மனதுக்குள் மட்டும் வாழ்ந்தது …

by:
இரவிசங்கர்

“வலன்ரைன்ஸ் டே” வருகுது.. ஒரு பூவாவது கிடைக்க வேணும் என்று எதிர்பார்க்கிற பருவத்தை நான் கடந்து வி;;ட்டாலும், எனது பழைய அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன். அந்த நாட்களில் இந்தாள் வாழ்ந்த ஊரிலை எங்கையடாப்பா “வலன்ரைன்ஸ் டே” கொண்டாடினார்கள். பேய்சுத்து சுத்தப்போறான் எண்டு என்னைத் தெரிஞ்சவை நினைக்கலாம். அங்கு காதலரருக்கு என ஒரு நாளை ஒதுக்கவில்லைத்தான்,  அதற்காக நாங்கள் காதலிக்க இல்லை எண்டு நீஙகள் சொல்லேலாதுதானே..

80களின் ஆரம்பத்தில் நான் சைக்கிளிலை சுழட்டித்திரிஞ்ச காலத்தைப் பற்றித்தான் சொல்லவிருக்கிறேன். அப்போது எனக்கு பதினேழு வயது. ஒரு பெட்டையொண்டை பிடிக்கோணும் எண்ட ஒரே குறிக்கோளுடன் வாழ்ந்து கொண்டிருந்தேன். இது ஒன்றும் சுலபமான சங்கதி இல்லை என்பதை நன்றாகத் தெரிந்திருந்தும் வயதுக் கோளாறு என்னை விடவில்லை. எங்கட ஊரிலை என்ர வயதுக்கார பெடியனோ பெட்டையோ அதே வயது ரேஞ்சில இருக்கிற எதிர்ப் பால் ஆக்களோட கதைக்கிறதுக்கு அனுமதியில்லை. தவறிக் கதை;தால்  காணுகிற இடத்திலை வைத்தே சாத்து நடக்கும். அல்லது மேலிடத்துக்கு அதாவது எங்கட வாத்திமார் அல்லது அம்மா அப்பாவுக்கு முறைப்பாடு போகும். அவர்கள் தரவேண்டியதை, அடியோ, பேச்சோ அல்லது இரண்டையும் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ற மாதிரித் தருவினம்;.

ஊரில் இருந்த உயர்தரப் பள்ளிக்கூடங்களும் ஓண்டில் பெடியள் அல்லது பெட்டையள் படிக்கிறமாதிரித்தான் இருந்தது. கலவன் பள்ளிக்கூடங்கள் அயல் ஊருகளிலைதான் இருந்தன. எங்கடை ஊர்ப்பள்ளிக்கூடங்கள் நாட்டிலையே திறமானதாக இருந்ததாலை.. அயல் ஊருகளிலையிருந்து தான் எங்கட ஊருக்கு பிள்ளையள் படிக்கு வருவினமே தவிர நாங்கள் அங்கை போகிறதில்லை. படிப்பு கொஞ்சமும் ஏறயில்லை எண்டால் சில வேளை அயலூருகளுக்கு போய் கலவன் பாடசாலைகளிலை போய் படிக்கலாம். அங்க சிலநேரம் பெடியள் பெட்டையளோடையும் கதைக்கலாம்.

பாவப்பட்ட எங்கட ஊர்ப்பெடியள், பள்;ளிக்கூடத்துக்கு போகேக்கை வரேக்கை சகோதரப் பள்ளிக்கூடத்து வெள்ளைச் சட்டை தேவதைகளைக் கண்களால் காதல் செய்யிறதோடை சரி. இப்படி அற்ற குளத்து அன்னப்பறவைகள் மாதிரியிருந்த எங்களின் ஊமைப்பாசைகள் பெட்டையளுக்கு விளங்கி அவையளும் துணிஞ்சால் அரிதாகக் காதல் மலரச் சான்சிருந்தது. ஆனால் எங்கட சுழட்டல்கள் அவளவளக்கு விளங்க முதல் ஊராக்களுக்கு விளங்கி நாங்கள் விலங்கத்தில் மாட்டிக்கொள்ளிறதுதான் வழமை. கோயில், சினிமாத் தியட்டர், எண்டு எங்கை போனாலும் குறைஞ்சது பெட்டையளிலை இருந்து ஒரு மூண்டு மீற்றர் இடைவெளியையாவது மெயின்ரெயின் பண்ண வேண்டியிருந்தது.

