ஊர் சென்றதில் உலகை வென்ற மிதப்பு. மனசு மேகத்தில் கால் வைத்து பூமிக்கு இறங்குகிறது. அந்தநாளைய எங்கள் ஊர் தன் அடையாளம் கரைத்து ஏதோ இருக்கிறேன் என்றது. என் பால்ய தோழியின் பெயர் சொல்லிய போது அவள் தனது ஊரிலேயே இருக்கிறாள் என அத்தை சொன்னா. 12வருடங்களின் பின் அவள் இப்போது எப்படி இருப்பாள் என்பதை உள் மனசு சித்திரமாய் தீட்டியது. அவளும் நானும் டபிள் போன சைக்கிளின் சத்தமும் சிரிப்பும் இன்று போல் காதுக்குள் புது ராகமிசைக்கிறது.
போட்டு வருவமோ பிறேமினி ? தங்கைச்சியையும் கூட்டிக்கொண்டு குப்பிளானிலிருந்து ஏழாலை நோக்கி எங்களது நைய்ந்த சைக்கிள் போகிறது. அது ஏழாலை வடக்குச் சந்தி. போஸ்மாஸ்ரர் மாமாவையும் வடக்கு ஏழாலை அக்காவின் முகத்தையும் தேடுகிறது விழிகள். யாருமற்று அந்தத் தபாற்கந்தோர் தனித்திருக்க எல்லோரும் எங்கெங்கோ போய்விட்டார்கள். நாங்கள் உலவிய அந்த வீதியும் வீடுகளும் புதிய மனிதர்களின் வரவில் ஏதோ உயிருடன் இருந்தன.
என் பால்யதோழியின் வீட்டை அண்மிக்கிறோம். பழைய அடையாளங்கள் இல்லாது போனாலும் அந்த இடத்தை அடையாளம் கண்டு கொள்கிறேன். அவளது அம்மாவினதும் அவளது குடும்பத்தினதும் ஜீவனமாயிருந்த கடை இன்றும் அவர்களது ஜீவனமாய் இருந்தது. சோட்டியணிந்து கொண்டைபோட்டு நெற்றியில் பெரிய குங்குமமும் கழுத்து உச்சியிலும் குங்குமம் இட்ட பெண்ணொருத்தி அந்தக் கடையின் வாசலில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தாள். சமூகக்கல்வி படிப்பித்த செல்வம் மாஸ்ரர் அவளுக்குச் சற்றுத்தள்ளி சைக்கிளுக்கு காற்றடித்துக் கொண்டிருந்தார். அந்த வளவிற்குள் 5வயதிலிருந்து 2 வயது வரை மதிக்கத்தக்க 3 சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
அக்கா தெரியுதோ அதாரெண்டு ? தங்கைச்சி கேட்டாள். யார் ? கேட்ட எனக்குச் சொன்னாள் அவள். உங்கடை தோழிதான் அது. ஒரு தரம் இதயம் தனது துடிப்பை நிறுத்தி மீண்டாற்போல இருந்தது. எனது கற்பனைக்குள் இருந்த அவளது தோற்றம் சுக்குநூறாகிறது. அவளைப்பார்க்கும் அவசரத்தில் கையில் எதுவும் கொண்டு வராமல் வந்தது உறைக்க, அவளது கடைக்கு 50மீற்றர் தொலைவாயிருந்த கடைக்குப்போய் அவளது பிள்ளைகளுக்கு இனிப்பு வகைகள் சில வாங்கிக் கொள்கிறேன். அவளது கடை வாசலில் போயிறங்குகிறேன்.
