கருத்துச் சுதந்திரம் என்பது எதுவரை?

by:
தேவபுத்திரன்

படைப்பாளிகளின் கருத்துச்சுதந்திரத்தில் யாரும் தலையீடு செய்யக்கூடாது என ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. படைப்பாளிகள் மற்றவர்களது மனஉணர்வுகளை பாதிக்குபடி படைப்புக்களை ஆக்கினால் அவற்றினை வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று இன்னொரு வாதமும் முன்வைக்கப்படுகிறது. இவை இரண்டுமே ஒன்றுக்கொன்று முரண்பாடானதாக அமைந்துவிடுகிறபோது, விமர்சகர்கள் அந்தச் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு தமக்கு தோதான ஒன்றை தேர்ந்தெடுக்கிறார்கள்.

திரைப்படம், சிறுகதை, நாவல்;, கவிதை, கட்டுரை, கருத்துப்படம் என படைப்பாளிகளின் படைப்புக்கள் பலவும் இப்படியான விமர்சனங்களுக்கும் தீவிரமான எதிர்ப்பிற்கும் உள்ளாகின்றன. பொதுவாக படைப்புகள், அரசியல் அல்லது மதம் சார்ந்ததாக ஏன் குறித்த சமூகங்களைக் குறித்ததாக வெளிவரும்போது எதிர்ப்புக்கள் எழுகின்றது. அவை வெறும் விமர்சனங்களைக்கடந்து வன்முறையாக வெடித்து உயிர்களையும் உடமைகளையும் காவும் கொள்ளும் அளவிற்கு சென்று விடுகின்றன.

இதில் அண்மையில் நடந்த சம்பவம் ஒன்றைப் பார்ப்போம். துசார பீரிஸ் என்ற சிங்களவர்,  “பிரபாகரன்” என்ற பெயரில் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை தொடர்புபடுத்தி சிங்களத் திரைப்படம் ஒன்றை தயாரித்துள்ளார். அந்தபடத்திற்கு மேலதிக பிரதிகளை தயாரிப்பதற்காகவும் அதனை தமிழில் மொழி மாற்றம் செய்வதற்காகவும், அவர் சென்னையில் தங்கியிருந்த போது, விடயமறிந்த தமிழ் உணர்வாளர்களின் எதிர்ப்பிற்கு முகம் கொடுக்கவேண்டியதாயிற்று. அவர் தாக்கப்பட்டார். “இரண்டு தட்டு தட்டியிருக்கிறாங்க” என குமுதம் சஞ்சிகையில் குறிபிடப்பட்டிருந்தது. அந்த தட்டின் உக்கிரம் அவ்வளவாக இருக்கவில்லை என அவர் தாக்கப்பட்ட பின்னர் எடுக்கப்பட்ட படங்களிலிருந்து தெரிகிறது.

இந்தச்சம்பவத்தையொட்டிய பல்வேறு விமர்சனங்களை இணையதளங்களில் பலர் எழுதியிருக்கிறார்கள். இன்னும் எழுதுவார்கள். இந்த விமர்சனங்கள் அவரவர் அரசியல் நிலைப்பாட்டினைப் பொறுத்து வேறுபட்டிருந்ததில் ஆச்சரியமொன்றுமில்லை. “இந்த அடிக்குப்பிறகு இவங்கள் தமிழ்நாட்டு பக்கம் தலை வைச்சு படுக்க மாட்டாங்கள்” என்று சிலர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்ய, இன்னும் சிலர் இது கருத்துச் சுதந்திரத்திற்கு விழுந்த அடியென ஒலமிடுகின்றனர். இரண்டாவது வகையிலான இருவரின் கட்டுரைகளை படிக்க நேர்ந்ததால் இதை எழுதுகிறேன். ஒருவர் கனடாவிலிருக்கும் ரதன் என்பவர் மற்றவர் லண்டனிலிருக்கும் ஜமுனா இராஜேந்திரன்.

துசாரா பீரிசின் திரைப்படம் இன உணர்வுகளைத் தூண்டி இலாபம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட படமென அப்பட்டமாகத் தெரிகிறது. சிறிலங்கா அரசின் பலத்த ஆதரவுடன் படமாக்கபப்ட்டிருக்கிறது. இப்படத்தை பார்க்க மகிந்த இராஜபகச ஆவலோடு இருக்கிறாராம் என்பது ஒரு கொசுறுச் செய்தி. பிரச்சாரவகையில் அமைந்துள்ள இந்த திரைப்படத்தில்  தமிழர்களை மனம் நோகச் செய்யும் வகையில் புனைந்த சம்பவங்கள் படமாக்கப்ட்டுள்ளதாக படத்தினைப் பார்த்த தமிழ்நாட்டு கலைஞர்கள் சிலர் தெரிவித்திருக்கிறார்கள். அந்தவகையில் துசாராவின் படைப்பிற்கு எதிராக அவர்கள் கிளர்ந்தெழுந்தது இயற்கையே.

