உலக நாடுகளுடன் இணைந்து நடாத்தும் யுத்தம்

கிழக்கில் சிறிலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் யுத்தத்தினால் தமிழ் மக்கள் பெரும் அவலத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழ் மக்களையும் அவர்களது பிரதேசங்களையும் ஆக்கிரமித்து அவர்களை நிரந்தரமாக அடிமைப்படுத்துவதற்காக நடாத்தப்படும்  இந்த யுத்தத்தில் சிங்களப்படைகளுடன் இணைந்து கருணா தலைமையான ஓட்டுப்படையினரும் மக்களை மேலும் சித்திரவதை செய்து வருகின்றனர்.  அங்கு நடைபெறும் மனித அவலங்களை சர்வதேச உதவி நிறுவனங்களும் மனிதவுரிமை அமைப்புக்களும் அறிக்கைகள் வாயிலாக இன்று முழு உலகின் கவனத்துக்கு கொண்டு வந்திருக்கின்றன.

அழிவு நடந்த பின்னர் அதற்கு நிவாரணம் காணப் புறப்பட்டுள்ள இந்த சர்வதேச அமைப்புக்கள் சிறிலங்கா அரசால் திட்டமிட்டு ஏற்படுத்தப்படும்
இந்த அவலங்களை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேசமயம் சிறிலங்காவின் போர்முனைப்புக்கள் இணைத்தலைமை நாடுகளின் ஆசியுடனேயே நடந்தேறி வருகிறது. இவ்வாரம் பிரித்தானிய பாராளுமன்றத்தில் இந்திய சமூகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கீத் வாஸ் எழுப்பிய கேள்விக்கு பிரித்தானிய பிரதமர் ரோனி பிளேயர் அளித்த பதிலிலிருந்து இதனை நன்கு உணரந்து கொள்ளலாம். அவரது பதிலில் பிரித்தானிய அரசு சிறிலங்கா அரசை பாதுகாக்க முனைவதையும் தமிழர்மீதான யுத்தத்தை பயங்கரவாதத்துக்கு எதிரான போராக சித்தரிக்க முற்படுவதையும் காணலாம். பிரித்தானிய வெளியுறவுச் செயலளார் மார்கிரட் பெக்கற் அவர்களும் இதுபோன்ற கருத்தினையே வெளியிட்டுள்ளார். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஓன்றிய அதிகாரிகள் ஏலவே தெரிவித்த கருத்துக்களும் இவற்றுடன் ஒத்திசைவாகவே இருக்கின்றன.

தமிழ் மக்களின் பலமாக இருக்கும் தேசிய விடுதலை இயக்கத்தை வலுவிழக்கச் செய்வதன் மூலம் தமிழர் போராட்டததை அடக்கி விடலாம் என்பதில் இந்நாடுகள் நம்பிக்கை கொண்டுள்ளபோதும், சிறிலங்கா அரசின் மனிதவுரிமை மீறல்களை வெளிப்படையாக சகித்துக் கொணடிருப்பதில் சனநாயக நாடுகளான இவற்றுக்கு சிரமமாக உள்ளது. இந்த நடைமுறை யதார்த்தத்தின் அடிப்படையில் தமிழர்களின் அரசியற் செயற்பாடுகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். ஒரு புறம் தமிழரின் அபிலாசைகளை வலியுறுத்தி தமிழ்தேசியப்போராட்டத்துக்கு பலம் சேர்ப்பதிலும் மறுபுறம் சிறிலங்காவின் மனிதவுரிமை மீறல்களை அமபலப்படுத்துவதிலும் அனைவருமாக இணைந்து செயற்படுவோம்.