ஏறக்குறைய 12 வருடங்களுக்கு முன்பு சிங்களப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்களின் கலாச்சாரத் தலைநகரான யாழ்ப்பாணம் மீண்டும் தமிழர்களின் கைகளில் வர வேண்டும் என்ற ஏக்கம் நிறைந்த கனவு ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு.
இந்தக் கனவு பலிப்பது போன்ற சம்பவங்கள் சில நேரங்களில் நடந்திருக்கின்றன. ஆனால் கடைசியில் அவைகள் கைகூடவில்லை.
1999ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பமான "ஓயாத அலைகள் 3" யாழ் நகரின் வாசல் வரை வந்தது. பல கட்டங்களாக நடந்த "ஓயாத அலைகள் 3"இல் விடுதலைப் புலிகளின் படையணிகள் அரியாலையில் தரையிறங்கி யாழ்ப்பாண நகருக்கு மிக அண்மையாக நின்றன. அத்துடன் சாவகச்சேரி போன்ற பகுதிகளையும் கைப்பற்றி இருந்தன.
அப்பொழுது யாழ் குடா மீண்டும் தமிழர்களின் கரங்களில் வந்து விடும் என்ற நம்பிக்கை உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு ஏற்பட்டது. யாழ் குடாவில் சிக்கி இருந்த சிறிலங்கா படையினரை மீட்பதற்கு சிறிலங்கா அரசு இந்திய அரசின் உதவியை நாடுகின்ற அளவிற்கு நிலைமை இருந்தது.
ஆனால் அன்றைக்கு யாழ் குடா தமிழர்களின் வசமாகவில்லை. இந்திய அரசின் அழுத்தம், ஆளணி ஆயுதப் பற்றாக்குறை போன்ற காரணங்களினால் ஆனையிறவை மீட்டதோடு தமிழர் படையணி நின்று கொண்டது.
சில மாதங்கள் கழித்து மேற்குலக நாடுகளிடம் இருந்து வாங்கிக் குவித்த கனரக ஆயுதங்களின் உதவியோடு அரியாலை, சாவகச்சேரி போன்ற பகுதிகளை சிறிலங்காப் படைகள் மீளக் கைப்பற்றிக் கொண்டன. தரை வழி வினியோகப் பாதை இல்லாத காரணத்தினால் விடுதலைப் புலிகளும் பின்வாங்க நேர்ந்தது.
இதற்கு பின்பு கடந்த ஆண்டு 2006 ஓகஸ்ட் மாதம் விடுதலைப் புலிகள் மண்டைதீவு, முகமாலை போன்ற இடங்களில் தாக்குதலை தொடுத்தார்கள். யாழ் குடாவிற்கு தெற்காக ஓரிரு மைல்கள் தூரத்தில் உள்ள மண்டைதீவில் தரையிறங்கிய விடுதலைப் புலிகளின் ஈரூடகப் படையணிகள் அப் பகுதியைக் கைப்பற்றிக் கொண்டன. அத்துடன் அல்லைப்பிட்டியை நோக்கியும் முன்னேறின.
அதே வேளை முகமாலை முன்னரங்குகளை ஊடறத்த விடுதலைப் புலிகளின் படையணிகள் சில மைல்கள் முன்னேறி இருந்தன.
இந்தச் சம்பவங்களால் விடுதலைப் புலிகள் யாழ் குடாவைக் கைப்பற்றப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் மீண்டும் ஏற்பட்டது.
ஆனால் ஏறக்குறைய பத்து நாட்களாக மண்டைதீவை கட்டுப்பாட்டில் வைத்திருந்த விடுதலைப் புலிகள் தளம் திரும்பினர். அதற்கு பின்பு ஒரு வாரம் கழித்து முகமாலை, கிளாலி போன்ற பகுதிகளில் நடந்த சண்டைகளும் ஓய்வுக்கு வந்தன. அத்துடன் தென்தமிழீழத்தில் சம்பூர், மாவிலாறு, வாகரை என்று விரிந்த சண்டைக் களங்களும் யாழ் குடாவின் களமுனையின் மீதான கவனத்தைக் குறைத்திருந்தன.
மண்டைதீவு சமர் முடிந்து ஏறக்குறைய பத்து மாதங்கள் கழித்து தற்பொழுது மீண்டும் விடுதலைப் புலிகள் யாழ் குடாவை கைப்பற்றப் போகிறார்கள் என்ற பேச்சு எழுந்துள்ளது.
அதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது விடுதலைப் புலிகள் நடத்திய நெடுந்தீவு கடற்படைத் தளத்தின் மீதான தாக்குதல். அடுத்ததாக சிறிலங்கா இராணுவத்தின் இணையத்தளம் வெளியிட்ட செய்தி.
