"நாங்கள் கடவுள் இல்லை என்று கூறும் நாத்திகர்கள் இல்லை. கடவுள் இல்லையே என்று கவலைப் படும் நாத்திகர்கள். இன்னும் சொல்லப் போனால் கடவுள் என்று ஒருவர் இருக்கக் கூடாதா என்று ஏங்கும் நாத்திகர்கள். "
இப்போதெல்லாம் நாத்திகம் பேசுவது ஒரு வித நாகரிகமா இந்தக் காலத்து இளசுகளுக்கு போய்விட்டது என்று அலுத்துக் கொண்டே என்னிடம் கூறினார் ஒருவர். நாத்திகம் பொல்லாதது என்றார் மற்றொருவர். நாத்திகர்களை ஏதோ திரைப்படங்களில் வரும் வில்லன்களைப் பார்ப்பது போல் பார்க்கும் மனோபாவமும் ஒரு சிலருக்கு இருக்கின்றன. ஒரு விடயத்தை இவர்கள் எல்லோரும் வசதியாக மறந்து விட்டார்கள். நாத்திகம் இன்று நேற்று தொடங்கியது அல்ல. உண்மை என்னவெனில் கடவுள் இருக்கிறார் என்ற கருத்து இந்த உலகத்தில் தோற்றம் பெறும்போதே கடவுள் இல்லை என்ற கருத்தும் தோற்றம் பெற்றுவிட்டது. கடவுள் மறுப்பாளர்கள் கி.மு. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே வாழ்ந்திருக்கிறார்கள். வெறும் வரட்டுத்த தத்துவத்தின் அடிப்படையில் நாத்திகம் தோன்றி விடவில்லை. சிந்தனையின் வளர்ச்சிப் போக்கில்தான் அதுவும் பரிணாமித்திருக்கிறது. உலகப் புகழ் பெற்ற கிரேக்கத் தத்துவ ஞானிகளான பிளாட்டோ, அரிஸ்டோட்டில், சோக்ரடீஸ் போன்றவர்கள் கடவுள் மறுப்பாளர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். மார்க்சியத்தின் பொருள் முதல்வாதக் கோட்பாடு கடவுளை மறுக்கிறது.
தத்துவஞானிகள் பொதுவாக கருத்து முதல்வாதிகளாகவும் பொருள் முதல்வாதிகளாகவும் இருப்பார்கள். தத்துவத்தின் அடிப்படையே இந்த இரண்டிலும்தான் தங்கியுள்ளது. அன்று முதல் இன்று வரை இந்த இரண்டிற்கும் கருத்துப் போர் நடைபெற்ற வண்ணம் உள்ளது. சரியான முடிவு இன்னும் கிடைக்கவில்லை. இருப்பினும் எங்களைப் போன்றவர்களின் அறிவு பொருள்முதல்வாதத்தையே ஏற்றுக் கொள்கிறது. முதலில் கருத்து முதல்வாதம், பொருள் முதல்வாதம் என்றால் என்னவென்று பார்ப்போம்.
இந்த உலகம் கடவுளால் படைக்கப் பட்டது, அவனின்றி அணுவும் அசையாது என்ற நம்பிக்கையின் அடிப்படையில், குறிப்பிட்ட அந்தக் கருத்தை வைத்து பின்னப்பட்ட வாதமே கருத்து முதல்வாதம்.
