சண்டியர்கள்

by:
சாத்திரி

அண்மையில் முகத்தார்ஜேசுரட்ணம் அவர்களின் ஒலிநாடா வடிவில் இருந்த சில நாடகங்களை இறுவட்டாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தேன்.அப்பொழுது�
��ான் அவரின் சண்டியன் சின்னத்தம்பி என்கிற நாடகத்தை கேட்டபொழுது எனக்கு முன்னர் ஊரில் இருந்த சில சண்டியர்களின் ஞாபகங்கள் வந்து என்னை இந்தப்பதிவை எழுதத்தூண்டியது. முந்தி ஊரிலை ஆயுதப்போராட்டம் தொடங்கிற காலத்துக்கு முதல் அனேகமான ஊர்களிலையும் ஒவ்வொரு சண்டியராவது கட்டாயம் இருந்திருப்பினம்.அந்த நேரத்திலை பெரும்பாலும் தனிச்சண்டியர்மார் இருந்தவை. இப்ப தமிழ் சினிமாவிலை காட்டிறமாதிரி ஒரு கும்பலை தனக்குக்கீழை வைச்சிருந்த சண்டியர்மார் குறைவு.அதுவும் சண்டித்தனத்துக்கும் மணியம் எண்டபெயருக்கும் ஏதோ ஒரு பொருத்தம் இருந்திருக்கு ஏணெண்டால் அனேகமான சண்டியரின்ரை பெயர்கள் மணியம். உதாரணமாய்யாழ்ப்பாணத்திலை கரையூர் (குருநகர்)மணியம்.கொய்யாத்தே��
�்டத்து மணியம் எங்கடை மானிப்பாயிலை மண்ணெண்ணெய் மணியம். சண்டிலிப்பாய்யிலை ஒரு மணியம். இப்பிடி பல மணியங்கள் சண்டியராய் இருந்தவை. அடுத்ததாய் யாழ்ப்பாணதிலை பெயர்போனசண்டியர்மார் எனக்கு ஞாபகத்துக்கு வந்ததிலை கொட்டடி போயா.பருத்தித்துறை சம்பந்தன். சங்கானை கடியன்.இப்பிடி ஊருக்கு ஒருத்தராய் சொல்லலாம். இவையள் சாதாரமான ஆக்களை வெருட்டுறது மட்டுமில்லை கப்பம் வாங்கிறது.கூலிக்கு யாரையாவது வெருட்டுறது வெட்டுறது.

தேவைப்பட்டால் கொலையும் செய்யிறது எண்டு அவையளின்ரை பொலிஸ் மற்றது அரசியல் செல்வாக்கை பொறுத்து அவையளின்ரை அரசாங்கம் விரிவடையும்.இந்த ஆயுதப்போராட்டம் தொடங்குறதுக்கு முதல் எங்கடை தமிழ்சமூகம் வன்முறையெண்டால் என்வெண்டு அதிகம் தெரியாத ஒரு துளி இரத்தத்தை கண்டாலே மயங்கிவிழுகிற ஒரு சமூகமாய் இருந்த காலத்திலை யாராவது ஒருதர் தண்ணியடிச்சுப்போட்டு மப்பிலை ஒரு அப்பாவியை போட்டு அடிச்சாலோ அல்லது கத்தியாலை குத்தினாலோ அவர் உடைனை அந்தஊர் சண்டியராயிடுவார்.பிறகு அவரைக்கண்டு கொஞ்சப்பேர் பயப்பிடுவினம்.அதாலை அந்தச் சண்டியருக்கும் கொஞ்சம் உசார்வந்து அடுத்தநாள் சந்தியிலை நிண்டு சும்மா தன்பாட்டிலை றோட்டாலை போற ஒருத்தரை கூப்பிட்டு "டேய் உன்ரை நடை சரியில்லை ஒழுங்காய் நட" எண்டு சொல்லி பிடரியிலை ஒரு தட்டு தட்டி அனுப்புவார். இப்பிடி அவர் அந்த ஊரிலை ஒரு சண்டியராயிடுவார்.பிறகு நாளுக்கு நாள் அவரின்ரை அட்டகாசத்தைப் பொறுத்துத்தான் அவரது வளர்ச்சி இருக்கும்.சில நேரத்திலை அவர் விசயம் தெரியாமல் அவரைவிட துணிச்சலான பலசாலியோடை தனகிப்போட்டார் எண்டால் அவரின்ரை கதை அந்தளவுதான். அடிவாங்கிக்கொண்டு அவரின்ரை சண்டியர் பட்டத்தையும் இழந்து ஊரிலை ஒதுங்கி வாழவேண்டியதுதான்.குறுக்கு வழியளிலை தங்கடை பிரச்சனையை தீர்க்க விரும்புறவையள்தான் இந்தச் சண்டியரை தேடிப்போவினம்.பெரும்பாலும் ஏதாவது காணிஎல்லைப்பிரச்சனை இல்லாட்டி ஊரிலை யாராவது காதலிச்சால் அவையை பிரிக்கிறது.காதலிச்சிட்டு ஊரைவிட்டிட்டு ஓடிபோயிருந்தால் அவையளை தேடிப்பிடிக்கிறதெண்டு ஊர்வேலையள் மட்டுமில்லை தேர்தல் காலங்களிலை தான் இவையின்ரை மவுசு அதிகமாயிருக்கும்.ஒவ்வொரு கட்சிக்காரரும் ஒவ்வொரு சண்டியரை அந்த நேரத்திலை தத்தெடுத்திடுவினம்.

