~மட்டைக்கிளப்பானடா மாடுதின்னி…டட்டடா…..
மந்திரவாதியடா மகனே கவனமடா|
சென்றமுறை மட்டக்களப்பின் உணவுப்பழக்கத்தை எழுதத் தொடங்கினேன் இப்போது இந்தப் பாடல் ஞாபகத்துக்கு வருகின்றது. படிப்பித்து ஆளாக்கி கொழுத்த சீதனத்துக்கும்; - குடும்பத்துக்கு டொணேசனோடும் (பணம்) விற்கப்படத் தயாராயிருக்கும் தன்பிள்ளை மட்டக்களப்பிற்கு வரும்போது அங்கே மாட்டுப்பட்டுவிடக் கூடாது என்கிற நோக்கில் ஓர் வெளிப்பிரதேசத் தாய் அம்மண்ணைப்பற்றிய வெறுப்பையூட்டி எச்சரிக்கை செய்யப் பாடப்படும் பாடல்போலத் தோன்றுகின்றது.
உண்மையில் எனது பாட்டனார்கூட இவ்வாறு வந்து மாட்டுப்பட்டவர்தான். அந்தக்காலத்தில் மிஷனரிப் பள்ளியில் நன்கு ஆங்கிலம்படித்துப் பெரிய பதவியில் நாட்டுச் சக்கடத்தாராக (செக்கிறற்றி) பதவிபெற்று மட்டக்களப்புக்கு வந்தபோது எனது பாட்டியிடம் (ஆச்சம்மா) மாட்டிக்கொண்டார். அவர் மந்திரத்தால் மாட்டினாரா அல்லது அவள் சுந்தரத்தால் வீழ்ந்தாரா? நான் அவளைக் கிழவியாகத்தான் பார்த்திருக்கிறேன். அப்போதும் அவள் அழகாயிருந்தாள். இப்போது இத்தொடரை எழுதும்போது அவள் நினைவு எனக்கு வருகின்றது. ஆச்சம்மா எனக்கு நிலவொளியில் சொன்ன கதைகளும் உறங்கவைக்கப் பாடிய தாலாட்டுப்பாடல்களும் நினைவுக்கு வருகின்றன. அம்மா அல்லது ஆச்சம்மா தாலாட்டுப்பாடிக் காலில்போட்டு ஆட்டத் தூங்கிப் பழகிய ஞாபகங்கள் இப்போதும் காதில் ஒலிக்கின்றன. இக்காலப் பிள்ளைகளுக்குத் தாலாட்டென்றால் என்னவென்றே தெரியாது. சரிவிடயத்துக்கு வருவோம்.
மட்டக்களப்பில் வீடு குடிபுகுதல் தவிர்ந்த ஏனைய கொண்டாட்டங்களின்போது அசைவம் பொதுவாகப் பரிமாறப்பட்டாலும் அங்கே பொதுவாக தமிழர்கள் வீடுகளில் மாட்டிறைச்சியை உண்பதில்லை. மேலும் இஸ்லாமியரும் கூட தங்கள் விழாக்களில் மாட்டிறைச்சியைப் பரிமாறுவதில்லை.
தமிழர் மாட்டிறைச்சி உண்ணாததற்கு அவர்களின் சமயம் காரணம். இஸ்லாமியர்கள் பரிமாறாததற்கு அது அந்தப் பிரதேசத்தில் மலிவான இறைச்சி என்பதோடு அவர்களின் விழாக்களில் தமிழ் நண்பர்களும் பெரும்பாலும் பங்குபற்றுவது காரணம்.
இங்கே ஒரு சில விடயங்கள் கவனத்திற்கு வருகின்றன. லண்டனிலும்கூட இந்துக்கள் அனேகர் வாடிக்கையாளர்களாயிருப்பதால் அவர்கள் வெறுக்கக்கூடுமென்றோ என்னவோ இஸ்லாமியர் நடத்தும் இறைச்சிக் கடைகளில் மாட்டிறைச்சியை விற்பனை செய்வதில்லை.
இந்தியாவில் பசுவதைத் தடைச் சட்டம் பல பொருளாதாரக் காரணிகளால் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அன்னை இந்திராவின் காலத்தில் பசுவதையை எதிர்த்து சாகும் வரை உண்ணாவிரதமிருந்த ஒருவர் (பூரி சங்கராச்சாரியார் என எண்ணுகிறேன்) தனது கோரிக்கை நிறைவேறாமலேயே இறந்து போனார். அதைத்தொடர்ந்து பூதான இயக்கத் தலைவர் ஆச்சார்ய வினோபா பாவேயின் சீடரான ஜெப்பிரகாஸ் நாராயண் மீண்டும் உண்ணவிரதமிருந்து தனது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப் படாததால் விரதத்தை இடைநடுவில் வி;ட்டார். பின்னர் தனது மூப்பினால் உடல் ஒத்துப்போக மறுக்கிறது என்ற காரணத்தைக் காட்டி அன்னை இந்திரா வேண்டிக்கொண்டும் கூட உண்ணா நோன்பிருந்து தனது உயிரைப்போக்கினார். இதனால் பசுதைக்கெதிரான தன் உண்ணாவிரதத்தில் தான் அடைந்த தோல்வியை வெளியுலகம் தவறாகப் புரிந்துகொண்டதால் ஏற்பட்ட அவப்பெயரைப் போக்கிக்கொண்டார்.
