சுஜாதா என்கிற ஆளுமை

by:
பொ. கருணாகரமூர்த்தி

முன்பெல்லாம் சுஜாதாவை  நினைத்தால் உடம்பெல்லாம் ஒருவகைப் பரவசமும் உற்சாகமும்  தொற்றிக்கொள்ளும். 27.02.2008 க்குப்
பிறகெல்லாம் ஒரு அத்யந்த நண்பனை, உறவை இழந்ததுபோல துக்கமே நெஞ்சை வந்து அடைக்கிறது.  ஒரு இலக்கியர் 'மறைந்தது எஸ்.ரங்கராஜன்தான் சுஜாதா அல்ல' என்று எழுதியதை திரும்ப திரும்ப வாசிக்கையிலும், ஆரோக்கியம் முற்றாக குலைந்து அவர் ஸ்தூலதேகம் ஓய்வெடுக்க முனைகையில் அதுதரவல்ல தொந்தரவுகளை உபத்திரவங்களையும்   தாங்கிக்கொண்டும் அவர்  பிழைத்திருக்கவேண்டும் என ஆசைப்படுவது எவ்வளவு விபரீதமானஆசை என்பதை யோசித்துப்பார்க்கையிலும் மனசு கொஞ்சம்போல சமாதானமாகிறது.  மஹராஜபுரம் சந்தானம், சுந்தரராமசாமி என்று நான் நேரில் சந்திக்க ஆசைமிகப்பட்டு அவை ஒருபோதும் கைகூடாமல்போன சந்தர்ப்பங்கள் பலவுண்டெயெனினும் சுஜாதாவும் அதை நிராசையாக்குவாரென்று துளிகூட எதிர்பார்க்கவில்லை.

சுஜாதா என்கிற  பல்துறை ஆர்வலனை ஆளுமையை எப்போது தெரிந்துகொண்டேன் என்பதை உறுதியாகச் சொல்வது கஷ்டம். ஆனாலும் அது ஆனந்தவிகடன் அல்லது குமுதம் மூலமாகத்தான் நேர்ந்திருக்கும். சமகாலத்தில் தமிழில் மாத்திரமல்ல உலகஅரங்கில் நடைபெறும் அனைத்து இலக்கிய - விஞ்ஞான மாற்றங்களையும் அவர் அறிந்திருந்தார். அவரளவுக்கு பெரும்வாசகர்களைக்கொண்டிருந்த தமிழ் எழுத்தாளர்கள் எவருமில்லை என்பதுவும் நிதர்சனங்கள். சுஜாதாவின் படைப்புக்களின் தனித்துவம் அழகு என்பதெல்லாம் அவரது மொழி நடைதான்.  சிறிய சிறிய வசனங்களில் மிகச் சிக்கனமான வார்த்தைகள்தான் அவர் பலம். மற்றது கதையின் நிகழ்வுகளை காட்சிரூபத்தில் உருவமைத்து விரைந்து நகர்த்திச்செல்லுதல். ' ரங்கு கடையா அது ஆறுக்கு ஒன்பதில் ஒரு சதுரம்  ஐந்தாறு போத்தல்களில் ஒன்றுக்குள் கொஞ்சம் ஸ்லேட் பென்சில்களும், மற்றையவற்றுக்குள் மிட்டாய், கமெர்கெட் வித்தியாசமான நிறங்களில் இருக்கும். பின் பக்கமாக தூங்கும் சாக்குத்திரையின்  பின்னால் நாங்கள் சிகரெட் பிடிக்க அங்கு அடிக்கடி கூடுவோம் என்று எளிமைப்பட எழுதியிருப்பார் சுஜாதா, ஆனால் அதற்குள் சகல விபரிப்புகளும்  அடங்கியேயிருக்கும்.

எழுத்தில் கிளாமர் இருக்கும், விரசமோ வக்கிரமோ இருக்காது.
சுஜாதா நான்பிறக்க முன்பே 1953ல் தனது முதற்கதையை சிவாஜி என்கிற இதழில் எழுதிவிட்டிருந்தார். அதன்பிறகு  'இடது கண் ஓரத்தில்' என்கிற அவரது இரண்டாவது கதை குமுதத்தில் வெளியாவதற்கு ஒன்பது வருடங்கள் பிடிக்கின்றன. இந்த இடைக்காலத்திலான அவரது இலக்கிய முயற்சிகளை அவர் எவ்விடத்திலும் பதிவு செய்யவில்லை.  'முதற்கதையை அச்சில் பார்த்த அன்று தான் அடைந்த பரவசத்தை வாழ்வில் பின்னொரு நாளும் அடைந்ததில்லை' என்கிறார் ஓரிடத்தில். கவனயீனத்தால் அப்பிரதியை எங்கோ தொலைத்துவிட்டதாகவும் வாசக அன்பர்கள் எவராவது அதனைத் தனக்கு அனுப்பிவைக்க முடிந்தால் தன் ராஜ்ஜியத்தில் பாதியைத்தருவதாகவும் பின்னர் எழுதினார்.

