் கூறியுள்ளனர். இவ்விடயத்தில்தான் இவர்களுடன் எனக்கு உடன்பட முடியாதுள்ளது.

முற்றிலும் மேலைத்தேச பார்வையாளர்களை அதுவும் மனிதவுரிமை ஆர்வலர்களை கவரும் வண்ணம் அழகாகக படமாக்கப்பட்டுள்ள இவ்விவரணத்தில்
இலங்கைத்தீவின் இனமுரண்பாடுகளையும் அதன் தாக்கத்தையும் நிர்மலாவும் அவரது குடும்பமும் எவ்விதம் பார்க்கிறது என கூறப்படுகிறதே தவிர அதன் உண்மைத்தன்மை பற்றி தயாரிப்பாளர்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. மாறாக இதனையே தீவில் காணப்படும் நடைமுறை யதார்த்தமாகக் காண்பிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1982ம் ஆண்டு,  காயப்பட்ட விடுதலை புலிப்போராளி ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்து சிகிசிசையளிக்க உதவினார் என சிறிலங்காப்படையினரால கைது செய்யப்படும்வரை தமிழ்அரசியலில் அறியப்படாத ஒருவராக இருந்த நிர்மலா ஓரு அரசியல் போராட்டக்காரராக இவ்விவரணத்தில் சித்தரிக்கப்படுகிறார். நிர்மலா தன்னை Harvard பல்கலைக்கழகத்தில் பயின்ற,  Jane Austin நாவல்களை படிக்கிற, மத்தியதரவர்க்க, மார்க்சிய லெனினிச மாவோவிச தத்துவங்களால் ஆகர்சிக்கப்பட்ட முற்போக்கு பெண்ணிலைவாதியாக சுய விமர்சனம் செய்கிறார். மேலைதேச மத்திய வர்க்க பார்வையாளரை மனதில்கொண்டு, தானும் உங்கள் வர்க்கம்தான் என இந்த “முற்போக்குவாதி” சொல்லாமல் சொல்கிறார்.

விடுதலைப்புலி போராளிகள் நிர்மலாவின் விருப்பத்துடன் அவரை சிறை மீட்டு அழைத்து செல்லும்போது தற்காப்புக்காக சயனைற் குப்பிகளை கொடுத்ததை “மரணிக்கவா வெளியில் எடுத்து வரப்படுகிறேன்” என பரிகசிக்கிறார். தங்கள் உயிர்களை பணயம்வைத்துத்தான் அந்த போராளிகள் அவரை சிறைமீடடார்கள் என்பதை நிர்மலாவினால் உணரமுடியாமல் இருக்கிறது. ஓரு வேளை தன்னை போன்ற ஆங்கிலம் படித்த மத்திய வகுப்பினர்களின் உயிரானது, உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த போராளிகளை விட முக்கியமானதாக அவருக்கு தெரிந்திருக்கலாம்.

தான் 6மாதத்துக்கு மேல் இயக்கத்திலிருக்க முடியாமல் போனதற்கு போராளிகளுக்கு அரசியல் போதிப்பதை தலைமைப்பீடம் விரும்பாததை காரணமாக காட்டுகிறார். ஆனால் அடேல் பாலசிங்கம் அவர்கள் தனது சுதந்திர வேட்கை (Will to Freedom எனும் நூலில் நிர்மலா இயக்கத்தில் இணைந்தது பற்றி குறிப்பிடும்போது போராட்டத்தில் இணைந்து கொண்ட கிராமத்துப் பெண்களுக்கும் நிர்மலாவுக்கும் இருந்த இடைவெளி மலைக்கும் மடுவுக்குமிடையிலானது என எமுதியுள்ளார்.

நிர்மலாவின் குழப்பமான பெண்ணிலை வாதம் அவரது வாழ்வில் மட்டுமல்ல இவ்விவரணத்திலும் பிரதிபலிக்கிறது. தயாபாலவை மணந்திருந்த ராஜினி அதே சமயம் பிரித்தானிய விஞ்ஞானி ஓருவரையும் காதலித்ததாக கூறப்படுகிறது. அதற்கு தயாபால மூலமாகவே நியாயமும் கற்பிக்கப்படுகிறது.

இலஙகைத்தீவின் அரசியல் வரலாற்றில் அறியபடாதவராக ((Non Entity இருக்கும் ராஜினியின் முன்னாள் கணவர் தயாபாலா இலங்கை அரசாலும் ஜே.வி.பியாலும் தேடப்பட்ட புரட்சிவாதியாக காண்பிக்கப்படுகிறார். ஏணஸ்ரோ சே குவெராவை ஒத்த அரசியல் போராட்டவாதியாக சித்தரிக்கபடும் தயாபாலா தனது அரசியலிருந்து வேறுபட்டு போகும் மனைவியை விவாகரத்து புரிந்தார் என விபரிக்கப்படுகிறது. (திரையரங்கில் பார்வையாளராக கலந்து கொண்ட தயாபாலாவிடம் அவரது அரசியல் ஈடுபாடுகள் பற்றி நான் கேட்டபோது, தான் தலை மறைவு அரசியலில் ஈடுபட்டதாகவும் ஐந்து வருடம் சிறையிலிருந்ததாகவும் கூறினாரே தவிர மேற்கொண்டு தனது சித்தாந்தங்கள் பற்றி விபரிக்க முடியாதவராக இருந்தார்.)

தனது தங்கையை கொன்றது LTTE தான் என அந்த அமைப்பிலிருந்த சிலர் தன்னிடம் கூறியதாக விவரணத்தில் நிர்மலா கூறுகிறார். அதனை அப்படியே கேள்வியின்றி தயாரிப்பாளர்கள் ஏற்றுக்கொண்டள்ளனர்.

தங்களைப்போன்ற கிறிஸ்தவ பராம்பரியம் கொண்ட மத்திய தரவர்க்கத்து புத்தி சீவிகளின் கருத்துக்களை தேசியவாதிகளான அறிவற்ற தமது சமுகத்தினால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளதே இலங்கைத்தீவின் பிரச்சனைகளுக்கான காரணமென நிறுவுவதே நிர்மலாவின் நோக்கமாக இருக்கிறது. அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் வாழும் மக்கள் தங்களிடமிருந்தே மனிதாபிமானத்தை கற்றுகொள்ள வேண்டுமென்று கருதும் மேலை நாட்டு மனிதவுரிமை வாதிகளுக்கு இது ஏற்புடையதாகவே இருக்கும்.

ராஜினியின் கொலை கண்டிக்கப்பட வேண்டியது. அவரது மரணம் குடும்பத்தில் ஏற்படுத்திய வடு ஆறாததுதான் ஆனால் அதில் ஆதாயம் தேட முனைவது ஏற்றுக்கொள்ள முடியாதது. படுகொலை செய்யப்பட்ட தனது தங்கையின் ஆடைகளை களைந்து தனது அம்மணத்தையும் அசிங்கங்களையும் மறைக்க முற்பட்டுள்ளார் நிர்மலா.