கட்சிக்கூட்டத்துக்கு சோடாப்போத்தல் எறியிறது . கரண்டை நிப்பாட்ட கரண்கம்பிக்கு சைக்கிள் செயின் எறியிறது.கட்சி வேட்டபாளர்மரின்ரை வீடுகளுக்கு கல்லெறியிறது எண்டு இவையளின்ரை பணி நடக்கும்.ஆனால் இன்று நடக்கிற மாதிரி வேட்பாளர்களை கொலை செய்யிறது வாக்காளர்களை வெருட்டி குறிப்பிட்ட கட்சிக்கு வாக்கு போடச்சொல்லி மிரட்டுற சந்தர்ப்பங்கள் மிக குறைவு. ஆனால் தாங்கள் மிகப்பெரிய சனநாயக நாடு எண்டு மார்தட்டிக் கொள்ளுற இந்தியாதான்இலங்கையில் தனது படைகளை இறக்கியிருந்த காலத்தில் முதன் முதலாக ஆயுத முனையில்வடக்கு கிழக்கு மக்களை பலவந்தமாக ஒரு கட்சிக்கு வாக்களிக்க வைத்து வரதராஜபெருமாளை முதலமைச்சராக்கி சனநாயகத்தையும் வாக்களிக்கும் உரிமையையும் கேலிக்கூத்தாக்கியிருந்தனர். அது இன்றுவரை தொடர்கிறது.அன்றைய காலத்தில் ஊருக்கொரு தனிச்சண்டியர் என்றிருந்தது இன்று ஊருக்கொரு ஒட்டுக்குழுவாக மாறியிருக்கு.சரி பழைய சண்டியரிக்கே போவம். ஈழத்தில் ஆயுத போராட்ட காலம் தொடங்கி இயக்கங்கள் முளைக்கத் தொடங்கியதும் பல ஊர் சண்டியர்கள் இயக்கங்களாலை தந்திக் கம்பங்களில் தொங்கவிடப்பட்டனர் அதைப்பார்த்த மற்றைய சண்டியர்கள் அடக்கிவாசிக்கத்தொடங்கியிர��
�ந்தனர்.சிலர் தலைமறைவாயும் போய் விட்டனர்.

ஆனால் சண்டியன்கள் மட்டுமில்லை சில பெண் சண்டிகளும் இருந்தவை . பெண் சண்டி எண்டதும் யாழ் குடாநாட்டு மக்களுக்கு உடைனை நினைவிலை வாறது கீரிமலை வியாளிதான். விசாலாச்சி எண்டிற அழகான தமிழ்ப்பெயர் எப்பிடி வியாளியாய் மாறினவர் எண்டு எனக்கும் தெரியாது.அடுத்தவர் எனக்கு தெரிஞ்சு சங்கானை நிச்சாமம் ராசாத்தி . இந்த இரண்டு பேரையும் நான் நேரிலை பாத்திருக்கிறன். ஒருமுறை நான் மானிப்பாயிலையிருந்து சண்டிலிப்பாய் போவமெண்டு ஒரு கீரிமலை பஸ்சிலை ஏறினன் பஸ்சிலை பலபேர் இருக்க இடம் இல்லாமல் நிண்டுகொண்டிருந்திச்சினம். ஆனால் ஒரு மனிசிஒரு இருக்கையிலை காலை அகட்டிவசதியாய் இருந்தபடி பக்கத்திலை ஒரு பொதியையும் வைச்சு முழுஇடத்தையும் பிடிச்சபடி இருக்க. நான் நடத்துனரை பாத்து " அண்ணை சனம் இருக்க இடம்இல்லாமல் நிக்கிது ஆனால் ஒரு மனிசி ஒருசீற்றை பிடிச்சுவைச்சிருக்குது ஆளை அரக்கி இருக்கசொல்லுங்கோ " எண்டதும் அந்த மனிசி என்னை தூசணத்தாலை பேசினபடி நீயாரடா எண்டு கேக்க. நான் மனிசியைபாத்து முறைக்க. பஸ் நடத்துனர் என்ரை காதுக்கை மெல்லமாய் "தம்பி இதுதான் வியாளி பேசாமல் இரு "எண்டவும் எனக்கு பயத்திலை கைகால்எல்லாம் உதறலெடுத்து போக வேண்டிய இடத்துக்குப் போகாமல் இடையிலேயே அடுத்த நிறுத்தத்திலை இறங்கிட்டன்.பிறகு வியாளிக்கு பயத்திலை கீரிமலைப்பக்கம் பல மாதமா போகேல்லை.

அடுத்ததாய் சங்கானை ராசாத்தியை சங்கானை மீன்சந்தைக்குள்ளை அடிக்கடி காண்டிருக்கிறன்.மனிசியை கண்டதும் கலகலவெண்டு இருக்கிற மீன்சந்தையின்ரை சத்தம் கொஞ்சம் குறையும். இப்பிடி தனிசண்டியர்கள் எல்லாம் போய் இப்ப சனம் ஒட்டுக்குழுக்களுக்கு பயப்பிட்டுகொண்டிருக்க. வந்த இடத்திலை வெளிநாட்டிலைதான் இந்தப்பிரச்சனை இல்லாமல் நிம்மதியாய் இருப்பம் எண்டு பாத்தால் இஞ்சை தமிழ்சினிமாவை பாத்திட்டு அந்தப்படங்களின்ரை பெயருகளை வைச்சுக்கொண்டு குழுசண்டித்தனம் செய்தபடி எங்கடை அடுத்த சந்ததி திரியதுகள்.பொலிசும் இடைக்கிடை அள்ளி உள்ளுக்குள்ளை போட்டபடி இருந்தாலும் புதிசு புதிசாய் வந்துகொண்டுதான் இருக்கினம்.எப்பதான் திருந்தப்போகினமோ தெரியாது.