
"எங்க ரஜினி ஒரே நேரத்துல 5 பேர ஒரே கைல அடிச்சிடுவாரு!"
"போடா! எங்க கமலு 20 பேர ஒரே ஒதைல சாகடிச்சுடுவாரு!"
"போடா புழுகு! எங்க ரஜினி ஒரு ஒதை உட்டாருன்னா ஒரு செவுரே இடிஞ்சி உழுந்துடும்.."
"அய்ங்க்க்... எங்க கமலு கையவச்சி ஒரு தள்ளு தள்ளுனா இந்த பில்டிங்கே தூள் தூள் ஆகிடும்!"
இப்படியாகத்தான் எங்கள் 2ஆவதோ 3ஆவதோ படிக்கும் வயதில் எங்களது சினிமா ரசனை குழுமனப்பான்மையாக உருவெடுத்ததாக ஞாபகம். தெருவில் இருக்கும் எல்லா பசங்களும் கொதிக்கும் வெயிலில் மசபந்து, கில்லி, பம்பரம், கோலி ஆடிய நேரம்போக ஓய்ந்துபோய் எவன் வீட்டு வாயிற்படியிலாவது இடம் கிடைத்தால் உட்கார்ந்துகொண்டு ரஜினியும் கமலும் செய்ய இயலாத, செய்ய விரும்பாத, எங்கள் கற்பனைக்கு எட்டிய எல்லா பிரதாபங்களையும் செய்வார்கள் என நம்பிக்கொண்டு சண்டைபோட்டுக்கொள்வோம். (என்னது? இப்ப இருக்கற ரசிகர் மன்றகுஞ்சுகளும் இப்படித்தான் இருக்கறாங்களா? :) ). அப்பொழுதுகூட நான் கமல் கட்சிதான். ஒருவேளை என் க்ளோஸ் ஃபிரண்ட் மணி கமல் கட்சியாக இருந்ததால் இருக்கலாம். அல்லது எனது அண்ணன் ரஜினிபோல நடித்துக்காண்பிக்கிறேன் என்று சாக்பீசை வாயில்வைத்து ஸ்டைலாக சிகரெட் குடித்து என் அப்பாவிடம் முதுகு பழுக்க வாங்கிக்கட்டிக்கொண்டதாலும் இருக்கலாம். வாய்வலிக்க பேசிப்பேசி ஓய்ந்துபோய் அவரவர் வீட்டிலிருந்து "தெய்வத்தின் குரல்" (ஹிஹி.. அம்மாவோடதுங்க... ) கேட்கத்துவங்கியதும் கலைந்துபோவோம்.
கொஞ்ககாலம் கழித்து 13 வயதில் தெரு பசங்களெல்லாம் இரண்டாக பிரிந்து பேனர் தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டபோதும் நான் கமல் சைடு சேர்ந்துகொண்டேன். பெரிய அட்டைபெட்டிகளை மடக்கி பெரிய செவ்வகமாக மாற்றி அதன்மீது 2ரூபாய்க்கு வாங்கிய பால்பேப்பரை ஒட்டி வெள்ளைத்திரைபோல ஆக்கி அதில் இதுவரை சேர்த்து வைத்திருந்த கமல் படங்களையெல்லாம் வித்விதமாக வெட்டி ஒட்டி, சிகரெட் பாக்கெட்டில் இருக்கும் ஜிகினா பேப்பர்களை பொறுக்கி அதை அட்டையின் முனைகளில் தோரணம்போல ஒட்டி அலங்கரிப்போம். இதில் ரகசியமாக ஒரு ஒற்றனை ரெடி செய்து ரஜினி குரூப்பில் ஊடுருவச்செய்து அவர்களது பேனர் எங்களுடயதைவிட பெரிதாக சூப்பராக இருக்கிறதா என்று அடிக்கடி பார்த்துவரச்சொல்வோம். அதற்க்காக அவனுக்கு சாக்கலேட்டும், சேமியா குச்சிஐஸ்சும் வாங்கித்தவேண்டுமென்பது எழுதப்படாத விதி. திடீரென ஒருநாள் சொல்லிவைத்தாற்போல இரு பேனர்களும் தெருமுனையில் இருக்கும் போஸ்டாபீசை தாண்டிய ஒரு பழையவீட்டு சுவற்றில் எதிரெதிரே தொங்கவிடப்படும். அந்த பேனரை கொண்டுபோய் அங்கே சேர்ப்பதற்குள் விடும் அலப்பரையில் தெருவே அலரும். இரண்டு கும்பலும் ஒருவரையொருவர் முறைத்தபடி அவரவர் பேனரை அது சூப்பர்.. இது நொள்ளை எனபேசியபடி அன்றய மாலை விளையாட்டுகள் ஏதுமின்றி முடியும். எல்லோருக்கும் இப்படிதான் முடிந்தது. ஆனால் எனக்குவேறுமாதிரி! தெருமுனையிலேயே என்னை பார்த்துவிட்ட அப்பா அப்படியே அவரது புல்லட்டில் ஏறச்சொல்லி வீட்டுக்கு கூட்டிவந்து இந்தமுறை என் அண்ணன் சிரிக்க சிரிக்க "படிக்கற பையன் செய்யற வேலையா இது? " என முதுகை பழுக்கவைத்தார். அதோடு நின்றது என் ரசிகர்மன்ற வாழ்வு. இல்லையாயின் ஒரு மன்ற பொருளாளராகவாவது ஆயிருப்பேன். ம்ம்ம்... யோசித்துப்பார்க்கையில் நான் பேனர் செய்யும் வேலைக்கு சென்றது என் ஓவியக்கலை ஆர்வத்தினால் மட்டுமே என்பது தெரிகிறது. அப்போதும் கூட நான் ரஜினியை ஒரு ரசிகனாகக்கூட பார்க்க ஆரம்பிக்கவில்லை.
