யேசுதாஸ் ஏன் அழுதார்….

by:
- குலோத்துங்கன்

 “நா ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்
நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரன் நல்லா பாடும் பாட்டுக்காரன்” எஸ்.பி.பி சும்மா சக்கை போடு போட்டுக்கொண்டிருந்தார்.பாட்சா படம் வந்தபோது நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அப்போது இதுதான் மிகவும் பிரபலமான பாடல் எனக்கு பிடித்த பாடலும் கூட.நான் படத்தை பிறகு நான்கைந்து வருடம் கழித்து தான் பார்க்கமுடிந்தது.

பாட்டுக்களை கேட்பது எப்படி என்றால் அது ஒரு பெரிய புதினம் ஒரு சைக்கிளை கவிட்டுப்போட்டு அதிலிருக்கும் டைனமோவை இயக்கி கிடைக்கும் மின்சாரத்தில் தான் றேடியோ போடுவது. எவ்வளவு வேகமாக சுத்துகிறோமோ அவ்வளவு அதிகமாக மின்சாரம் கிடைக்கும். கூட கரண்ட வந்தால் தான் றேடியோ பெரிசாகப்படிக்கும் இல்லாவிட்டால் ஓய்ங் ஓய்ங்……. என்று இழுபட்டு இழுபட்டு படிக்கும். றேடியோ என்று சொல்வது (2 இன் 1) கசட் பிளேயரும் இருக்கும் கசட்டில பாட்டுப்போட்டா அது ஒரு பிரச்சினை இல்லாமல் படிக்கும் ஆனா ஏதாவது ஸ்ரேசன் பிடிக்க றேடியோவை இயக்கினால். அவ்வளவுதான் ட்ர்ர்ர்ர்ர்ர் ஒரே இரைச்சல் மயம்தான்.

குஆ என்றால் ஒரே இரைச்சல் மயம் தான். ஆறு என்றால் பரவாயில்லை. நான் எங்கேயாவது விளையாடிக்கொண்டிருப்பேன் எந்த வீட்டு ரேடியோவிலாவது எனக்கு விருப்பமான பாட்டுகள் கேட்டாலும் உடனே வீட்டுக்கு ஓடிச்சென்று அந்த மீற்றரை பிடித்து சவுண்டை கூட்டி விட்டு கேட்பேன்.(எந்த ரேடியோ என்றாலும் என் வீட்டு ரேடியோ போல வருமா என்ன)அம்மா பேசுவா ஏன்ரா இப்பிடி சவுண்டை கூட்டி வைச்சிருக்கிறாய் எண்டு. நான் கேட்டால் தானே பாட்டு முடிய ஒரே ஓட்டம் விளையாட்டுக்கு.

சிலபேர் டைனமோக்கெண்டே ஒரு சில புதிய உபகரணங்களை உருவாக்கத் தொடங்கினார்கள். பழைய சைக்கிள் பார் எடுத்து அதை கட்டையில் இறுக்கு இறுக்கெண்டு இறுக்கி இன்னும் ஏதோதோ செய்து கீழே படத்தில் இருப்பது மாதிரி ஒன்றை செய்து வைத்து ரேடியோக் கேட்டார்கள். அநேகமாக தமிழர் பிரதேச வீடுகளில் றேடியோக் கேட்டது இப்படித்தான்.

எங்களை வீட்ட இருக்கிற ஒலிபரப்பு நிலையமாக கருதிக்கொண்டுதான் எங்கள் பெரியம்மா மாமாக்களின்ர அண்ணாக்கள் மச்சாள் மார் எல்லோரும் நினைச்சினம். அப்பிடியெ மச்சாள் களும் அக்காக்களும் அவையள் மாறி மாறி பேன் பார்த்துக்கொண்டிருக்கும் போது தம்பி இந்தப்பாட்டு ஒருக்கா போடமாட்டியே என்று கேப்பினம் எங்களுக்கு புழுகம் எங்களையும் ஒரு மனுசரா மதிச்சு கேக்குதுகளே எண்டு நாங்களும் மாஞ்சு மாஞ்சு சவுண்டை கூட்டி விட்டு சுத்துவம்.