பொருள் முதல்வாதம் பொருளை அடிப்படையாகக் கொண்டது. அழகானா மலரைப் பார்க்காமல் அது அழகானது என்ற கருத்துத் தோன்ற முடியாது. இனிமையான பாடலைக் கேட்காமல் அது இனிமையானது என அறிய முடியாது. நமது உடலை ஐம்புலன்கள் இயக்குகின்றன. அந்த ஐம்புலன்களையும் மூளை இயக்குகின்றது. காதலுக்கு இதயத்தை குறியீடாகக் காட்டுவது முற்றிலும் தவறானது. காதல் உணர்வென்பது முழுக்க முழுக்க மூளையின் வெளிப்பாடே. அந்தக் கருத்து எவ்வாறு மூளையில் ஏற்பட்டது. ஏதாவது ஒரு திடப் பொருளைப் பார்த்தபின்தானே. திடப் பொருள் என்றால் என்ன? மரம், கோவில், விமானம், நான், நீங்கள், ஐஸ்வர்யாராய் என எல்லாமே திடப் பொருட்கள்தான். பெண் என்ற திடப் பொருளைப் பார்த்தபின்தான் ஆண் என்ற திடப்பொருளுக்கு காதல் தோன்றுகிறது. பார்க்காமல் தோன்றும் காதல்கூட அந்தத் திடப்பொருள் தொடர்பாக ஏதாவது ஒன்றை அறிந்த பின்தான் ஏற்படுகிறது. எது எப்படிப் பார்த்தாலும் பொருள்தான் முதல் வருகின்றது.
சரி இனி விசயத்திற்கு வருவோம். கடவுள், ஆன்மா போன்றவை திடப் பொருட்கள் அல்ல. புலன்களால் அவற்றை உணர முடியாது. மனத்திற்குள் ஏற்பட்ட கருத்தையும் அதன்பால் ஏற்பட்ட பக்தியையும் வைத்துத்தான் நாம் நமது நம்பிக்கையை வளத்து வருகிறோம்.
உலகம் வெறும் திடப் பொருட்களால் மட்டும் ஆகவில்லை. திடப் பொருள் சக்தி, இந்த இரண்டையும் கொண்டே உலகம் இயங்குகின்றது. சக்தி என்றதும் யாரும் ஓம் சக்தியயோ பராசக்தியையே நினைக்கவேண்டாம். நாம் குறிப்பிடுவது இயக்கவியல் எனப்படும் அந்தச் சக்தியை. நியூட்டனின் முதலாவது விதிப்படி ஒரு திடப்பொருளின் மீது அசைவியக்கம் இல்லை என்றால் அது எந்த மாற்றத்திற்கு உள்ளாகாமல் அப்படியே இருக்கும். பேருந்து என்ற திடப்பொருள் இயங்குகிறது. அந்த இயக்கம் எங்கிருந்து பெறப்படுகிறது மனிதன் எனும் இன்னுமொரு திடப்பொருளில் இருந்துதான் அது பெறப் படுகிறது. அந்தப் பேருந்தை மனிதன் பாவிக்காமல் விட்டால் அது அப்படியே இருந்து விடப் போவதில்லை. அப்போதும் அந்தப் பேருந்தில் மாற்றம் ஏற்படத்தான் செய்கிறது. அதன் வடிவம் மங்கி அது துருப்பிடிக்கிறது. இது ஒரு இரசாயன மாற்றம் அந்த மாற்றம் எங்கிருந்து பெறப் படுகிறது? குறிப்பிட்ட அந்தப் பொருளில் இருந்துதான் பெறப்படுகிறது, அதாவது இயக்கம் என்பது ஒரு பொருளிலிருந்து இன்னொரு பொருளுக்கு ஊட்டப் படுகிறதே தவிர பொருள் இல்லாத ஒன்றிலிருந்து ஊட்டப் படவில்லை.
இந்த பிரபஞ்சமும் அப்படித்தான் இயங்குகிறது. ஒரு பொருளை அழிக்கவோ ஆக்கவோ முடியாதென்பது விதி. அதன் வடிவம் மாறுகிறதே தவிர அது அழிக்கப்படுவதில்லை. மரக் கட்டையை எடுத்துக் கொண்டால், வெட்டித் துண்டுகளாக்கலாம் எரித்துச் சாம்பலாக்கலாம். இங்கு வடிவம்தான் மாறுகிறதே தவிர அது அழிபடவில்லை.