இந்த இக்கட்டான நிலையிலும், தமிழ்ப் படங்களைப் பார்த்தோ அல்லது விடலைப்பருவத்து கோளாறோ என்னவோ எனக்கு ஒரு கேர்ள் பிரண்ட் அவசியமாக தேவைப்பட்டது. எப்பிடி ஒண்டை பிடிப்பது என்பது சம்பந்தமாக இதுவிடயத்தில் பட்டறிவு கொண்டவர்கள் மாதிரி காட்டிக்கொண்டு திரிஞ்ச சில பெடியளை ஆலோசனை கேடடுப்பார்ததேன் அவங்களும் விதவிதமான தந்திரங்களை சொல்லித்தந்தாங்கள்;. ஆனால்ஒண்டும் சரிவாறமாதிரி தெரியேல்லை.

இதற்குள் எனக்கு ஏலெவல் பரீட்சை நெருங்கிக் கொண்டிருந்தது. இன்னும் எட்டு மாதத்தில் பரீட்சை. அவனவன் தாங்கள் நாளொன்றுக்கு 25 மணித்தியாலம் படிக்கிறதாக சொல்லிகொண்டு திரிந்தான்கள். எனக்கும் திடீரென படிப்பில் ஆர்வம் வந்தது. அடுத்த ஊரிலை இருக்கிற ரியூட்டரியில் நன்றாக படிப்பிக்கிறாங்கள், ஒரு பாடத்துக்கு மூண்டு மாஸ்ரர்மார் படிப்பிப்பினமாம், கேள்விகள் செய்வினம் அது இது எண்டு புத்தகப்பூச்சியாயிருந்த சில மாணவர்கள் தொடங்கி படிப்பிலை எந்த அக்கறையுமில்லாத எனது நண்பர்களும் சொல்ல நானும் நாலு மைல் தூரம் சைக்கிளில் இழைச்சு இழைச்சு ஓடி அந்த ரியூட்டரிக்கு போகத் தொடங்கினேன். இங்கேதான் நான் அவளைச் சந்தித்தேன் (கண்களால் மட்டும்). சற்றுக் குள்ளமாக இருப்பாள் ஆனால் குறு குறுவென என்நேரமும் கன்னத்தில் குழி விழுபம்படியாக சிரித்தப்படி வசீகரமாயிருப்பாள். படிப்பிலும் பெருத்த அக்கறையுடன் இருப்பதாகக் காட்டிக்கொண்டாள்.
அவளை யாரைப்பார்த்து சிரித்தாளோ தெரியாது .. என்னைப் பார்த்துத்தான்  என நம்பினேன்;. அவள் என்னுடையவள் என்று எனது நண்பர்களுக்கு சொல்லித் திரிந்தேன். அவளைச் பார்ப்பதற்காக வகுப்புக்கள் எதனையும் நான் தவறவிடவில்லை. இருந்தாலும் அவளிடமிருந்து சாதகமான சமிக்ஜை எதுவும் வரவில்லை என்னுடன் படித்த மற்றய மாணவிகளிடமிருந்தது போலவே அவளுக்கும் எனக்கும் அந்த  மூண்டு மீற்றர் இடைவெளி இருக்கத்தான் செய்தது. கி;ட்ட நெருங்க முடியில்லை.

ஏலெவல் சோதனை வந்தது. அதோடை ரியூசனும் முடிந்து விட்டது. அவளை இனி தினம் தினம் காண முடியாதே என்ற வேதனை குடிகொண்டது. ஏதாவது வகையில் சந்தித்துக் கதைக்கலாம் என்றால் அதற்கான வழிவகைகளும் தெரியவில்லை. அவளும் வெளியில் எங்கும் வருவதாய் தெரியவில்லை. அவளது வீடும் எங்கிருக்கிறது எண்டும் எனக்குத் தெரியாது அண்டை அயலில் உள்ள எனது நண்பர்களை கேட்டால் அவங்களும் அந்த ஏரியா சண்டியன்களின் புஜபலத்தைப்பற்றி மட்டுமே விபரித்தார்கள். எனது ஒல்லி உடம்பு தாங்கும் போலத் தெரியவில்லை.