எங்கட வீட்டதான் அந்த ஏரியாவில் எல்லோரும் குடிதண்ணி அள்ள வருவினம். பெரியம்மான்ர ஜீவன் அண்ணா பக்கத்து வீட்டு பவானி அக்கா தண்ணி அள்ள வரேக்க மட்டும் ஒரு சோகப்பாட்டு கசட்டை குடுத்து இதைப்போடு தம்பி என்று சொல்லுவார். பாட்டுகளில் ஜேசுதாஸ் அழுவார் “ஏலேலங்கிளியே என்னைத்தாலாட்டும் இசையே” என்று. எனக்கு ஏன் அண்ணா இப்பிடிச் செய்யிறார் என்று விளங்கவில்லை. இருந்தாலும் ஏதோ விசயமிருக்கு எண்டு நினைச்சு ஒரு நாள் போடமாட்டேன் என்று ஸ்ரைக் பண்ணினேன். அவர் டக்கெண்டு காமதேனுவுக்கு கூட்டிக்கொண்டு போறன் எண்டு சத்தியம் பண்ணினார். எனக்கு யார் எப்பிடிப்போனா என்ன காமதேனு தானே முக்கியம் (ம் அப்ப காமதேனு மட்டும் தான் வன்னியில் இருந்த ஒரே ஒரு கூல்பார்) அதை விட யாருக்கும் மனம் வருமே. எனக்கு ஜஸ்கிரீம்தான் முக்கியம். ஜீவன் அண்ணாக்கு பவானி அக்கா என்ன செய்ய… சைக்கிளை கவுட்டுப்போட்டு சுத்தும் போது இப்பிடி சில நல்ல விசயங்களக்கு உதவியிருக்கிறம் எண்டு நினைக்கும் போது பெருமையாக் கிடக்கு (சீ என்னை அப்பிடி கேவலமாப் பாக்காதேங்கோ)

 

அப்போதெல்லாம் வீட்டிலிருக்கும் பெரியவர்கள் எல்லாச்செய்திகளும் கட்டாயம் கேட்பார்கள். நாட்டு நிலைமை அப்படி அதிகமாக லண்டன் பி.பி.சி. வெரித்தாஸ் போன்ற வானொலிகள் அதிகம் கெட்கப்படும். இரவு 7.30 வெரித்தாஸ் வானொலியில் நிகழ்ச்சிகள் தொடங்கும் என்று நினைக்கிறேன். இப்போது இளையராஜாவுடன் சேர்ந்து திருவாசகம் இசையமைப்பு பணிகளில் இயங்கினாரே ஜெகத் கஸ்பார் அடிகளார் அவர்தான் வெரித்தாஸ் வானொலிக்கு பொறுப்பாக இருந்தார். தமிழர் தரப்பு நியாயங்களை உலகிற்கு சொன்னதில் வெரித்தாசின் பங்கு குறைவில்லாதது என்றே சொல்ல வேண்டும். அந்த வானொலியையும் நாங்கள் சைக்கிளை கவிட்டுப்போட்டு சுத்தியே கேட்டோம். வெரித்தாஸ் வானnhலி தனது வெள்ளி விழாவை யொட்டி போட்டியே நடத்தியது. சைக்கிளில் சுத்தி றேடியோ கேட்பது மாதிரி புகைப்படம் எடுத்து அனுப்பும் படி வெரித்தாஸ் வானொலி போட்டி வைத்தது.

