சிறிலங்காப் படைகளின் நிலை தற்பொழுது பெரும் கேள்விக்குறியாக மாறி உள்ளது. விடுதலைப் புலிகளுக்கு பாதகமான பகுதிகள் என்று கருதுகின்ற பகுதிகளில் மட்டும் தாக்குதல் நடத்தி வந்த சிறிலங்காப் படைகள் அடுத்த கட்டத்திற்கு நகரமுடியாமல் நிற்கின்றன.
கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதத் தொடக்கத்தில் கிழக்கில் சம்பூரை சிறிலங்காப் படைகள் கைப்பற்றிய பிறகு வடக்கிலும் ஒரு வெற்றியை பெற நினைத்தன. ஒக்ரோபர் மாத ஆரம்பத்தில் முகமாலையி, கிளாலி படைத் தளங்களில் இருந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி முன்னேறின. ஆனையிறவைக் கைப்பற்றி விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஒரு பெரும் வெற்றியை பெறுவது சிறிலங்கா அரசின் நோக்கமாக இருந்தது.
ஆனால் அந்த நடவடிக்கை படுதோல்வியில் முடிந்தது. 200இற்கும் மேற்பட்ட சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டனர். 100இற்கும் அதிகமான சிறிலங்காப் படையினரின் சடலங்கள் கைப்பற்றப்பட்டன. 400இற்கும் அதிகமான படையினர் காயங்களுக்கு உள்ளாகினர். முகமாலைக் களத்தில் ஏற்பட்ட பேரழிவு சிறிலங்காப் படைகளை பல மாதங்களுக்கு, அந்தக் களமுனையை பற்றியே சிந்திக்க விடாது செய்தது.
வடக்குப் போர் முனையில் வெற்றியை பெறமுடியாது என்பதை உணர்ந்த சிறிலங்காப் படைகள் மீண்டும் கிழக்கில் தமது நடவடிக்கைகளை தொடர்ந்தன. சிறுகச் சிறுகச் தமது முன்னகர்வுகளை மேற்கொண்டன. பனிச்சங்கேணி, வெருகல், வாகரை, படுவான்கரையின் பெரும் பகுதி, அம்பாறையின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் என்பவற்றை பல மாதங்கள் சண்டையிட்டுக் கைப்பற்றிக் கொண்டன.
கிழக்குப் போர்முனையில் பெற்ற வெற்றிகள் மீண்டும் வடக்கை நோக்கி சிறிலங்காப் படைகளின் பார்வையை திருப்பின. ஆயினும் முகமாலை, கிளாலிக் களமுனை தந்த பாடத்தைக் கொண்டு வேறு களமுனையை திறக்க முடிவு செய்தன.
கடந்த சில மாதங்களாக மன்னார், வவுனியா எல்லைப் பகுதியில் மடுவை நோக்கிய நகர்வு முயற்சிகளை சிறிலங்காப் படைகள் செய்து வருகின்றன. ஆயிரக் கணக்கான படையினரை ஈடுபடுத்தி பெரும் படை நடவடிக்கையை மேற்கொள்ளாது, சில நூறு படையினரோடு திடீர் தீடிரென்று ஊடுருவி அங்குலம் அங்குலமாக கைப்பற்றுகின்ற முயற்சியை மேற்கொண்டன.
பத்துக்கும் மேற்பட்ட தடவைகள் சிறிலங்காப் படைகள் இவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டன. ஆனால் இந்த நடவடிக்கைகள் பெரும் வெற்றியை தரவில்லை. ஓரிரு கிலேமீற்றர் மட்டுமே முன்னேற முடிந்தது. அதற்கு சிறிலங்காப் படைகள் பெரும் விலையை கொடுத்திருந்தன.
அதே வேளை ஆயிரக் கணக்கான தமிழ் மக்களை அகதிகள் ஆக்கி மடுப் பகுதியில் இருந்து வெளியேறச் செய்ய சிறிலங்காப் படைகளால் முடிந்தது.
மடு நோக்கிய படை நடவடிக்கைகள் வெற்றியைக் கொடுக்கவில்லையாயினும் சிறிலங்காப் படைகள் அதைத் தொடர்ந்து நடத்தின. அதற்கு முக்கிய காரணம் இந்தப் படை நடவடிக்கை சில மேற்குலக படைத்துறை வல்லுனர்களால் வரையப்பட்டிருந்ததுதான். விடுதலைப் புலிகளின் பலவீனமான பகுதிகள் பற்றி ஆய்வு செய்திருந்த இந்த படைத் துறை வல்லுனர்களின் நிகழ்ச்சி நிரலின்படியே சிறிலங்காப் படைகள் தமது களமுனைகளை நடத்தி வருகின்றன.
வன்னி மீதான நடவடிக்கைக்கு உகந்த இடம் மன்னார், வவுனியா எல்லைப் பகுதியே என்பது இவர்களின் முடிவு. ஓமந்தை, முகமாலை, பூநகரி, மணலாறு போன்று பகுதிகளின் ஊடாக நகர்வதைக் காட்டிலும் இப் பகுதி ஓரளவு சாதகமானது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் இருக்கலாம்.
