ஈழம் என்ற வார்த்தையும், அது குறித்து நிற்கும் அங்கீகரிக்கப்படாத ஒரு புவியியல் அலகு தொடர்பான பதிவுகளும் இணைய தளப் பக்கங்களை நிறைத்துக் காணப்படுவது, கல்வியாளர் சிலருக்கு அதனை ஒரு ஆய்வுப்பொருளாக ஆக்கியுள்ளது. இவ்விடயத்தினை ஆய்வு செய்த ஒரு சிங்களக் கல்வியாளர், இல்லாத ஒரு தேசத்திற்கு இவ்விதம் மாயத்தோற்றம் கொடுக்கப்படுவது புலம்பெயர்ந்த தமிழர்கள் சிலரின் இயலாத்தனத்தின் வெளிப்பாடு எனக்குறிப்பிட்டிருக்கிறார். வேறு சில கல்வியாளர்களோ, இது விடுதலைப்புலிகளினதும் அவர்களது ஆதரவாளர்களினதும் பிரச்சாரம் என்கிறார்கள்;.
இந்த கல்வியாளர்கள் குறிப்பிடுவதுபோல் ஈழம் என்பது கற்பனைத்தேசம் அல்ல. அது பொழுதுபோக்கற்றவர்களினால் இணையத்தளங்களில் பதியப்பட்ட ஒரு கிறுக்கல் வார்த்தையும் அல்ல. தம்மை தனித்துவமான ஒரு இனமாகக் கருதும் புலம்பெயர்ந்த தமிழர்கள், ஒருமித்த சிறிலங்காவின் குடிகளாக அடையாளப்படுத்துவதனை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களது உள்ளுணர்வுகளின் வெளிப்பாடுதான் இந்த இணையதள பக்கங்கள் என்பதனை மேற்குறித்த ஆய்வாளர்களால் விளங்கிக் கொள்முடியவில்லை என்பதனை அவர்களது அறிக்கைகளை படிக்கும்போது புரிகிறது.
ஈழத்தமிழர்களை தனித்தேசிய இனமாக ஏற்றுக்கொள்ள மறுக்கும் சிங்களப் பேரினவாதிகளுக்கு, புலம்பெயர் தமிழ் மக்களின் நடவடிக்கைகள் கிலேச்தை ஏற்படுத்துகிறது. புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் தமிழ்த்தேசியத்தின்பால் காட்டும் பற்றுறுதி, சிறிலங்காவின் இறைமைக்கு சவாலாக அமைகிறது என்பதே அவர்களது அச்சத்திற்கு காரணமாக அமைகிறது. முன்னர் தமிழ்நாட்டு மக்களையிட்டும் சிங்களமக்களுக்கு இவ்விதமான அச்சம் இருந்து வந்தது.
இனவழிப்பிலிருந்து தப்புவதற்காக, இலங்கைத் தீவை விட்டு, நாதியற்ற ஏதிலிகளாக புலம் பெயர்ந்தவர்கள் காலவோட்டத்தில் கரைந்துபோய் விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பே சிங்கள பேரினவாதிகளிடமிருந்தது. அதற்கு மாறாக, அவர்கள் தமிழ்த்தேசிய அடையாளத்துடன் தேசங்கள் கடந்த ஒரு சக்தியாக உருவெடுத்து வருவது சிங்கள பேரினவாதிகளுக்கு மட்டுமல்ல வேறு சில வெளிச்சக்திகளுக்கும் உறுத்தலாக இருப்பதனை உணர்ந்து கொள்ளமுடிகிறது.
சிறிலங்கா இராணுவம் வன்னியில் பல இடங்களிலும் முன்நகர்வுகளை செய்து தமிழர் பிரதேசங்களை வல்வழைப்பு செய்துவரும் இன்றைய நிலையில், விடுதலைப்புலிகளின் ஆட்சியிலிருக்கும் மிகுதிப் பிரதேசங்களையும் ஆக்கிரமித்து, விரைவில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கை சிங்கள மக்களிடையே வலுவடைந்து வருகிறது. சிங்களப் பேரினவாதிகள் மட்டுமன்றி, சிங்கள இடதுசாரி அரசியல்வாதிகள், புத்திசீவிகள், சமாதானச் செயற்பாட்டாளர்கள் உட்பட பெரும்பான்மையான சிங்கள மக்கள் எந்த விலை கொடுத்தேனும் விடுதலைப்புலிகளை ஒழித்துவி;ட வேண்டும் என்பதில் குறியாய் இருக்கிறார்கள்.
விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்படுமிடத்து, இலங்கைத்தீவில் வாழும் தமிழ் மக்கள் சரணாகதி நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்கள்; என எதிர்பார்க்கும் சிங்களப்பேரினவாதிகள், புலம்பெயர்ந்த தமிழரிடமிருந்து ஏற்படக்கூடிய எதிர்ப்புகளை சமாளிப்பதனையிட்டு இப்போது கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.
தொடரும் யுத்தத்தில் சிறிலங்கா பெற்றுவரும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை; அக்கறையுடன் அவதானித்து வரும் மேற்குலக அரசுகள், சிங்கள அரசின் முயற்சி வெற்றிபெறும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளமையால், சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் மனிதவுரிமை மீறல்களையிட்டு அவை பாராமுகம் காட்டுகின்றன. இந்நிலையை விளங்கிக்கொள்ளமுடிவதால், இலங்கைத்தீவில் இடம்பெறும் மனிதவுரிமை மீறல்களையிட்டு கவலை கொள்வதாக சில வெளிநாட்டு இராசதந்திரிகள் ஒப்புக்கு வெளியிடும் கருத்துக்களை, சில ஊடகங்களைத் தவிர வேறு யாரும் பொருட்படுத்துவதில்லை.
விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டால் அதற்கு பிற்பாடு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியே இப்போது மேற்குலக அரசுகள் கவனம் செலுத்துகின்றன. சர்வதேசமட்டத்தில் செயற்படும் தன்னார்வ நிறுவனங்கள், வெளிநாட்டு உதவியில் இலங்கையில் இயங்கும் சில நிறுவனங்கள், புலத்தில் உள்ள ஒரு சில தமிழ் நிறுவனங்கள் அ+கியன இந்த விடயத்தில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. உதிரியான சில தமிழக் கல்வியாளர்களையும் இப்பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.
விடுதலைப்புலிகள் அழிக்கப்படவேண்டும் என்பதில் உடன்படும் வேறுபட்ட தரப்பினர்களுக்கு, அவ்விதம் அவர்கள் அழிக்கப்பட்டதிற்கு பின் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஒருமித்த கருத்து இருக்க முடியாது. குறிப்;பாக மகிந்த அரசை பொறுத்தவரை, அதற்கு விடுதலைப்புலிகளை தோற்கடிக்கப்பட்டதன் பின்னான நிலை பற்றி அக்கறை கொள்ள வேண்டிய அவசியம் எதுவுமில்லை. தனித்து இவ்வெற்றியை பாவித்து தமது ஆட்சியை நீடித்துக் கொள்ள முடியும். இருப்பினும், கொடுமையான மனிதவுரிமை மீறல்களில் ஈடுபடும் அவரது அரசு போர்க்குற்றங்களிற்கான விசாரணைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையிலிலிருந்து தப்பிக் கொள்ளதற்காக, யுத்தம் முடிவிற்கு வந்ததும், சர்வதேசத்தை திருப்திப்படுத்தும் வகையில், தனது அரசு மேற்கொள்ளவிருக்கும் அரசியல் முயற்சிகள் பற்றி, இப்போதே ஒப்பு கொடுக்க வேண்டிய நிலையிலிருக்கிறது. ஏற்கனவே சிறிலங்கா அரச அமைச்சர்களான திஸ்ஸ விதாரண, பாலித்த கோகண, ஜீ.எல்.பீரீஸ் ஆகியோர் இந்தவகையில் யுத்தத்தை நியாயப்படுத்தி வெளிநாடுகளில் பிரச்சாரங்களை; மேற்கொண்டு வருகின்றனர்.
புலம்பெயர்ந்த நாடுகள் பலவற்றிலும் விடுதலைப்புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டுள்ளமையால், பயங்கரவாத தடைச்சட்டத்தின் பிரகாரம் தமிழர்கள் இறுக்கமான நடைமுறைகளுக்கு முகங் கொடுக்க வேண்டியுள்ளனர். ஏற்கனவே சில தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களது செயற்பாடுகளின் வீச்சுக் குறைந்து காணப்படுகிறது
இச்சூழ்நிலையை வாய்ப்பாகப் பயன்படுத்தி புலம்பெயர்ந்த தமிழ் மக்களை இலங்கையர்கள் என்ற குடைக்குள் கொண்டுவந்து, அதனடிப்படையில் அவர்களது மனங்களை வென்றுவிட முடியும் என்ற நம்பிக்கை சிறிலங்கா அரசுக்கும் அதன் நேசசக்திகளுக்கும் துளிர்விடத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே இங்கு வாழும் சில தமிழர்களுடன்இ குறிப்பாக சிறிலங்கா அரசுடன் ஒட்டுக்குழுக்களாக சேர்ந்தியங்கும் முன்னாள் போராளிக்குழுக்களில் இயங்கியவர்கள், தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஒரு பிரிவினர் போன்றோருடன் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அண்மையில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் “புலம்பெயர்ந்த இலங்கை மக்களிற்கு முன்னுள்ள பாதை” என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கு சிறிலங்கா தூதரகத்தின் அனுசரணையுடன் நடைபெற்றது. பதினைந்து வரையிலான ஈழத்தமிழ் கல்வியாளர்கள் அழைக்கப்பட்டிருந்த இக்கருத்தரங்கில்; உரையாற்றிய சிறிலங்கா சமாதான கவுன்சிலை சேர்ந்த ஜெகான் பெரேரா என்பவர் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களும் சிறிலங்கா அரசும் பரஸ்பரம் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றி கருத்து வெளியிட்டுள்ளார்.
தமிழ்தேசியம் தோற்கடிக்கப்படுகிறது என்ற தோற்றம் உருவாகிவருவதால், வருங்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் தமிழர்கள் புலம்பெயர்ந்துள்ள இதர நாடுகளிலும் நடைபெறக்கூடும். ஒசிப்பயணத்திற்கும், பணத்திற்கும், புகழுக்கும் ஆசைப்பட்டு தமிழ் புத்திசீவிகள் சிலரும் இவற்றில் கலந்து கொண்டு மாரடிக்கக்கூடும். ஆனால் இவர்களது எதிர்பார்ப்புகளைத் தகர்த்து தமிழீழப் போராட்டம் முன்னோக்கி நகரும் என்பதில் உறுதியாகவிருக்கும் பெரும்பான்மையான புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள், தங்களை நோக்கி வைக்கப்படும் பொறிகளை இனங்கண்டு தகர்த்து எறிவார்கள் என்பதனை உறுதியாக நம்பலாம்.
Recent comments
1 year 20 weeks ago
1 year 21 weeks ago
1 year 26 weeks ago
1 year 29 weeks ago
1 year 29 weeks ago
1 year 29 weeks ago
1 year 30 weeks ago
1 year 33 weeks ago
1 year 38 weeks ago
1 year 43 weeks ago