இது முட்டாள்களின் காலம்

by:
தேவபுத்திரன்

ஈராக்கிய அகதிகள்நாம் வாழும் பூமி ஒரு நாள் அழிந்து போய்விடும் என்று புராணங்களிலும், வேதாகமத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பற்றி பல விஞ்ஞானக் கதைகளும் திரைப்படங்களும் வந்திருக்கின்றன. கலிமுற்றிப்போய் இவ்வுலகம் அழிந்து போய்விடும் என்பது எவ்வளவு நம்ப முடியாமல் இருக்கிறதோ, அதுபோல் இந்த விஞ்ஞானக்கதைகளும் இதுவரைநாளும வெறும் கதைகளாகவே எங்களுக்குத் தென்பட்டன. உலக அழிவு பற்றிப் பேசிக் கொண்டோமே தவிர நாங்கள் அதுபற்றி அச்சங் கொள்ளவில்லை.

ஆனால் அண்மையில் வெளிவரவுள்ள ஒரு திரைப்படம் ஒன்று நிசத்தில் அச்சத்தை தருகிறது. இன்னமும் நாற்பத்தேழு வருடத்தில் இந்தப் பூமி மனிதர் வாழமுடியாதபடி இயற்கை அனர்த்தங்களால் அழிந்து போய்விடப்போகிறது என எச்சரிக்கிறது. ஆதற்கான விஞ்ஞான ரீதியான விளக்கங்களையும் காட்சிப்படுத்தியுள்ளது. இது வெறும் புனைகதையாகத் தெரியவில்லை.

லண்டனில் வசிக்கும் பிரானி ஆரம்ஸ்ரோங் என்ற இளம் பெண் இயக்குனர் தயாரித்திருக்கும் Age of Stupid என்ற திரைப்படம் பற்றியே நான் பேசுகிறேன்.
அடுத்த வருடம் முற்பகுதியில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் பிரத்தியேக காட்சி  கடந்த வாரம் லண்டன் Soho விலிருக்கும் Curzon திரையரங்கில் நடைபெற்றது. சுற்றுப்புற சூழல் விடயங்களில் அக்கறை கொண்ட செயற்பாட்டாளர்களுக்கென ஒழுங்கு செய்யப்பட்ட இக்காட்சியினை பார்வையிடும் சந்தர்ப்பம் எனக்கு கிட்டியது.

இயற்கை அனர்த்தங்களால் தொடர்ந்து பேரழிவுகளை சந்தித்து வரும் உலகம், 2055 ஆண்டில் முழுவதுமாக சிதைந்து போய்விடுகிறது. தாஜ்மகாலும், அவுஸ்திரேலிய ஒப்ரா கோல், வெள்ளை மாளிகை, ஈபில் கோபுரம் என உலகின் முக்கியமான கட்டிடங்கள் எல்லாம் உருக்குலைந்து போய்விடுகின்றன. இந்தப் பேரழிவு எப்படி நடந்தது? உலகை அழிவு நிலைக்கு கொண்டு செல்லும் முட்டாள்தனத்தை யார் செய்தார்கள் என்பதை பின்நோக்கிய விசாரணையாக இத்திரைப்படம் நகர்கிறது

விவரணங்களையும் கற்பனைச்சம்பவங்களையும் கலந்து தயாரிக்கப்பட்டிருக்கும் திரைப்படத்தில் காலநிலைமாற்றத்தால் அழிவுகளை ஏற்படுத்திய வெவ்வேறு சம்பவங்கள் தத்துருபமாகப் படமாக்கப்பட்டுள்து. வர்த்தக நிறுவனங்களின் மிகையான இலாபம் சம்பாதிக்கும் பேராசையால், அவர்களது நடவடிக்கைகள் எவ்விதம் காலநிலை மாற்றத்தினை ஏற்படுத்துகின்றது என்பது பல்வேறு விவரணங்கள் வாயிலாக விளக்கப்பட்டுள்ளது. இவ்விடயத்தில் நிபுணர்களான மார்க் லைனஸ், ஜோர்ஜ் மொன்பியோ போன்ற ஊடகவியலபளர்கள் நடந்த அழிவுகளை மேறகோள் காட்டி எதிர்கால அபாயங்கள் பற்றி விளக்கமளிக்கிறார்கள்.

பெற்றோலிய எண்ணை வியாபாரம் எவ்விதம் அமெரிக்க அரசியலில் ஆட்சி செலுத்துகிறது என்பதிலிருந்து, உருகி வழிந்து உருத்தெரியாது கரைந்துபோகும் பனிப்பாறைகள, யுத்தத்தால் பாதிக்கப்படும் ஈராக்கியர்கள், எண்ணை நிறுவனங்களின் சுரண்டால்களால் பாதிக்கப்படும் நைஜீரியர்கள், பொருளாதார வளரச்சியால் தலைகால் தெரியமால் செயற்படும் இந்தியப் பணக்காரர்கள் (சீனர்களை விட்டுவிட்டார் தயாரிப்பாளர்) என உலகம் பூராவும் காலநிலை மாற்றத்தினை ஏற்படுத்தும் முட்டாள்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இத்திரைப்படம்.

புகழ்பெற்ற ஆங்கில நடிகர் பீற் பொஸ்ரல்வெயிற் கதைசொல்லியாக வருகிறார். ஜோ வாடியா உட்பட மிகச்சில நடிகர்களே நடித்திருக்கும் இத்திரைப்படம், சிந்திக்கவும் செய்படவும் தூண்டுகிறது.

இருப்பினும் சாதாரண மக்களை பார்க்கத் தூண்டுகிற விடயங்கள் மிகவும் குறைவாக காணப்படுவதனால் சொல்ல வந்த செய்தி எல்லோரையும் எட்டுமா என்பது சந்தேகமாக உள்ளது.