அபூர்வமான அனுபவம் அடைந்தேன்.

by:
இரவி அருணாசலம்

நெஞ்சார ஒன்று சொல்கிறேன். சென்ற ஞாயிறு (4-5-08) நடந்த ஒரு நிகழ்வு, என்வாழ்வில் நேர்ந்த மிக அபூர்வமான தருணங்களில் ஒன்று. நெஞ்சு இனிக்க அந்த நாள் என்னில் பதிந்தது. “ஒரு பேப்பர்” இல் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள் எழுதுகிற வி.சபேசன் (ஜேர்மனி) அவர்கள் கலைநிதியை வதுவை புரிந்த அந்தத் தருணத்தையே மிக்க அபூர்வமான தருணம் என நான் குறிப்பிட்டேன்.

சனிக்கிழமை (3-5-08) காலையில் நாதன் அவர்களின் மகிழ்வுந்தில், கோபி, பார்த்தி, இளங்கோ, நாதன்,  நான் என ஒருபேப்பர்காரன்கள் புறப்பட்டோம். மணிவாசகனை விட்டுப் போவது வருத்தமாக இருந்தது.

பிரகாசமான காலை வெய்யிலில் தெளிவான தார்ப் பாதையில் பயணம் குதுகலத்துடன் அமைந்தது. அரசியல், சினிமா என்று அளவளாவியதில் எட்டுமணிப் பயணம் சோர்வைத் தரவில்லை என்று சொல்லக் கூடாது. இன்பகரமாய் இருந்தது. அப்படித்தான் சொல்ல வேண்டும்.

டோற்முண்டில் சின்ன ஆச்சரியம் ஒன்று. ஒருபேப்பர் இல் அச்சுப் பகுதிக்குப் பொறுப்பாக இருக்கும் குமார் அவர்களை அவர் நடாத்தும் தமிழ்ப்பாடசாலையில் சந்தித்தோம்;;;;. மஞ்சள் வெய்யில் எறிக்கிற மாலைப் பொழுதுக்கு குதூகலமாக இருந்தார் குமார். ஒரு அப்பாவியாக இருப்பார் என நான் எண்ணினால் “அட பாவி” என்று சொல்ல வைத்தார். ஒரு சின்ன எளிமையான நூலகம், கரும்பலகைகளுடன் கூடிய வகுப்பறைகள், மேலாக ஈழத்துத் தமிழ் அறிஞர்களின் புகைப்படங்கள் அவர்கள் பற்றிய விபரங்களுடன் சுவர் நீள இருந்தன. அதுவே எனக்கு மெச்சத்தக்க ஒரு விசயம் என்றாயிற்று. அவர் கைபற்றி முகமன் கூறிப் புறப்பட்டு “ஒபகவுசன்” வந்தோம்.

அதுதான் சபேசனின் வதிவிடம். அங்குதான் அடுத்தநாள் ஞாயிறு சபேசனின் திருமணம் நடந்தது. அதுதான் ஜேர்மனியில் நடைபெறுகின்ற முதலாவது தமிழ் நெறியில் அமைந்த மணவிழா. அதில் அடியேனும் பங்கேற்றேன் என்பது போக மணவிழாவை ஒருங்கிணைந்து நடாத்துபவர்களில் ஒருவனாக இருந்தேன் என்பதுதான் மெத்த மகிழ்ச்சிக்குரிய விசயம். அதாவது, ஒருவிதத்தில் அய்யராயும் அங்கு நான் இருந்தேன்.

இம்மணவிழா இவ்வாறுதான் நிகழ்ந்தது. மணமகன் வந்து ஐந்து நிமிடத்தில் மணமகள் வருகிறார். இல்லத்தரசிகள் இருவர் குத்துவிளக்கு ஏற்றிய பின் மணமக்கள் திருமண உறுதிமொழி எடுக்கின்றனர். பின் மாலை மாற்றப்படுகின்றது. மங்கலநாண் வாழ்த்திற்காக அவையோரிடம் அனுப்பப்படுகிறது. மங்கலநாண் வந்து சேர்ந்த பின் இருவரும் ஒருவர் கழுத்தில் ஒருவர் மங்கலநாண் அணிவிக்கின்றனர். அவ்வமயம் அவையோர் மலர்தூவி வாழ்த்துகின்றனர். பின் மணமக்கள் தம் பெற்றோரிடம் வாழ்த்து வாங்கி நற்கருமம் ஆற்றுகின்றனர். பொதுவான வாழ்த்துரைகள் முடிய மச்சச்சாப்பாடும் உள்ள மதிய விருந்து காத்திருந்தது. மணவிழா இனிது நிறைவேற நாம் மகிழ்வுந்தில் ஏறினோம். மதியவெய்யிலில் இலண்டனை நோக்கிய எமது பயணம் தொடங்கிற்று….

