உலகையே நடுங்க வைத்த சர்வாதிகாரி ஹிட்லரை தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஜேர்மனியின் சர்வாதிகாரியாக 1934இல் இருந்து 1945 வரை ஆட்சி புரிந்த ஹிட்லர் நடத்திய அழிவுகள் எண்ணில் அடங்காதவை. ஹிட்லர் உருவாக்கிய இரண்டாம் உலக யுத்தத்தில் ஐரோப்பாவில் மட்டும் 39 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டிருந்தார்கள்.
ஹிட்லரின் நாசிப் படைகள் செய்த படுகொலைகள் மனிதகுலத்தை இன்று வரை நடுங்கச் செய்பவை. எக் குற்றமும் செய்யாத 6 மில்லயனுக்கும் அதிகமான யூத மக்கள் ஹிட்லரின் படைகளால் கொல்லப்பட்டார்கள். யூதர்களை கொல்வதற்கு என்றே உருவாக்கப்பட்ட பிரத்தியேக முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட யூத மக்கள் அங்கு பல விதமான சித்திரவதைகளின் ஊடாக கொல்லப்பட்டார்கள்.
சுட்டும், விச வாயு செலுத்தியும் கொல்லப்பட்ட யூத மக்கள் ஆயிரக் கணக்கில் ஒரே புதைக் குழிக்குள் போடப்பட்டார்கள். சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என்று எந்தப் பாகுபாடும் இன்றி யூத மக்கள் ஹிட்லரின் படைகளால் வதைக்கப்பட்டார்கள். இப்படியொரு இனப் படுகொலையை உலகம் இதற்கு முன் கண்டதே இல்லை என்று சொல்கின்ற அளவிற்கு, ஹிட்லரின் படைகள் கோரதாண்டவம் ஆடின.
இப்படியான படுகொலைகளை கட்டவிழ்த்து விட்ட ஹிட்லர் மக்கள் ஆதரவுடன்தான் ஆட்சிக்கு வந்தார். ஹிட்லர் ஆட்சிக்கு வருவதை தடுக்க ஜேர்மன் நாட்டின் சில புத்திஜீவிகளும், இடதுசாரிக் கட்சிகளும் கடும் முயற்சி மேற்கொண்டனர். ஜேர்மனியின் அன்றைய அரசுத்தலைவராக இருந்தவரும் ஹிட்லருக்கு பதவிப் பிரமாணம் செய்யாது விடுவதற்கு பல வழிகளில் முயன்றார். இப்படி ஜேர்மனியின் தலைவர்கள் பலர் எதிர்த்த போதும், தன்னுடைய தொண்டர்களினதும் மக்களினதும் ஆதரவோடு ஹிட்லர் ஆட்சிக்கு வந்தார்.
ஆட்சிக்கு வந்த ஹிட்லர் சில வருடங்களிலேயே போலாந்தை ஆக்கிரமித்து இரண்டாம் உலக யுத்தத்தை ஆரம்பித்து வைத்தார். ஹிட்லரின் படைகள் சென்ற இடமெல்லாம் அப்பாவி மக்களை வேட்டையாடியது. யூத மக்களையும், "ரோமா மற்றும் சிந்தி" இன மக்களையும் எங்கே கண்டாலும் கொன்று குவித்தது. உடல் ஊனமுற்ற மனிதர்களும் வயோதிபர்களும் உலகுக்கு பாரமானவர்கள் என்று சொல்லி கொல்லப்பட்டார்கள்.
இப்படியாக கொலைவெறியாடிய ஹிட்லரை எந்த ஒரு யேர்மனியர்களும் எதிர்க்கவில்லையா என்ற கேள்வி வரலாம். எதிர்த்தார்கள் என்பதுதான் பதில். ஹிட்லர் உலகுக்கும் ஜேர்மனிக்கும் பேரழிவை கொடுத்துக் கொண்டிருப்பதை உணர்ந்த ஜேர்மனியின் படைத் தளபதிகள் சிலர் ஹிட்லருக்கு எதிராக போராடத் தீர்மானித்தார்கள். ஹிட்லரை கொலை செய்யத் திட்டம் தீட்டினார்கள்.
1939ஆம் ஆண்டு ஹிட்லர் யுத்தத்தை ஆரம்பித்து பிரான்ஸ் மீது தாக்குதல் நடத்த தீர்மானித்த பொழுதே சில தளபதிகள் ஹிட்லருக்கு எதிராக கலகம் செய்யத் திட்டமிட்டார்கள். உயர் படைத் தளபதிகளும் ஆரம்பத்தில் கலகத்திற்கு ஆதரவாக இருந்து பின்பு பின்வாங்கிக் கொண்டார்கள். சோவியத் யூனியனுடன் ஜேர்மனியப் படைகள் போரிட்ட போது, சோவியத் யூனியனுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ஹிட்லரை எதிர்க்கவும் ஒரு தளபதி திட்டம் போட்டார். ஆயினும் அதுவும் நடைபெறவில்லை.
