என் ஞாபகப்பதிவிலிருந்து.....

by:
- சுதந்திரா -

வரிசை அப்பிடியே நிக்குது உவங்களென்ன செய்யிறாங்கள்....? என்னுடன் வன்னிவரவிருந்த சுதான்ரி கேட்டா....அவையள் சாப்பிடப் போட்டினம் முன்னின்ற ஒரு இளைஞன் சொன்னான். சரி இனி அவை ஆடியசைஞ்சு சாப்பிட்டுட்டு வர மத்தியானமாகீடும். பிறகென்ன...வன்னி போனமாதிரித்தான் இண்டைக்கு....சுதான்ரிக்கு மட்டுமல்ல எனக்கும்தான் சலித்தது.  

இரண்டு மணித்தியாலம் நின்ற எனக்கே இவ்வளவு சலிப்பானால் தினம் இதுவே வாழ்வாய் போன இந்த மக்களுக்கு எவ்வளவு வெறுத்திருக்கும். இடையிடை வந்து குற்றும் நுளம்பு சலிப்பை நிமிர்த்திப் போனது. வரிசையில் நின்றவர்கள் பலர் தங்கள் இடங்களைப் பார்க்கும்படி சொல்லிவிட்டு சற்றே தள்ளியிருந்த வாங்கில் போயிருந்து கொண்டார்கள். நான் அப்படியே நின்று கொள்கிறேன். எப்பிடியும் இண்டைக்கு வன்னிக்குப் போகவேணும்.  

அண்ணி நீங்க கொஞ்சநேரம் அதிலை போயிருங்கோ நான் நிக்கிறன். என்ற மச்சானுக்கு... இல்லை நான் நிக்கிறன் என்றேன்.  

சிறுமியொருத்தி அவளுக்கு வயது 7 - 8 வயதிருக்கும் கையில் வைத்திருந்த பணிசில் இலையான் இடம் பிடித்திருந்தது அதையே அவள் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். சாராயத்தால் முகம் கழுவியிருந்த சிலரது சாராயநெடில் தாங்க முடியாத சிலரின் முணுமுணுப்பு இது... 'இதுகளிடை தொல்லை பெருந்தொல்லையாய்ப் போச்சு" அந்த முணுமுணுப்பு சாராயம் குடித்திருந்த ஒருவரின் காதுக்கு எட்டிவிட...நாங்களும் உங்களை மாதிரித்தான் காவல் நிக்கிறம் எனச் சட்டம் பேச..... அந்த அமளிக்குள் ஒருவருக்கொருவர்; இடறுப்பட்டு இடிபட்டுக்கொண்டிருந்தனர்.  

என் பின் வந்துகொண்டிருந்த அந்த வயோதிபத்தந்தை கேட்டார்.எங்கை பிள்ளை வன்னிக்குப் போறீங்கள் ? முல்லைத்தீவு. யாழ்ப்பாணத்திலையெங்கை.....என் ஊரின் பெயரை நான் சொல்ல என் ஊருக்குப் பக்கத்து ஊர்பற்றிக் கேட்டார் அந்த ஐயா.  

நானங்கை நெடுக வாறனான். என்ரை நண்பனொருதன் அங்கையிருக்கிறான். அவங்கடை வீடெல்லாம் இப்ப காடுபத்தியிருக்கும். உப்பிடி எத்தினை ஊருகள் வீடுகள் வாசலுகள் ஏக்கமாய் வெளிவந்த அவரது வார்த்தைகள் அவை.ஆம் எத்தனை ஊர்கள் ஊர்மட்டுமா எத்தனையுயிர்கள்  உறவுகள்  நட்புகள் எல்லாவற்றையும் தானே சிங்களம் பறித்தது வைத்துள்ளது. 

