சிறிலங்கா அரசுடன் சேர்ந்தோடும் மேற்குலகம்

by:
எழுபரிதி

கடந்த ஒரு பேப்பரில் வெளிவந்த எனது “குறிவைக்கப்படும் ஈழத்தமிழர்களும், மேடைக்கு அலையும் புத்திஜீவிகளும்” என்ற கட்டுரையில் மலேசியாவில் நடைபெற்ற மாநாடு பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். இம்மாநாட்டில் தான் கலந்து கொண்டமை தொடர்பாக பேராசியர் செல்வா செல்வநாதன் “ஒரு பேப்பர்” க்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். மேற்படி மாநாட்டில் அவர் தனது சொந்தச் செலவில் கலந்து கொண்டதாகவும், அங்கு தன்னால் முடிந்தவரையில் தமிழர் பக்க நியாயங்களை விளக்கியதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

புலம்பெயர் தமிழ்மக்களை குழப்பும் நோக்கிலேயே இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது என்பதனையும், தன்போன்ற வேறு சில தமிழ்த் தேசியவாதிகளின் முயற்சியால் மாநாட்டின் போக்கு மாற்றியமைக்கப்பட்டதாகவும் அவர் எமுதியிருந்தார். புலம்பெயர் தமிழ்மக்களை குறிவைத்தே இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது
என்பதில் அவர் என்னுடன் உடன்பட்டுள்ளார். அதுவே எனது கட்டுரையின் கருவாகவும் அமைந்திருந்தது. புலம்பெயர் தமிழ்மக்களின் தேசிய உணர்வினை சிதைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இதுபோன்ற முயற்சிகளுக்கு துணைபோகும் புத்திசீவிகளையே எனது கட்டுரையில் விமர்சித்திருந்தேன். பேராசிரியர் செல்வநாதன் இவ்விடயத்தில் தெளிவாக இருப்பதையிட்டு மகிழ்வுறுகிறேன். எனது கட்டுரையின் தொனி பொதுவில் அம்மாநாட்டில் கலந்துகொண்ட அத்தனை தமிழ் கல்வியாளர்களையும் கண்டிப்பதாக அமைந்திருப்பின்,; அதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்
.

இனி, புலம்பெயர் தமிழ் மக்களின் முக்கியத்துவம் உணரப்பட்டு, அவர்களை திருப்திப்திப்படுத்த அல்லது திசை திருப்ப நடாத்தப்பட்ட பிறிதொரு நிகழ்ச்சிபற்றி பார்ப்போம்.

செப்ரெம்பர் 15ம் திகதி மாலை லண்டனின் புறநகர்ப்பகுதியான ஹரோவில், ஆசிய நாடுகளிற்காக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் லோர்ட் மலொக் பிரவுண் (Lord Maloch Brown) கலந்து கொண்ட கூட்டம் ஒன்று நடைபெற்றது. பிரித்தானியாவில் அதிகமான தமிழ் வாக்காளர்களைக் கொண்ட மேற்கு ஹரோ தொகுதியில் வசிக்கும் இலங்கையர்களுக்காக, அத்தொகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினர் கரத் தோமஸ் இக்கூட்டத்தினை ஒழுங்கு செய்திருந்தார். ஹரோ தவிர்ந்த ஏனைய பகுதிகளில் வசிப்பவர்களும் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டதால் மண்டபம் நிறைந்து காணப்பட்டது. உள்ளுர் வாக்காளர்களைக் கவரும்நோக்கில் இக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தாலும், பிரித்தானிய அமைச்சர் ஒருவருடன் கருத்துப்பரிமாறல் செய்வதற்கான ஒரு சந்தர்ப்பத்தை சாதராண தமிழ்மக்களுக்கு வழங்கியது என்ற வகையில் இக்கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

இங்கு உரையாற்றிய மலொக் பிரவுண், இலங்கைத் தீவின் அரசியல் விவகாரங்கள் தொடர்பில் பிரித்தானியாவின் (வெளிப்படையான) நிலைப்பாட்டினை தெளிவுபடுத்தினார்.  அவரது விளக்கமானது, தனித்து பிரித்தானியாவின் கொள்கைளை சார்ந்திராமல் மேற்குலக அரசுகளின் பொதுமைப்பாடான நிலைப்பாட்டை ஒட்டியதாக இருந்தமையை அவரது உரையிலும், கூட்டத்தில் கலந்து கொண்டோரின் வினாக்களுக்கு அவர் பதிலளித்த போதும் அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. அவற்றை ஈழத்தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட செய்தியாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