எந்த ஒரு கருத்தும் பொருள் இல்லாமல் தோற்றம் பெறுவதில்லை. கருத்தா பொருளா என்ற வாதத்தில் நமது அறிவிற்கு எட்டியவரை பொருளே முதலில் தெரிகிறது. கருத்து உற்பத்தியாகும் முளை என்பது என்ன? அதுவும் ஒரு பொருள்தானே. எனவே பொருள்தான் முதலானது என்பது தெளிவாகிறது. இந்தப் பிரபஞ்சத்தையும் நாம் அவ்வாறுதான் பார்க்கிறோம். இந்தப் பிரபஞ்சத்திற்கு தொடக்கமும் இல்லை முடிவும் இல்லை. இதன் வடிவம் மாறுமே தவிர இது அழிவற்றது. நிலமை இவ்வாறு இருக்க இதை யார் தோற்றுவித்தார் என்ற கேள்வி தேவையற்றதாகவே எங்களுக்குப் படுகிறது. படைத்தல், காத்தல், அழித்தல் போன்ற சொற்றாடர்கள் எங்களுக்கு அபத்தமாகவே படுகின்றன.
இல்லை இது கடவுளால் படைக்கப் பட்டது. அவர் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார், ஆதியும் அவர்தான் அந்தமும் அவர்தான், அனைத்திற்கும் அவர்தான் காரணம் என்றால் அதனை மெய்பிக்கட்டும். ஏற்றுக் கொள்வதற்கு எங்களைப் போன்றவர்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. நாங்கள் கடவுள் இல்லை என்று கூறும் நாத்திகர்கள் இல்லை. கடவுள் இல்லையே என்று கவலைப் படும் நாத்திகர்கள். இன்னும் சொல்லப் போனால் கடவுள் என்று ஒருவர் இருக்கக் கூடாதா என்று ஏங்கும் நாத்திகர்கள்.
நாத்திகனாக வாழ்வதென்பது அவ்வளவு எளிதல்ல. இறை நம்பிக்கையாளர்கள் தவறு செய்தால் அதனை மன்னிக்கச் சொல்லி கடவுளிடம் வேண்டுவார்கள். அவர்களின் நம்பிக்கையின் படி அவர்களுக்கு பிரயச்சித்தம் உண்டு. நாத்திகர்களுக்கு என்ன இருக்கிறது. தவறே செய்யாமல் இருப்பதுதான் அதற்கான ஒரே பிரயச்சித்தம். மீறி தவறு செய்தால் அவ்வளவு எளிதில் அவர்களால் மீண்டுவிட முடியாது.
நாத்திகர்கள் மேல் வைக்கப் படும் எந்தக் குற்றச் சாட்டும் அடிப்படையில் நியாயமற்றவை. கடவுள் இருக்கிறார் என்று ஆத்திகர்களில் கருத்துப் படிபார்த்தாலும், குறிப்பிட்ட அந்தக் கருத்தை மறுப்பதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது. கடவுள் இருக்கிறார் என்று சொல்வதற்கு உரிமை இருக்கிறதென்றால் அதனை மறுப்பதற்கும் உரிமை இருக்கிறது. இந்த இடத்தில் மற்றுமொரு வரலாற்று உண்மையைக் கூற வேண்டும். கடவுளை மறுத்த பகுத்தறிவுவாதிகளில் பெரும் பாலோரை நாம் அவதானிப்போமானால் அவர்கள் அனைவரும் சமூக சீர்திருத்தவாதிகளாகவே தென்படுகின்றனர். கடவுளை அவர்கள் எதிர்க்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் இல்லாத ஒன்றை எதிர்ப்பதற்கு அவர்கள் மூடர்கள் அல்ல. ஆதிக்கவாதிகளின் கைப்பாவையாக கடவுள் என்ற கருத்து பரப்பப் பட்டதுதான் அவர்களின் கோபத்திற்கும் போராட்டத்திற்கும் காரணம். சோக்ரடீஸ், புத்தர் முதற்கொண்டு இங்கர்சால், பெரியார் போன்றவர்களின் வரலாறுகளைப் படித்தால் இந்த உண்மை விளங்கும்.
