என் ஞாபகப்பதிவிலிருந்து.....

by:
- சுதந்திரா -

வீடு வெளிச்சத்தால் நிறைந்திருந்தது. ஆட்களின் ஆரவாரம். வெளியில் நின்ற கரன் மச்சான் அப்பாவிடம் வந்து சொன்னான். அண்ணை அய்யம்மா....என்ற வார்த்தைக்கு அப்பால் எதையும் அப்பா கேட்கவில்லை. அப்பம்மாவின் அறைக்குப் போய் அப்பம்மாவைத் தொட்டுத் தொட்டு பெலத்து அழுதார். மணிமாமி மாலினி மாமி இருவரும் என்னைக் கட்டிப்பிடித்து அழுதார்கள். 18 வயதில் இவர்களையெல்லாம் விட்டுப் புலம்பெயர்ந்த நான் சாவீட்டில்தான் திரும்பச் சந்திக்கவேண்டுமென்ற நிலையாக...!!!

நெற்றியில் பெரிய நாமப்பொட்டு அதன் நடுவே குங்குமம் வைத்து அசல் மனோரமாவினை நினைவுபடுத்தும் அப்பம்மா அடையாளமே மாறி ஒட்டி எலும்புக் கூடாய்....வெளித்தெரியும் பல்லும் கறுத்து உள்விழுந்த கண்ணுமாய்....வெள்ளைத் துணியால் மூடப்பட்டிருந்தா. அந்தவீட்டின் உரிமைக்காரி சிலோவன்ரியின் கணவர் சொன்னார் நீங்க வந்திருக்கிறீங்களெண்டு நேற்று இஞ்சை வந்தவைக்கெல்லாம் சொன்னவா. குடுத்து வைச்சநீங்கள் மூத்த பேரப்பிள்ளைக்கு பந்தம் பிடிக்கப் பலன் இருந்திருக்கு என்றார். மதியம் அனுசாக்கா சொன்னது போல் அப்பம்மா நான் பாலூத்தக் காத்திருக்காமல் வாய்க்கரிசி போடக்கூப்பிட்டிருக்கிறா.....

அப்பப்பா என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார். என்னை அப்பப்பாவால் இனம்காண முடியவில்லைப் போல். மணிமாமி மாலினி மாமியை விட்டு அப்பப்பாவிடம் போய் அப்பப்பா என்னைத் தெரியுதா....? இல்லையெனத் தலையை ஆட்டிய அப்பப்பாவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது. விம்மிவிம்மி அப்பம்மாவைக் காட்டி போட்டா....போட்டா.... என்றார். 10 வருடத்துக்கு முன் நான் பார்த்த அப்பப்பா மாறி கண்கள் உள்விழுந்து கன்னங்கள் ஒட்டி மெலிந்து தனது பார்வைப்புலனையும் பாதியிழந்து.....அடையாளம் தெரியாது போய்....

சிறுமியாயிருந்த காலமது ஒவ்வொரு வருடமும் சித்திரை வருடப்பிறப்புக்கு என் சின்னக்கைகள் செய்தெடுக்கும் பவுடர்ப்பேணி உண்டியலை நிறைக்க அப்பப்பாவிடமும் கைவிசேசம் வாங்குவேன். பிள்ளையார்த் திருவிழாவில் கடலையாயும் ஜஸ்கிறீமாயும் மாறும் சில்லறைகளைத் தந்த என் அப்பப்பாவும் அதே திருவிழாவில் பெரியதேரின் பின்னே பஜனைபாடியபடி வெள்ளை வேட்டியும் சால்வையும் நெற்றியில் சந்தனமும் விபூதியும் நிறைந்த அந்த நெற்றியும் என் ஞாபகப் பதிவேட்டிலிருந்து புறப்பட்டு நினைவாகிறது.

அப்பப்பாவும் அப்பம்மாவும் சண்டை பிடித்ததை நான் கண்டதேயில்லை. எப்போதும் இருவரும் ஒன்றாயே திரிவார்கள். பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் சூழ இருந்த நாட்களில் கூட அப்பப்பாதான் அப்பம்மாவின் ஆரோக்கியத்தில் கவனம். அப்பம்மாதான் அப்பப்பாவின் ஆரோக்கியத்தில் கவனம். தங்களுக்குத் தாங்களே எல்லாமுமாக இருந்தவர்கள். அப்படியிருந்த அப்பப்பா இன்று அப்பம்மாவை இழந்து தனித்து....கொடிய புற்றுநோய் தின்று அப்பம்மா பிணமாக.....

அன்றைய இரவு முழுவதும் ஒரே தொலைபேசி அழைப்புகளும் அழுகையும் தான். காலை விடிந்து 7 மணிதாண்டியது ஆட்கள் வந்து போகத் தொடங்கினார்கள். கரன் மச்சானும் கஜன் மச்சானும் தான் அங்குமிங்கும் ஓடியோடித் திரிந்து அலுவல்களைக் கவனித்தார்கள்.அப்பம்மாவின் காரியங்களை முன்நின்று நடாத்தும் பொறுப்பு 20 வயதான கரனிடமும் கஜனிடமுமே போயிருந்தது.

