நாளை நடைபெறவிருக்கும் பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல், அப்பிரதேசத்தில் சுமூக நிலையை மீளக்கொண்டுவரும் எனவும், இனி அங்கு சனநாயகமுறையிலான ஆட்சி அலகுகள் செயற்படத் தொடங்கும் எனவும் சிறிலங்கா அரசு பரப்புரை செய்து வருகின்றது. மனிதவுரிமை மீறல்கள் உச்ச நிலையை அடைந்துள்ள நிலையில், அனைத்துலகப் பரப்பில் ஒரளவு தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் சிறிலங்காவுக்கு இத்தகைய பிரச்சாரம் அவசியமாக உள்ளது. ஆனால் கிழக்கின் உண்மை நிலையை புரிந்து கொண்டவர்களுக்கு இப் பிரச்சாரங்களில் மறைந்திருக்கும் அபாயத்தை பகுத்தறிந்து கொள்வதில் சிரமமேதும் இருக்காது.
இலங்கைத்தீவு பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து விடுபட்ட காலத்திலிருந்து கிழக்குமாகாணத்தில் தமிழ் பேசும் மக்களின் நிலம் அபகரிக்கப்பட்டு, அப்பகுதிகள் படிப்படியாக சிங்கள மயமாக்கப்பட்டு வருகின்றன. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களினால் அங்கு பெரும்பான்மையாகவிருந்த தமிழ் மக்கள் சிறுபான்மையினராக்கப்பட்டு வருகிறார்கள்.
சிங்கள பேரினவாதிகள் வடக்கு-கிழக்கு இணைப்பை உயர்நீதிமன்ற தீர்ப்பின் முலம் முறித்துக் கொண்டதனைத் தொடர்ந்து, தமது நீண்டகாலத்திட்டத்தை இப்போது நிறைவேற்ற தலைப்பட்டுள்ளனர். அங்கு நிலைகொண்டிருந்த விடுதலைப்புலிகளின் படையணிகள் வெளியேறிக் கொண்டதும், கருணா, பிள்ளையான் ஆயுதக்குழுக்களின் அரச ஆதரவுச் செயற்பாடும், அதற்கான ஏது நிலையை ஏற்படுத்தியுள்ளது.
சிறிலங்கா - இந்திய ஒப்பந்தத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட வடக்கு-கிழக்கு இணைப்பு பிரிக்கப்பட்ட போது எந்த அசைவையும் காட்டாத இந்தியா. இப்பகுதியை தனது வர்த்தக நலனுக்கு பாவிக்க விரும்புகிறது. அதன் ஒரு கட்டமாக திருமலை மாவட்டத்தில் உள்ள சம்பூரில் தமிழ் மக்கள் விரட்டப்பட்ட பகுதியில், அனல் மின் நிலையமொன்றை இந்தியா அமைக்கவுள்ளது.
வடக்கு-கிழக்கு இணைந்த தாயக கோட்பாட்டினை விடுதலைப்புலிகள், தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் தவிர்ந்த, மற்றய தமிழ்க் குழுக்கள் கைவிட்டு விட்டதை அவை முண்டியடித்துக் கொண்டு தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தெரிகிறது.
வடக்குடனான இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் அரசியல் ரீதியில் பலவீனமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள தமிழர்கள், முறையான அதிகார பரவலாக்கம் இல்லாத இச்சபையினால் எவ்விதமான பயனையும் பெறப்போவதில்லை. இந்த உண்மையை விளங்கிக் கொள்ளாமல் பிரதேச வாதத்தை முன்வைத்து தமிழர்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவது கிழக்கிலிருந்து அவர்களின் நிரந்தர வெளியேற்றத்துக்கே வழிவகுக்கும்.
Recent comments
1 year 20 weeks ago
1 year 21 weeks ago
1 year 26 weeks ago
1 year 29 weeks ago
1 year 29 weeks ago
1 year 29 weeks ago
1 year 30 weeks ago
1 year 33 weeks ago
1 year 38 weeks ago
1 year 43 weeks ago