அந்தப் பெரியவரின் நண்பரின் ஊரால்தான் நாங்கள் வீ.எம்.எம்.வீயிற்குப் போவது. அவரது நண்பரின் வீடும் அந்த வளவின் அழகு சொல்லும்   பூக்கன்றுகளும்  ஒரெசீராக வெட்டப்பட்டிருக்கும் குறோட்டன்களும் என் கண்களில் கலங்கிய ஒளிப்படமாய் ஓடிக்கொண்டிருந்தது. அந்த வீதிகளில் எத்தனை தரம் என் சயிக்கிளும் நானும் போயிருப்பேன். எனது கிராமமும் இன்று பற்றைக்காடாய்த்தானே இருக்கிறதாம்.  

பெஞ்சன் வடலி நொங்கும் பெரிய இலுப்பையும் சின்னம்மான் வளவுச்சீனிப்புளியும் பொலிசுராசர் வீட்டு அருநெல்லியும் சமாதிகோவிலடி நாவற்பழமும் வயிரவர் கோவிலடி ஆலம்பளமும்   ரத்தினன் வளவுப் பனங்காயும் நாவில் இனிக்கிறது. நாங்கள் வணங்கும் எங்கள் நம்பிக்கைக்குரிய கற்கரைப்பிள்ளையாரும்  சிவகாமியம்மனும் பூசைகள் வழிபாடுகள் இன்றியிருந்த நிலைமாறி பிள்ளையாருக்கு மட்டும் பூசைநடக்கிறதாம்.  

எங்கள் ஊரே பார்த்துப்பார்த்து செய்த வடிவான தேர் சிங்களம் எரித்து சாம்பலாக்கியதையும் ஊர் போய் வந்த என் ஊர்;க்காரி சொன்ன வார்த்தைகள் செவிகளுக்குள்   ஒலிக்கிறது.அ சமாதிகோவிலடி மண்வாசம் என் நினைவுகளில் தொடுகிறது. அந்தப்பொன்னினிய பூமியின் செம்பாட்டுப் புழுதியில் நான் போயுறங்கும் பொழுதென்று.....???? என் பிரியத்துக்கினிய ஊர் வளவே....! ஆண்டுகள் ஒவ்வொன்றாய் அழிந்து ஆனாலும் ஊப்போகும் கனவு கனவாக.....  

பதினாறு வயதோடு பறிமுதலான என் ஊரே நீ எப்படியிருக்கிறாய் ? ஊருரூராய் நாங்கள் ஓடியதும் நீஅனாதையாய் யூ.கே கிழவனோடு தனித்திருந்தாய் யூ.கே கிழவனும் எலும்புக் கூடானதும் இன்னும் நினைவுகளில் ஈரம் உலராமல்...இதய அணுக்களில் பச்சையாய் இருக்கிறது....என் வீட்டு மாதுளையும்   தேசியும் ஆசையாய் நாங்கள் ஆசையாய் வளர்த்த றோஜாயும் அருகே மணிவாளையும்  அதற்கடுத்து நித்தியகல்யாணி அனைத்திற்கும் நடுவில் கொலுவிருந்த துளசிச் செடியும் அங்கால் பின்வளவு வேம்பும்   முருங்கையும் ஆடுகட்டும் அட்டாலையும் எங்கள் பசுக்கன்றுகள் ஓடிவந்தமரும் பிலா நிழலும் இன்னும் இருகிறதா....??? 

ஊர் போச்சு உறவு போச்சு உடமை போச்சு ஓடியாடி விளையாடிய தெரு போச்சு படுத்துறங்கிய திண்ணை போச்சு.... வானரங்கள் இட்ட தீயில் செத்துப்போன - என்ஊரின் வாசம் இன்னமும் என் நாசிகளில் ஈரமாயல்ல அதற்கும் மேலாய்....கலந்தேயிருக்கிறது......  

நத்தை வேகத்தில் நகர்ந்த வரிசையில் அது எனது முறை. எனது பாஸ்போட் நேற்று முன்னிரவு ஈரப்பெரியகுளத்தில் ஆமி தந்த பாஸ் கொப்பி எல்லாம் கொடுக்க அங்கிருந்த பெண்பொலிஸ் விசாரணை செய்தாள். சிங்களத்தில் அவள் விசாரிக்க மச்சான் தமிழாக்கம் செய்து எனக்குச் சொல்லிக் கொண்டிருந்தான்.வன்னிக்கு எங்கை ? முல்லைத்தீவு. முல்லைத்தீவிலை ? முள்ளியவளை. முள்ளியவளையிலை யாரிருக்கினம் ? உறவினர். சரி அங்காலை போய் நில்லுங்க கூப்பிடேக்கை வாங்கோ. பாதிக்கண்டம் தாண்டிய மகிழ்வு.  

