உங்களுடன் .... (15 ஜூன் 2007)

வணக்கம்!  ஜெனிவாவிலையும், ரொறொன்ரோவிலையும் நடைபெற்ற “வெல்க தமிழ்” நிகழ்வுகளில் கலந்து கொண்டு உங்கள் எழுச்சியை காட்டினியள். மகிழ்ச்சி. கனடாவில் இதுக்கெண்டு ஒரு சிறப்புப் பதிப்பு ஒன்றை வெளியிட்டு எங்கள் ஆதரவைத் தெரிவிச்சம். ஐரோப்பாவில பிரசுரிக்க முடியேல்லை என்பது வருத்தம்தான். இனி இப்பிடி நடக்கேக்கை பார்ப்பம்.

ஜேர்மனி ஹம் அம்மன் கோயில் திருவிழாவிலை உங்களில் பலரை சந்தித்தது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தருகிறது. உங்கள் ஆதரவுக்கும் ஆக்கபூர்வமான விமர்சனங்களுக்கும் நன்றி. எங்கடை குழாமிலை இருக்கிற எல்லாராலும் வரமுடியேல்லை. வராதவையள் இன்னமும் இங்கை பிழிஞ்ச சோகத்தோடை இருக்கினம்.

ஜேர்மனியில் இருக்கிற சில ஸ்ரட்டுகளிலைதான் (மாநிலங்கள்) ஒரு பேப்பர் கிடைக்கிறதாய் அறியிறம். மற்ற இடங்களுக்கும் அனுப்புவதற்கும் உங்களைத்தான் நம்பியிருக்கிறோம். இந்த விசயத்தில் உங்கள் ஆதரவையும் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறோம்.


ஒரு பேப்பரின் வளர்ச்சியிலையும் வர்த்தகப் பெருமக்களின் பங்களிப்பு முக்கியமானது என்பது நாங்கள் அடிக்கடி சொல்லி வருகிற விடயம். உங்களது விளம்பரங்கள் மக்களை சென்றடைவதும் அதன் மூலம் நீங்கள் பயன் அடைவதும் எங்களுக்கு நிறைவைத் தருகிறது. இந்த விசயத்திலை சோசலிசம் பேசிற தாடிக்காரரை, சிவப்புசட்டையளைப்பற்றி நாங்கள் அக்கறைப்படேல்லை. இருந்தாலும் ஒரிரு விளம்பரதாரர் எங்கடை ஆசிரியர் குழு செய்யவேண்டிய வேலையை செய்ய விரும்பிறதை நாங்கள் ஏற்றுக் கொள்ளேலாது. அதை பிரசுரிச்சா நாங்கள் விளம்பரம் தரமாட்டம் அல்லது இதைப்பிரசுரிச்சாத்தான் தருவம் எண்டு சொல்லிறது எங்களுக்கு சரியயாய் படேல்லை. மன்னிக்கோணும் இதுகளுக்கு நீங்கள் வேறாக்களைத்தான் பாக்கோணும்.

ஒரு பேப்பருக்கு உங்கள் ஆக்கங்களை அனுப்பும் போது பக்கம் பக்கமாய் எழுதி அனுப்பாதேங்கோ. அதை நாங்கள் சுருக்கிப்போடும் போது நீஙகள் சொல்லவந்த விசயம் விடுபட்டுப் போயிடும். அதுபோல மின்னஞ்சலில் அனுப்பும்போது அதனை மீள நாங்கள் type பண்ணாமல் பிரசுரிக்கக்கூடியதாய் Word அல்லது அதற்கு இணையான வடிவத்தில் அனுப்புங்கோ. இந்த விசயங்களிலை நாங்கள் அவ்வளவு மோசமில்லை. ஆகவே அனுப்ப முதல் ஓசியாய் எங்களிட்டையிருந்து  ஆலோசனைகளைப் பெறலாம்.

உங்கட வாழ்க்கையிலை நடந்த சுவாரசியமான விசயங்களை எழுதி அனுப்புங்கோ. நாட்டுப்பிரச்சினை கூடி எல்லாரும் சீரியசான ஆக்களாய் மாறீட்டினம். போததற்கு சீரியலைப்பார்த்து கண்ணைக்கசக்கினபடி ஒப்பாரி வைக்காத குறையாய் இருக்கினம். எல்லாரும் கொஞ்சம் சிரிக்கட்டும்..

மீண்டும் சந்திப்போம்