கொழும்புக் கடிதம்

புலத்துப் புண்ண்pயவான்களுக்கு வணக்கம்,
நாங்கள் இங்கை கடுங்குளிருக்குள்ளை இரவெண்டும் பகலெண்டும் பாக்காமல் தும்படிச்சுச் சீரழிஞ்சு கொண்டிருக்கிறம். இந்த லட்சணத்திலை புண்ணியவான்களோ எண்டு உங்கடை நெற்றிக்கண்ணைத் திறக்கிறது எனக்கு விளங்குது. ஆனால் தமிழனாய் பிறந்த ஒரே காரணத்துக்காக சிங்களப் படையும் சீரழிஞ்ச ஒட்டுப்படைகளும் எங்களைப் போட்டுப் படுத்திற பாட்டோடை ஒப்பிடேக்குள்ளை நீங்கள் புண்ணியவான்கள் தான்.

கொழும்பும் கொழும்பு அரசியலும் இப்ப கோமாளிகளின்ரை கூடாரமாப் போச்சுது. இங்கை கன சுவாரசியமான விசயங்கள் அரங்கேறிக் கொண்டிருக்குது. நீங்கள் இதையெல்லாம் மிஸ் பண்ணிறியள். அந்தப் புதினங்களை உங்களுக்குச் சொல்லுறதுக்காக ஒரு கடிதம் எழுதுவம் எண்டு வெளிக்கிட்டிருக்கிறன். வேலைக்குப் போய் களைச்சு விழுந்து வந்து றிலாக்சாக வேணும் போலை இருக்கும் போது என்ரை கடிதத்தை வாசிச்சால் வடிவேலின்ரை படம் பாத்த மாதிரி இருக்கும். கொழும்புப் புதினங்கள் அவ்வளவு தமாசா இருக்குது.

உங்கடை நாட்டிலை இருக்கிற ரிவி ஒண்டு இலங்கைத் தமிழர் கள்ளர் அவையள் கள்ளமட்டை போட்டுக் காசு சம்பாதிக்கினம் எண்டு சொன்னதாக் கேள்விப்பட்டன். இந்த நேரத்திலை இங்கையும் ஒரு கள்ளமட்டைக் கதை வெளியிலை வந்திருக்குது. கள்ள மட்டை போட்டது ஆர் தெரியுமே. முற்றும்; துறந்நவர் எண்டு சொல்லிப் போட்டு நாட்டையும் அரசியலையும் சீரழிச்சுக் கொண்டிருக்கிற ஆமத்துறு ஒண்டுதான் இப்படிச் சொத்துச் சேத்திருக்குது. வெல்லவாயா எண்ட இடத்திலை ஆரோ ஒருத்தரின்ரை காட்டை எடுத்து லட்சக் கணக்கிலை காசு மோசடி பண்ணினவர் இப்ப மாட்டுப் பட்டிட்டார். அரசைத் துறந்து துறவியானவரின்ரை வாரிசுகளின்ரை நிலையை நினைச்சுச் சிரிக்கிறதா அழுகிறதா எண்டு தெரியேல்லை.
இப்ப கொஞ்ச நாளா வெளிநாடுகளெல்லாம் இலங்கைப் பிரச்சினையைப் பற்றிக் கொஞ்சம் சத்தமாக் கதைக்கத் தொடங்கியிருக்குது. இது நல்லதுக்கோ கெட்டதுக்கோ எண்டு விளங்காமல் சனமெல்லாம் முழிச்சுக் கொண்டிருக்குது. முந்தி ஒரு நாடு ‘பட்டினியாலை வாடும் தமிழ் மக்கள்’ எண்டு கத்து கத்து எண்டு கத்திப் போட்டு வந்து பண்ணின அட்டகாசம் இன்னும் சனத்துக்கு மறக்க இல்லை.

ஆனால் மனித உரிமைகளை மீறுகினம் எண்டு போட்டு சில ஐரோப்பிய நாடுகள் சிங்களவனுக்கு குடுக்க இருந்த உதவிகளை நிறுத்தி வைச்சிருக்கிறது கொஞ்சம் சந்தோசமாத் தான இருக்குது. ஆனால் மகிந்தருக்கு கோவம் கொப்பளிச்சுக் கொண்டு வந்திருக்குது. குடிக்கிறது கூழ் கொப்பளிக்கிறது பன்னீர் எண்ட மாதிரி எங்கடை நாட்டை எங்கடை காசிலையே அபிவிருத்தி செய்வம். ஒருத்தரையும் நம்பி இருக்க மாட்டம் எண்டெல்லாம் மூளைக்கும் வாய்க்கும் கனெக்சன் இல்லாதவர் மாதிரிக் கதைச்சுக் கொண்டிருந்தவருக்கு இடையிலை கனெக்சன் கிடைச்சு மனிசி பிள்ளைகள், சகோதரங்களின்ரை ஞாபகம் வந்திட்டுதோ தெரியேல்லை நல்லெண்ணத்தோடை தாற உதவிகளை ஏற்றுக் கொள்வம் எண்டு முடிச்சிருக்க்றார்.

அடுத்ததும் மகிந்தரின்ரை புதினம் தான். தன்ரை வண்டவாளங்களை எல்லாம் போட்டுடைச்சுக் கொண்டிருக்கிற மங்கள சமரவீரவை தன்னோடை சேத்து வைக்கச் சொல்லி அலவி மௌலானாவை பிடிச்சு விட்டவர். ஆந்தாளும் வயசு போன நேரத்திலை அங்கையும் இங்கையும் ஓடித் திரிஞ்சுது. பேச்சுத் திருப்தியாத் தான் போய்க கொண்டிருந்தது. ஆனால் மங்களவுக்குத் தாறதாச் சொன்ன துறைமுக மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சுப் பொறுப்பைத் தம்பி சமல் றாஜபக்சவுக்குக் குடுத்ததிலை எல்லாம் குழம்பிப் போச்சுது. மற்றது சிறிபதி சூரியாராச்சியையும் வெளியிலை விட மாட்டன் ( அவர்தான் மகிந்த புலிகளுக்கு 200 மில்லியன் குடுத்த கதையை அம்பலப் படுத்தினவர்) எண்;டதும் மங்களவுக்குப் பிடிக்க இல்லையாம்.

இப்ப மங்கள மாத்தையா லண்ணடனுக்கு வந்து சந்திரிக்காவோடை மந்திராலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார். தன்னை அவமானப் படுத்தினதுக்கு மகிந்தவைப் பழி வாங்குவன் எண்டு அம்மா ஏற்கனவே சபதம் போட்டிருக்கிறா. மொத்தத்திலை இனி நிறையக் கூத்து இங்கை அரங்கேறும் போலை கிடக்குது. அதுகளைப் பற்றி அடுத்த முறை எழுதிறன்.