தமிழ்ச் செய்தியாளர் மாநாடு பற்றிய பதிவுகள் பற்றி கவிஞர் உ.சேரன்
சர்வதேச தமிழ்ச் செய்தியாளர் ஒன்றியத்தின் லண்டன் மாநாட்டில் கலந்துகொள்ள வாய்ப்புக் கிடைத்தமை ஒரு நல்ல அனுபவம். அந்த மாநாட்டில் இடம்பெற்ற என்னுடைய உரையின் பதிவை நீங்கள் வெளியிட்டமைக்கு நன்றி ("ஊடகவியலாளர் அவசியமான பேய்கள்!", த.ஜெயபாலன், ஒரு பேப்பர் மே 9-மே 22). ஆங்கிலத்தில் இருந்த எனது உரையின் தமிழ்ப் பதிவு பெருமளவுக்குச் சரியாக இருந்தாலும் பின்வரும் விடயங்களில் வழு ஏற்பட்டுள்ளது.
1. ஊடகவியல் என்பது தொழில் துறைசார்ந்த பொறுப்பு மட்டுமல்ல, அறம் சார்ந்த பொறுப்பும் (Ethical commitment/project) ஆகும் என்பதே நான் கூற விழைந்தது. Ethical என்பதை விழுமியங்களுக்கான பொறுப்பு என்று மொழி பெயர்ப்பது பொருத்தமானதல்ல.
2. Patriotism என்பதை தேசியப் பற்று என்று மொழி பெயர்ப்பதை விட நாட்டுப் பற்று என்று மொழிபெயர்ப்பதே சரியானது.
அதே இதழில் எனது அருமை நண்பர் இதயசந்திரன் எழுதியுள்ள கட்டுரையில் (பக்கம் 9) என்னுடைய உரையைத் திரித்து மேற்கோள் காட்டியிருப்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியதும் எனது பொறுப்பாகும்
"உண்மையான கலாநிதி பட்டம் சுமக்கும் நிபுணர்களிடம் தமிழ்ப் பத்திரிகையாளர்கள் ஆலோசனை பெறுவதில்லை என்ற குற்றச்சாட்டை சேரன் சுமத்துகிறார்" என்று இதயச் சந்திரன் எழுதுகிறார். இத்தகைய குற்றச்சாட்டை எனது உரையில் எந்த இடத்திலும் நான் சொல்லவில்லை. வல்லுநர்கள் (-Experts)பற்றி எனது உரையில் நான் குறிப்பிட்ட பின்னணி வேறானது. வல்லு நர்களை பயன்படுத்துவது, செய்தி அறிக்கைகளில் அவர்களுடைய கருத்துக்களையும் சான்றுகளையும் குறிப்பிடுவது ஊடகத்துறையில் மரபாக இருந்து வருகிறது. எனினும், அரசுகள் வல்லுநர்களை எவ்வாறு தமது ஊதுகுழலாகப் பயன்படுத்த முடியும் என்பதையும் குறிப்பிட்ட கருத்துக்கு ஆதரவாக மக்கள் கருத்தை வென்றெடுப்பதற்கு எவ்வாறு வல்லுநர்களையும் இராணுவ ஆய்வாளர்களையும் பயன்படுத்த முடியும் என்பதையும் விளக்குகிற ஒரு உதாரணமாக ஈராக் யுத்தத்தைப் பற்றி அமெரிக்க மக்களிடம் ஆதரவைப் பெறுகிற வகையில் வல்லுநர்களையும் இராணுவ ஆய்வாளர்களையும் எவ்வாறு பணம் கொடுத்து திட்டமிட்டு அமெரிக்க அரசு பயன்படுத்தியிருக்கிறது என்பதை அண்மையில் நியூயோர்க் டைம்ஸ் அம்பலமாக்கியதை நான் எனது உரையில் குறிப்பிட்டிருந்தேன்.
வல்லுநர்களுக்கும் ஒரு நுண் அரசியல் இருக்கும் என்பதால் அது பற்றி ஊடகவியலாளர் நிதானமாக இருக்கவேண்டும் என்பதே இதன் உட்கிடக்கை.
சொந்தக் கருத்தையும் பொய்யையும் செய்தி எழுதுவதையும் (Reporting) குழப்பி அடிப்பதுதான் தமிழ்ப் பத்திரிகைச் சூழலில் நிலவி வருகிற ஆபத்தான காரணிகளில் ஒன்று என்று எனது உரையில் குறிப்பிட்டிருந்தேன். இதய சந்திரனின் கட்டுரை இதற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துவிட்டமை ஒரு முரண் நகையாகும்.
"கொலைக்களத்தில் ஒற்றைக்காலில் நின்றவாறு எழுத்துச் சமராடும் பத்திரிகையாசிரியர் ஒருவர்" எனது கூற்றினை முழுதாக நிராகரித்தார் என்று இதயச்சந்திரன் எழுதிகிறார். எமது அரங்கில் உரைகள் முடிந்தபிற்பாடு கேள்வி/பதில் இடம் பெற்றது. என்னுடைய கூற்றுக்களை எவரும் " நிராகரித்ததாக ஆதாரம் இல்லை. ஏற்பதும் நிராகரிப்பதும் அவரவர் தர்மம். அது குறித்து எனக்கு முரண்பாடுகள் இல்லை. எனினும், கொலைக்களத்தில் நின்று எழுத்துச் சமர் புரிவது மட்டுமே அத்தைகைய பத்திரிகையாசிரியர்களுக்கு மேலதிக அறவலுவைத் தந்து விடாது; அவர்களுக்காக ஊடக அறத்தையும் தளர்த்த முடியாது. அவர்கள் குறித்து எனக்கு மதிப்பு உள்ளது. அனால் மதிப்பு வேறு அறத்தையும் அறிவையும் நாம் எதிர்பார்ப்பது வேறு.
Recent comments
9 weeks 2 days ago
9 weeks 2 days ago
9 weeks 3 days ago
10 weeks 22 hours ago
10 weeks 22 hours ago
10 weeks 5 days ago
11 weeks 1 day ago
11 weeks 5 days ago
12 weeks 5 days ago
12 weeks 5 days ago