அலசுவாரம் - 70 : வேண்டாம் இந்தியா!

by:
மட்டைக்கிளப்பான்

தெற்காசியாவின் ஒரு தேசிய இனத்தின் மூன்று தசாப்தங்களுக்கும் மேற்பட்ட போராட்ட வரலாற்றுக்கு ஆசியப்பிராந்திய வல்லரசுகளின் அனுசரணையோடு நிறுத்தற்குறி இடப்பட்டுள்ளது. அது நிறுத்தற்குறியா அல்லது அரைமாத்திரையா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஏனெனில் உலக வரலாற்றில் விடுதலைக்காக வீறுகொண்டு போராடிய இனங்கள் ஆயதமுனையில் அடக்கி ஒடுக்கப்பட்டதற்கான பதிவுகள் மிக அரிதாகவேயுள்ளன.


தமிழீழ தேசிய இனத்தில் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான பேரைப்  பலிவாங்கியுள்ள இந்த பிரச்சனை நீறு பூத்த நெருப்பாக இன்று அடங்கிப்போய்க் கிடக்கின்றது.  அதிலிருந்து எப்போது புகை கிளம்பும் எப்போது சுவாலையெழும் அல்லது அந்தத் தணல் இனி முற்றறாக அவிந்து போய்விடுமா என்பதையெல்லாம் எதிர்வுகூறும் நிலையில் இன்று யாருமில்லை.  

தேசியவிடுதலைப் போரை வழிநடத்திய தலை மறைந்து போய்விட்ட நிலையில் இன்று ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக எமது விடுதலைத் தீ அணைக்கப்பட்ட செய்தியையும் அது நடந்த வித்ததையும் அறிக்கைகளாகவும், வாக்குமூலங்களாகவும் வினியோகித்துக் கொண்டிருக்கின்றார்கள்.   ஆனால் மிகப் பெரிய உண்மையொன்றுள்ளது. அது இதுதான்:

“யாருக்கும் ஒன்றும் தெரியாது”

“கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்” என்பார்கள். அது பரமரகசியம். அது போலத்தான் இதுவும்.  தெரிந்தவர்கள் உண்மை சொல்லமாட்டார்கள்.

எது உண்மை எது பொய் என்பதெல்லாம் இப்போது பிரச்சனையில்லை. இன்றைய யதார்த்தத்தை நாம் எவ்வாறு புரிந்துகொண்டு மேற்கொண்டு காரியமாற்றுவது என்பதுதான் பிரச்சனையாக இருக்கிறது.  

ஏத்தனையோ தியாகங்களின் மத்தியில் கட்டிவளர்க்கப்பட்ட தமிழ்த்தேசியத்தின் புறக் கட்டுமானங்கள் சிதைவடைந்து போனாலும் ஒவ்வொரு ஈழத்தமிழனதும் இதயத்தில் நிலைபெற்றுவிட்ட அகக் கட்டுமானமாம் தேசியவுணவு சிதையவில்லையே? அதைச் சிதையவிடுவது எவ்வளவு கையாலாகாத்தனம்?  நாம் தோற்றுப்போனோமென்று உலகம் ஒருபோதும் கைகொட்டிச் சிரிக்காது  நாம் சோர்ந்துபோனோமென்றால்தான் சிரிக்கும். பூ! இவ்வளவுதானா? இவர்களின் வீராப்பு என்று உலகம் ஏளனஞ்செய்யும்.  

தோற்கக் காரணமாகவிருந்த உலகத்தின் கண்களின்முன்னே எமது விடாப்பிடியான விடுதலைத்தாகத்தை வெளிப்படுத்தியபடி தமிழனின் தாகம் தமிழீழத்தாயகம் என்னும் தாரகமந்திரத்தை உச்சரித்துக்கொண்டே நாம் தொடர்ந்து செல்வதைவிட வேறு என்ன செய்யக்கிடக்கின்றது?

போராட்டத்தின் வடிவங்கள் மாறட்டும். பரவாயில்லை.  நாம் யார்மீதும் குரோதம் கொண்டு பழிதீர்க்க வேண்டியதில்லை.  ஆனால் போராட்டத்தின் நோக்கமும் ஓர்மமும் எமது விடாப்பிடியான நிலைப்பாடும் உலகின்முன்னே சிதைந்தழிந்துவிட நாம் விடவே கூடாது.

புலம்பெயர்ந்த மக்கள் அவ்விடயத்தில் ஆற்றும் பணி மகத்தானது.  சிறீலங்காவில் என்றும் பேரினவாதம் மறையப்போவதில்லை.  அதுவே எமது விடுதலைமுனைப்புக்கு என்றும் பக்கபலமாயிருக்கப்போகின்றது.

இதுவரைகாலமும் உண்மைநிலையை உணராதிருந்த அல்லது உணர விரும்பாதிருந்த உலகின் கண்களுக்கு இப்போதூன் ஈழத்தமிழரின் பரிதாபநிலை ஓரளவுக்கேனும் புரிந்திருக்கின்றது.

ஈழத்தமிழினத்தை இன்று பாதுகாக்க வேண்டிய பெரும்பொறுப்பு, பெருவிருட்ஷமாய் வளர்ந்து பயன்தரக் காத்து நின்ற அவ்வினத்தின் தேசிய விடுதலைப்போராட்டத்தை அடியோடு வெட்டிச்சாய்க்கத் துணைநின்ற சர்வதேசத்திடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தேசியத் தலைமையின்மீது எல்லாப் பழியையும் சுமத்தி எமது விடுதலைப்போராட்டத்திற்குப் பயங்கரவாத முலாம்பூசிய இந்தியா அமெரிக்கா ஐரோப்பா, சீனா உட்பட்ட அனைத்து உலகநாடுகளுக்கும் இந்தப் பொறுப்பு உள்ளது.