1942ஆம் ஆண்டின் மத்தியில் படை அதிகாரிகளை கொண்டு உருவான ஒரு குழு ஹிட்லர் மீது தாக்குதலை நடத்துவதற்கு பல முறை முயன்றது. திரெஸ்கோ என்பவரும் ஸ்ரவ்வன்பேர்க் என்பவரும் இக் குழுவின் முக்கியமானவர்களாக இருந்தார்கள். இக் குழுவின் தலைவராக ஸ்ரவ்வன்பேர்க் செயற்பட்டார்.
ஸ்ரவ்வன்பேர்க் ஒரு சிறந்த படைத்தளபதி. டாங்கிப் படையணியின் தளபதியாக இருந்து போலாந்திலும், பிரான்ஸிலும் சண்டைகளை வழிநடத்தியவர். ஜேர்மனியின் மீது மிகுந்த பற்று மிக்கவர். ஹிட்லரின் நடவடிக்கைகள் ஜேர்மனியை படுகுழிக்குள் தள்ளுவதை உணர்ந்து ஹிட்லரை அழிப்பதற்கு தீர்மானித்தார். இதே போன்று திரேஸ்கோவும் ஒரு படைத் தளபதிதான்.
1943இல் திரெஸ்கோ ஹிட்லர் பயணம் செய்த விமானத்தில் ஒரு நேரக் குண்டை பொருத்தினார். தொழில்நுட்பக் கோளாறுகளினால் குண்டு வெடிக்கவில்லை. இதற்கு எட்டு நாட்கள் கழித்து கெர்ஸ்டோர்வ் என்பவர் ஒரு தற்கொலைத் தாக்குதல் மூலம் ஹிட்லரை அழிக்க முயன்றார். நேரக் குண்டை தன்னுடைய உடலில் பொருத்திக் கொண்ட ஹிட்லர் கலந்து கொண்ட ஒரு நிகழ்வுக்கு சென்றார். ஹிட்லர் பத்து நிமிடங்களுக்கு முன்பே கிளம்பி விட்டார். கடைசி நிமிடத்தில் கெர்ஸ்டோர்வ் குண்டை செயலிழக்கச் செய்து தப்பித்துக் கொண்டார்.
அதன் பிறகு மீண்டும் ஒரு தற்கொலைத் தாக்குதல் திட்டம் உருவானது. இந்தத் தாக்குதலை நடத்த அக்சல் என்பவர் முன்வந்தார். இவர் ஹிட்லரின் படைகள் ஒரே நேரத்தில் 3000 யூத மக்களை படுகொலை செய்த கோரக்காட்சியை கண்ணால் கண்டவர். அன்றிலிருந்து ஹிட்லரின் மீது கடும் வெறுப்பில் இருந்தவர். கடைசியில் தன்னை அழித்து ஹிட்லரையும் அழிக்க முன்வந்தார்.
குளிர்காலத்திற்காக தயாரிக்கப்பட்ட புதிய வகை இராணுவ சீருடைகளை அணிந்து படைவீரர்கள் நடத்தும் அணிவகுப்பினை பார்வையிடுவதற்கு ஹிட்லர் திட்டமிட்டிருந்தார். அந்த அணிவகுப்பில் கலந்து கொள்ளவிருந்த அக்சல் தற்கொலைத் தாக்குதல் மூலம் ஹிட்லரை அழிக்க முடிவெடுத்திருந்தார். ஆனால் அணிவகுப்பு நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்பு எதிரி நாட்டு விமானங்கள் நடத்திய தாக்குதலில் அந்த சீருடைகள் அனைத்து அழிந்து போய்விட்டன. அணிவகுப்பு கைவிடப்பட்டது.
ஸ்ரவ்வன்பேர்க் ஹிட்லர் மீதான தாக்குதலுக்கு தொடர்ந்தும் முயன்றார். மீண்டும் ஒரு தற்கொலைத் தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டது. கிளைஸ்ற் என்பவர் அந்தத் தாக்குதலை நடத்த முன்வந்தார். கிளைஸ்ற்றின் தந்தையே அவரை உற்சாகப்படுத்தி ஹிட்லர் மீது தாக்குதல் நடத்தச் சொன்னார். ஆனால் ஹிட்லர் தன்னுடைய கால அட்டவணைகளில் செய்த மாற்றங்களால் அந்தத் திட்டமும் வெற்றி அளிக்கவில்லை.