கடந்த 24.05.7 அன்று அதிகாலை 1 மணியளவில் நெடுந்தீவில் தரையிறங்கிய விடுதலைப் புலிகளின் ஈரூடகப் படையணி அங்கிருந்த கடற்படைத் தளத்தை தாக்கி அழித்தது. 34 கடற்படையினர் கொல்லப்பட்டனர். அங்கிருந்த ஆயுதங்களையும், நவீன ராடர் ஒன்றையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றிக்கொண்டு தளம் திரும்பினர்.
இந்தத் தாக்குதல் பலவிதங்களில் முக்கியத்துவம் பெறுகிறது. விடுதலைப் புலிகளின் ஈரூடகப் படையணி தன்னுடைய பலத்தை நீருபித்துள்ளது. கொழும்பில் இருந்து யாழ் குடாவிற்கான வினியோகப் பாதை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளது. யாழ் குடாவில் முக்கிய களமுனைகளில் தமது பலத்தை குவித்து வைத்திருந்த சிறிலங்காப் படைகள் தீவுப் பகுதிகளுக்கும் தமது படையினரை பரவலாக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
அத்துடன் வான்புலிகளை கண்காணிப்பதற்கு நிறுவப்பட்ட ராடர் நிலையத்தை அழித்து, ராடரையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றி இருக்கிறார்கள். பொதுவாக விடுதலைப் புலிகள் தமது தாக்குதல்கள் மூலம் ஒரு கல்லில் இரு மாங்காய்களை வீழ்த்துவதில்லை, ஒரு மாந்தோப்பையே வீழ்த்துவார்கள். அதைத்தான் நெடுந்தீவுத் தளத்தின் மீதான தாக்குதலிலும் செய்திருக்கிறார்கள்.
பத்து மாதங்கள் கழித்து மீண்டும் யாழ் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் விடுதலைப் புலிகளால் தாக்குதல் நடத்தப்பட்டதானது பல தரப்பினரிடம் யாழ் குடாவை கைப்பற்றுவது குறித்த எதிர்பார்ப்பை மீண்டும் ஏற்படுத்தி உள்ளது.
இதே வேளை சிறிலங்கா பாதுகாப்புத் தரப்பின் இணையத் தளம் ஒரு செய்தியை வெளியிட்டது. விடுதலைப் புலிகள் யாழ் குடாவைக் கைப்பற்றுவதற்கு ஒரு பெரும் தாக்குதலுக்கு தயாராகி வருகிறார்கள் என்றும், யாழ் குடாவைக் கைப்பற்றுவதற்கு பொட்டம்மான் தயாரித்த திட்டத்தை விடுதலைப் புலிகளின் தலைவர் அங்கீகரித்திருக்கிறார் என்றும் அந்தச் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
யாழ் குடாவைக் கைப்பற்றுகின்ற சண்டையில் 8000 போராளிகள் இறப்பதோடு, 50000 பொதுமக்கள் கொல்லப்படுவார்கள் என்று விடுதலைப் புலிகள் கணக்கிட்டுள்ளதாகவும் அந்த இணையத்தளம் மேலும் தெரிவித்திருந்தது.
சிறிலங்கா பாதுகாப்புத் தரப்பினரின் இணையத்தளம் வெளியிட்ட செய்தி சில தணிக்கைகளோடு தமிழர்களின் ஊடகங்களில் வெளியாகி தமிழ் மக்கள் மத்தியிலும் பரவியது. 8000 போராளிகளும் 50000 பொதுமக்களும் கொல்லப்படுவார்கள் என்ற "கணக்கை" தமிழில் வெளியாகின்ற சிங்கள சார்பு ஊடகங்கள் மட்டும் வெளியிட்டிருந்தன.
சிங்களப் பாதுகாப்புத் தரப்பின் இணையத் தளம் வெளியிட்ட செய்தியில் ஒரு பெரும் சதித் திட்டம் அடங்கி இருக்கிறது. விடுதலைப் புலிகள் யாழ் குடாவை மீட்பதற்கு பெரும் தாக்குதலை நடத்துவார்கள் என்று சிறிலங்கா அரசு உறுதியாக எதிர்பார்க்கிறது. அப்படி விடுதலைப் புலிகள் யாழ் குடா மீது தாக்குதலை தொடுக்கின்ற போது, அங்கு வாழும் மக்களில் 50000 பேரை கொலை செய்கின்ற திட்டத்தை சிங்கள அரசு கொண்டுள்ளது என்பதே இந்தச் செய்தியில் தெரிகின்ற உண்மையாகும்.
சிறிலங்கா பாதுகாப்புத் தரப்பின் இணையத் தளம் வெளியிட்ட செய்தி ஒரு மிரட்டல் கலந்த சதித் திட்டமே தவிர வேறில்லை. அத்துடன் 50000 பொதுமக்கள் கொல்லப்படுவார்கள் என்ற செய்தியைப் பரப்புவதன் மூலம் விடுதலைப் புலிகளுக்கு தமிழ் மக்கள் மத்தியில் எதிர்ப்புகளை உருவாக்குவதையும் சிறிலங்கா அரசு ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
விடுதலைப் புலிகள் சண்டைகளில் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் மிகுந்த அக்கறை செலுத்துபவர்கள். கொழும்பில் நடத்திய தாக்குதல்களில் கூட அப்பாவி சிங்கள மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் கவனமாக இருப்பவர்கள். அவர்கள் 50000 மக்கள் பலியாகக் கூடிய ஒரு திட்டத்தை தயாரிக்க மாட்டார்கள் என்பதை சிறுபிள்ளை கூட உணர்ந்து கொள்ளும்.
