தமிழீழ மக்கள் நடத்திய ஆயுதப் போராட்டத்தை சிறிலங்கா அரசு உலக வல்லரசுகளின் துணையோடு தோற்கடித்து விட்டது. இன்றைக்கு தமிழினம் தன்னுடைய தலைமையையும் படை வலிமையையும் இழந்து விடுதலைப் போரை தொடர்ந்து நடத்து முடியாத நிலையில் நிற்கின்றது.
தமிழீழப் போராட்டத்தை வேறு வடிவில் தொடர வேண்டிய கட்டாயத்திற்கு தமிழினத்தை காலம் தள்ளிவிட்டிருக்கிறது.
தனக்கு என்று ஒரு மொழியை, பண்பாட்டை, நிலப்பரப்பை கொண்டிருக்கும் ஒரு தேசிய இனமாகிய தமிழினம் ஒரு அரசை தமிழீழத்தில் நடத்திக் கொண்டிருந்தது. அரசுக்கான கட்டமைப்புகளையும், முப்படையினரையும் கொண்டிருந்த தமிழீழத்தை சிங்களம் மீண்டும் ஆக்கிரமித்து விட்டது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நடந்து கொண்டிருக்கின்ற வரலாறு இது. தமிழ் மன்னர்கள் தமது நிலத்தை மீட்பதும், பின்பு அதை சிங்களம் ஆக்கிரமிப்பதுமாகவே ஈழ வரலாறு செல்கிறது. சில நு}ற்றாண்டுகளுக்கு பின்பு தமிழர்களின் நிலத்தின் பெரும் பகுதியை மீட்டு தமிழர்களின் ஆட்சியை மேதகு பிரபாகரன் அவர்கள் நிலைநாட்டியிருந்தார். ஏறக்குறைய முப்பது ஆண்டுகள் நீடித்த தமிழர்களின் இந்த அரசு மீண்டும் சிங்களத்தால் அழிக்கப்பட்டு விட்டது.
தாயகத்தில் இயங்கிய தமிழர்களின் அரசு அழிக்கப்பட்டு விட்ட நிலையில் வெளிநாட்டில் தமிழீழ அரசை நடத்துவது பற்றி தமிழர்கள் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
தமிழீழத்திற்கான புறநிலை அரசு (புழஎநசnஅநவெ in நஒடைந) ஒன்றை உருவாக்குவது பற்றிய சிந்தனை பல ஆண்டுகளுக்கு முன்பே சிலரிடம் துளிர்விட்டிருந்தது. இது பற்றிய ஆக்கங்களை சிலர் எழுதியிருக்கின்றார்கள். தமக்குள் விவாதித்திருக்கின்றார்கள். ஆனால் புறநிலை அரசுக்கான முயற்சி அதைத் தாண்டி அப்பொழுது செல்லவில்லை.
அதற்கு ஒரு நியாயமான காரணமும் இருந்தது. தமிழர்கள் தம்முடைய தாயகத்தில் ஒரு நிழல் அரசை உருவாக்கியருந்தார்கள். இந்த நிலையில் வெளிநாட்டில் ஒரு அரசை உருவாக்குவது அநாவசியமானதாக இருந்தது. ஒரு நாட்டிற்கு இரண்டு அரசுகள் இருக்க முடியாது அல்லவா?
ஆனால் இன்றைக்கு தமிழர்களின் தாயகம் சிங்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது. அங்கே தமிழர்களின் அரசு இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்படியான நிலையில் புறநிலை அரசு பற்றிய சிந்தனை இயல்பாகவே எழுகின்றது.
அந்நிய நாட்டினால் ஆக்கிரமிக்கப்பட்டு சொந்த நாட்டில் இயங்க முடியாத நிலையில் பல அரசுகள் வெளிநாடு ஒன்றில் இயங்கிய சம்பவங்கள் வரலாற்றில் பல முறை நடந்திருக்கின்றன. இரண்டாம் உலக யுத்தத்தில் கிட்லரின் ஆக்கிரமிப்பில் சிக்கிய பல நாடுகள் தமது அரசை வெளிநாட்டில் அமைத்திருந்தன. அப்பொழுது பல நாடுகளின் பாராளுமன்றங்கள் பிரித்தானியாவில் இயங்கின. கிட்லரால் ஆக்கிரமிக்கப்பட்ட பெல்ஜியம், பிரான்ஸ், போலாந்து, நோர்வே, கிரீஸ் போன்ற பல நாடுகள் இப்படி புறநிலை அரசை அமைத்திருந்தன.