ஆனால் கடந்த 02.06.07 சனிக்கிழமை மாலை விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதல் இந்தத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலைக்கு சிறிலங்காப் படைகளை தள்ளி விட்டது. சிறிலங்காப் படைகள் முன்னேறியிருந்த விளாத்திக்குளம் பகுதி மீது விடுதலைப்புலிகளின் தாக்குதல் நடைபெற்றது. சனிக்கிழமை மாலை ஆரம்பித்த விடுதலைப் புலிகளின் தாக்குதல் மறுநாள் வரை நீடித்தது. கடைசியில் சிறிலங்காப் படையினர் மீண்டும் பழைய நிலைகளுக்கே விரட்டி அடிக்கப்பட்டனர்.
இந்தத் தாக்குதலில் சிறிலங்காப் படைகளுக்கு பெரும் ஆளணி, ஆயுத இழப்புக்கள் ஏற்பட்டன. சிறிலங்காவின் எதிர்க்கட்சி 90 படையினர் வரை கொல்லப்பட்டதாக தெரிவித்தது. ஆனால் சிறிலங்கா அரசு வழமை போன்று இழப்பை மூடிமறைக்க முற்பட்டது. விடுதலைப் புலிகள் கைப்பற்றிய சிறிலங்காப் படையினரின் 11 சடலங்களையும் சிறிலங்காப் படைகள் ஏற்க மறுத்துவிட்டன.
விடுதலைப் புலிகள் பல ஆயுதங்களோடு இரண்டு கனரக வாகனங்களையும் கைப்பற்றிக் கொண்டனர். விடுதலைப் புலிகள் தரப்பில் 18 போராளிகள் வீரச் சாவை தழுவிக் கொண்டனர்.
சில மாதங்களாக சண்டை இட்டு பலத்த இழப்புக்களோடு கைப்பற்றிக் கொண்ட ஒரு சில கிலோமீற்றர் பகுதியையும் ஒரு இரவில் இழந்தது சிறிலங்காப் படைகளுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. வன்னி மீது நடத்தப்படுகின்ற படை நடவடிக்கையின் திட்டங்களில் மாற்றம் செய்ய வேண்டிய நிலையில் சிறிலங்காப் படைகள் நிற்கின்றன.
வட போர் முனையில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து மீண்டும் கிழக்கில் உடனடியாகத் தாக்குதலை நடத்த வேண்டிய கட்டாயம் சிறிலங்காப் படைகளுக்கு ஏற்பட்டது. கிழக்கில் தற்பொழுது வி;டுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் குடும்பிமலைப் பகுதி (தொப்பிக்கல) மட்டுமே உள்ளது. பெரும் காட்டுப் பகுதியான குடும்பிமலை விடுதலைப் புலிகளுக்கு சாதகமான ஒரு பகுதியாகும்.
குடும்பிமலைப் பகுதியை கைப்பற்றுவதற்கு சில வாரங்களாகவே சிறிலங்காப் படைகள் திட்டம் தீட்டி வருகின்றன. குடும்பிமலையை கைப்பற்றுவதற்கு கருணா குழுவின் உதவி இருப்பது நல்லது என்றும் சிறிலங்காப் படையினர் கருதுகின்றனர். காடுகளும் சிறு குன்றுகளும் நிறைந்த குடும்பிமலைப் பகுதி கருணா குழுவில் உள்ள முக்கிய உறுப்பினர்களுக்கு பரிச்சியமான பகுதி என்பதாலும், சிறிலங்காப் படைகள் ஆளணிப் பற்றாக்குறையால் தடுமாறுவதாலும், கருணா குழுவின் உதவி இந்த நடவடிக்கைக்கு அவசியமாகின்றது.
ஆனால் கருணா குழுவிற்குள் ஏற்பட்ட பிளவு இந்தத் திட்டத்திற்கு இடைஞ்சலாக இருந்து வருகின்றது. உடைந்த கருணா குழுவை ஒட்ட வைப்பதற்கு சிறிலங்கா புலனாய்வுத்துறை பல வழிகளில் முயன்றும் அவைகள் பெரியளவில் பலன் தரவில்லை. "கருணா இல்லாத கருணா குழு" போன்ற யோசனைகளும் முன்வைக்கப்பட்டன. ஆனால் சில யோசனைகளை கருணாவும், சில யோசனைகளை பிள்ளையானும் ஏற்க மறுத்து விட்டனர்.
இப்படி கருணா கும்பலும், பிள்ளையான் கும்பலும் பிரிந்து நிற்பதால், குடும்பிமலை மீதான படை நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கு சிறிலங்காப் படையினர் தயக்கம் காட்டி வந்தனர். கடைசியில் கருணா கும்பலை விட்டுவிட்டு பிள்ளையான் கும்பலை களம் இறக்குவது என்று சிறிலங்காப் படைத் தரப்பு தீர்மானித்தது.
