12வருடங்களின் பின் ஊரை மிதித்த போது உண்டான மகிழ்வும் நாங்கள் படித்த அந்த ரியூசன் வளவும் தந்த ஞாபகங்கள் எத்தனையோ. அந்த மாமரமும் பலாமரமும் சொன்ன சோகங்கள் இதயத்தை இறுக்கிப் பிழிந்து மனசை வதைத்த கணங்கள் ஒவ்வொன்றும் நினைவுகளை விட்டுப் போகாமல் மனசுக்குள் மழைத் தூறலாய் நனைத்துக் கொள்கிறது.
அது 'பிறெய்ன் கல்வி நிலையம்" 6ம்வகுப்பு முதல் 9ம்வகுப்பு வரை கல்வி தந்த அந்த வளவும் சிவாமாஸ்ரரின் உழைப்பில் குப்பிளானிலேயே முதல்தர கல்வி நிலையமாக உருவாகியது மட்டுமின்றி ஊரிலே உருவாகிய அனேகமான இளம் கெட்டிக்காரர்களின் உருவாக்கத்திலெல்லாம் ஊக்கு சக்தியாய் நின்ற அந்த மனிதரின் உழைப்பெல்லாம் இன்று உருக்குலைந்து உருமாறி.....
அந்த வளவின் உயிர்ப்பெல்லாம் தொலைந்து முறிந்த மரங்களும் காயங்கள் தாங்கிய வளவும் அந்த வீடும் எந்த நேரமும் பிள்ளைகளின் சிரிப்பும் படிப்புமாக நிறைந்திருந்த அந்த வீட்டின் அறைகள் எல்லாம் சிங்கள வசனங்கள் எழுதப்பட்டு இரத்தக் கறைகள் படிந்து ஒரு நூற்றாண்டுச் சோகத்தை சுமந்தபடி இருக்கிறது. அந்த வீட்டில் உலா வந்த சிவாமாஸ்ரரின் குழந்தைகளும் சிவாமாஸ்ரரும் அவரது குடும்பமும் புலம்பெயர்ந்து அந்நிய நாட்டில் வாழ்கிறார்கள். அவர்கள் நினைவு சுமந்து அந்த வளவு மட்டும் அவர்களை ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தது.
நீண்ட பிரம்பெடுத்து வரிசையில் நிறுத்தி வைத்து கையில் அடிதந்து கல்வியில் கண்ணாயிருத்திய அந்த உயர்ந்த மனிதனின் அக்கறையில் அவதானிப்பில் எத்தனையே பேர் இன்று புலம்பெயர் தேசங்களில் நல்ல நிலையில் இருப்பதற்கு சிவாமாஸ்ரரின் கண்டிப்பும் கவனமும் கணிசமான பங்குண்டு. தான் படிப்பிக்கும் விஞ்ஞான பாடம் மட்டுமின்றி எல்லாப்பாடங்களிலும் 80புள்ளிக்கு குறையாமல் எடுக்காதவர்களுக்கெல்லாம் பிரம்பால் எச்சரிக்கை தந்த சிவாமாஸ்ரரின் கவனிப்பு எங்கள் ஊருக்குள் எத்தனையோ வல்லவர்களை உருவாக்கிய தருணம் போர் உழுது ஊர் அழுது உலகெங்கும் ஒவ்வொருவரும் சிதறி இன்று அகதிகளாய்.....
1990 அந்த வீடு எங்களுக்கு இருப்பிடமாய் அமைந்ததும் அத்தையும் , மாமாவும் , அம்மாவும் , அப்பாவும் , அம்மம்மாவும் , நாங்களுமாய் அந்த வீட்டுக் குந்தில் இருந்து கதைத்த இரவுகள்....செல்கூவிவர ஒழித்திருந்த புகைக்கூடு இன்று மீளவும் தாயகம் திரும்பிய போது அந்த வாசலே அடைக்கலம் தந்துள்ளது.
அன்றைய இரவு நிலவில்லாத வானம். இருள் கவ்விய கனத்த அந்த போட்டிக்கோ குந்தில் அம்மா , அப்பா , மாமா , அத்தை , தங்கை , தங்கமணி , தாசன் , நாங்களுமாய் அந்த நாள் ஞாபகங்களை அழைந்து முகர்ந்து.....வீதியில் நாய்களின் குரைப்பில் விழிகள் மிரள சிங்களக்குரல்கள் வீதியில் கேட்கிறது. சத்தம் போடாதையுங்கோ ஆமி போறான் றோட்டாலை. அப்பா முணுமுணுத்தார். சமாதான காலமென்று உலகெங்கும் சொல்கிறார்கள் ஆனால் இன்னும் அச்சம் கழியாத இரவுகள் எங்கள் தேசத்துக்கு உரியதென்பதை அப்பாவின் வார்த்தைகள் உணர்த்தின. தாண்டிக்குளம் தாண்டும் வரையும் இருந்த அச்சத்தை விட இந்த இரவு கொடியதாய்.....