வங்காள விரிகுடாவில் சிங்களதேசியத்துக்கு முட்டுக்கொடுத்து  தமிழர்தாயத்தை அவர்தம் தேசியவுணர்வை முற்றாக அழித்தொழிகக்த் துணைபோகும் சர்வதேசம் தேசியத் தலைiமையை இழந்து தவிக்கும் ஈழத்தமிழர்களுக்கு என்ன பரிகாரம் செய்யப்போகின்றது?  அவர்களை முற்றாக இன அழிப்புச்செய்துவிட நினைக்கும் சிறீலங்காவின் உலக ஒழுங்கிற்கெதிரான பயங்கரவாதத்தைத்தான் சர்வதேசத்தின் அங்கீகாரத்துக்குரிய ஜனநாயக அரசியல்முறைமை என்று ஏற்கப்போகின்றதா?

இராணுவ அடக்குமுறைக்குள் கொண்டுவரப்பட்டு இன்று முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் எமது உறவுகளுக்கு ஓர் நியாயமான நிவாரணத்தை அரசியல் பொருளாதாரச் செயற்பாடுகளுக்கூடாகப் பெற்றுக்கொடுக்காமல் ஐநா போன்ற நிறுவனங்கள் உலக அமைதிபற்றியும் தேசிய இனங்களுக்கிடையிலான சமாதான சகவாழ்வு பற்றியும் பெரிதாகப் பீற்றிக்கொள்ளமுடியாது.

சிடடுக்குருவிகள்தம் சிறு மூக்கால் மெல்ல மெல்லக்
கட்டிவைத்த  கூட்டைக் கலைக்கத் துணைபோன
கெட்டவுலகத்தின் கீழ் மதியை என்னென்போம்.

“மதிகெட்டவுலகம் ஐநாவுக்கு எதற்காக யுனெட்டெட் நேஷன்ஸ் ஓர்கனைசேசன் என்ற பெயரை வைத்ததோ தெரியவில்லை. உண்மையில் அதனை யுனைட்டெட் கவர்மெண்ட்ஸ் ஓர்கனைசேசன் என்றே அழைத்திருக்கவேண்டும். ஏனெனில் தேசியங்களுக்குத் துணைபோகாது ஆளும் அரசுகளுக்குமட்டுமே துணைபோகும் மிகவும் பாதகமான நிலைப்பாடுகளையெடுக்கும் ஓர் நிறுவனமாகவே அது காணப்படுகின்றது.

தமிழில் மட்டும்தான் அது ஐக்கிய தேசிய சபை என்று கூறப்படாமல் மிகச்சரியாக ஐக்கிய நாடுகள் சபையென்று கூறப்படுகின்றது. அச்சபை தமிழனுக்குச் செய்யப்போகும் துரோகத்தை அறிந்துதானோவென்னவோ தமிழில் அதற்குச் சரியான பெயர் ஏற்கனவே கொடுக்கப்பட்டுவிட்டது.”

இன்று தமிழனுக்குத் தலைமையில்லை. ஆயுத அடக்குமுறைக்குள்; அல்லல்படும் எமது உறவுகளுக்குத் தலைமைதாங்கித் துணிவோடு எமது எதிர்காலத்தின் அரசியற் குறிக்கோளுக்காக எமது பாராளுமன்றப் பிரதிநிதிகள் இலங்கையில் எதுவித அரசியற்போராட்டங்களையும் நடத்தமுடியாது.  இந்திய எஜமானர்களிடம் டெல்லிக்குச் சென்று கையேந்தி நிற்கவேண்டும். அவர்கள் கட்டளையிடும் வழிமுறைகளில்த்தான் நாம் செயலாற்றமுடியும்.

இந்த இழிநிலை எவ்வளவு காலம் தொடரப்போகின்றது.  இந்தியாவால் ஈழத்தமிழரின் உரிமைகளைப் பெற்றுத்தரவே முடியாது. இலங்கையில் எமது போராட்டம் அறவே ஒடுக்கப்பட்டுவிட்டது.

ஆகப் புலம்பெயர்ந்த உறவுகள்தான் நாதியற்றுப்போன தம் இனத்திற்காகக் குரல்கொடுக்கக்கூடிய ஒரே தகுதியோடு இருக்கிறார்கள்.

எப்போதோ செய்திருக்கவேண்டியதாயினும் காலம்கடந்து இப்போதாயினும் எமது தாயத்தின்; உரிமைகளை வென்றெடுக்க ஓர் அரசியல் தலைமையை உருவாக்கும் நோக்கோடு நாட்டிற்குவெளியே இயங்கக்கூடிய அரசொன்றை உருவாக்கும் எண்ணம் எம்மத்தியில் உருவாகியுள்ளது.  சிறீலங்காவின் பேரினவாதப்போக்கு முனைப்புப்பெறும்போது எமது தமிழீழ நிழல் அரசங்கத்திற்கான ஆதரவும் உலக அரங்கில் வலுப்பெறக்கூடிய சாத்தியங்களும் ஏற்பட இடமுண்டு. அதனால் உருவாக்கப்படவுள்ள புலம்பெயர்ந்த தமிழீழ அரசுக்கு எமது முழு ஆதரவையும் வழங்குவோம்.
தமிழரின்தாகம் தமிழீழத்தாயகம்

தொடருவம்