நலம் நாடலும் அதுவே.
உன் கடிதங்கள் எனது கரம் காண்பது குறைவாக உள்ளது. கடிதம் போடுகிறாய்தானே… இங்குள்ள நாளாந்தச் செய்திகள் அறிவாய்தானே புதிதாக எழுத என்ன இருக்கிறது? ஓ.. மறந்து விட்டேன் எங்கட பெடியள் வானத்தில பறந்த கதை தெரியுந்தானே. அந்த நாள் எவ்வளவு குதூகலமான நாள் தெரியுமோ? ஊரில சனம்பட்ட சந்தோசத்தை வார்த்தைகளால வர்ணிக்கமுடியாது. குஞ்சு குறுமணலில இருந்து பொல்லோட திரிகிற கிழடுகள் வரைக்கும் ஆட்டம்பாட்டந்தான். எங்கட சனத்தின்ர முகத்தில எவ்வளவு நிம்மதி. உங்கட வீட்டுக்குப்பக்கத்தில ஒரு கருமிக்கிழவன் இருக்கு என்று அடிக்கடி திட்டுவாயே, அந்தக்கிழவன் இப்ப நல்லா சோர்ந்துபோய் ஒடுங்கிக் கிடந்தவர் வான்புலிகளின் சேதி கேட்டதுதான் தாமதம் ஊரில இருக்கிற பிள்ளைகளுக்கெல்லாம் தன்ர செலவில இனிப்பு வாங்கிக் குடுத்து அந்தாள் கொண்டாடின கொண்டாட்டத்திற்கு அளவில்லை. பிறகு வீட்டில அவருக்கு அரிசி வாங்கக்குடுத்த காசை இனிப்பு வாங்கி ஊரெல்லாம் தானம் வழங்கிவிட்டாரென்று பூசை நடந்ததுதான். இதை நான் ஏன் எழுதிறனெண்டால் மிச்சம் மீதியா ஒருவரும் இல்லை எல்லாரும் மகிழ்ச்சிக்கடலில்.
மேலும் இங்கு சித்திரைமாதம் அனல் வீசுது. இருந்தாலும் முற்றத்து வேப்பமரம் குளுகுளுவென்று இருக்கு. அதுக்குக் கீழ இருந்துதான் இந்தக் கடிதத்தை எழுதிறன். வேப்பம்பூக்காலம். அம்மா வடகம் தட்டிக்கொண்டிருக்கிறா. நான் கடிதம் எழுதிறதைப்பாத்து ஒரு பெருமூச்சுவிட்டுட்டு அங்கால முகத்தைத் திருப்பி தனக்குள்ள என்னையிட்டு எழுந்த வேதனையை ஆத்திறா. எனக்குப் புரிகிறது. நான் என்ன செய்யட்டும்? என் திருமணம் தள்ளித் தள்ளிப் போறதிற்கு நானா காரணம்? வெளிநாட்டு மாப்பிளையை எங்க வீட்டில் பார்க்க வெளிக்கிட்டதால வந்த சீரழிவு. என்னுடைய கறுப்பு நிறம் பாக்க வாறவைக்குக் கண்ணுக்குள்ள உறுத்தினா அது ஆர் தவறு? என்னவோ இதைப்பற்றி மேற்கொண்டு எழுதப் பிடிக்கவில்லை. இந்த மண்ணில வாழுகிற இந்தச் சந்தோசம் வெளிநாடுகளில கிடைக்குமா? ஏன் இந்த வேப்பமரக்காத்து, இந்த இலைகளின் மெல்லியசலசலப்பு, அங்கால அப்பா இந்த நிழலில ஈஸிச்சேரைப் போட்டு சாய்ந்திருக்கிற அழகு. வேப்பம்பூவைக் கொறிக்க வாலைக்கிளப்பிக்கொண்டு திரியும் அணில்பிள்ளைகள், கிளையில இருந்து துணைக்கு பேண் பார்க்கிற காகங்கள், இந்தச் சோளகக் காத்து… இந்த இயல்பான வாழ்க்கையைத் தொலைச்சிட்டம் என்று முனகிற நிலையில் வெளிநாட்டு வாழ்க்கை ஓடுது என்று ஏற்கனவே கனடாவுக்குப்போன குட்டியம்மா கடிதம் எழுதியும் இங்க இருக்கிறவைக்கு ஏதோ மோகம்.. எங்கவீட்டில சொல்லி வேலையில்லை மற்றச்சனத்திற்கு இருக்கோ இல்லையோ.. எங்கவீட்டில நீயெல்லாம் வெளிநாட்டுக்குப் போனாப்பிறகு எனக்கும் வெளிநாட்டு மாப்பிளைதான் பாக்கிறது என்று ஒற்றைக்காலில நிக்கினம். என்ர தலையில என்ன எழுதி இருக்கோ அதுதானே நடக்கும்.
சரி நான் என்ர சுயபுராணத்தையே எழுதிக் கொண்டிருக்கிறன். உன்னுடைய வேலை எப்படிப் போகிறது? உனது அத்தான் உன்னிடம் உனது பள்ளிவாழ்க்கையைப் பற்றிக் கேட்கின்றவரா? தன்னுடைய பள்ளிக்காலம்பற்றி உன்னிடம் மனம்விட்டுப் பேசுவாரா? குடும்பத்தில் இருவரும் தோழர்களாக இருக்கிறீர்களா? வெளிநாட்டில் வாழும் தம்பதிகளுக்கும் எங்கள் நாட்டில் வாழும் தம்பதிகளுக்கும் வித்தியாசம் அதிகமுள்ளதா? உன் அனுபவத்தை கொஞ்சம் எழுதி அனுப்பு நானும் வாசிச்சு அறியிறன். இத்தோட இந்த மடலை முடிக்கிறன் அடுத்த மடலில் சந்திக்கிறன்.
இப்படிக்கு
அன்புத்தோழி வசந்தி
Recent comments
2 weeks 3 days ago
7 weeks 2 days ago
7 weeks 4 days ago
10 weeks 2 days ago
12 weeks 11 min ago
12 weeks 19 min ago
12 weeks 19 min ago
22 weeks 1 day ago
22 weeks 1 day ago
22 weeks 3 days ago