இது போன்று பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒவ்வொரு முறையும் ஹிட்லர் தப்பித்துக் கொண்டே இருந்தார். முயற்சிகள் வெற்றி அளிக்காததைக் கண்ட பல படைத் தளபதிகள் முயற்சியில் இருந்து பின்வாங்கினர். ஸ்ரவ்வன்பேர்க் தொடர்ந்து முயன்றார். கடைசியில் தானே நேரடியாக களமிறங்கி ஹிட்லரை கொல்ல முடிவெடுத்தார். இந்தத் திட்டம் மிகவும் சிறப்பான முறையில் திட்டமிடப்பட்டிருந்தது. ஹிட்லர் கொல்லப்பட்டதும் ஹிட்லர் ஆதரவுப் படைகளை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான திட்டங்களும் தீட்டப்பட்டிருந்தன.
1944ஆம் ஆண்டு யூலை 20இல் ஹிட்லர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் அன்றைக்கும் அதிர்ஸ்டம் ஹிட்லரின் பக்கம்தான் இருந்தது. கூட்டம் நடைபெற இருந்த அறையையும் நேரத்தையும் ஹிட்லர் மாற்றம் செய்ததால், திட்டமிட்டபடி குண்டுத் தாக்குதலை நடத்த முடியவில்லை. அவசரம் அவசரமாக செய்யப்பட்ட கடைசி நேர மாற்றங்கள் குண்டின் வீரியத்தை குறைத்து விட்டன. குண்டு வெடித்தது. ஹிட்லர் சிறுகாயங்களுடன் தப்பினார்.
தாக்குதல் முடிந்தவுடன் ஸ்ரவ்வன்பேர்க் மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதற்கு காலதாமதமானது. அது ஒழுங்காக நடந்திருந்தாலாவது, ஹிட்லரின் ஆதரவுப் படையினர் முடக்கப்பட்டு ஸ்ரவ்வன்பேர்க்கின் கை ஓங்கியிருக்கும். ஆனால் தொடர்புகளில் நடந்த குளறுபடிகளும், மற்றைய தளபதிகள் ஈடாட்டத்தில் இருந்ததாலும் ஸ்ரவ்வன்பேர்க்கின் கடைசி முயற்சியும் தோல்வியில் முடிந்தது.
ஸ்ரவ்வன்பேர்க் கைது செய்யப்பட்டார். உடனடியாக அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அன்றைய காலத்தில் ஜேர்மனிய அரசினதும் மக்களினதும் பார்வையில் ஸ்ரவ்வன்பேர்க் ஒரு குற்றவாளி, ஒரு பயங்கரவாதி. ஆனால் ஸ்ரவ்வன்பேர்க்கின் முயற்சி வெற்றி பெற்றிருந்தால், பல மில்லியன் மக்களின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும்.
யுத்தத்தில் ஜேர்மனி தோற்கடிக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் கழித்து ஜேர்மனியின் பிரபல்ய பத்திரிகை ஒன்று ஸ்ரவ்வன்பேர்க் பற்றி ஜேர்மனிய மக்களிடம் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. அப்பொழுது கூட ஸ்ரவ்வன்பேர்க் செய்தது சரி என்று சொன்னவர்கள் வெறும் முப்பது வீதமானவர்கள்தான்.
ஹிட்லர் யுத்தத்தில் வெற்றி பெற்றிருந்தால், இன்றைக்கும் ஸ்ரவ்வன்பேர்க் ஒரு பயங்கரவாதியாகத்தான் இருந்திருப்பார். பல தற்கொலைத் தாக்குதல்களுக்கு திட்டமிட்டவர், ஒரு அரசுத் தலைவரை கொல்ல முயன்றவர் என்று அவரைப் பற்றி நாம் பாடப் புத்தகங்களில் படித்திருப்போம்.
ஆனால் நல்ல வேளையாக ஹிட்லர் தோற்கடிக்கப்பட்டார். மெது மெதுவாக ஜேர்மனிய மக்களிடமும் பெரும் மனமாற்றம் ஏற்பட்டது. இன்றைக்கு ஜேர்மனிய இராணுவத்தில் ஸ்ரவ்வன்பேர்க் பெயரில் ஒரு படையணியே இருக்கிறது. அவருடைய நினைவுதினம் ஆண்டு தோறும் நினைவுகூரப் படுகிறது. அவருடைய தலையைக் கொண்ட முத்திரையும் வெளியிடப்பட்டது. ஒரு விடுதலை வீரராக இன்றைக்கு அவர் போற்றப்படுகிறார்.
பயங்கரவாதி யார் என்பதையும், விடுதலை வீரர் யார் என்பதையும் காலமே தீர்மானிக்கிறது.
முக்கிய குறிப்பு: மே 21இல் தமிழ்நாட்டின் சிறிபெரும்புத்தூரில் நடந்த குண்டுவெடிப்பில் ராஜீவ்காந்தி, தாணு உட்பட பலர் கொல்லப்பட்டனர்
Recent comments
1 week 1 day ago
1 week 3 days ago
4 weeks 1 day ago
5 weeks 5 days ago
5 weeks 5 days ago
5 weeks 5 days ago
16 weeks 15 hours ago
16 weeks 15 hours ago
16 weeks 2 days ago
16 weeks 6 days ago