நான் கல்லூரி மாணவனாக இருந்த காலத்தில்தான் குமுதத்தில் அவரது நைலோன் கயிறு அனிதா, இளம் மனைவி போன்ற நாவல்கள் வெளிவந்தன.  நாவல்களுள் தினமணிக்கதிரில் 1972 ம் ஆண்டு அவர் தொடராக எழுதிய காயத்திரி என்கிற நாவல்தான் முதலில்  படமாக்கப்பட்டது. இதில் கதாநயகன் ரஜனிகாந்த். இதில் உலகமறியாத ஒரு பேதைப்பெண்ணாக சிறிதேவி நடித்திருந்தார். படம் தயாரானபின் அதை வெளியிடுவதில் தணிக்கைக்குழுவின் ஏகப்பட்ட கெடுபிடிகளுக்கு ஆளாகியதில் பல இடங்களில் கத்தரிவைக்க நேர்ந்ததாக அறியமுடிகிறது. பின்னாளில் கனவுத்தொழிற்சாலை நாவலில் தணிக்கைக்குழுவினர் செய்யும் கெடுபிகள் பலவற்றை அங்கதம் சேர எழுதியிருப்பார்.

" நிறுத்து.............நிறுத்து  அங்ஙின கொஞ்சம் றீவைண்ட் பண்ணுப்பா. தாவணி பறக்க ஓடியாறாளே........ கொஞ்சம் மாரு தெரியறாப்பல, சரியா பாருங்கப்பா. "
"இல்லைங்க மெடம் அப்படி ஒண்ணுந்தெரியல எல்லாம் சரியாத்தான் இருக்கு?"
" இருந்தாலும் அவ மாரு கொஞ்சம் அதிகமாத்தான் குலுங்குது..........பார்க்கிறவாளை எக்ஸைட் பண்ணாது?"
" சரி அதைத்தூக்கிடவா?"
தூக்கினாத்தான் அந்த மாமிக்கு திருப்தி, இரவு தூக்கம் வரும். இப்படியாகப்போகும்.

பின்னாளில் விகடனில் ப்ரியாவை (குறுநாவல்) நான் வாசித்தேன். இதுவும் படமாக்கப்பட்டது. இதிலும் ரஜனிதான் கதநாயகன். சுஜாதா இலண்டனில் நடப்பதுபோன்று அதன் கதையை அமைத்திருந்தார். ஆனால் அதைப் படமாகச்செய்தபோதோ தயாரிப்பின் வசதிகருதி கதையின் பகைப்புலத்தை மலேஷியாவாக மாற்றியிருந்தனர். நிகழ்வுகள் எதனுடனும் ஒட்டமுடியாமலும்  செயற்கைத்தனங்கள் நிறைந்ததாகவும் மாறிவிட்டிருந்தது பிரதி. பொதுவாக எந்த நாவலாசிரியரின் நாவல்தான் படமாக்கப்பட்டாலும் அந்நாவலாசிரியர் அப்படமானது சரியாக என் பிரதியைப்போன்றே அச்சொட்டாக எடுக்கப்பட்டிருந்தது என்று ஒத்துக்கொள்ளுவதில்லை. ஒத்துக்கொள்ளவும் முடியாதுதான். " ஏய்...... பாடலொன்று" என்கிற காபி ராகத்திலமைந்த புகழடைந்த பாடல் அப்படத்தில் வருவதுதான்.
அதன் பின்னான 'ரோஜா' தொடங்கி அவரது திரைப்பட ஈடுபாடுகளையும் பங்களிப்புகளையும் வாசகர்கள் அறிவார்கள். 
இன்னும் உங்களுக்கு  ஆச்சர்யம் தரக்கூடிய ஒரு தகவல் சுஜாதா 70களின் நடுவில் வெளிவந்த 'மயங்குகிறாள் ஒரு மாது' என்கிற படத்தில் ஹொட்டல் ஒன்றில் வைத்து பொருட்பெண் ஒருவரைப் பேட்டிகாணச்செல்லும் ஒரு பத்திரிகையாளராக சிறிய பாகமேற்று   நடித்துமிருக்கிறார் என்பது.
 