1996 ஆம் ஆண்டு ஏப்ரலில் "சூரியக்கதிர்2" நடவடிக்கையை சிறிலங்காப் படைகள் தென்மராட்சி மீது ஆரம்பித்தது. அப்பொழுது அங்கு வாழும் மக்களோடு யாழ்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த பல இலட்சம் மக்களும் அப் பகுதியில் தங்கி இருந்தார்கள்.
இந்த நிலையில் அப் பகுதியில் சிங்களப் படைகளை எதிர்த்து சண்டை நடத்தினால் பல நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகக் கூடிய அபாயம் இருப்பதை விடுதலைப் புலிகள் உணர்ந்தனர். எந்த ஒரு எதிர்ப்பும் இன்றி வன்னிப் பெருநிலப்பரப்பை நோக்கி விடுதலைப் புலிகளின் படையணிகள் பின்வாங்கிச் சென்றன.
ஆகவே விடுதலைப் புலிகள் யாழ் குடா மீது தாக்குதலை தொடுக்கின்ற போது பொதுமக்களுக்கு பாதிப்பு அற்ற வகையிலேயே அதை நடத்துவார்கள். அப்படி ஒரு பெரும் தாக்குதலை நடத்துவதற்கு விடுதலைப் புலிகள் தயாராகி வருகிறார்கள் என்ற எண்ணம் ஏற்படும்படி வேறு சில சம்பவங்களும் நடக்கின்றன.
கடந்த சில வாரங்களாக தென்மராட்சிப் பகுதியில் அடிக்கடி மோதல்கள் நடந்து வருகின்றன. அப் பகுதியில் ஊடுருவி இருக்கும் விடுதலைப் புலிகளின் விசேட வேவுப் படையணிகளுடனேயே இந்த மோதல்கள் நடைபெற்றுள்ளதாக தெரிகின்றது. இந்த மோதல்களில் பல படையினர் கொல்லப்பட்டும் உள்ளனர்.
விடுதலைப் புலிகள் சில மாதங்களுக்கு முன்பாக பெரும் எடுப்பில் அவசர ஆட்சேர்ப்பை நடத்தினார்கள். அப்படி சேர்க்கப்பட்ட பெரும்பாலானவர்கள் தமது பயிற்சியை நிறைவு செய்துள்ளார்கள். வான்புலிகள், ஈரூடகப் படையணி போன்றவையும் தம்முடைய பலத்தை நிரூபித்துவிட்டு தயாராக நிற்கின்றன.
கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் யாழ் குடா முன்னரங்குகளில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்திய போது சிறிலங்காப் படைகள் தமது முழுப் பலத்தையும் பிரயோகித்து மோதின. விடுதலைப் புலிகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே தமது பலத்தை பரயோகித்தனர். யாழ் குடா மீது தாக்குதல் நடத்தினால் சிறிலங்காப் படைகள் எவ்விதம் சண்டையை நடத்தும் என்பதை இந்தச் சண்டை விடுதலைப் புலிகளுக்கு தெளிவாகக் காட்டிக் கொடுத்தது.
ஆகவே யாழ் குடா மீது விடுதலைப் புலிகள் மீண்டும் தாக்குதல் நடத்துவார்களானால், இந்த அனுபவங்களைக் கொண்டு சரியான முறையில் தமது நகர்வுகளை செய்து வெற்றி பெறுவார்கள். விடுதலைப் புலிகளின் உண்மையான பலத்தையோ, யுக்திகளையோ சரியாக தெரிந்திராத சிறிலங்காப் படைகள் தோல்வியைத் தழுவும்.
ஆனால் விடுதலைப் புலிகளின் இலக்கு எதுவென்று யாராலும் சரியாகக் கணிக்க முடியாது. விடுதலைப் புலிகள் வேறு இலக்குகள் மீதும் தாக்குதல் நடத்தலாம். பெரும் தாக்குதுல்களை நடத்தாது தற்போது போன்று அதிரடித் தாக்குதல்களை மட்டும் தொடரலாம். எதுவாயிருப்பினும் 12 வருடக் கனவு இந்த ஆண்டு பலிக்க வேண்டும் என்பதே தமிழர்களின் எதிர்பார்பாக இருக்கிறது.
Recent comments
2 weeks 3 days ago
7 weeks 2 days ago
7 weeks 4 days ago
10 weeks 2 days ago
11 weeks 6 days ago
11 weeks 6 days ago
11 weeks 6 days ago
22 weeks 1 day ago
22 weeks 1 day ago
22 weeks 3 days ago