வணக்கம்!
ஒரு பேப்பர் தொடங்கின காலத்திலிருந்தே அதுக்கு ஒரு பரந்த வாசகர்தளம் ஏற்பட்டுட்டுது. இது நாங்களே எதிர்பார்க்காத ஒண்டு. இருந்தாலும் உங்களை நாங்கள் எண்டைக்குமே குறைச்சு மதிப்பிடேல்லை. அதுபோல எங்களோடை இணைஞ்சு செயற்படுகிற ஆக்களின்ரை நேர்மையையும் உழைப்பையும் எப்பவுமே நாங்கள் மதிக்கிறோம். எல்லாரையும் எல்லாநேரமும் திருப்திப்படுத்தி கொண்டிருக்கிறது அல்லது முதுகு சொறிந்து கொண்டிருக்கிறது எங்கடை நோக்கமில்லை. ஒரு சமூகப் பேப்பர் எண்ட வகையிலை சமூகத்திலை நடைபெறுகிற விசயங்களைத்தான் எழுதுகிறோம், பிரசுரிக்கிறோம்.
எள்ளல்தொனியில் எழுதுகிறோம் எண்டது உண்மைதான். ஆனால் அதுக்காக ஆள் ஆளை கடித்துக் குதறுகிறதுதான எங்கடை வேலை எண்டில்லை. ஆரையும் அவமதிக்க வேணும் எண்டிற எண்ணமும் எங்களுக்கில்லை. ஆக்கபூர்வமான விமர்சனங்களை நாங்கள் எப்பவுமே வரவேற்கிறோம். மொழி சில நேரம் தரம் தவறிப்போகலாம். மன்னிக்கோணும், வாசிக்கிறவருக்கு உறைக்கவேணும் எண்டால் அதை அதை சொல்லவேண்டிய விதத்தில் சொல்ல வேண்டியிருக்கு. இதுக்காக பத்திரிகை தர்மத்தை மீறியிட்டோம் எண்டு சிலர் கூப்பாடு போடுறதிலை அர்த்தமில்லை.
ஆலையில்லாத ஊரின் இலுப்பம்பூக்கள் நீங்கள் என்று எங்களைப்பார்த்து சிலர் சொல்லியினம். அது மெத்தச்சரி நாங்கள் அவையளோடை முழுமையாக உடன்படுறம். ஓண்டை நீங்கள் கவனிக்கோணும், இலுப்பம்பூக்களை மட்டுமல்ல மண்ணாங்கட்டியளையும் சர்க்கரையாக்கிற வேலையளுக்கு நாங்கள் ஒத்தூதிறதில்லை. மண்ணாக்கட்டியளை மண்ணாங்கட்டியள் எண்டு சொல்லிறதுக்கும் நாங்கள் இங்கிதம் பார்க்கிறேயில்லை. வாசகர்களாகிய நீங்களும், விளம்பரதாரர்களும் இதை விளங்கிக்கொள்ளிறதாலை எங்களுக்கு வேறை குழப்பமில்லை.
என்ன கொஞ்சம் சூடாயிட்டமோ? இல்லை தனிநபர்தாக்குதலில் நாங்கள் ஈடுபடுகிறோம் என்று சிலர் போர்க்கொடி தூக்கிறதாலை இந்த விளக்கத்தை தரவேண்டியாயிருந்தது.
100வது இதழில் நாய் ஒரு பேப்பர் படிக்கிற படத்தைப்போட்டு தங்களை அவமதிச்சுப்போட்டியள் எண்டு சிலர் குறைப்பட்டிச்சினம். எங்கட நாய்தானே. அது ஒண்டும் அவ்வளவு மோசமான மிருகம் இல்லைத்தானே. உண்மையிலை ஒரு பேப்பர் படிக்கிறதுக்கு குறைஞ்சது இலங்கை ஒலெவலாவது படிச்சிருக்கோணும் எண்டதிலை உங்களுக்கு உடன்பாடுதானே. கவனியுங்கோ க.பொ.த சா.த படிச்சிருக்கோணும் எண்டுதான் எமுதியிருக்கிறம் பாஸ் பண்ணியிருக்கோணும் எண்டு எழுதேல்ல. பிறகு அது எங்களை சிக்கலிலை மாட்டிப்போடும்.
சமயங்களை பற்றி யாரும் குறைசொல்லி எழுதினால் பாய்ந்து கொண்டு வாற ஆக்கள். சமயங்களைப்பற்றி நல்லா எ:தினா அதைப்பற்றி ஒரு கருத்தும் சொல்லிறியள் இல்லை. நீங்கள் அதுகளை வாசிக்கிறியளா? தொடரந்து பிரசுரிக்கிறதா? .. இல்லையா? எண்டாவது எங்களுக்கு தெரியப்படுத்துங்கோ.
“வள்ளுவர் காட்டும் வழி” சிந்தனைத் தொடரை எழுதிவரும் இராம கே நாதன் மூன்று மாதகால விடுமுறையில் சுற்றுப்பயணம் செல்கிறார். அவரது விடுமுறை சிறக்க வாழத்துகளை தெரிவிக்கிறோம். அவரது பயண அனுபவங்களை உங்களோடையும் பகிரந்து கொள்ளுவார் எண்டு நம்பிறம்.
மீண்டும் சந்திப்போம்.
Comments
PDF version எப்ப மாத்துவீங்கள்?
ஒருபேப்பர் காரன்/காரிகளே
எங்களுக்கென்ன வேற வேலையில்லை என்று நினைச்சீங்கிளோ....பேப்பரை ஏன் PDF ஆ போடுறீங்கள் நாங்கள் மெனக்கெட்டு ஒவ்வொரு பக்கமா திறந்து திறந்து வாசிக்கிறதோ...ஒன்டில் ஒரே பைலா (அந்த பைலா இல்ல) போட்டால் அப்பிடியே டவுன்லோட் பண்ணிட்டடு next என்று அமத்தி அமத்தி வாசிப்பம் இது என்ன விசர் வேலை. வாய்கிழிய வியாக்கியானம் கதைக்கிறீங்கள் ஆனால் pdf ஒரே fileஆ போடத்தெரியேல்ல.