குறிப்பாக பச்சை நாத்திகர் அதுவும் ஈவிரக்கம் கொஞ்சமும் அற்ற நாத்திகர் என பலரால் வசை பாடப்படும் தந்தை பெரியரின் வரலாற்றை ஆராய்ந்தால் பல வியப்புக்கள் காத்திருக்கின்றன. பார்ப்பான் பஞ்சமன் என்ற சாதிப் பாகுபாட்டை ஒழிப்பதற்காக அவர் சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தார். அப்போது தனது இயக்கத்தின் ஏடாகா அவர் குடியரசு நாளிதழை தொடங்கியபோது, “எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவாராக” என்றே எழுதுகிறார். சாதியையும் பிறவிப் பெண்ணடிமைத்தனத்தையும் எதிர்த்த அவர் அப்போது கடவுளில் கைவைக்கவில்லை. சாதிகளைக் கற்பிக்கும் வருணாசிரமத்தத்துவம் இந்து மதத்தின் ஆணிவேர் என்பதை அவர் அறிய நேர்ந்த போது அதனை எதிர்க்கிறார். அந்தத் தத்துவங்கள் புண்ணிய ஏடுகளின் பொன் போன்ற கோட்பாடுகள் என பலர் உரைத்தபோது, அந்த புண்ணிய ஏடுகளையே கொளுத்தவேண்டும் என்கிறார். இல்லை இல்லை அந்த புண்ணிய ஏடுகள் கடவுளால் படைக்கப் பட்டவை என்ற போது, “என்னடா பெரிய வெங்காயக் கடவுள், அவனையே ஒழியுங்கடா” என்கிறார். ஆம் பெரியார்கூட நேரடியாக கடவுள் மறுப்பாளராக மாறவில்லை. சாதியை ஒழிக்க முற்பட்ட அவருக்கு கடவுளைக் காட்டி பேய்காட்ட வெளிக்கிட்டனர் ஆதிக் சாதியினர். அதன்பின் பொருள் முதல்வாதக் கோட்பாடுகளைப் படித்து பெரியார் தத்துவ அடிப்படையில் நாத்திகராக மாறினார் என்பது வேறு. ஆனால் அவர் போராட வெளிக்கிட்ட தொடக்கத்தில் அவரது நோக்கம் சாதி ஒழிப்பே தவிர கடவுள் மறுப்பு அல்ல. அவர் மட்டுமல்ல, " Light Houses are more helpful than Churches" என்ற பென்சாமின் பிராங்க்ளின் என்பவரை எத்தனையோ வாய்கள் சபித்திருக்கும். சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் அவர் பிறந்திருந்தால் அவருக்கு மரணதண்டனைகூட தரப்பட்டிருக்கும். அவர் யாரை எல்லாம் எதிர்த்தாரோ அவர்கள் மக்களுக்காக எதையும் செய்யவில்லை ஆனால் அவர் கண்டுபிடித்த பென்சிலின் என்ற மருந்து பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறது.
இவ்வாறு உலகப் புகழ் பெற்ற பகுத்தறிவாளர்களின் கடவுள் மறுப்பானது மனித நேயத்தை மறைமுகமாகக் கொண்டிருக்கிறது என்பதனை மறந்துவிட முடியாது. நாத்திகனை வைத்து எழுதப்பட்ட ஒர் ஆங்கிலக் கவிதை நினைவிற்கு வருகிறது. கடவுளை நேசிக்கும் மனிதர்களின் பட்டியலில் அவன் பெயர் இல்லை. ஆனால் கடவுள் நேசிக்கும் மனிதர்களின் பட்டியலில் அவன் பெயர் முதலிடத்தில் இருக்கிறது காரணம் அவன் மனிதர்களை நேசிக்கிறான். நாத்திகன் என்றால் கடவுள் மறுப்பாளன் என்பார்கள் என் போன்றவர்களைக் கேட்டால் அவனுக்கும் கடவுள் இருக்கிறது என்றே கூறுவேன் ஏன் அவனுக்கு மதமும் இருக்கிறது. ஆம் அன்புதான் அவனது கடவுள் மனிதநேயமே அவனது மதம்.
நிறைவாக........