இராணுவப் புரட்சி ஏற்பட்டு சட்ட விரோதமான சர்வாதிகார அரசு ஒன்று குறிப்பிட்ட நாட்டில் உருவாகின்ற பொழுது, மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசு புறநிலையில் இயங்கிய சம்பவங்களும் நடந்திருக்கின்றன. சென்ற நு}ற்றாண்டில் ஸ்பானியாவில் சர்வாதிகார ஆட்சி ஏற்பட்ட பொழுது அதனுடைய அரசு பிரான்ஸில் இயங்கியது.
இன்றைக்கு விடுதலைக்கு போராடிக் கொண்டிருக்கின்ற பல நாடுகள் தமது அரசுகளை புறநிலையில் வைத்திருக்கின்றன. சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்ற தீபெத் தன்னுடைய புறநிலை அரசை இந்தியாவில் வைத்திருக்கின்றது. 80களின் பிற்பகுதியில் பாலஸ்தீன விடுதலை இயக்கமும் ஒரு புறநிலை அரசுக்கான கட்டமைப்பை உருவாக்கியிருந்தது. சிரியாவில் விடுதலைக்குப் போராடுகின்ற குர்திய மக்களும் ஒரு புறநிலை அரசை கொண்டிருக்கின்றனர்.
இப்படி சொந்த தாயகத்தில் அரசை நடத்த முடியாத நிலையில் புறநிலையில் தமது அரசை நடத்துவது சுதந்திரப் போராட்டத்திற்கான ஒரு வழிமுறையாக இருக்கின்றது. மீண்டும் சொந்த மண்ணில் தமது அரசை நடத்தக் கூடிய நிலை ஏற்படும் வரை இந்த அரசுகள் வெளிநாட்டில் இயங்குகின்றன என்பதே புறநிலை அரசின் உட்பொருள். இந்த நிலையில் தமிழர்கள் "நாடு கடந்த தமிழீழ அரசு" (வுசயளெயெவழையெட பழஎநசnஅநவெ) ஒன்றை உருவாக்குவதற்கான வேலைத் திட்டத்தில் இறங்கியிருக்கின்றார்கள்.
புறநிலை அரசு, நாடு கடந்த அரசு ஆகிய இரண்டுக்கும் குறிப்பிடத்தக்களவு வேறுபாடுகள் உள்ளன.
புறநிலை அரசு என்பது பற்றி நாம் இதில் ஓரளவு பார்த்திருக்கின்றோம். உதாரணத்திற்கு தமிழீழப் புறநிலை அரசு வெளிநாட்டில் இயங்குமாக இருந்தால், அந்த அரசு தமிழீழத்தில் இருந்த அரசின் தொடர்ச்சியாக இருக்கும். தமிழீழத்தில் வாழும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருக்கும். தமிழீழத்தை மீட்டு அங்கே தன்னுடைய அரசை மீண்டும் அமைப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கும்.
ஆனால் "நாடு கடந்த அரசு" என்பது அப்படியானது அன்று என்பதே என்னுடைய புரிதலாக இருக்கின்றது. "நாடு கடந்த தமிழீழ அரசு" என்பது புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒரு கட்டமைப்பாகவே நான் விளங்கிக் கொள்கிறேன்.
விடுதலைக்கு போராடுகின்ற ஒரு இனம் இப்படி ஒரு நாடு கடந்த அரசை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபடுவது இதற்கு முன்பு நடந்திராத ஒன்று. தமிழர்களின் இந்த முயற்சி பல இடங்களில் ஒரு ஆச்சரியத்தையும் தோற்றுவித்திருக்கின்றது.
"நாடு கடந்த அரசு" என்பது எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டையும் அடிப்படையாகக் கொண்டிருக்காது நாடுகளை கடந்து நிற்கின்ற ஒரு அரசு ஆகும். உதாரணமாக ஐரோப்பிய யூனியனை நாம் சொல்லலாம். இதை விட குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய "நாடு கடந்த அரசு" வேறு இல்லை என்று நினைக்கிறேன்.
"நாடு கடந்த நிறுவனங்கள்", "நாடு கடந்த அமைப்புகள்" "நாடு கடந்த கட்சிகள்" என்று பல இருக்கின்றன. உதாரணமாக கிறீன்பீஸ் ஒரு நாடு கடந்த அமைப்பாக இருக்கின்றது. நாடு கடந்த பெற்றோலிய நிறுவனங்கள் சிலவும் இருக்கின்றன.