கல்லூரி ஆண்டுகளில் ஒரு கித்தாப்பாக தேய்த்து கழுவினால் போய்விடும் அரும்பு மீசையுடன் ஒரு அறிவுஜீவி என்ற எண்ணம் தலைதூக்கி ஒரு 20 அடி மேலே இருந்த திரிந்த காலங்களில், அறிவுத்தாகம், ஆழ்ந்த ரசனை, கலைத்தாக்கம்(வேற ஏதாவது இருக்கா...?) என மனநிலை பாதிக்கப்பட்டு(!?), வேண்டுமென்றே கமலை சப்போர்ட் செய்தும் ரஜினி படத்தில் உள்ள அத்தனை அபத்தங்களையும் கிண்டல் செய்தும் பேசிமாய்வோம். ரஜினி பைக்கை ரிவர்சில் ஓட்டுவதும், சிகரெட்டை துப்பாக்கியால் சுட்டு பற்றவைப்பதும், துப்பாக்கி தோட்டாவை கையாலேய தடுப்பதையும் சொல்லி சொல்லியே ரஜினி ரசிகர்களின் வாயை அடைப்போம். அப்போது முரளி என்ற என் நண்பன் ரஜினி பைத்தியமாகவே இருந்தான். ஒரு படத்தையும் விடமாட்டான். டிவியில் ரஜினி படமென்றால் அப்படியே கேமல் கம்மை தரையில் ஊற்றி அதில் ஒட்டியதுபோல எங்கயும் நகராமல் ஒன்றிவிடுவான். நாங்கள் அடிக்கும் இத்தனை கிண்டல்களுக்கும் சிரித்துகொண்டே போய்விடுவான். ஒருநாள் இந்த ரவுசு ஓவராகப்போக அவன் சொன்னது எனக்கு மிகவும் பிடித்துப்போனது.
"நம்ப வீட்டு குழந்தை தத்தக்கா பித்தக்கானு நடந்தாலும், தப்பு தப்பா பேசினாலும் அதை பார்த்து ரசிக்கத்தான் தோணுமே தவிர அதுக்கு நடக்க தெரியலை பேச தெரியலைன்னு கிண்டல் பண்ணத்தோணாது. அது மாதிரிதான் ரஜினி எனக்கு!"
இதன்பிறகுதான் ரஜினியை ஒரு இமேஜ் வட்டத்துக்குள் இருக்கும் நடிகராக அல்லாமல் ஒரு சக கூட்டாளியைப்போல நினைக்கத்தோன்றியது. இந்த நினைப்பே என்னை அதன் பிறகு மறுபடியும் பார்த்த பழைய ரஜினி படங்களை ரசிக்கவைத்தது. ஜானி, முள்ளும் மலரும், தில்லு முல்லு, எங்கேயோ கேட்ட குரல் போன்ற படங்களை மறுபடியும் பார்த்த பொழுது அதில் அவரது ஆளுமை புலப்பட்டது. அந்த சின்னக்கண்களையும், தவறான அழுத்தமில்லாத தமிழ் உச்சரிப்பையும் என்னை அறியாமலேயே ரசிக்க ஆரம்பித்திருந்தேன். அதுவும் அந்த "காதலின் தீபம் ஒன்று.. ஏற்றினாலே என் நெஞ்சில்.." என்ற பாட்டு! அது படமாக்கப்பட்ட விதமும் அதில் அவரது காதல் வயப்பட்ட மனநிலையை உணர்த்தும் அசைவுகளும் பயங்கர ரொமாண்டிக்காக இருக்கும். மனசில் அப்படியே ஒரு அமைதியான இனிய உணர்ச்சிகளை கிளரும். இந்த காலகட்டத்தில்தான் "அண்ணாமலை" என்று ஒரு அருமையான படம் ஒன்று வந்தது. ஒரு ரஜினி ரசிகனாக நான் முதன்முதலில் தியேட்டருக்கு சென்றுபார்த்த படம். அப்படியே சீனுக்கு சீன் ஒன்றிப்போய் பார்த்த படம் அது.
