மச்சான்

2004ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 15ம் திகதி பிபிசி இணைய தளத்தில் காணப்பட்ட செய்தித் தலைப்பு ஒன்று “சிறிலங்கா கைப்பந்துக் குழுவினர் தலைமறைவு” (Sri Lanka Handball Team Vanishes ) என்பதாக இருந்தது. கைப்பந்து (கரப்பந்து அல்ல) என்றால் என்ன என்றே தெரியாத என்போன்றோருக்கு இது வியப்பைத்தரும் புதினமாக இருந்தது. கைப்பந்து பற்றி அறிய, கூகுலில் தேடியதில், அனைத்துலக கைப்பந்து அமைப்பின் இணையத்தளத்தின்படி, இவ்விளையாட்டானது உரோமானியர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட தலா ஏழுபேர் கொண்ட இரண்டு அணிகளுக்கிடையிலான பந்து விளையாட்டு. 

நடந்தது இதுதான் 23 பேரடங்கிய சிறிலங்காவின் தேசிய கைப்பந்து விளையாட்டுக் குழு ஒன்று ஜெர்மனியில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொள்ளச் சென்றிருந்தது. மூன்று போட்டிகள் விளையாடி அனைத்திலும் தோற்றுப்போன நிலையில், ஒரு நாள், தங்கியிருந்த விடுதியிலிருந்து யாருக்கும் சொல்லாமல் அவர்கள் வெளியேறிவிட்டார்கள். 

முதலில் அவர்கள் வழிதவறி எங்கேயோ போய்விட்டார்கள் எனச் சந்தேகித்த ஜெர்மனிய விளையாட்டு ஒழுங்கமைப்பாளர்கள், பின்னர் அவர்கள் இத்தாலிக்கு தப்பிச் சென்றுவிட்டதாக அறிந்து கொண்டார்கள். இது தொடர்பாக, ஜெர்மனிய அதிகாரிகள் சிறிலங்கா விளையாட்டு அமைச்சை வினவியபோது, அங்கு தேசிய கைப்பந்து சங்கம் என்ற ஒரு விளையாட்டுக்குழு இல்லை என்பதும் அங்குள்ள மக்களுக்கு கைப்பந்து என்பது ஒரு பரீட்சியமற்ற விளையாட்டு என்பதும் தெரியவந்தது. 

மேற்படி உணமைச்சம்பவத்தை மையப்படுத்தி, ஜெர்மன்காரர்களுக்கு காதில் பூச்சுத்திய ஏமாற்றுப்பேர்வழிகளைப் பற்றிய ஒரு நகைச்சுவைப்படம்தான் “மச்சான்”. சிங்கள மொழியில், ஆங்கில உபதலைப்புக்களுடன் (subtitle) படமாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை, உபேர்ட்டோ பசோலினி என்ற இத்தாலிய இயக்குனர் இயக்கியிருக்கிறார்.

தயாரிப்பு வேலைகளை புரகந்த களுவற (ஒரு பௌர்ணமி தினத்தில் நடந்த மரணம்) என்ற புகழ்பெற்ற சிங்களத் திரைப்படத்தை இயக்கிய பிரசன்ன விதானகே கவனித்திருக்கிறார். 

இது உண்மையில் ஜேர்மனிக்கு விளையாட்டு வீரர்கள்போல் சென்ற இருபத்து மூன்று பேரின் கதை அல்ல என்றாலும் கொழும்பின் சேரிப்புறமக்கள் அன்றாடம் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளை நகைச்சுவையாக வெளிக்காட்டியுள்ளதை பாராட்டலாம். சேரிப்புற மக்களின் பிரச்சனைகள் இலங்கையின் மற்றய பகுதிகளில் வாழும் மக்களின் பிரச்சனைகள் போன்றதே எனினும் அவர்களின் குணவியல்புகளில், நம்பிக்கைகளில், எதிர்பார்ப்புகளில் காணப்படும் தனி;த்தன்மையை முன்னிறுத்தியதாக திரைக்கதை அமைந்துள்ளது.

இயக்குனர் உபேர்ட்டோ, ஐக்கிய இராச்சியத்தில், வேலை தேடிக்கொண்டிருப்போரைப் பற்றிய Full Monty என்ற ஆங்கில நகைச்சுவைத் திரைப்படத்தை முன்னர் தயாரித்திருகக்கிறார். ஆங்கில ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்ற, பரவலாக பேசப்பட்ட அத்திரைப்படத்தின் சாயலில், இலங்கைச் சூழலில், வெளிநாட்டுக்கு செல்வதே தங்கள் பிரச்சனைக்கான ஓரே தீர்வாக எண்ணிச் செயற்படும் சேரிப்புற இளைஞர்களின் கதையை “மச்சான்” திரைப்படத்தில் நகைச்சுவை ததும்பச் சித்தரிக்கிறார். கொழும்பின் சேரிகளில் வாழும் மனிதர்களின் வாழ்வியல் இயல்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

மேற்கததைய நாடுகளுக்கு செல்வதிலும், அங்குள்ள வாழ்க்கை முறைக்கு தங்களை மாற்றுவதிலும் நாட்டம் கொண்ட இளைய சமுதாயம், ஸ்ரான்லி (தர்மப்பிரிய டயஸ்), மனோஜ் (கிகான் சிக்காரா) அவர்களது நண்பர்கள் போன்ற பாத்திரங்களிலும், அதற்கு முந்திய தலைமுறை, வீட்டின் கூரையே போனாலும், குதிரைப் பந்தயத்தில் பணங்கட்டுவதில் ஆர்வங்காட்டும் முதியவராக ஆச்சி மகி (ஐராங்கனி சேரசிங்க) பாத்திரத்திலும் காட்டப்படுகிறது. 