நேரம் 10.40 என்பெயர் சொல்லி அழைத்தாள் அந்தப்பெண் பொலீஸ்.வன்னிக்கான அனுமதியைத் தந்து சொன்னாள். நாளைக்கிடையிலை போவேணும். இல்லது திரும்பி பாஸ் எடுக்க வேணும். சொல்லிவிட்டு எனது பாஸைக்கையில் தந்தாள்.கண்டம் தாண்டியாச்சு இனிக்கடந்தால் வன்னிமண். கால்கள் வேகம் பூட்டக் கனம் கழன்றது.  

வன்னிக்குப் போகும் நினைவில் வலியெல்லாம் பஞ்சாய்ப் பறந்தது.

மதியம் 11.30 பிரமனாலங்குளம் போவதற்கான பஸ்ஸில் நான். வேர்த்து ஊற்றிக் கொண்டிருந்தது.

பின்னுக்குப் போங்கோ.....உள்ளுக்கை பெரியபையள் வைச்சிருக்கேலாது. வெளியிலை தாங்கோ எல்லாத்தையும்.

உள்ளிருந்த எல்லாப்பாரங்களும் வெளியில் வந்து வாகனத்துக்கு மேலேறின.  

ஆரேன் கிளிநொச்சிக்குப் போறவையள் இருக்கிறியளே ?

கையில் ஒரு கடிதத்தோடு வினாவினாள் ஒரு அம்மா.

இந்தக்கடிதத்தை ஒருக்கால் கிளிநொச்சியிலை குடுக்க வேணும். ஆரும் குடுப்பியளே....?

தாங்கோ நான் குடுத்துவிடுறன். பின்வரிசையில் இருந்த அந்த இளைஞன் வாங்கித் தன்சேட் பொக்கற்றினுள் பத்திரப்படுத்தினான். கவனம் தம்பி முக்கியமான கடிதம். மறக்காதை ராசா....ஓமம்மா நீங்க யோசிக்காதையுங்கோ என்றான் பதிலுக்கு அந்த இளைஞன். ஏதோ ஒரு பாரத்தை இறக்கிவைத்த மகிழ்வும் ஆறுதலும் அந்த முகத்தில் தெரிந்தது. வாகனங்களைப் பார்த்துவிட்டு அந்த அம்மா போய்க்கொண்டிருந்தாள்.

 

குறுக்கும் நெடுக்குமாய் இராணுவ வாகனங்கள்   இரராணுவமும் காவற்துறையும் நடமாடித்திரிந்தது.

 

எப்ப தம்பியவை வெளிக்கிடுவியள் ? கேட்ட அப்புவிற்கு இப்ப வெளிக்கிடுவம் என்றான் வாகனச் சாரதி.  

'துள்ளாத மனமும் துள்ளும் " படப்பாடலொன்று மெல்ல வாகனத்துக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது.

வாகனம் இயங்கமறுத்த அடம்பிடிக்க உள்ளிருந்த ஆண்களை வெளியில் வந்துதள்ளுமாறு அழைத்தார்கள். இவங்கடை வாகனமும் இவங்களும் புறுபுறுத்துக் கொண்டு சிலர் இறங்கினார்;கள். வாகனம் உருளத் தொடங்க எல்லோரும் வானில் ஏறி வான் வேகமெடுக்கிறது.

 நெருக்கமும் நீண்ட நேரக்காத்திருப்பும் முடிந்து பிரமனாலங்குளம் நோக்கி வாகனம் பயணிக்கிறது. அடுத்த தடைதாண்ட அவரவர் தயாராக தஅதுவரையிருந்த இறுக்கம் தளர்கிறது.