தாராளவாத பாசிசம்!

இலங்கைத்தீவில் தமிழர்கள் மீது நடத்தப்பட்டுவரும் தாக்குதல்கள், வதை முகாம்களில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்டுவது போன்றவற்றை காரணங்காட்டி, அங்கு பல சுற்றாக இனப்படுகொலை நடைபெறுவதாக பிரித்தானிய பல்கலைக்கழகப் பேராசிரியர் மாட்டின் ஷோ அண்மையில் எழுதிய கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருக்கிறார். சர்வதேச விவகாரம், மானிடவியல் ஆகிய துறைகளில் புலமைபெற்ற இந்தப் பேராசிரியர் கடந்த மாதம் வரை இலங்கைத்தீவில் நடைபெறும் வன்முறைகளை இனவழிப்பு என தவறாக பரப்புரை செய்யப்படுகிறது எனக்குறிப்பிட்டு வந்தார்.

இதே போன்று சிறிலங்காவின் நீதித்துறை பாரபட்சமாக செய்படுவதாகவும், குறிப்பாக அந்நாட்டின் பிரதம நீதியரசராகவிருந்த சரத் நந்தன சில்வாவின் காலத்தில், சர்வதேச நியமங்கள், விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என இதுபற்றிய ஆய்வுகளை மேற்கொண்ட International Bar Association Human Rights Institute எனும் சட்டவாளர்களைப் பிரதிநிதித்துபடுத்தும் அமைப்பு தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. இவ்வறிக்கையை ஏற்றுக் கொள்வது போல், பிறிதொரு அறிக்கையை International Crisis Group எனும் சர்வதேச உறவுகளுக்கான சிந்தனை மையம் வெளியிட்டுள்ளது.

சரத் சில்வாவின் காலத்திலேயே வடக்கு-கிழக்கு மாகாணங்களை பிரிக்கும்படியும், சுனாமி நிவாரணக் கட்டமைப்பை சட்டரீதியாக செல்லப்படியற்றதாக்குவதாகவும் தீர்ப்புகள் வழங்கப்பட்டன. இத்தீரப்புகள், சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வலுவற்றதாக்கி, போருக்கு வழிவகுத்தது.

இவை தவிர பல்வேறு மனிதவுரிமை அமைப்புகளும் சிறிலங்கா அரசு மேற்கொண்டுவரும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பாக அறிக்கைகளை இப்போது வெளியிட்டு வருகின்றன. ஆனால் அண்மைக்காலம் வரை சிறிலங்கா அரசிற்கு ஆதரவாக செயறபட்ட இவ்வமைப்புகளின் தற்போதைய அறிக்கைகளால் சிறிலங்கா அரசின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியவில்லை.

ஈழத் தமிழ் மக்களின் போராட்டத்தை நசித்து, ஒழிப்பதற்கு எவ்விதமான மனிதவுரிமை மீறல்களைப் புரிவதற்கும் சிறிலங்கா அரசு தயாராகவிருந்தது, அதன்படி நடந்து பாரிய அழிவுகளை விழைவித்தது. சிறிலங்கா அரசிற்கு ஆதரவு வழங்கியதன் மூலம் இவ்வமைப்புகளும், நாடுகளும், தனிநபர்களும் நடந்து முடிந்த, நடந்து கொண்டிருக்கிற தமிழினப்படுகொலைக்கு ஒருவகையில் பாத்திரவாளிகளாக இருக்கிறாரகள் என்றே கூற வேண்டும்.