லண்டன் தமிழ் நிலையத்தின் கலாச்சாரமாலை

by:
ப. வை. ஜெயபாலன்

தரமான கலாச்சார மாலைக்கு லண்டண் தமிழ் நிலையப் பள்ளி என்பது பொதுவான எதிர்பார்ப்பு. ஈஸ்ரர் விடுமுறை நிறைவின் லோகன் மண்டப நிகழ்வு இது என்பதும் வருடாந்த வழமை. இம் முறையும் சென்ற 21ம் நாள் நாலரை மணி நேர நிகழ்வாக இது அமைந்தது. பிரதம விருந்தினர் பந்தாக்கள் இல்லை. ஆசிரியைகள் குத்து விளக்கேற்ற நிகழ்ச்சிகள் ஆரம்பம். பல்லின வாத்திய இசை  ஐந்து நடனங்கள் பாஞ்சாலி சபதம் நாட்டிய நாடகம் என்பன உள்ளடக்கம். 170 மாணவர்கள் நிகழ்வுகளை நிறைத்தனர். ஆரம்பதர மாணவர்களுக்கு வேறு விழாவில் இடம் தந்து ஏனையோரை இதில் இணைத்ததும் சிறப்பு.

நடனங்கள்  நாட்டிய நாடகம் உட்பட ஐந்து நடன ஆசிரியைகளதும் கூட்டுமுயற்சி என்பதும் சங்கீத வாத்திய  ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் உச்சம் என்பதும் நிகழ்வுகளின் உயிரோட்டத்தில் தெளிவானது.

ஆரம்பம் பல்லின வாத்திய இசை  மிருதங்கம்- வீணை-வயலின் -புல்லாங்குழல் சகிதம் 22 மாணவ கலைஞர்கள் புடை சூழ 5 வாய்ப் பாட்டு இசைஞரும் இடை இடையே பாட முக்கால் மணி நேரம் சபை இசைப் பிரவாகத்தில் களித்தது. பாராட்டுகள் கை தட்டல்களாக வெளிப்பட்டன. புஸ்பாஞ்சலி  கோதாண்டம் சப்தம் சங்கேத குறி தில்லானா என ஐந்து பரத நிகழ்வுகள். கலாசேத்திர நளினத்தில் களைதட்டின. நடனத்தின் உடைத்தெரிவு ஒப்பனை தயாரிப்பு உத்தி என்பன ஒத்திசைந்த உயர்தர நிகழ்வு.

 பாஞ்சாலி சபதம் நாட்டிய நாடகம் நிறைவு நிகழ்வு. சகுனியின் சூட்சியான அழைப்பு தர்மனை சூதுக்கு இழுத்தல்  துயில்உரிவு  பாஞ்சாலியின் சபதம் வரையான கதை ஓட்டம். 78 பாத்திரங்கள் இருமணிநேர தொடர்நாட்டியம். பொருத்தமான பாத்திரத்தெரிவு உடைஅலங்காரம் பாடல் தெரிவு ஆடல் அமைவு  காட்சியமைப்பு  உடைஅலங்காரம் தோழியர் மூலம் கதை ஓட்டத் துக்கு கட்டியம் கூறிய உத்தி ஆகியன ஆர்வம் மேலிட பார்வையாளர்கள் நாட்டியத்தோடு ஐக்கியப்பட்ட காரணியாயின. நட்டுவாங்கத்துக்கும் சிறப்பான பாராட்டு. கலைநிகழ்வுக்கு  நாட்டிய நாடகம் எவ்வளவு அவசியம் என்பதை பாஞ்சாலி சபதம் எண்பித்தது. நல்ல கலைத்திறன் உள்ள ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோரை கூட்டி இயக்கி இத்தகைய நிகழ்வை படைக்க பள்ளி நிர்வாகிகளிற்கும் கலைரசனை இருக்கவேண்டும். என்பதை அதிபர் டாக்டர் நித்தியானந்தன் உணத்துகிறார். மொத்தத்தில் சபாஷ் டாக்டர் நித்தி.  சபாஷ் லண்டண் தமிழ் நிலையம்!