எப்படியோ எங்கள் வீட்டில் ஒருவராகிப்போனார் ரஜினி. அப்பா, அம்மா, அக்கா, அண்ணா என எப்படி எல்லோருக்குமே அவரை பிடித்திருந்தது என்பது இன்றுவரை ஆச்சரியம் தான். அவர் ஒரு நடிகர் என்பதனையும் மீறி ஒரு அன்னியோனியமான ஒரு உறவு எங்களுக்குள் இருந்தது. டிவியில் ரஜினி படம் போட்டால் அத்தனைபேரும் ஒன்றாக அமர்ந்து பார்ப்போம். ரஜினி நடித்த காமெடி சீன்கள் வந்தேலேயே ஏதோ எங்கள் சித்தப்பா தான் இப்படி விளையாட்டாக செய்கிறார் என்ற எண்ணம்தாம் இருக்கும். பார்க்கப்போனால் அவரது அப்பாவித்தனம் கலந்த காமெடிகளில் ஒன்றுமே பெரிதாக இருக்காது. ஆனால் அப்படி ஒரு சிரிப்பு வரும். முத்து படத்தில் டிராமா நடிகர்களை வில்லன் ஆட்கள் வந்து அடிக்கும் போது "அவன 2 போடுங்க.. பெரிய கமலஹாசன்னு நெனப்பு.." என்பதும், மாப்பிள்ளை படத்தில் நதியா தாயத்து கட்டி இனி யாருக்கும் பயப்படவேண்டாம்னு சொல்லும்போது "அப்ப நம்ப சுப்பரமணி..?" என்பதும் அடக்கமுடியாத சிரிப்பில் என்னைஆழ்த்தும்.
இப்படி ஒரு நல்ல நடிகராக, நல்ல மனிதராக இருந்த ரஜினியை அவரை அறியாமலேயே அவரை சுற்றி ஒரு ஒளிவட்டம் போட்டு அவரது மனநிலைக்கும் வாழ்க்கைமுறைக்கும் ஒத்துவராத காரியங்களை செய்யவைத்து அவரது பெயரை அவராலேயே கெடவைத்து வேடிக்கை பார்க்கிறது ஒரு மாபெரும் கூட்டம். அரசியல் தலைவர்களில் இருந்து, அவரது ரசிகர்மன்ற கண்மணிகள்வரை அனைவரும் இதில் அடக்கம்.
நான் அவரது வெறி பிடித்த ரசிகனல்ல... அவர் அரசியலுக்கு வந்து இந்த தமிழ்நாட்டை உயர்த்தவேண்டும் என நம்புபவனுமல்ல... அவரை ஒரு நல்ல நடிகன் என்பதையும், அவரது படங்கள் அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்விக்கும் என்பதையும் மட்டுமே உணர்ந்தவன். நான் அவரிடம் எதிர்பார்ப்பதும் அது மட்டுமே. என்னைபோலவே ரஜினியை ஒரு நல்ல மனிதனாக, ஒரு நல்ல நடிகராக, நம் வீட்டில் ஒருவராக நினைக்கக்கூடிய பெரும்பாலோர் இந்த நாட்டில் உண்டு. நாங்களெல்லாம் சேர்ந்து ரஜினிக்கு சொல்லுவது இதுதான். "உங்கள் படங்களில் மட்டுமே உங்களை ஹீரோவாக பார்க்க விரும்புகிறோம். உங்களிடம் எந்தவித ஆதாயத்தையும் நாடாமல், உங்களை தெய்வமாக நினைக்காமல், உங்களை இந்த நாட்டை கட்டிக்காக்க வந்த தலைவனாக எண்ணாமல் ஒரு சிறந்த நடிகராக ஒரு சிறந்த மனிதராக மட்டுமே எண்ணும் நாங்கள் உங்கள் நலம்விரும்பியாக மட்டுமே இருக்கவிரும்புகிறோம்!
ரஜினி அங்க்கிள்! நாங்க இங்க இருக்கோம்...!"
Recent comments
1 year 20 weeks ago
1 year 21 weeks ago
1 year 26 weeks ago
1 year 29 weeks ago
1 year 29 weeks ago
1 year 29 weeks ago
1 year 30 weeks ago
1 year 33 weeks ago
1 year 38 weeks ago
1 year 43 weeks ago