ஒரு பேப்பரின் ஊடாக.... ஒரு வாசகியின் கடிதம்!

ஒரு பேப்பரின் ஊடாக.... ஒரு வாசகியின் கடிதம்... மதிப்பிற்குரிய இரவி அருணாசலம் அவர்களுக்கு! உங்கள் கலைப்பணிக்குத் தலை வணங்கித் தொடர்கிறேன்...!

தங்களால் எழுதப்பட்ட அல்லது கிளறப்பட்ட நினைவுகளின் சிந்தலை ஒரு பேப்பரின் 70ஆவது இதழில் படித்தேன். கிளர்ந்து நினைவு தளிர்ந்த கதை அல்லது புதியதோர் உலகம்' என்ற தலைப்பின் கீழ் தங்கள் துயரம் பிளிறியதை படித்ததோடு என்னால் இருக்க முடியவில்லை.

ஒவ்வொரு வரிகளும் என்னை உலுப்பியது. எழுது... எழுது... எழுது... என என் மனம் உந்தியது. எனக்கு தெரிந்தவரையிலும் எழுத எத்தனிக்கிறேன். ஐயா. படியுங்கள் இதை..!

இழப்பின் வடிவங்கள் பல. ஆனால் பேரிழப்பின் வடிவம் ஒன்றே தான். அந்த வகையில் தங்கள் மனதைக் குடைந்த சோகம் என் காதைக் குடைந்த போது முகமறியா அந்த சகோதரனுக்காய் நானும் நெகிழ்ந்தேன். வரம்பு மீறா வசனத்துக்குள் வார்த்தைகளைப் பிழிந்து வேதனைகளை லாவகமாக மறைக்க முயன்றுள்ளீர்கள். அது தங்களாலே சாத்தியம்.

பிரிவின் கொடூரம் கொடுமையானதுதான். ஆனால் வாழ்வின் எல்லைகளை பிரிவு தானே வகுக்கின்றது. இயல்பாகவே பிறர் மீது அன்பைச் செலுத்தும் தங்களை பிறர் நேசிப்பதென்பது அதிசயமில்லை. புதிய தலைமுறையினரை வளர்த்தெடுப்பது அக்கறை கொண்ட ஆர்வலர் நீங்கள். எப்படி துவளலாம்? கூடாது! நிமிர்ந்திருங்கள்... புதிய சிந்தனைகளுடன் மீண்டும் புறப்படுங்கள் புதியதோர் உலகம் செய்ய...!

ஒவ்வொருவருக்கும் அறிவுரை நான் சொன்னதில்லை. எனக்கு அறிவைத் தந்து கொண்டிருந்தவர்களுக்கு நான் அறிவுரை என்று எதைத் சொல்ல? என்ற வரிகளும் ஆசை நீரூற்றி அன்பு மழை பொழிந்தவர்கள் என்ற வசனமும்  என்னை மிக ஆழமாகப் பாதித்தது. ஏனோ நிகழ்ச்சியை நடத்தினோமோ? இருந்தோமா...! என்றில்லாது நீங்கள் அவர்களை உங்கள் சொந்த குழந்தைகளாகவே எண்ணுவது மட்டுமன்றி அவர்களுக்காக துடிக்கிறீர்கள். நான் உங்கள் வார்த்தைகளில் (சத்தியமாய்) உண்மையைப் பார்க்கின்றேன்.

ஏதாவது எழுத வேண்டும் என எழுதிக் கொண்டிப்பவர்கள் மத்தியில் இதைத்தான் எழுதுவேன் என்ற அகம்பாகம் உங்களிடம் இருப்பதை உணர்ந்தேன். ஏன் என்றால் ஏதோ ஒன்றை அர்த்தமின்றி எழுதி நிலைப்பதை விட புதைந்த உண்மைகளை... புதிய எண்ணங்களை... யதார்த்தப் பதிவுகளாக்கத் துடிக்கும் உங்கள் உயர்ந்த எண்ணம் நிச்சயம் புதியதோர் உலகம் படைக்கும்.

விமர்சனங்களில்லாத ஆக்கங்கள் உப்பில்லாப் பண்டம் மாதிரி என என்ணுபவள் நான். என்னைப் பொறுத்தவரை ஒரு ஆக்கத்தின் பாதிப்பின் உலுப்பில் தான் விமர்சனம் என நினைக்கிறேன். அந்த வகையில் மாற்றுக் கருத்து ஒத்தகருத்து என்ற வார்த்தை மோதல்களுக்குள் அதனை தொகுப்பாக்கிப் பரப்புகின்றார்கள்.
அவ்வாறான விமர்சனத் துÖண்டல்களிற்குள் சிக்காத தங்கமீன் போன்று தான் உங்கள் எண்ணங்கள் புலப்படுகின்றன. அவை உண்மைகளைப் பகர்கின்றன... பாசத்தை பங்கிடுகின்றன... துயரத்தை துடைக்கின்றன...

ஆரவாரமில்லாத இலக்கை அடைகிறது. துடித்த நெஞ்சுடன்  நீங்கள் வடித்த வரி அவன் என்னும் தடித்த ஒலியுடன் வானில் பறப்பான்...! வெற்றியுடன்...! புதியதோர் உலகம் படைப்பான் எங்களுடன்...! இலட்சியங்கள் ஒரு போதும் தோற்றுப் போவது இல்லை.
அதே போல் இழப்புக்களும் இட்டு நிரப்பப்படும் புதியவர்களால்... புதியதோர் உலகம் படைப்பவர்களால் மீண்டும் ஒரு பாதை விரியும் விடியலின் இலக்கு நோக்கி... கருத்து பகிர்வுகளுடன்
- சுனாமி