யுத்த நிறுத்த முறிவிற்கும் இன்றய யுத்த நிலைக்கும் சிறிலங்கா அரசாங்கமும் - விடுதலைப்புலிகளும் பொறுப்பாளிகள் எனக்குறிப்பிட்டு, அங்கு இடம்பெறும் வன்முறைகளுக்கு இரண்டுதரப்பின்மீதும் குற்றஞ்சாட்டும் மேலோட்டமான போக்கையே பிரவுண் கடைப்பிடித்தார் தமது குடிமக்களை காப்பதிலிருந்து தவறும் சிறிலங்கா அரசை கண்டிப்பதனை அவர் தவிர்த்துக்கொண்டார். மறுபுறத்தில் விடுதலைப்புலிகளினால் முன்னெடுத்துவரும் போராட்டத்தை பயங்கரவாதமாகவே தாம் கருதுவதாக தெரிவித்ததுடன் அவர்கள் மீது பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் விதித்துள்ள தடையையும் அவர் நியாயப்படுத்தினார்.

ஐனநாயக வழிமுறைகளை அரைகுறையாகவேனும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் மேற்குலகம் மிகுந்த சிரத்தையாய் உள்ளதாகவும், ஜனநாயக முறையிலான தேர்தல்களில் வெற்றி பெற்றவர்களுடன் (அத்தேர்தல்கள் எத்தகைய குழறுபடியுடன் நடந்தேறினாலும்) கரங்கோத்துக் கொள்வதன் அவர்களை ஜனநாயக நீரோட்டத்தில் இணைத்துக் கொள்ளலாம் எனபதனை தாம் நம்புவதாகவும் தெரிவித்தார். இந்தவகையில் கிழக்கின் இன்றய நிலமை முன்பிருந்தததைவிட முன்னேற்றகரமாகவுள்ளதாகக் குறிப்பிட்டதுடன், அவர் அண்மையில் இலங்கைக்கு பயணம்மேற்கொண்டபோது, ஆயுததாரி பிள்ளையானுடன் கைலாகு கொடுத்தமையையும் நியாயப்படுத்தினார்.


சிறுபான்மை சமூகங்கள் சுயநிர்ணய உரிமையை பாவிக்கும் உரித்துடையவை என்பதில் பிரித்தானிய அரசு உறுதியாக இருப்பதாகவும், தமிழ் மக்களை சிறிலங்கா அரசாங்கும் கையாளும் முறையையிட்டு தாங்கள் கவலைகொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்த போதும், கொசோவோ போன்று தமீழீழம் தனிநாடாவதனை தாம் ஆதரிக்கவில்லை எனக்கூறினார். சிறிலங்கா அரசுக்கு எதிராக எந்த அழுத்த்ததையும் கொடுக்க அவர்கள் தயாராக இல்லை என்பதனை அவரது பேச்சிலிருந்து உணரமுடிந்தது.  இந்நிலைக்கு சிறிலங்கா அரசு என்பது சனநாயக ரீதியில், பெரும்பான்மை பலத்தில் தெரிவு செய்யப்பட்ட அரசு என்பதனை காரணங்காட்டினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு வழங்கப்படும் GSP plus என்படும் ஏற்றுமதிக்கான வரிச்சலுகை விடயத்தினை சுட்டிக்காட்டி, இவ்வரிச்சலுகையை இரத்து செய்வதன் மூலம் மிகமோசமான மனிதவுரிமை மீறல்களில் ஈடுபடும் சிறிலங்கா அரசின் மீது அழுத்தத்தினை பிரயோகிக்க முடியாதா? என பலர் கேள்வியெழுப்பியபோது, தாம் இதுவிடயத்தினை கவனமாகப் பரிசீலிக்கிறோம் என பிரவுண் பதிலளித்தார். இருப்பினும் சிறிலங்காவிற்கு GSP plus நிறுத்தப்படுவதை தடுக்க பிரித்தானிய அரசு தம்மாலான முயற்சிகளை எடுக்கும் என அமைச்சர் ஜீ. எல். பீரிசுடனான சந்திப்பு ஒன்றில் மேற்படி கூட்டத்தை ஒழுங்கு செய்த அமைச்சர் கரத் தோமஸ் உறுதியளித்ததாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கைத்தீவில் நிலையான சமாதானத்தை ஏறபடுத்தவேண்டும் என்பதில் மேற்கத்தைய நாடுகள் அக்கறை கொண்டுள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அது நீதியான முறையில் அமையவேண்டும் என்பதில் அல்லது அங்குள்ள சிறுபான்மை தேசிய இனங்கள்,  குறிப்பாக தமிழ் தேசிய இனம் தமது அரசியல் உரிமைகளை பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதையிட்டோ அவற்றுக்கு எவ்வித கரிசனையும் இருப்பதாகத் தெரியவில்லை.