'ஏறக்குறைய சொர்க்கம்' என்பது ஒரு விடலைப்பையனுக்கு ஒரு மணமான பெண்ணின்மேல் பிறக்கும் அதீதமான ஆகர்ஷிப்பும் அதுதரும் அவஸ்தைகளைப் பற்றியும் விபரிக்கும் ஒரு குறுநாவல். அதன் முன்னுரையில் அவரே சொல்கிறார்: 'எந்தக்கதையும் முடிவதில்லை. ஏதோ ஒரு காலகட்டத்தில் தொடங்கி ஏதோ ஒரு காலகட்டத்தில் நிறுத்துகிறோம், அவ்வளவே. அறுதியிட்டு இதுதான் கதை இனிமேல் கிடையாது என்று சொல்லிவிட்டால் புதுமைப்பித்தனின் 'சாபவிமோசனம்' போன்ற கதைகள் எமக்குக் கிடைத்திருக்குமா?'
உலகத்தின் எல்லாப்படைப்புகளினுள்ளும் ஏதோ ஒன்றின் தொடர்ச்சி இருப்பதை உணர்ந்து உணர்த்தியவர்.
அவரது புனைகதை உலகத்தில் ஏறத்தாழ 250 சிறுகதைகள் எழுதியதாகச் சொல்லப்படுகிறது. அவற்றுள் சிறந்தவற்றை இச்சிறு கட்டுரையில் பட்டியலிடுவதென்பது கடினம். யாழ்நூலகம் எரியூட்டப்பட்டபின்னால் அவர் மனம் நொந்து எழுதிய 'ஒரு லட்சம் புத்தகங்கள்' என்கிறகதை நிஜத்திலும் ஒரு லட்ஷம் பெறும்.

சிறுகதையைவிட  கட்டுரை எழுதுவதுதான் அவருக்கு பிடித்தமானதாக இருந்திருக்கிறது. ஏனெனில் "அதில்தான் உண்மையை விபரிப்புகள், சோடனைகள், கற்பனைகள், தாளிதங்கள் இல்லாது நேரடியாகச் சொல்லிவிடலாம். ஆனால் மக்கள் கட்டுரைகளைவிட கதைகளை மோகிப்பது நடைமுறைச்சோகமே" என அண்மையில் ஒரு பேட்டி ஒன்றில் சொல்லி இருக்கிறார். கட்டுரைகள் வரிசையில் அப்பா அன்புள்ள அப்பாவை, ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம், ஆழ்வார்கள் ஒரு எளிய அறிமுகம், கடவுள் இருக்கிறாரா? என்பன சிறந்தவை. அவரது  நாவல்கள் எவையுமே 150 பக்கங்களுக்கு மேற்பட்டனவாக இருப்பதில்லை. அவைகளுள் எப்போதும் பெண், கரையெல்லாம் செண்பகப்பூ, பெண் இயந்திரம், ப்ரியா, ஆதலினால் காதல் செய்வீர், ஏறக்குறைய சொர்க்கம், மூன்று நிமிஷா கணேஷ், கனவுத்தொழிற்சாலை என்பன மறக்கமுடியாதவை.
                
கணையாழி 1965 டில்லியிலிருந்து வெளிவந்த காலத்திருந்தே அதன் பின்புற உள் அட்டையில் அவர் உலகின் பல்வேறு விஷயங்கள் பற்றி தொடர்ந்து எழுதிவந்த 'சுஜாதாவின் கடைசிப்பக்கம்' கட்டுரைகளும், ஆனந்தவிகடனில் அண்மைக்காலம்வரை எழுதிவந்த 'கற்றதும் பெற்றதும்' கட்டுரைத்தொடரும் பிரசித்தமானவை.