இப்படித்தான் நாங்கள் எல்லாவற்றையும் கேட்டோம் 1994 ல் சந்திரிகா எனக்கு நினைவு தெரிந்த பிறகு முதல்முதலாக இலங்கையில் சமாதானம் என்று பேசிக்கொண்டு தேர்தலில் நின்றார். நாங்கள் அப்போது சந்திரிகா ஆட்சிக்கு வரவேண்டும் என்று வைக்காத நேத்தியெல்லாம் வைத்தோம் சந்திரிகாவுக்கு எதிராக நின்ற காமினி திசநாயக்கா தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வைத்து கொல்லப்பட்போது மகிழ்ந்தோம். தேர்தலன்று இரவு டைனமோவை சுத்தி சுத்தி தேர்தல் முடிவுகளை கேட்டுக்கேட்டு ஒரு கொப்பியில் குறித்துக்கொண்டிருந்தேன் சந்திரிகாவின் கட்சி எந்தந்த மாவட்டங்களில் எவ்வளவு ஒட்டு வித்தியாசத்தில் ஜெயித்தது என்பதையும் மொத்தமாக நாட்டில் எவ்வளவு ஒட்டு அவர்களுக்கு அதிகமாக கிடைத்தது என்பதையும் நான் எழுதிக் குறித்து வைத்தேன். பிறகு நான் பாதுகாத்து வைத்த அந்தக் கொப்பியையும் விட்டு விட்டு ஓடும்படி சந்திரிகாவே செய்தார். நாங்கள் ஊரை விட்டு ஓடினோம்.

1996 ல் சந்திரிகா சமாதானம் என்று சொல்லிக்கொண்டிருந்த காலத்தில் எனக்கு நினைவு தெரிந்த நாளில் முதல் முதலாக இலங்கை வானொலி தமிழில் கிரிக்கெட் நேர்முக வர்ணணை செய்தது. அரவிந்த டீ சில்வா லாகூரில் அவுஸ்ரேலியர்களை பின்னியெடுத்தபோது முரளி முறித்துக்கொட்டியபோது அர்ஜூன ரணதுங்க உலகக் கிண்ணத்தை எந்தி புன்னகைத்தபோது நான் சைக்கிளை கவிழ்த்துப்போட்டு சுற்றிக்கொண்டிருந்தேன்.

ஒவ்வொரு சிக்சருக்கும் சுற்றல் வேகமெடுக்கும் . அவுட்டென்றால் கை ஓய்ந்து போகும் மறுபடியும் யாராவது வாணவேடிக்கை நிகழ்த்த கை வெகமெடுக்கும் றேடியோவின் வழியாக லாகூரை காதுக்குள் கொட்டிக்கொண்டிருந்தார் எழில்வேந்தன். என் எதிரே வெறித்த படி இருந்த ஜன்னல் காணமல் போய் அப்டியெ மைதானமாகி டீ சில்வா நானாகி அப்டியே சிக்சரும் பவுண்டரிகளுமாய் கனவுகள் விரிய அப்பிடியே ஒய்ங்.. ஒய்ங்.. என்று குரல் இழுபட்டு தேய்ந்து கொண்டிருப்பார் எழில் வேந்தன். அடுத்தநாள் எல்லாரும் தென்னை மட்டைகளை சீவிக்கொண்டு கிரிக்கெட் ஆட கிளம்பிவிடுவோம்.

இப்படி சைக்கிளை கவிழ்த்துப்போட்டு சுற்றி றேடியோக் கேட்ட அனுபவம் மைதானம் வரை விரியும். ம் இப்போது மறுபடியும் சமாதானம் வந்து மின்சாரம் வந்து இணையம் வந்து எவ்வளவு வசதியாக இருந்தம். ஒரு நாலுவருசம் தான் இப்ப மறுபடியம் பொருளாதாரத் தடை கரண்ட இல்லை  நல்லவேளை முந்தின டைனமோக்களையும் அதை இறுக்கின கட்டைகளையும் உக்காம புத்திசாலித்தனமா கட்டித்தூக்கினது.

இந்த முறை கொஞ்சம் 36ம் பக்கத்தின்ர முன்பாதியைவிட முக்காப்பாதியை எடுத்திட்டன் எண்டு நினைக்கிறேன். அடுத்த முறை வேறோரு அனுபவத்தோடு முன்பாதியிலயே சந்திப்பம்….