ஆனால் அவர்களது உணர்வுகளை போலியானது என நிராகரிக்;கிறார் ரதன். மக்களின் உணர்வுகளுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்க வேண்டாம். அவர்கள் கிடக்கிறார்கள். படைப்பாளியின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வரிந்து கட்டிக் கொண்டிருக்கிறார்கள் இந்த இருவரும்.

மேற்படி இருவரிடமிருந்தும்  இப்படியான கட்டுரைகள் வந்திருப்பதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? மெல்லிற வாய்க்கு அவல் விழுந்த மாதிரி தமிழ் தேசியவாதிகளை திட்டித் தீர்க்க இன்னொரு சந்தர்ப்பம் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. விட்டு வைப்பார்களா? “இலக்கிய சந்திப்புகளில்” குஸ்புவுக்கு ஆதரவாக தீர்மானம் போட்டுவிட்டு, நாக்கை தொங்கப் போட்டுக் காத்திருந்தவர்களுக்கு தீனி கிடைத்திருக்கிறது. கருத்துச் சுதந்திரக் கொடியை தூக்கிபிடித்திருக்கிறார்கள்.

இதில் ரதன் கொஞ்சம் அதிகமாகப் போய் துசாரவுக்கு ரசிகர்மன்றம் வைக்காத குறையாக அவரைப்பற்றி புழகித் தள்ளியிருக்கிறார். துசாரா இத்தாலியில் பயிற்றப்பட்ட இயக்குனர். ஆவர் கரும்புலி ஒருவரை நேரே சந்தித்து அந்த அனுபவத்தில் கதை படைத்திருக்கிறார். என துசாரவின் (சிறிலங்கா) சண்டே ரைம்ஸ் பேட்டியை தேவ வாக்காக எடுத்து அவரை புகழந்திருக்கிறார்;. அத்தனை பெரிய கலைஞரை தமிழ் உணர்வாளர்கள் போலி உணர்வால் தாக்கி விட்டார்களாம். இருக்காதா பின்னை ரதனுக்கு கவலை. “ஆனால் ஒரு காலத்தில் சிங்கள தொலைக்காட்சி தொடர்களை தயாரித்து வந்த துசாரா மற்றவர்கள் இயக்கிய தொடர்களுக்கு பணம் கொடுத்து இயக்குனராக தனது பெயரைபோட்டு இன்பம் கண்டவர்.” “பலரது பணத்தை சூறையாடிவிட்டு இத்தாலிக்கு சென்ற இவர் இத்தாலிய மொழியில் பரீட்சயமில்லாமல் என்னத்தை அங்கு படித்துக் கிழித்தார்” என கொழும்பில் உள்ள சில சிங்கள கலைஞர்கள் கேள்வியெழுப்பியதாக இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


துசாராவின் திரைப்படம் தமிழர்களது போராட்டத்தை கொச்சைப்படுத்துகிறதோ இல்லையோ, அவர் ஒரு படைப்பாளி எனற வகையில் அவரது கருத்;தை தமிழ் மக்கள் மீது வைப்பதற்கு அவருக்கு முழுமையான சுதந்திரம் உண்டு என ரதன் வாதிடுகிறார்;. அவரது வாதத்தின்படி,  குடியேற்றவாசிகளை அவமதிக்கும் வகையில், நிறவெறியர்களின் கருத்தை முன்னிலைப்படுத்தி, கனேடிய வெள்ளை இனத்தவர் ஒருவர் ஒரு படத்தை எடுத்தால், அப்போதும் ரதன் இப்படித்தான் கருத்து எழுதுவாரோ? அதுபோல் பிரித்தானியாவில் பீ.என்.பி இப்படி ஒரு படமெடுத்தால் அவர்களின் எலும்பை முறிப்பதற்கு இங்கே ஆங்கிலேயர்களில் மட்டும் கணிசமானளவு ஆட்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அப்போது பி;என்பி இயக்குனருக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருப்பாரா ஜமுனா ராஜேந்திரன்? அல்லது தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தமிழ் உணர்வாளர்கள் என்பதால் ஏற்பட்ட சீற்றமா இந்த விமர்சனங்கள்?

சரி நடக்காத விடயங்களை விட்டுவிடுவோம். அண்மையில் வெளிவந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய முகம்மது பற்றிய டென்மார்க் காட்டுன்கள் பற்றி இவர்கள் ஏதும் எழுதினார்களா? ஒருவர் அந்த காட்டுன்களின் அழகையும் மற்றவர் கீறியவரின் கருத்துச்சுதந்திரத்தையும் வியந்து கொண்டிருந்தாரா? இல்லையே?

அப்போ “பிரபாகரன்” படவிவகாரத்தில் என்ன அதீத அக்கறை? சிங்கள அரசும் அதன் அடிவருடிகளும் தம் கற்பனைக் கதைகளிலும், கனவுகளிலும் தினம் தினம் கொன்றும், காயப்படுத்திக் கொண்டும் இருக்கும் ஒரு தலைவனை அவமதிப்பு செய்வதில் இவர்கள் அகமகிழ்ந்து கொண்டிருக்கலாம். அதுதவிர இவர்கள் இருவரும் கருத்துச்சுதந்திரம் பற்றி எழுதுவதெல்லாம் எனக்கு போலியாகவே தெரிகிறது.