“கருணா” என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் மகிந்த இராஜபக்ச தலைமையிலான பொதுசன ஐக்கிய முன்னணியின் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆயுதவழியிலான போராட்டப்பாதையை கைவிட்டு சனநாயகவழியில் கிழக்க மாகாண மக்களுக்காக பணிபுரிவதற்காக தான் பாராளுமன்றப்பாதையை தேர்ந்தெடுத்திருப்பதாக அவரது கன்னிப்பேச்சில் குறிப்பிட்டிருக்கிறார். தனக்கு விரும்பிய அரசியல் பாதையை தெரிவு செய்வதற்கு அவருக்கு உரிமையுள்ளபோதும், அண்மைக்காலத்தில் அவர் புரிந்த குற்றச்செயல்களிலிருந்து தப்பிக் கொள்வதற்கு பாராளுமன்றப்பதவியை பாவிப்பதனை நாகரிக சமூகம் அனுமதிக்கக்கூடாது.
நீண்ட காலமாக பாராளுமன்ற சனநாயகத்தில் நம்பிக்கை வைத்திருந்து தமிழ் மக்கள் அப்பாதையில் நம்பிக்கை இழந்தமையினால்தான் ஆயதப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிவந்தது என்பதை முரளிதரன் அறிந்திருப்பார் என நம்புகிறோம். ஆனால் தனது அரசியல் வஙகுரோத்துத் தனத்தை மறைக்கவும், நீதி விசாரணைகளிலிருந்து தப்பிக் கொள்வதற்காகவும் சிறிலங்கா அரசின் காலடியில் அவர் விழுந்திருக்கிறார்.
தான் சனநாயக வழிமுறைக்கு வந்துவிட்டதாக அவர் குறிப்பிடும் கடந்த சில வருடங்களில் அவரது உத்தரவின் பேரில் கொல்லப்பட்டவர்களதான் எத்தனை பேர்? ஊடகவியலாளர்கள் சிவராம், நடேசன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான யோசப் பரராஜசிங்கம், சந்திரநேரு முதல் எண்ணற்ற பொதுமக்களை அவரது குழுவினர் கொன்று குவித்திருக்கிறார்கள். இவர்களால் கடத்தப்பட்ட பல்கலைக்கழக உபவேந்தர் இரவீந்திரநாத் இன்னமும் வீடு திரும்பவில்லை.
இவற்றிற்கு முறையான விசாரணைகள் நடாத்தப்படாமல் இருப்பதால் இக்குற்றச் செயல்களிலிருந்து தப்பிக் கொண்டு விட்டதாக அவர் கருதிவிடமுடியாது.
முரளிதரன் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டதை ஆட்சேபித்திருக்கும் சர்வதேச மனிதவுரிமைச் சபை அவர் புரிந்த குற்றங்களுக்கான விசாரணைகளை மேற்கொள்ளும்படி சிறிலங்கா அரசைக் கேட்டிருக்கிறது. பகிரங்க மன்னிப்பு எதனையும் வழங்காமலே அவரை தங்களது பாராளுமன்ற சகாவாக ஆக்கியுள்ள மகிந்த அரசு இந்தக் கோரிக்கைகளை புறந்தள்ளிவிடும். அதேபோல் பிரித்தானிய நீதிமன்றால் தண்டிக்கப்ட்டு சிறைத்தணடனை அனுபவித்த அவரை மேற்குநாட்டு இராச்தந்திரிகளும் கைலாகு கொடுத்து வரவேற்கக்கூடும்.
ஆனால் முரளிதரன் புரிந்த குற்றங்களை மறந்துவிடாத தமிழ்மக்கள், சமயம்வரும்போது அவரை கவனித்துக்கொள்வார்கள்.
Recent comments
9 hours 23 min ago
9 hours 50 min ago
1 week 13 min ago
4 weeks 15 hours ago
9 weeks 1 day ago
14 weeks 4 hours ago
14 weeks 2 days ago
17 weeks 9 hours ago
18 weeks 4 days ago
18 weeks 4 days ago