அவளது அம்மாவுடன் கதைத்துக் கொண்டிருந்த செல்வம் மாஸ்ரர் என்னை அடையாளம் கண்டு கொள்கிறார். என்னடி திடீரெண்டு வந்திறங்கியிருக்கிறாய் ? அப்போதுதான் அவளும் என்னை அவதானித்தாள். சற்று நேரம் அவள் வாயே திறக்கவில்லை. கலங்கிய கண்களை சிரித்தபடி துடைத்துக் கொண்டு என்னிடம் ஓடிவந்தாள். அம்மா பாருங்கோ ஆரிதெண்டு சொல்லுங்கோ என்றாள். எத்தனையோ தரம் அந்த அம்மாவின் கையால் சாப்பிட்டிருக்கிறேன். தன் மகள் மீதுள்ள பாசம் அந்த அம்மாவுக்கு என்னிலும் இருந்தது. அந்த நாளில் பலசரக்குக்கடையாக இருந்த அந்தக்கடை இப்போது மில்லாகியிருந்தது. ஒரு மனிதன் அங்கு மிளகுதூள் அரைத்துக் கொண்டு நின்றான். அவனுக்கு என்னை அவள் அறிமுகம் செய்து வைத்தாள். அவன்தான் அவளது இராஜகுமாரன். நதியாவை ஞாபகப்படுத்தும் எங்களது அந்நாள் சிலோன் நதியா அம்மாவாக அந்நாள் அடையாளங்கள் இன்றி சாதாரணமானவளாக......
என்ன தனியவோ வந்தனீ ? கலியாணங்கட்டீட்டியா ? எத்தினை பிள்ளையள் ? எந்த ஊரிலை கலியாணங்கட்டினனீ ? அவள் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாள். கலியாணங்கட்டினது வவுனியாவிலை. 2பிள்ளைகள், ஒரு பொடி 8வயது, பெட்டை 6வயது. அப்பா மருமகனுக்கும் பேரப்பிள்ளையளுக்கும் ஊர் காட்டப்போட்டார். நீ இஞ்சைதானிருக்கிறாயெண்டு அத்தை சொன்னா அதுதான் வந்த உடனும் ஓடிவந்திட்டன்.
எப்ப போப்போறாய் ? கேட்டாள். 3நாள் நிப்பன். அப்ப மனிசனையும் பிள்ளையளையும் கூட்டிவா நான் பாக்க வேணும் என்றாள்.
ஒரு சின்னவள் அவள் மடிக்குள் வந்து ஏறினாள். இதுதான் என்ரை கடைசி. மூண்டும் பெட்டையள். நீ மாறேல்ல அப்பிடியே இருக்கிறாய் , அந்தக் காலத்திலை வைச்ச அதே சிவப்பு ஸ்ரிக்கர் பொட்டு , அதே தலையிழுப்பு , அதே பாவாடை சட்டை , அதே சிரிப்பு எதுகும் மாறேல்ல , முந்திச் சொல்றமாதிரி கலியாணத்துக்குப் பிறகும் இருக்கிறாய் என்றாள். எப்படியோ எல்லாம் இருப்பேன் என்று சொன்ன அவள் மட்டும் என் எண்ணங்களிலிருந்து விலகியவளாய்......
மறுநாள் காலை 10 மணிக்கு அவள் வீட்டில் நானும் எனது குடும்பமும். அப்பா அம்மா எல்லாரும் பழையகதைகள் முதல் எல்லாம் கதைத்துக் கொண்டிருந்தார்கள். அவள் எங்களுக்காக குசினிக்குள் அலுவலுடன் நின்றாள். எனது பிள்ளைகள் அவளது பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள். குசினிக்குள் நானும் அவளும்.....
நான் எதிர்பாக்கேல்ல நீ இப்பிடி இருப்பாயெண்டு சொல்லி முடிப்பதற்குள் என் கண்கள் குளமாகிறது. என்ன செய்யிறது எல்லாம் விதி....படிக்க வேண்டிய நேரம் எல்லாத்தையும் விளையாட்டா நினைச்சு எல்லாத்தையும் துலைச்சிட்டன்.....அதற்கு மேல் ரணங்களை அவளுக்குப் பரிசளிக்க விரும்பவில்லை நான். அவளது அல்பத்தை எடுத்து விரிக்கிறேன். நானும் அவளும் சுன்னாகம் சித்திரா ஸ்ரூடியோவில் சேர்ந்து எடுத்த படமொன்று அவளது அல்பத்தில் பத்திரப்படுத்தப்பட்டிருந்தது. எப்போதாவது நினைவுவரும் போது இந்த அல்பத்தைப் பார்ப்பாளோ என்னவோ....