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருந்த சாய்ந்த கோபுரங்கள் என்ற இந்த அனுபவப் பதிவை நிறைவு செய்யும் நேரம் வந்து விட்டது. இதில் நான் குறிப்பிட்ட சில விடயங்கள் பலரது மனத்தைக் காயப்படுத்தியிருக்கலாம். நண்பர்களே உண்மை என்றும் கசப்பானது. இவற்றை நான் முதன் முதலாக அறிய நேர்ந்தபோது எனக்கும் கசக்கத்தான் செய்தது. இத்தொடரில் எந்த விதமான திரிபுவாதத்தையும் நான் வைக்கவில்லை. நான் அறிந்து கொண்ட உண்மைகளை அப்படியே வெளியிட்டேன். பொதுவாக எல்லோரும் கேட்ட ஒரு கேள்விக்கு இப்போது நான் பதிலளிக்கின்றேன். பிற மதங்களை விட்டு விட்டு இந்து மதத்தை மட்டும் தாக்குவது நியாயமா என பலர் கேள்வி எழுப்பியிருந்தார்கள். மேலை நாட்டு பகுத்தறிவாளர்களான இங்கர்சால், டார்வின், பென்சாமின் பிராங்க்ளின் போன்றவர்கள் இந்து மதத்தை எதிர்க்காமல் ஏன் கிறிஸ்தவ மதத்தை எதிர்த்தார்கள் என்று கேட்பது போல்தான் இந்தக் கேள்வியும் உள்ளது.
ஒருவர் வாழும் சமூகத்தை எந்த மதம் பாழ்படுத்தியதோ அதைத்தான் அவர்கள் முதல் எதிர்ப்பார்கள். மேலும் சாதிகளற்ற தமிழ்ச் சமூகத்தில் சாதிய இழிவை இந்து மதம்தான் கற்பித்தது. அது கற்பித்த நான்கு சாதிகள்தான் நாற்பதாய் நானூறாய் கிளை பரப்பி நிற்கின்றன. அனைத்து கிறிஸ்தவர்களும் பைபிள் படிக்க வேண்டும் என்ற கிறிஸ்தவத்திற்கும், அனைத்து முஸ்லீம்களும் குர்ரான் படிக்கவேண்டும் என்ற இஸ்லாத்திற்கும் பிராமணன் மட்டும்தான் வேதம் படிக்க வேண்டும் சூத்திரன் வேதம் படித்தால் அவன் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்ற இந்து மதத்திற்கும் எத்துணை பெரிய வேறுபாடு. தமிழ்ச் சமூகத்தில் தோன்றிய பகுத்தறிவாளர்கள் இந்து மதத்தை குறிவைத்துத் தாக்கியதற்கு இதுதான் காரணம். ஒருவரின் மனம் புண்படும் என்பதற்காக உண்மையை உரைக்காமல் இருக்க முடியாது. உண்மை முன்று நிலைகளைக் கடக்கிறது. முதலில் அது நகைப்புக்கிடமாகவும் அடுத்து அது மிகத் தீவிரமான எதிர்ப்புக்குள்ளாகும் விதமாகவும் இறுதியில் தெளிந்த மனதுடன் அதை ஏற்றுக்கொள்ளும் விதமாகவும் அமைகிறது என்று இந்தத் தொடரின் தொடக்கத்தில் நான் குறிப்பிட்ட ஜேர்மன் நாட்டு தத்துவமேதை ஆர்தர் ஸ்கோபென்கார் கூறிய வாரிகளை மீண்டும் நினைவு படுத்தி இந்தத் தொடரை நிறைவு செய்கிறேன்.
பல எதிர்ப்புக்களை எதிர்கொண்ட போதிலும் இப்பதிவை தொடர்ந்து எழுத வைத்த ஒருபேப்பர் நிர்வாகக் குழுவினருக்கும், வாசித்த தமிழ் நெஞ்சங்களுக்கும், தங்களின் கருத்துக்களைப் பதித்து என்னை ஊக்கப் படுத்திய அன்புறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். மீண்டும் ஒரு பதிவில் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை நன்றி கூறி விடைபெறுகிறேன்.
Recent comments
2 weeks 13 hours ago
2 weeks 2 days ago
5 weeks 19 hours ago
6 weeks 5 days ago
6 weeks 5 days ago
6 weeks 5 days ago
17 weeks 2 hours ago
17 weeks 2 hours ago
17 weeks 1 day ago
17 weeks 5 days ago