செய்தி அறிந்து அதிர்ச்சியுற்ற கருணா உடனடியாக சிறிலங்காப் படைத் தரப்பை தொடர்பு கொண்டு, தனக்கு பத்து நாள் தருமாறும், அதற்குள் பிள்ளையானுடன் பிரச்சனையை தீர்த்து ஒற்றுமைக்கு வருவதாகவும் கேட்டுக்கொண்டார். சிறிலங்கா படைத் தரப்பு ஒத்துக் கொண்டது.
ஆனால் கருணா - பிள்ளையான் பிரச்சனை தீரவில்லை. கருணா மீண்டும் மீண்டும் நேரம் கேட்டுக் கொண்டிருந்தாரே தவிர, எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. பொறுமை இழந்த சிறிலங்காப் படையினர் கடந்த 08.06.07 அன்று மட்டக்களப்பு காரைதீவில் அமைந்துள்ள விசேட அதிரடிப் படையனரின் முகாமுக்கு கருணா ஆதரவு உறுப்பினர்களை அழைத்தனர்.
சிறிலங்காப் படையின் மட்டு.அம்பாறை விசேட அதிரடிப் படைத் தளபதி ரணவண்ண கருணா ஆதரவு உறுப்பினர்களிடம் சீறி விழுந்தார். கருணா குழுவின் தேவை முடிந்து விட்டது என்று அவர்களிடம் கடுமையான குரலில் சொன்ன ரணவண்ண சிறிலங்காப் படையினர் தனித்தே குடும்பிமலை மீது தாக்குதல் நடத்த உள்ளதாக சொல்லி அவர்களை அனுப்பினார்.
அடுத்த நாளே குடும்பிமலை மீதான படை நடவடிக்கையை சிறிலங்காப் படைகள் ஆரம்பித்தன. நான்கு முனைகளில் முன்னேற முயன்ற சிறிலங்காப் படைகளை விடுதலைப் புலிகளின் படையணிகள் எதிர்கொண்டு முறியடித்தன.
அதே வேளை விடுதலைப் புலிகளின் படையணி ஒன்று எதிர்பாராத விதமாக சிறிலங்கா விசேட அதிரடிப்படையினரின் முற்றுகைக்குள் அகப்பட்டுக் கொண்டது. இதில் பத்து விடுதலைப் புலிகள் வீரச் சாவை தழுவிக் கொண்டனர். விடுதலைப் புலிகளின் 6 சடலங்களை சிறிலங்காப் படைகள் கைப்பற்றி, பின்பு செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக ஒப்படைத்தனர்.
ஆனால் சிறிலங்காப் படைகளால் புதிய பகுதி எதையும் கைப்பற்ற முடியவில்லை. ஏற்கனவே கைப்பற்றிய பகுதிகளை புதிதாக கைப்பற்றியதாக பொய்ப் பரப்புரைகளை மேற்கொள்ள மட்டுமே முடிந்தது. அதே வேளை குடும்பிமலைப் பகுதி சரியான முறையில் எல்லைகள் வகுக்கப்படாத ஒரு காட்டுப் பகுதி என்பதையும் இந்த இடத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு வட போர் முனையிலும், கிழக்குப் போர் முனையிலும் தொடர்ந்து நகர முடியாது இக்கட்டில் சிறிலங்காப் படைகள் நிற்கின்றன. அடுத்து என்ன செய்வது என்று அறியாது திணறுகின்றன. தொடர்ந்து படை நடவடிக்கை செய்வதற்கு சிறிலங்காப் படைத் தளபதிகள் தயங்கி வருகிறார்கள்.
ஆனால் சிறிலங்கா அரசுத் தலைமை தனது படைத் தளபதிகளுக்கு தொடர்ந்து கடும் அழுத்தம் கொடுத்து வருகிறது. சிறிலங்காப் படைத் தளபதிகளும் புதிய திட்டம் தயாரிப்பதில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் அதற்குள் விடுதலைப் புலிகள் தமது அடுத்த அதிரடியை நடத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பே தற்போது மேலோங்கி உள்ளது.
Comments
The reality in the eastern front
I apologise for writing in English, sorry I don't have the necessary expertise in Tamil typing. This comment is not intended to offend anyone.
The war in eastern front is almost over, unlike the pre 1994 period, this time liberation tigers have withdrawn from rural populated areas as well (eg.Kokaddicholai).
The columnist is trying to portray that the war in eastern front is still not over. The thoppigala jungle is a land locked area with very minimal inhabitation by the people only in the peripheries. The liberation tigers in that area can only maintain a hit and run mode of attack and it cannot be even used as a background/supply base for the eventual liberation of southern Tamileelam in a final decisive battle. The veteran military analyst Taraki Sivaram had mentioned several times in his column regarding the military hazards of controlling the southern Tamileelam area by the Tamil forces. Why don't we accept that 'Pattarivu'and let people know about the military reality of southern Tamileelam? First of all we must inform the people with rationality not with empty rhetoric.
This comment is nothing to do with the strategies and tactics of liberation tigers. They know what they are doing now and they know what to do in the future. The political commentators in the diasporas community are not ready to inform the people with rationality.