நம்பிக்கை இழந்து விட்டோம்!

சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அரசபயங்கரவாத நடவடிக்கைளை சர்வதேச சமூகம் தட்டிக் கேட்கும், அதன் மூலம் நீதியான தீர்வு ஒன்று சாத்தியமாகலாம் என்ற நம்பிக்கை ஈழத்தமிழர்களிடம் இருந்து வந்துள்ளது. ஆனால் காலியில் நடந்து முடிந்த இலங்கைக்கு உதவிவழங்கும் நாடுகளின் மாநாட்டின் பெறுபேறுகள், அந்த நம்பிக்கையை பொய்யாக்கி விட்டது. இனவழிப்பு யுத்தம் ஒன்றை முன்னெடுத்து மனித அவலங்களையும், அப்பட்டமான மனிதவுரிமை மீறல்களையும் செய்து வரும் சிறிலங்கா அரசுக்கு இந்நாடுகளின் அரசாங்கங்கள் 4.5 பில்லியன் டொலர் உதவி வழங்குவதற்கு முன்வந்துள்ளன. சமாதான வழிமுறையை தொடரவேண்டும் என்ற நிபந்தனையுடன் இவ்வாக்குறுதி வழங்கப்பட்டிருந்தாலும், இது சிறிலங்கா அரசினை தட்டிக்கொடுக்கும் நடவடிக்கையாகவே கருதப்படவேண்டும்.

சம்பந்தப்பட்ட நாடுகள் சிறிலங்கா அரசின் செயற்பாடுகளையிட்டு அலட்டிக்கொள்ளாமையும், இவ்விடயத்தில் மென்மையான போக்கினைக் காட்டுவதும், அவை மனிதவுரிமை விடயத்தில் எவ்வித அக்கறையும் கொண்டிருக்கவில்லை என்பதையே சுட்டிக்காட்டுகிறது. மனிதவுரிமை மீறல் விவகாரத்தை இம்மாநாட்டின் கவனத்துக்கு கொண்டுவர சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் பயனளிக்கவில்லை. இம்மாநாட்டில் உரையாற்றிய சர்வதேச அமெரிக்க நாட்டு தூதுவர் ரொபர்ட ஓ பிளேக், தனது உரையில் விடுலைப் புலிகள் இயக்கத்தை கண்டித்தும், சிறிலங்கா அரசுக்கு தனது ஆதரவைத் தெரிவித்தும் கருத்து வழங்கினாரே தவிர, மனிதவுரிமை விடயத்தை கவனத்தில் கொள்ளவில்லை.

சரவதேச சமூகத்தின் மீதான நம்பிக்கை, அதன் நீதியான அணுகுமுறை, பக்கச்சார்பின்மை என்ற தளத்திலேயே கட்டியெழுப்பப்படுகிறது. ஐந்து வருடங்களுக்கு முன்னர் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம்கூட இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே நீண்டகாலத்துக்கு முறிவடையாமல் இருந்து வந்தது. மீள இந்த நம்பிக்கை வளர்வதற்கு அவர்களது அணுமுறையில் மாற்றம்
ஏற்படவேண்டும். அதுவரை அவர்களது சமாதான உச்சாடனங்கள் எநதப் பலனையும் தரப்போவதில்லை.

அந்த வகையில் நோர்வேயின் சமாதன முயற்சிகள், யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவின் செய்பாடுகள் அதன் அறிக்கைள் என்பன வெறுமனே ஊடகங்களுக்கான செய்திகளாகவே இருக்குமே தவிர உருப்படியாக எதனையும் சாதிக்கப் போவதில்லை. நாமும் தனித்து சர்வதேச சமூகத்தின் அனுதாபத்தை பெறுவதற்காக நடாத்தும் பரப்புரைகள், போராட்டங்கள் போன்றவற்றுக்கு அப்பால் சர்வதேச அரங்கில தமிழர் பலத்தை அதிகரிக்கச் செய்யும் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்;.