பிரித்தானிய அரசு விடுதலைப்புலிகளினை தடைசெய்வதற்கான காரணிகளை அதே அளவுகோல் கொண்டு சிறிலங்கா அரசின் மீது பிரயோகித்தால் அதனை ஒரு பயங்கரவாத நாடாக பிரகடனப்படுத்த முடியாதா? என கேட்கப்பட்ட கேள்விக்கு விடையளித்த அமைச்சர் மலொக் பிரவுண், சிறிலங்கா அரசு ஜனநாயக வழியில் தெரிவு செய்யப்பட்டமையும், அது இன்னமும் பெரும்பான்னமையான மக்களின் ஆதரவைப் பெற்றிருப்பதால், அவ்விதம் செய்வது சாத்தியமில்லை என நிராகரித்தார்.

தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டம் பயங்கரவாதமாகவும், சிறிலங்கா அரசாங்கம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒன்றாகவும் கறுப்பு-வெள்ளையாக வேறுபடுத்தப்பட்டு பார்க்கப்படுவதால், விடுதலைப்புலிகளினால் மேற்கொள்ளப்படும் வன்முறைகiயிட்டு கண்டனமும், தண்டனையும் வழங்கப்படும் அதே நேரம், சிறிலங்கா அரசினது மனிதவுரிமை மீறல்களையிட்டு நீண்ட சகிப்புத்தன்மை கடைப்பிடிக்கப்படுகிறது.

மனிதவுரிமைகளைப் பேணுதல், வெளிநாட்டு உறவில் அறம்சார்ந்த அரசியற் கொள்கைகள் (ethical foreign policy) என்பவற்றை கடைப்பிடிப்பதாக கூறிவரும் மேற்குலக நாடுகள், பயங்கரவாதம் - ஜனநாயகம் என்ற இரண்டு வகைக்குள் நாட்டு நிலவரங்களை நிறுத்தி அதற்கேற்ப காரியமாற்றுகின்றன. இங்கு ஒரு அரசாங்கம் ஐனநாயகத்தை பேணுகிறதா இல்லையா என்பதை கணிப்பிடுவதற்கு, அவ்வரசுக்கு அதன் குடிமக்களிடமிருக்கும் ஆதரவுத்தளத்தில் அதுவும் எண்ணுக்கணக்கில் (number game)  தங்கியிருக்கிறது என்றால், சிறுபான்மை தேசிய இனங்களையிட்டு மேற்குலக அரசுகளுக்கு எவ்வித அக்கறையுமில்லை எனறே கொள்ளவேண்டும். முற்றிலும் தமது நலனுக்கு எதிரான சூழலில் அவை விதிவிலக்காக நடந்து கொள்ளும்.

எந்த வகையிலும் சமாதானத்தை ஏற்படுத்திவிடவேண்டும் என்ற மேற்குலகத்தின் நிலைப்பாடு, விடுதலைப்புலிகளையும் அதன் ஆதரவுதளத்தையும் அழித்த பின்னர்தான் மிகுதி எல்லாம் என்ற மகிந்த அராசங்கத்தின் நிலைப்பாட்டுடன் ஒரே புள்ளியில் சந்திக்கின்றது. மேற்குலகின் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற நிலைப்பாடும் சிறிலங்கா அரசுக்கு சாதகமாகவே அமைகிறது. இதனால் மகிந்த அரசினால் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகளுக்கு மேற்குலக அரசுகளின் ஆசீர்வாதம் கிடைக்கிறது.

அப்படியானால் இந்த நிலைப்பாட்டில மாற்றம் ஏற்படாதா? என்ற கேள்வி எழலாம். மகிந்த அரசின் யுத்த நடவடிக்கைகள் தோற்று போகிறபோது, போரினால் சமாதானத்தை நிலைநாட்ட முடியாது என்ற நிலை ஏற்படுகிறபோது மேற்குலக அரசுகளின் அணுகு முறையில் மாற்றம் ஏற்படுவது தவிர்க்கமுடியாதது ஆகிவிடும். அதுவரை மகிந்தவின் யுத்த நடவடிக்கைகளுக்கு, அவை எத்தகைய மனித அவலததை ஏற்படுத்தினாலும், எதுவித இடையூறினையும் செய்யப்போவதில்லை.

மற்றயடி அறிக்கைகள், சந்திப்புகள் எதுவும் இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றத்தினை ஏற்படுத்தப்போவதில்லை. மகிந்தவின் யுத்த நடவடிக்கைகளை தோல்வியடைய வைப்பதில் புலம்பெயர்ந்த தமிழரும் பங்காற்றமுடியம் என்பதை மட்டும் உங்களுக்கு நினைவுறுத்த விரும்புகிறேன்.