இலங்கைத்தீவின் இனப்பிரச்சனை விடயத்தில் வெளிப்படையாகத் தலையிடுவதனை தவிர்த்து வந்த இந்தியா, தனது அணுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளமையை அவதானிக்க முடிகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய மத்திய அரசின் அதிமுக்கிய அதிகாரிகளான, பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயண், வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனன், பாதுகாப்புச் செயலாளர் விஜய் சிங் ஆகியோரின் அண்மைய கொழும்புப் பயணம் அமைந்திருக்கிறது. கொழும்பில் இவர்கள் சிறிலங்கா சனாதிபதி இராஜபக்ச, தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், சிறிலங்கா அரச ஆதரவுத் தமிழ்க் குழுக்கள் எனப் பலரையும் சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடாத்தியிருக்கிறார்கள்.
அரசியல் மட்டத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கும் இவர்களது பயணத்தின் உள்நோக்கம் பற்றி தெரியவரவில்லை. இருப்பினும் ஊடகங்கள் தமது ஊகத்தின் அடிப்படையில் ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்களை வெளியிட்டு மக்களை குழப்பி வருகின்றன.
ஈழத்தமிழரைப் பொறுத்தவரையில், இந்தியாவின் நம்பகத்தன்மை விளிம்புநிலையில் இருப்பதால், முன்பொரு காலத்திலிருந்தது போன்று, இந்தியாவிடமிருந்து பெரும் எதிர்பார்ப்புக்கள் எதனையும் அவர்கள் கொண்டிருக்கவில்லை. முன்னைய ஏமாற்றங்களால் இந்தியாவின் ஒவ்வொரு நடவடிக்கைகயையும் அவர்கள் சந்தேகத்துடனேயே நோக்குகிறார்கள்.
தமிழர்களின் போராட்டத்தினை முறியடிப்பதற்காக இந்தியா வழங்கும் உதவிகளை ஏற்றுக்கொள்ளும் சிங்கள அரசியல்வாதிகளும் இந்தியாவின் தலையீட்டை தாம் விரும்பவில்லை என்பதனை வெளிப்படையாகத் தெரிவித்து வருகிறார்கள். இந்தியாவிடமிருந்து வரக்கூடிய ஆபத்துப்பற்றி ஜே.வி.பி மீளவும் பேச ஆரம்பித்திருக்கிறது.
மொத்தத்தில் இலங்கைத்தீவில் உள்ள மக்கள் மத்தியில், இந்தியாவின் நகர்வுகள் குழப்பகரமானதாக நோக்கப்படுகிறது. ஆனால் ஒரு சில தமிழ் அரசியல்வாதிகள் மாத்திரம் வடக்கு-கிழக்கு இணைப்பை வலியுறுத்தி, சமஸ்டி அடிப்படையிலான அதிகாரப்பரவலாகத்தை மையப்படுத்திய அரசியல் தீர்வினை இந்தியா பெற்றுத்தரும் என நம்புகிறார்கள்.
இலங்கைத்தீவில் பிற சக்திகளின் பிரசன்னம் அதிகரித்து, பிராந்தியத்தில் தமது மேலோங்கிய போக்கு கேள்விக்குறியாகும்போது, இனப்பிரச்சனையை காரணங்காட்டி இலங்கை விவகாரங்களில் தலையிடுவது இந்தியாவின் வழக்கமாகிவிட்டது. அதுதவிர மனிதவுரிமை, தேசிய இனங்களின் அரசியல் உரிமை போன்ற விடயங்களில் இந்தியா அக்கறை கொணடுள்ளதாகத் தெரியவில்லை.
இந்தத்தடவை ஈழத்தமிழர் விடயத்தில் இந்தியா நேர்மையாக நடந்து கொள்ளவிரும்புமானால் விடுதலைப்புலிகள் அமைப்பின் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கி, அவர்களுடன் நேரடியாகப் பேச முன்வரவேண்டும்.
Recent comments
1 year 20 weeks ago
1 year 21 weeks ago
1 year 26 weeks ago
1 year 29 weeks ago
1 year 29 weeks ago
1 year 29 weeks ago
1 year 30 weeks ago
1 year 33 weeks ago
1 year 38 weeks ago
1 year 43 weeks ago