அப்போது தான் அவளது கதை வந்தது. என்னுள் ஒளியாயிருந்த என் தோழியின் கதையது. அந்தத் திண்ணையில் அவளும் நானும் பரிமாறிய கதைகள் சொல்ல திண்ணைக்கு வாயிருந்தால் அது எங்கள் மொழியை அப்படியே மொழி பெயர்த்திருக்கும். 5ம் வகுப்பில் அறிமுகமானவள். 7ம் வகுப்பில் இருவருக்குள்ளும் உருவாகிய நட்பு ஊரில் அனேக கண்களில் அது உறுத்தலாய்.....அவளும் நானும் ஒரே சைக்கிளில் டபிள் போனதும் ஒரே கோப்பையில் உணவருந்தியதும் அவளது அம்மாவின் விருப்புக்குரியவளாய் நானும்.....
அந்த நாட்கள் நதியா கொடிகட்டிப்பறந்த காலம். அவளும் நதியாவின் மறு வடிவம் போலத்தான் இருந்தான். அவளை எங்கள் வகுப்பில் சிலோன்நதியா என்றே அழைப்போம். அந்த அழகியை ஒருதலையாய் காதலித்தவர்கள் பலர். அந்த ஒருதலைக்காதல் கொண்டவர்களில் எங்கள் ஊரைச் சார்ந்தவர்களும் அடங்குவர். எத்தனையோ பேரின் காதலை மறுத்தவள் அண்ணன் என்று முறைசொல்லி அவள் அழைத்த ஒருவனால் அவள் வாழ்வே திசைமாறிவிடக் காரணமாகியது.
இரு பிள்ளைகளின் தந்தையான ஒருவனுக்கு அவளில் காதல். அந்தக் காதலை மறுத்ததால் தனது இரு குழந்தைகளையும் மறந்து அந்த ஒருதலைக் காதலன் தற்கொலை செய்து ஒரு இரவு தனது காதல் மனைவியின் கூறைப்புடவை தாலி எல்லாவற்றையும் நடுவீட்டில் கொழுத்திவிட்டு செத்துப்போய் விடுகிறான். விடியற்காலை விடயமறிந்து ஊரெங்கும் அவள்தான் உரை பொருளாகிவிட்டாள். அவள் மீதே ஊரெங்கும் குற்றம் சுமத்தல்கள் திட்டல்கள். என் ஆத்மதோழி அவள் அன்று அழுதழுதே சோர்ந்து விட்டாள். ஆண்களையே முதன்மையாய் பார்க்கும் நமது ஊரில் அவளே எதிரியாய் போக அவள் எல்லாப் பழிகளையும் தன் தலையில் கட்டிக்கொண்டு சோர்ந்து விடுகிறாள். வில்லங்கக்காதல் கொண்டவனின் குடும்பம் முதல் எல்லாரும் அவளையே வார்த்தைகளால் வதைத்தனர்.
16வயதில் அவள் ஊரின் பழிக்கு ஆழாகி உடைந்துவிடுகிறாள். என் வீட்டு அச்சுறுத்தலுக்கு அஞ்சி நானும் அவளுடன் பேசுவதையும் பார்ப்பதையும் நிறுத்திக் கொள்கிறேன். ஆனால் அவளை மறக்காமல் நெஞ்சுக்குள் சுமந்தபடி.....அவள் வீட்டில் அவள் எதையும் மறைத்ததில்லை. அவள் அம்மாவுக்கு அவளில் அத்தனை நம்பிக்கை. ஆயினும் ஊர்வாயில் அவள் இப்போ உதவாதவளாய்.....அவளை உயிராய் நேசிப்பதாய் சொன்ன ஒருதலைக்காதல்களும் அவளை எதிரியாகப் பார்க்க எங்களுக்குள் சிறந்த மாணவியாயிருந்த அவளது கல்வி முற்று வைக்கப்பட்டு அவள் வீட்டுக்குள் முடங்கிக் கொள்கிறாள்.
யாரும் அவளை நம்பத் தயாரில்லை....ஆத்மதோழியென்றிருந்த நான் கூட அந்த நேரம் அவளுக்கு ஆறுதலாக இல்லாமல் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பயந்து அவளை கோபித்துக் கொண்டு மௌனமாகி விடுகிறேன். என்றும் போல அவள் அம்மா அவளை அந்த நாளிலும் நம்பினாள்......தூற்றுவோர் தூற்ற போற்றுவோர் போற்ற அந்த நாள் நதியா ஒடுங்கி விடுகிறாள்......
Recent comments
9 weeks 2 days ago
9 weeks 2 days ago
9 weeks 3 days ago
10 weeks 22 hours ago
10 weeks 22 hours ago
10 weeks 5 days ago
11 weeks 1 day ago
11 weeks 5 days ago
12 weeks 5 days ago
12 weeks 5 days ago