அவளது குடும்பப்படமும் அவளது பிள்ளைகளின் படங்களில் சிலவற்றையும் எடுத்துக் கொள்கிறேன். அவள் எதுவும் பேசவில்லை. முன்பெல்லாம் அவளது தனது படங்களை வெளியில் யாருக்கும் கொடுப்பதில்லை. ஒரே ஒரு படம் எனக்கு மட்டும் தந்திருந்தாள். அதைவிட வேறு படங்களை யாருக்கும் கொடுப்பதில்லை. இன்று நான் எனது விருப்பத்திற்குரிய படங்களையெல்லாம் எடுத்துக் கொள்ள மௌனமாய் நின்றாள். படமெண்டா முந்தி ஒரு கலை இப்ப அதெல்லாம் போட்டுது என்றாள்.
வெளிக்கிடுவமோ ? அப்பா கூப்பிட்டார். ஓம் வாறன். அந்தச் சில மணித்துளிகளில் நாங்கள் பேச நினைத்தவை ஏராளம் ஆனால் எதையும் பேசிவிடாதபடி மனங்களுக்குள் துயர் அப்பிக் கொள்ள சில வார்த்தைகளுடன் விடைபெறும் நேரமது. அவள் தனது முகவரி தொலைபேசி எண்களை எழுதித்தந்தாள். அவளது அழகிய கையெழுத்துக்கள் மாறவில்லை அன்று போல் இன்றும்.....அவளது சின்ன மகள் அவள் காலுக்குள் நின்று சினந்தாள். அவளைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டாள்.
அவளும் நானும் எங்கள் பிள்ளைகளும் சேர்ந்து சில நிழற்படங்கள் எடுத்துக் கொண்டோம். அவளைச்சுற்றி அவளது குழந்தைகள் மூன்றும் நின்றன. அம்மா எங்களுக்கு அடிக்கிறவா என்றாள் அவளது மூத்த மகள். இனிமேல் அம்மா அடிச்சா நான் அவாக்கு அடிப்பனாம் என்கிறேன். அந்தப்பிஞ்சுகள் மூன்றும் அவளது மறு அவதாரங்கள் போல அவளையே அச்சடித்தாற் போலிருந்தார்கள்.
பிள்ளையளைக் கவனமா படிப்பிச்சுவிடு சொல்லியபடி எனது தொலைபேசி இலக்கம் முகவரி ஆகியவற்றை எழுதிக் கொடுக்கிறேன். நல்ல வடிவான எழுத்தெல்லோ எழுதிறனீ இதென்ன கிறுக்கல் எழுத்து ? கனகாலம் கையாலை எழுதி அதுதான் கிறுக்கலாப்போச்சு என்கிறேன். கணணியில் தட்டத்தொடங்கி 10வருடம் கையால் எழுதவில்லையென்றால் நம்புவாளா ?
மனசுமுட்ட அவளைச் சுமந்தபடி அவளிடமும் அவளது அம்மா அப்பா அவளது இராஜகுமாரனிடமிருந்தும் விடைபெறுகிறேன். நானும் அவளும் சேர்ந்து ஒரு நாள் ஊர் சுற்ற வேண்டும் சுன்னாகம் யாழ்ப்பாணம் என சைக்கிளில் ஓட வேண்டுமென இருந்த ஆசையெல்லாம் கசஞ்கிக் கரைகிறது.
Recent comments
1 year 20 weeks ago
1 year 21 weeks ago
1 year 26 weeks ago
1 year 29 weeks ago
1 year 29 weeks ago
1 year 29 weeks ago
1 year 30 weeks ago
1 year 33 weeks ago
1 year 38 weeks ago
1 year 43 weeks ago