ஏப்பிரல் 4 , வெள்ளிக்கிழமை

வணக்கம்!

“ஒரு விழா” அதான் உங்கடை திருவிழா பற்றின அறிவித்தலோடை உங்களை சந்திக்கிறம். செப்ரெம்பர் மாதம் நடத்துவம். இன்னமும் வடிவா முடிவெடுக்கேல்லை அதாலை உங்கடை ஐடியாக்களை தொடர்ந்து எங்களுக்கு தெரிவிக்கலாம். முக்கிய குறிப்பு ஒண்டையும் சொல்லோணும் நாங்கள் ஒருதருக்கும் பொன்னாடை போர்க்கிறதாய் இல்லை. ஆனால் நீங்கள் விழாவுக்கு வரும்போது பொன்னாடையை போர்த்திக் கொண்டு வந்தீங்கள் எண்டால் அதை கழட்டச் சொல்லி கேட்க மாட்டம்.

கே.எஸ்.பாலச்சந்திரனின் “கடந்தது நடந்தது” தொடர் அடுத்த பேப்பரிலை இருந்து தொடர்ந்து வரும். அவர் நியாயமான விசயங்கள் வைத்திருக்கிறார் என்கிறபடியால் அவர் எழுதிறது உங்களை சிரிக்க வைக்கும் ஏன் சிந்திக்கவும் வைக்கும் எனவும் எதிர்பார்க்கிறோம். அதுபோல் உங்கள் வாழ்விலும் சில முசுப்பாத்தியான சங்கதியள் நடந்திருக்கும் அவற்றினை எழுதி எங்களுக்கு அனுப்புங்கோ. பிரசுரிப்பம். புலம் பெயர்வாழ்வின் நெருக்குவாரங்களிலும் .. சீரியல்களின் கொடுரம் தாங்கமுடியமாலும் சிரிப்பை மறந்து போனவர்களை சிரிக்கப்பண்ணினால் அதுவும் ஒரு புண்ணியமாயிருக்கும்.

நிகழ்ச்சியளை நடாத்திற ஆக்கள் எங்களுக்கு கொஞ்சம் முன்கூட்டியே சொன்னால்தான் எங்களாலை வரமுடியும். கடைசி நேரத்திலை சொன்னால் சில நேரம் வரமுடியாது போயிடும். பிறகு நீஙகள் ஏன் வரேல்லை நடத்தின ஆக்களோடை பிரச்சினையோ எண்டு கேக்கிறது எங்களுக்கு நியாயமாய் படேல்லை.

இங்க கனபேர் தங்களுக்கு ஒரு பேப்பர் கிடைக்கிறேயில்லை எண்டு இப்பவும் முறைப்பாடு செய்தபடிதான் இருக்கினம். ஆனால் கிளிநொச்சியிலை இருக்கிற ஆட்கள் பேப்பரை படிச்சிட்டு விடயதானங்கள் பற்றிய தங்கட விமர்சனத்தையும் (ஆக்கபூர்வமானதுதான்) உடனை வைக்கினம். அவையளுக்கு எங்கடை நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிக்கிறம். இங்கை என்ன நடக்குது எண்டுதான் எங்களுக்கு விளங்கேல்லை. கடையளிலை பேப்பரை வைச்சிட்டு வந்தால் கொஞ்ச நேரத்திலையே பேப்பர் முடிஞ்சிடுது எண்டு கேள்விப்படுறம். ஆளுக்கு ஒண்டாய் எடுத்துக்கொண்டு போறியள் எண்டு நம்பிறம்.

பேப்பர் கிடைக்காதவை, எமது இணையதளத்தில் PDF வடிவில் பார்வையிடலாம் என்பதனை நினைவுபடுத்திக் கொள்ளிறோம்.

சேயோன் அண்ணை விடுமுறையிலை இருக்கிறார் அதாலை சற்று மாறுதலுக்காக இந்த முறையும் வரேல்லை. அவரிட்டை கடிபடுகிறவை கொஞ்சம் ஆறதலாய் இருக்கலாம். விடுமுறையாலை வந்து என்னென்ன மாறுதலை செய்யப்போறாரோ தெரியேல்லை.

மீண்டும் சந்திப்போம்!