பணத்திற்காக, ஜெர்மன் உல்லாப்பயணிகளான, வயது வந்த பெண்களுடன் விபச்சாரத்தில் ஈடுபடும் இளைஞன் பியால் (சுஜீவ பியலால்) தனது இளம் காதலியுடன் பழகும்போது கூச்சத்தைக் காட்டுவது இயல்பாகத் தெரிகிறது. 

சிங்கள திரையுலகைப்பற்றி பேசும்போது, தவிர்க்கமுடியாதவராக இருக்கும் மாலினி பொன்சேகா மனோஜின் தாயாக சிறுவேடத்தில் வந்தாலும், எந்தவித ஆர்ப்பாட்டமில்லாமல் பாத்திரமாகவே மாறிவிடுகிறார். மனோஜ் அவரை விலையுயர்ந்த உணவகத்திற்கு அழைத்துச் சென்றபோது, விலைப்பட்டியலைப் பார்த்துவிட்டு, வீட்டில் சாப்பிட்டுவிட்டுத்தான் வந்தேன், எனக்கு ஒன்றும் வேண்டாம் எனச்சொல்லும்போது நடுத்தரவர்க்கத்து தாய்மாரை அவர் திரைக்கு கொண்டு வருகிறார்.

சுரேஸ் (தர்சன் தர்மராஜ்) பணிபரியும் விடுதியில், முப்பது வருடங்களாக கழிப்பறையில் கைதுவட்ட துவாலைகளைத் தரும் ஊழியராகப் பணிபுரிந்தவருக்கு, அங்கு தானியங்கியாக கைகளை உலர வைக்கும் இயந்திரம் மாட்டப்பட்டதால் வேலை பறிபோகுகிறது. அப்போது, சுரேஸ் காட்டும் ஆத்திரம், ஜெர்மனிக்கு போகமுன்னர் அவன் அந்த இயந்திரத்தை தகர்ப்பது போன்றவை சில அரசியல் செய்திகளைச் சொல்லுகின்றன.

வெளிநாட்டுக்கு களவாக ஆட்களை அனுப்பும் ஏஜன்சிக்காரராக வரும் ருவன் (மகேந்திர பெரேரா) தோன்றும் காட்சிகளிலெல்லாம் சிரிப்பு எம்மையறியாமலே வந்துவிடுகிறது.

சேரிப்புற மக்கள் கெட்டவார்த்தைகளைக் கலந்து பேசுவது சாதாரணமானது என்பதால் படம் முழுக்க வசனங்களில் அவை சரளமாகக் கையாளப்படுகிறது. 

எஸ்.இராமதாசின் கோமாளிகள், ஏமாளிகள் போன்ற ஈழத்துத் தமிழ் திரைப்படங்களிலும், வானொலி நாடகங்களிலும்; உபாலி என்ற சிங்களவராக நடிக்கும் செல்வசேகரன் இப்படத்தில் சிறுபாத்திரமேற்று நடிக்கிறார்.

ஒரு நகைச்சுவைப்படம் என்ற வகையிலும், சேரிப்புற மக்களின் கதையை சொல்லுகிற படம் என்கிறவகையிலும் மச்சான் திரைப்படம் இரசிக்கத்தக்கதாக உள்ளது. ஆனால் இலங்கையர்கள் வெளிநாடு செல்வதற்கான காரணத்தையும் (பொருளாதார நலன்களுக்காக), புரையோடிப்போயிருக்கும் இன முரண்பாடுகளையும், அங்கு நடைபெறும் இனவழிப்பு யுத்தத்தையம் இத்திரைப்படம் ஒரளவு பதிவுசெய்துள்ளது என்ற இயக்குனர் உபேர்ட்டோவின் வாதத்தினை ஏற்றுக் கொள்ள முடியாது. 

ஒரு சம்பவத்தை கொண்டு மக்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் ரசிக்கத்தக்க படம் எடுக்கிற கலையை இத்திரைப்படத்தில் காணலாம். படம் எடுக்கிறேன் பேர்வழி என தென்னிந்திய திரைப்படச் சாயலில் சர்வதேச உளவுநிறுவனங்களின் அதிகாரிகளைப்பற்றிய கனவுப்படங்களை எடுப்பதை விடுத்து, சமூகத்தில் நடப்பவற்றை பதிவுசெய்யும் நல்ல திரைப்படங்களைத் தர விரும்புவர்கள், அவசியம் ஒரு தடவையாவது மச்சானைப் பாருங்கள்.