நாடு கடந்த கட்சிகள் என்று பார்க்கின்ற பொழுது அரபு நாடுகளில் செயற்படுகின்ற அல்லது செயற்பட்ட பாத் கட்சியை சொல்லலாம். அரபு தேசியத்தையும், சோசலிசத்தையும் வலியுறுத்துகின்ற இந்தக் கட்சி ஒரு நாடு கடந்த கட்சியாகவே உருவானது. ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கான கட்சியாக இது அமையவில்லை. பின்பு பாத் கட்சி ஈராக்கிலும் சிரியாவிலும் ஆட்சியையும் கைப்பற்றியது. அயர்லாந்திலும் வட அயர்லாந்திலும் செயற்படுவதால் சின்பெயின் கட்சியைக் கூட சிலர் நாடு கடந்த கட்சி என்று சொல்வார்கள்.
இவ்வாறு "நாடு கடந்த" (வுசயளெயெவழையெட) என்பதன் பொருள் ஒரு குறிப்பிட்ட நாட்டை சாராத தன்மை என்றே நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அந்த வகையில் கனடாவில் இருந்து அவுஸ்ரேலியா வரை புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ் மக்கள் தமக்கு என்று ஒரு அரசை உருவாக்குகின்ற வேலைத்திட்டமே "நாடு கடந்த தமிழீழ அரசு" ஆகும். கனேடியத் தமிழர்கள், பிரித்தானியத் தமிழர்கள் போன்ற வேறுபாடுகள் இன்றி நாடுகளைக் கடந்து புலம்பெயர் தமிழர்கள் ஒரு அரசை உருவாக்குகின்றார்கள் என்பதுதான் இதன் பொருள்.
"தமிழீழப் புறநிலை அரசை" அமைப்பதை விட "நாடு கடந்த தமிழீழ அரசை" அமைப்பது சட்டரீதியாகவும், ராஜதந்திரரீதியாகவும் இலகுவானது. தமிழீழத்தில் ஏற்படுகின்ற பாதகமான மாற்றங்கள் "நாடு கடந்த தமிழீழ அரசை" பாதிக்காது.
புலம்பெயர் தமிழர்கள் தமக்குள் ஒரு "நாடு கடந்த அரசை" அமைத்து என்ன செய்ய முடியும் என்று சிலர் கேட்கக் கூடும். தமிழீழத்தில் சிறிலங்கா அரசு செய்கின்ற அடக்குமுறைகளை தட்டிக் கேட்பதற்கும், அது பற்றிய செய்திகளை உலகிற்கு சொல்வதற்கும் ஒரு அரசு இருக்கின்றது என்பது முக்கியமானதொரு விடயம். பொதுவாக ஒரு இனம் விடுதலைக்காக போராடுகின்ற பொழுது அந்த இனத்திற்கு ஏதோ ஒரு நாடு உதவி செய்யும். எமக்கு துரதிர்ஸ்டவசமாக அப்படி ஒரு நாடு அமையவில்லை. இனி தமிழீழத்தில் வாழும் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் ஒரு வெளிநாட்டு அரசாக "நாடு கடந்த தமிழீழ அரசு" இயங்கும்.
இதை விட நாடு கடந்த தமிழீழ அரசு காலப் போக்கில் தமிழீழத்தின் புறநிலை அரசாக படிநிலை வளர்ச்சியை அடைய வாய்ப்புகள் உள்ளன என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
தோற்கடிக்கப்பட்ட எத்தனையோ நாடுகள் மீண்டும் எழுந்திருக்கின்றன. வேறு உதாரணங்கள் தேவையில்லை. நாமே இருக்கின்றோம். வரலாற்றில் எத்தனை முறை தோற்றிருக்கின்றோம் என்பதற்கு கணக்கு இல்லை. ஆனால் மீண்டும் மீண்டும் எழுந்தோம். எமது முன்னோர்கள் தமது கனவுகளை எமக்குத் தந்தனால் நாம் எழுந்தோம். இன்றைக்கு தோற்கடிக்கப்பட்டு விட்டோம். எமது கனவுகளை தொடர்ந்தும் கொடுப்போம்.
"தமிழீழம்" என்பதை உயிரோடு வைத்திருப்பதற்காகவாவது நாடு கடந்த தமிழீழ அரசு தேவை. "தமிழீழம்" எம்மை நிச்சயமாக மீண்டும் எழ வைக்கும்.
Recent comments
1 year 20 weeks ago
1 year 21 weeks ago
1 year 26 weeks ago
1 year 29 weeks ago
1 year 29 weeks ago
1 year 29 weeks ago
1 year 30 weeks ago
1 year 33 weeks ago
1 year 38 weeks ago
1 year 43 weeks ago