மட்டக்களப்பில் தமிழர் தனித்து வாழும் ஊர்களில் ஆட்டிறைச்சிக்கடைகளையோ, மாட்டிறைச்சிக் கடைகளையோ காணமுடியாது. ஊர்க்கோவில் ஆச்சாரங்கள் கிராமிய சமூகத்தின் வாழ்க்கையை இடையறாது நெறிப்படுத்திக்கொண்டே இருப்பதால் யாருக்கும் அங்கே இறைச்சிக் கடைகளை நிரந்தரமாகப்போட ஆதரவோ அனுமதியோ கிடைப்பதில்லை. ஊர்ச்சந்தைக்கு பக்கத்து இஸ்லாமியப் பிரதேசங்களிலிருந்து வியாபாரிகள் ஆடு, கோழி இறைச்சிகளைக கொண்டுவந்து விற்பார்கள். ஆனால் மாடு கொண்டுவர அனுமதியில்லை. ஊர்ச் சந்தைகளில் மாட்டிறைச்சி விற்பனையைத் தடைசெயதிருக்கும்; அறித்தல்கள் காணப்படும். அல்லது அதற்கெதிரான பிரச்சார வாசகங்ள் இருக்கும். அதாவது மட்டக்களப்பின் தனித் தமிழ்க் கிராமங்களில் மாட்டிறைச்சிக் கடைகள் கிடையவே கிடையாது. ஊரில் சிலர் ஆட்டைவெட்டித் தங்களுக்குள் பங்கு போட்டுக் கொள்ளுவார்கள். ஆனால் வெளிப்படையாக யாரும் அப்படி மாட்டிறைச்சி பங்குபோட்டதை நான் அறியவில்லை. அது மிகவும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாத விடயம்.
தைப்பொங்கலின்போது நாம் மாட்டுப் பொங்கல் செய்கிறோம். பசு தனது கன்றுக்கு மட்டுமல்ல எமது குழந்தைகளுக்கும் ஓர் தாயாக பால்சொரியும் தெய்வம் என்பதாலும், காளை எமக்குத் தன் தோள் சுமந்து ஏரிழுத்தும் வண்டியிழுத்தும் சேவைசெய்யும் தோழன், இவற்றைக் கொன்று புசிப்பது பாவம் என்னும் இரக்க உணர்வினாலும் தமிழர்கள் தம் பொங்கல் நன்னாளில் மாட்டுப் பொங்கல் செய்து இவற்றிற்குத் தம் அன்பையும் மரியாதையையும் வெளிபபடுத்துகிறாகள். அந்தவகையில் கால்நடைச் செல்வம் நிரம்பப்பெற்ற மட்டக்களப்பில் வாழும் தமிழர்கள் மாட்டிறைச்சியைத் தங்கள் ஊகளில் விற்பனை செய்வதைத் தவிர்த்து வருகிறார்கள்.
நிலைமை இப்படி இருந்தாலும் மட்டக்களப்பு மக்கள் இஸ்லாமியத் தமிழருடன் சேர்ந்து வாழ்வதால் மேற்சொன்ன வகைப் பாடல்கள் உருவாகிவிட்டன.
என்ன செய்வது? மட்டக்களப்பின் ஓர் அழகிய கிராமியச் சூழலில் பிறந்து வளர்ந்திருந்தூலும். வெளியிடங்களில் சென்று கல்விகற்று தொழில்பார்த்துப் பல நண்பர்களுடன் சேர்ந்து பழகிவிட்டதால் எனக்கோ நாலுகால் பட்டவைகளில் கதிரைமேசை நீங்கலாக, இரண்டுகால் பட்டவைகளில் சைக்கிள், வண்டில் நீங்கலாக மிச்சம் எல்லாவற்றையும் விழுங்கி ஏப்பம் விடும் பழக்கம் சிறுவயதிலேயே ஏற்பட்டுவிட்டது. ஒரு கவிஞன் பாடுகிறான்:
ஆமைதின்போம் கீரிதின்போம் அணிலடித்துச் சுடுவோம்
அதிலெளிய சாதியடா எங்கள் குறச்சாதி
மண்ணீலே எலிப்பிடிப்போம் மரம் வெட்டித்தனேடுப்போம்
கண்ணி குத்தியே பறவை கடுகப் பிடித்திடுவோம்.
சிறு வயதில் ஒரு எயார்கண்ணை எடுத்துக்கொண்டு ஆறுகுளம் காடுமேடெல்லாம் அலைந்து கொக்கு, குருவிகளைச் சுட்டுத்தின்ற என் இளமை நினைவுகள் இப்பத்தியை எழுதும்போது வருகின்றன.
தொடருவம்.
Recent comments
1 year 20 weeks ago
1 year 21 weeks ago
1 year 26 weeks ago
1 year 29 weeks ago
1 year 29 weeks ago
1 year 29 weeks ago
1 year 30 weeks ago
1 year 33 weeks ago
1 year 38 weeks ago
1 year 43 weeks ago