ஏப்பிரல் 25, வெள்ளிக்கிழமை

வணக்கம்!

இந்த இதழ் ஒரு வாரம் தாமதமாக ஏப்பிரல் மாதத்தின் நான்காவது வெள்ளியன்று வருகிறது. லண்டனில் எங்கள் வழமையான பதிப்பகத்தில் ஏற்பட்ட மாற்றங்களின் காரணமாக கடந்தவாரம் பேப்பரை வெளியிட முடியவில்லை அதற்காக முதலில் மன்னிப்புக் கோருகிறோம்.

அண்மையில் ரொறொன்ரோவுக்கு வந்திருந்த அணுவிஞ்ஞானியும் இந்தியாவின் முன்னாள் சனாதிபதியுமான அப்துல் கலாம் ஒரு பேப்பரும் கையுமாக நின்றதாக கண்;டவர்கள் சொன்னார்கள். உண்மைதான அந்த பேப்பர் ஒரு பேப்பர்தான் என்றும் சொன்னார்கள். தீவிரமாய் விசாரித்ததில் விசயம் உண்மைதான் எனத் தெரியவந்துள்ளது. அதனாலை ஆனானப்பட்ட சனாதிபதியே படிக்கிற பேப்பரை ஒசியாய் குடுக்கிறதோ எண்டு மல்லாந்து படுத்துக் கொண்டு யோசிக்கிறம்.

எமது சமூகத்தில் நடைபெறும் சில தில்லு முல்லுகளை அடிக்கடி பிரசுரித்து வருகிறோம். இருந்தாலும் விடயம் உண்மையா, தனிப்பட்ட கோப தாபங்களை ஒரு பேப்பரில் எழுதுகிறார்களோ என ஆராய்ந்த பின்னரே பிரசுரத்துக்கு எடுத்துக் கொள்கிறோம். நாங்கள் வெளியிடும் தகவல்களில் தவறிருப்பின் சம்பந்தப்பட்டவர்கள் விளக்கமளிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கியுள்ளோம். ஆனால் அவர்களோ தமது பக்க நியாயத்தை தெரிவிப்பதனை தவிர்த்து, நாங்கள் இல்லாததையும் பொல்லாததையும் எழுதுவதாக முறைப்பாடு செய்கிறார்கள். சிலரோ தாங்கள் கோர்ட்டுக் போகப்போகிறோம் என அறிக்கைவிடாத குறையாக கூறித் திரிகிறார்கள்.  நாங்கள் தொடர்ந்து இவர்களை அம்பலப்படுத்துவோம் என்பதை மட்டும் உங்களுக்கு கூறி வைக்கிறோம்.

ஐரோப்பாவிலும், கனடாவிலும் எமது மக்கள் மத்தியில் புதிது புதிதாக மூடநம்பிக்கைகள் பரவி வருகிறது. அவை மக்களிடையே ஏற்படுத்தும் பாதகங்கள் பற்றிய விபரங்களை எழுதுமாறு உங்களை வேண்டுகிறோம். ஒரு சமூகப்பத்திரிகை என்ற வகையில், சமூக அநீதிகளுக்கு குரல்கொடுக்க வேண்டிய கடமை ஒரு பேப்பருக்கு உள்ளது.

எமக்கு ஆக்கங்களை அனுப்புவோர் எமது மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்ப முடியும் என்பதை நீங்கள் அறிவீர்கள். படங்களை word போன்ற file களில் இணைக்காமல் தனி file ஆக அனுப்பி வையுங்கள். அட்டைப்படத்தில் பிரசுரிக்கக்கூடிய படங்களையும் அனுப்பி வைக்கலாம்.

வர்த்தகர்கள், குறிப்பாக தமிழ் வரத்தகர்கள் தரும் ஆதரவிலும், ஒரு பேப்பர் குழுவின் சளைக்காத உழரப்பிலுமே ஒரு பேப்பர் தடையின்றி வெளிவருகிறது. இதில் நீங்கள் காட்டும் அன்பும், அபிமானமும் குறைத்து மதிப்பிடமுடியாது. என்ன அந்தர் கணக்கில் பனிக்கட்டியை தலையில் வைக்கிறியள் என்ன விசயம் எண்டு நீங்கள் நினைக்கலாம். இலலை உழைப்பாழர் தினம் வருகிறது உங்களையும் நினைக்கிறோம்.


அடுத்த ஒரு பேப்பர் மே 9ல் வெளியிடுவம்.

Comments

ஓசியாகக் கொடுக்கிறதோ?

ஒரு பேப்பரை ஓசியில கொடுக்கிறதோ என்று நீங்கள் மல்லாந்து படுத்து யோசிச்சாலென்ன? குப்புறப் படுத்து யோசிச்சாலென்ன? எனக்கு ஓசியில படிக்குதென்றால்தான் படிக்கவே ஆர்வம் வரும். புரியும்னு நினைக்கிறேன்.

-சோழியான் (இராஜன் முருகவேல்´), யேர்மனி.