மணவிழா பற்றிய சுருக்கக் குறிப்பு வரைக என்றால், இவ்வாறுதான் எழுத முடியும். ஆனால், அந்த மணவிழா பற்றிச் சொல்ல ஆயிரம் உண்டு. குறிப்பாக சபேசன் அவர்களின் துணிச்சலின் தொடர்வை முன்னெடுக்கும் முனைப்பை வாழ்த்த வேண்டும், வணங்க வேண்டும், போற்ற வேண்டும், புகழ வேண்டும்.

எதற்கும் ஓம் என்று ஒத்துழைத்த ஆரணங்கு கலைநிதியை சபேசனிலும் ஒருபடி மேலே போய்ப் போற்ற வேண்டும். சபேசனுக்கு இதில் ஓர் அன்பு கூறல், ஆணாதிக்கத்தின் சிறு அடையாளமும் இதில் படர்ந்து விடாமல் மிக்க கவனமாகப் பார்க்க வேண்டும.;

தமிழ் மறையான திருக்குறளினாலேயே இம்மணவிழா நிகழ்ந்தது. திருக்குறளில் எத்துணை ஆற்றல் வாய்ந்த வரிகள் உள்ளன என்பது மணவிழாவின் முழுமையில் தெரிந்தது. இம்மணவிழாவில் எந்தவொரு நிகழ்வுக்கும் ஏதோ ஒரு குறள் பொருந்திப் போய்;க் கொண்டிருந்தது. வள்ளுவர் வல்லமை வாய்ந்தவரா? அல்லது நம் தமிழ்மொழி அத்தனை தரம் மிக்கதா?

இரண்டும் தான். இரண்டுமே அல்லத்தான். ஏன் சொல்லுகிறேன் என்றால், பண்பாடு மிக்க நம் தமிழினம் தான் மொழியை இவ்வளவு வளம் பெறச்செய்தது. வள்ளுவரைத் தோன்றச் செய்தது. சிந்தனாவாதியாக்கியது. அற்புதமான பண்பாடு மிகுந்த தமிழ்ச் சமூகம் தான்
வள்ளுவரை உருவாக்கியது. அதனால்தான் அப்படிச் சொன்னேன்.

இம்மணவிழாவில் இன்னொன்று குறிப்பிடத்தகுந்தது. திருமண உறுதிமொழி எடுத்தலிலும், மங்கலநாண்கள் பற்றிய பிரகடனத்திலும் “சரிநிகர் சமானமாக” மணமகன், மணமகள் இருந்தனர். கூர்ந்து கவனித்துச் செய்த நற்காரியம் இது. வாழ்விலும் அது வழிவரும். நம்புகிறேன் நான்.

மணவிழா நிறைவுறுகிற தருணம் இன்னொரு காரியம் இருக்கிறது. சாதாரண கலியாணச்சடங்குகளில் அது, பிராமணர்களுக்கு வழங்குகிற தானமாக நிறைவு பெற்று விடும். ஆனால், இங்கு அது அவ்வாறு நிறைவடைந்ததல்ல. மணமகனும், மணமகளும் மணம் முடிந்ததும் செய்யும் நற்பணி, இவ்வாறு அமைந்தது. தாயகம் காப்போரின் தாள் பணிந்து தாயகவிடுதலைக்கு உதவியாக பொற்குவை ஒன்றைக் கொடுத்தார்கள்.

தமிழ்நெறி முறையில் அமைந்த இத்தகைய மணவிழாக்கள் பெரியாரின் மீள் உருவாக்கத்துடன் 1950 களில் தமிழ்நாட்டில் நடைபெற்றது. 1967 இல் தி.மு.க தமிழ் நாட்டை ஆளத்தொடங்கிய போது பெரியாரின் வழிகாட்டலுடன் அறிஞர் அண்ணா சட்டபூர்வமாகவே இதனை அங்கீகரித்தார். அதுமாத்திரமன்றி, இவ்வாறான சீர்திருத்தத் திருமணங்களுக்கு தமிழ்நாடு அரசு நிதியுதவியும் வழங்கியது.

தமிழீழத்தில் போராளிகளுக்கிடையிலான மணவிழாக்கள் இந்நெறிமுறையிலேயே அமைந்தன. இப்போது புலம்பெயர் நாடுகளில் இது தொடர்வதற்கு கலைநிதி, சபேசன் இருவரும் முன்முனைப்பாளர்கள் ஆகினர் என்பது கூடுதல் மகிழ்வு.

தோழர்களே நுமக்கு நாம் தரத்தக்கது இவையே, இவை கூட கவிஞர் வில்வரத்தினத்திடம்
உவந்து பெற்றது.

வீறு கொள்
ஓர்மமும் மூச்சும் உமக்குள்ளும் எழுக
விடுதலைப் பறவையின் தொலைநோக்கும்
வீச்சும் உள்வாங்குக விறலோய்
”.