எனது பரீட்சை முடிவுகள் பல்கலைக்கழகத்தின் வாசலைதொடுகிற மாதிரி வரவில்லை. அவளுக்கும் அப்பிடி இப்பிடித்தான் என்று எனக்கு தெரிந்த தடியன் ஒருவன் சொன்னான். திரும்ப பரீட்சை எடுக்கத் தயாராகினேன் …அதே ரியூட்டரி.. என்னுடைய நண்பர்களில் பெரும்பகுதியினர் வகுப்பில் இருந்தார்கள். அவள் வரவில்லை. என்ன ஆனாளோ தெரியாது. அவளை பஸ்சில், கோயிலில், கடைத்தெருவில் அங்கு இங்கு கண்டதாகக் எனது நண்பர்கள் கூறினார்கள் ஆனால் எனது கண்களில் மட்டும் அவள் அகப்படவில்லை.

மீளவும் பரீட்சையும் வந்தது .. முடிவும் வந்தது .. பல்கலைக்கழகம் இன்னமும் கண்ணுக்கு எட்டாத தூரத்திலைதான் தெரிந்தது. எனது பெற்றோர்; என்னை ஐசிஎம்ஏ (இந்நாளில் அது சீ.ஐ.எம்.ஏ) படிக்க கொழும்புக்கு அனுப்பி வைத்தார்கள். ஊரின் நினைவுகள் வாட்டியதால்; கொழும்பில் வாழப்பிடிக்கவில்லை. காலிமுகத்திடலை கடந்து செல்கையில், அல்லது வெள்ளவத்த கடற்கரையில் தாளைமர மறைவைத் தேடிச் செல்பவர்களைப்பார்த்தால் அவளை நினைத்துக் கொள்வது தவிர்க்க முடியாமலிருந்தது.

அன்றைக்கு வேல்விழா .. கொழும்பில் ஆண்டவனின் பெயரால்; நடைபெறும் கேளிக்கைவிழா .. எனது நண்பன் ஒருவனுடன் போனேன். பம்பலப்பிட்டிய கதிரேசன் கோவில் வாசலை அண்மித்த பொழுது, சனத்தோட சனமாக நின்ற எனது மாமியை கண்டு அவவுடன் கதைக்கலாம் என்று போனபோது.. மாமிக்கு அருகில் என்னையே பார்த்தபடியிருந்தாள் எனது அவள். “இவவை உனக்குத் தெரியுமா” என மாமி. கேட்டபோது, தெரியாது என்று பொய் சொன்னேன். அவளது முகம் கோணிப்போனது தெரிந்தது. “உன்னோடை படிச்ச எண்டு சொன்னா” என மாமி திரும்பக்கேட்டபோது  “தெரியும்” என்று சொல்லி பேரைச்சொன்னேன். இதுவரைகாலம் எங்களுக்கிடையில் இருந்து 3 மீற்றர் இடைவெளி அந்த மாலைப்பொழுதில் 30 சென்ரி மீற்றராக குறைந்திருந்தது. கதைத்தாள் அவள் கதைத்ததிலிருந்து நான் அவளை தெரிந்து வைத்திருந்ததைவிட சற்று அதிகமாகவே அவள் என்னைப்பற்றி அறிந்து வைத்திருந்தது புரிந்தது. மகிழ்ச்சியாக இருந்தது. அருகிலே பெரியவர்கள் இருந்ததால் படிப்பு, நல்ல வேலை எடுக்கிறது எண்டு பொறுப்பான பெடியள் கதைக்கிறதையே கதைத்தோம். பிரிய மனமில்லாமல் பிரிந்து சென்றேன்.. இரவு நித்திரை வரவில்லை மனம் பூரித்துப் போயிருந்தது. கலிமுகத்திடலில் குடைநிழலில் இருப்பவர்களும், வெள்ளவத்த தாளை மரங்களும் அநியாயத்துக்கு மனத்திரையில் வந்து போயின. இனி வரும் நாட்கள் இன்பமாகக் கழியப்போவதாக எண்ணிக்கொண்டேன்.

இது நடந்து இரண்டு தினங்கள் கழித்து 83 ஜுலைக்கலவரம் ஆரம்பித்தது. கப்பலில் ஊருக்கு போய் சேர்ந்தேன். மீண்டும் அவள் பற்றிய தகவல்கள் எதுவும் தெரியவில்லை; உயிரோடு இருக்கிறாள் என்பது மட்டும் யாரோ சொல்லித் தெரியவந்தது.

இரண்டு வருடங்கள் கழித்து நான் அவளை காண நேர்ந்தபோது அவள் கணவனோடு போய்கொண்டிருந்தாள். எனக்கு ஏமாற்றமாக இருக்கவில்லை. விடலைப்பருவத்தை நான் தாண்டிவிட்டேன் என்பது மட்டும் உறுதியாகத்தெரிந்தது.