எழுபத்தைந்தாவது வயதில் என் பேராசான் - கா. சிவத்தம்பி

நினைக்க இனிக்கின்ற ஒருவர் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி. உணர்வு தொட்டு அவர் உரையாடல் இருக்கும். உறவின் சகல பரிமா
ணங்களும் அவர் பேச்சில் தொனிக்கும். அவர் என்னை மைந்தனாகப் பார்த்தாரா, மாணவனாகப் பார்த்தாரா எனக்கு எதிலும் தெளிவு இல்லை.

ஓம் அவரிடம் நான் மாணவனாக இருந்தேன். அது ஒரு சில ஆண்டு. ஆயினும் இற்றைவரை  அவர் மைந்தனாக வாழ்கிறேன். அவர் மூன்று மகள்களும் `அண்ணா' என்று கூப்பிடுகின்ற உறவில் திளைத்து நான் அவர் மைந்தனாக வாழ்கிறேன். தமிழை சிறப்புப்பாடமாக யாழ் பல்கலைக்கழகத்தில் நான்கு வருடம் அவரிடம் கற்றுத் தேறினேன். முதுகலைமானிக்கு நாடகமும் அரங்கியலையும் அவரிடம் கற்றேன்.

இவ்வாறு நான் சொல்வது ஒன்றும் அவருக்குப் பெருமையாகாது. எனக்குத் தான் பெருமை. அந்தப் பெருமை சொல்லியே இதனை நான் எழுதுகிறேன். தமிழில் துறை போகக் கற்றுணர்ந்த தமிழறிஞர் என்று நாம் பத்துப்பேரை குறிப்பிட முடியுமா? அதில் ஒருவர் பேராசிரியர் சிவத்தம்பி.

ஈழத்தமிழரின் தமிழறிவு ஆற்றலை கடல் கடந்து தமிழ் நாட்டுக்
கும் கொண்டு போன அறுவரில் பேரா சிவத்தம்பி ஒருவர். மற்றைய
ஐவர் யார் என ஒரு கேள்வி தோன்றுமானால் சொல்கிறேன்.

ஆறுமுகநாவலர்    சி. வை. தாமோதரம்பிள்ளை
ஆனந்தக்குமாரசாமி        விபுலானந்த அடிகளார்
பேரா. க. கைலாசபதி

இறுதியாகச் சொன்ன கைலாசபதியையும் சிவத்தம்பியையும் இரட்டையர் என்றனர். இரட்டைக்குழல் துப்பாக்கிகள் என்பேன் நான். இலக்கியம், இலக்கணம், படைப்புக்கள், நவீனம் உள்ளிட்ட தமிழ்
மொழிப்பரப்பில், தம் புதிய பார்வையில் பரவ விட்டார்கள் இவர்கள். மார்க்சீயமும், சோசலிச யதார்த்த வாதமும், நவீன விமர்சன அணுகு
முறையும், விஞ்ஞான பூர்வமான ஆராய்ச்சிக் கண்ணும் இவர்களுக்கு வாய்த்தன. புதியன சிந்திப்போராய் இவர்கள் இருந்தனர்.

1982 நவம்பரில் பேரா. கைலாசபதி `காலம்` ஆகிப்போக, நெஞ்சு கைத்த துயருடன் ஒற்றைக்குழல் துப்பாக்கியாக இவர் மாத்திரம் இருந்தார். அதன் பின் இவர் பார்வை வீச்சு இன்னும் மிகப்பரந்தது. ஈழத் தமிழரின் தேசிய விடுதலைப்போராட்டம், உச்சம் அடைய, உன்னதம் பெற, மார்க்சியத்துனூடு தேசியத்தை பார்க்கும் இவர் பார்வை இன்னும் விசாலித்தது. மிகச் சரியான இடத்தில் அவர்
நிற்கிறார் என்பது மெத்த மகிழ்ச்சி தந்த ஒன்று.

இங்கிலாந்து பேர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் ( Phd) பட்டத்திற்காக, மார்க்சீய அறிஞர் ஜோர்ஜ் தோம்சன்  அவர்களிடம் `பழங்கால தமிழ்ச் சமூகத்தில் நாடகம்' ( Drama in Ancient Tamil)  என்னும் ஆய்வினை மேற்கொண்டிருந்தார்.

அப்போது நினைத்திருப்பாரா? இங்கிலாந்தின் இலண்டன் மாநகரத்திலிருந்து ஒரு பேப்பர், என்றொரு பத்திரிகை வரும். அது தனது 75வது வயதுப் பூர்த்திக்கு வாழ்த்துச் சொல்லும். இவ்வாறெல்லாம் நினைத்திருப்பாரா?
காலத்தைப் பாருங்கள் தன் கடமையைச் செவ்வனே நிறைவேற்றுகிறது. தலை சாய்த்து, கை குவித்து, சேர் உங்களை நான் வாழ்த்துகிறேன்.
                                          - அ.இரவி