பறைமேளம் இடையிடை தன் இருப்பை உறுதிப்படுத்திக் கொண்டிருந்தது. ஐயர் ஏதோ மந்திரம் சொல்ல அவருக்கு ஒரு உதவியாளன் மணியடித்து
சங்கூதிக் கொண்டிருந்தான். அடிக்கடி தன் உரத்த குரலால் அப்பாவை உறுக்கிக் கொண்டிருந்தார் ஐயர். அப்பிடி நில் இப்பிடிச் சுண்ணமிடி. அந்தப்பக்கத்தாலை வா எனும் கட்டளைகள். இந்தச் சடங்குகள் செய்யாவிட்டால் அப்பம்மா அமைதியடைய மாட்டாவா?? சடங்கு எனும் பேரில் ஐயர் ஒவ்வொரு துரும்பை எடுக்கவும் சில்லறைகளைக் கேட்டு வாங்கித்தன் சால்வைக்குள் போட்டுக் கொண்டார்.

வாய்க்கரிசி போடுறவை வாங்கோ மக்கள் முதல் பிறகு பேரப்பிள்ளைகள்....ஐயரின் இந்தக்குரலுக்கு அப்பா உட்பட எல்லோரும் வரிசையாகப் போய் நின்று ஐயரிடம் அரிசியை வாங்கிப் போட்டுக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரும் அரிசிபோடப்போட ஐயரின் உதவியாளன் ஒவ்வொரு வெற்றிலையிலும் இருந்த சில்லறைகளை எடுத்துக் கவனமாக்கினான்.

பேரப்பிள்ளையள் வாங்கோ பந்தம்பிடிக்க அதுவும் ஐயரின் அழைப்புத்தான். நான் பிறேமினி கரன் மச்சான் கஜன் மச்சான் தயாமச்சாள் 5 பேரும் அப்பம்மாவுக்கு பந்தம்பிடிக்க வரிசையாய் நிற்கிறோம். ஐயரின் உதவியாளன் பந்தங்களை எமக்கு ஒவ்வொருவராகக் கொழுத்தித் தருகிறான். தயாமச்சாள் அழுதழுது தேவாரம் பாடியபடி பந்தம் பிடிக்க....மணிமாமி மாலினிமாமி விம்விம்மியழ....அப்பாவின் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்து கொண்டிருக்க....அப்பப்பா அழுதழுது தேவாரம் படிக்கிறார். என்விழிகளிலும் நீர்த்திவலைகள்......

அப்பம்மா பெற்ற 8 பிள்ளைகளில் புண்ணியன் சித்தப்பா 1987 இல் இந்திய இராணுவத் துப்பாக்கிக்கு பலியாகிவிட்டார். கண்ணன் சித்தப்பா இந்தியாவில் பாலன் சித்தப்பா மலர்மாமி சிவாமாமி கனடாவில் இன்று அப்பம்மாவுக்கு கடமை செய்ய கண்ணீர் வடிக்க மூன்று பிள்ளைகள் தான் நிற்கிறார்கள். 21பேரப்பிள்ளைகளில் இன்று 5பேர் மட்டுமே நிற்கிறோம். இப்படி எத்தனைபேரின் மரணங்கள் கூட நிம்மதியானதாகவோ நிறைவானதாகவோ இல்லாத வாழ்வு தழினுக்கு விதியாகிப் போய்விட்டது.

அப்பம்மாவுக்காவது நாங்கள் 5 பேரப்பிள்ளைகளும்  3 பிள்ளைகளும் நிற்கிறார்கள். என் அம்மாவுக்கோ அப்பாவுக்கோ ஏதாவது ஒன்று நேர்ந்தால் பந்தம் பிடிக்கப் பேரப்பிள்ளைகளும் இல்லை. என் அம்மாவும் அப்பாவும் அந்தரித்து எங்களின் கடமையுமின்றி நாளை இந்தக்கொழும்பில் முடிந்து போனால் கொள்ளிபோட சுண்ணமிடிக்க சாம்பல் கரைக்க யார் வருவார்கள் ? அனாதைகளாக என் அப்பாவும் அம்மாவும் இறந்து முடிய நாங்களும் அப்பம்மாவின் முகத்தைக் கூடப்பார்க்கக் கிடைக்கவில்லையே என்று கனடாவிலும் இந்தியாவிலும் இருந்து அந்தரிக்கும் சித்தப்பாமாரைப் போலவும் மாமிமாரைப்போலவும் ஆயுள் உள்ளவரையும் அழுது அந்தரிக்கவும் கூடும்.

அப்பம்மாவின் உடலை மயானம் கொண்டு செல்ல ஆயத்தமாகிச் சவப்பெட்டியை மூட ஆயத்தமானார்கள். எல்லோர் கதறலும் ஒருகணம் மனதைக் கலவரப்படுத்தியது. அப்பப்பா பெலத்து அழுதார் கொழுத்தப் போறாங்களணை உன்னைக் கொழுத்தப் போறாங்களணை.....என அப்பம்மாவின் முகத்தைத் தடவித்தடவிச் சொல்லிக் கொண்டு நின்றார்.

அப்பம்மாவின் உடல் மயானம் நோக்கிய ஊர்வலத்தில் போய்க்கொண்டிருந்தது. எல்லோரும் வாசல் வரையும் போய் அழுது கொண்டு நின்றார்கள். நான் மட்டும் அப்படியே நின்ற இடத்தில் நின்று கொண்டிருந்தேன். அதற்கு மேல் நகர்ந்து போக என்னால் முடியவில்லை.