தமிழில் எழுதியவர்களுள் சுந்தர ராமசாமியையும், தி.ஜானகிராமனையும், நீலபத்மனாபனையும், கி.ராஜநாராயணனையும், கலாப்ரியவையும் அவருக்கு மிகவும் பிடிக்கும். நிஜத்தில் சுந்தரராமசாமி யாரென்று தெரியாமலே அவர் மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த தகழி சிவசங்கரப்பிள்ளையின் செம்மீனை முதலில் வாசித்திருந்தேன். சுஜாதா அறிமுகம் செய்தபின்னாலேயே எனக்கு அவரது காலச்சுவடு பத்திரிகையும், கஸ்தூரிரங்கனின் கணையாழியும் தெரிய வந்தன. அதுபோலவே  அவருடைய நவீன விஞ்ஞான அறிவும் அறிவியல் சார்ந்த புனைவுகளும் பிரசித்தமானவை. மீண்டும் ஜினோ என்கிற சிந்திக்கத்தெரிந்த   ரொபோட் என்கிற கற்பனை நாயை உருவாக்கி அது பல அற்புதங்களைப் புரிவதாகப் பண்ணியுள்ளார்.  ஆரம்பத்தில் கணனி பரவலாக அறிமுகமாகாத காலத்தில் அதுபற்றிய  பாலபாடங்களைக் கட்டுரைகளாக வடித்துத்தந்தவர். இன்று இந்தியாவில் பெருந்தொகையாகப் பயன்படுத்தப்படும் இலத்திரனியல் வாக்குப்பதியும் இயந்திரத்தை வடிவமைத்தகுழுவின் தலைமை விஞ்ஞானி.

ஒரு எழுத்தாளனின் அக்கறைகள் எந்த அளவுக்கு பரந்த தளத்தில் இருக்கவேண்டுமென்பதற்கு சுஜாதா ஒரு இனிய உதாரணம். அவரது கவிதை சம்பந்தமான ஈடுபாடு சங்க இலக்கியங்களில் தொடங்கி மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், நாட்டார்பாடல்கள், ஹைக்கூ என விரிந்து சென்றன. ஹைக்கூ கவிதைகள் பற்றி விஸ்தாரமாகக்கூறும் 'ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம்' எனும் நூலைத் தமிழ் இலக்கியத்துக்குத் தந்திருக்கிறார். வைணவ இலக்கியங்களின் மீது குறிப்பாக பத்து ஆழ்வார்களும் கூடிச்செய்த நாலாயிரத்திவ்யபிரபந்தத்தின்மேல் பெரும் மோகமும் ஆழ்ந்த அறிவும் கொண்டிருந்த சுஜாதா 'அறிவியலும்  ஆன்மீகமும் ஒரு புள்ளியில் பொருந்துவன' என்கிற நம்பிக்கை கொண்டிருந்தார். அவரது 'கடவுள் இருக்கிறாரா?' என்கிற நூலில் பிரபஞ்ச இரகசியங்கள் பலவற்றை விரித்துரைக்கவும் முற்படுகிறார்.  இன்னும்  வைஷ்ணவத்தலங்கள் பலவற்றையும் அவ்வப்போது விரும்பிப்போய் சேவித்தும் இருக்கிறார்.
சுஜாதா என்றும் கவிதைகளில் கரைபவர். மு.மேத்தா அவ்வளவு அறியப்படாதவராக இருந்தகாலத்தில் தனது படைப்புக்களிடையே அவரது கவிதைகளைச் சேர்த்து மேற்கோள் காட்டி எழுதி மேத்தாவின் கவிதைகளை வாசகர்களால் கவனிக்கப்பட வைத்தார். மனுஷ்யபுத்திரன், நா. முத்துக்குமார்கூட அவரால் கண்டுபிடிக்கப்பட்டு கைதூக்கிவிடப்பட்டவர்களே.

ஈழத்துக்கவிஞர்களுள் மஹாகவியையும், சேரனையும், வ.ஐ.ச.ஜெயபாலனையும் அவருக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக ஜெயபாலனது 'சூரியனோடுபேசுதல்' கவிதைத்தொகுதியை விதந்து குங்குமத்தில்  எழுதியுள்ளார். 'கொஞ்சம் விஸ்க்கி வைத்துக்கொண்டு ஜன்னலண்டை உட்கார்ந்து இயற்கை வெளிச்சத்தில் கவிதை படிப்பது இன்பம்' என்று ஒருமுறை சொன்னார். மகாகவி பாரதியாரை அவர் வியந்தது ஆச்சர்யமில்லைத்தான். ஆனால் பாரதி படத்தின் கூட்டுத்தயாரிப்பாளர்களில் அவரும் ஒருவர் என்பதுவும் பின்னாளில்தான் இணையத்தளம் ஒன்றிலிருந்துதான் அறியநேர்ந்தது.

என்னதான் நாலாயிரதிவ்யபிரபந்தத்திலும் சங்க இலக்கியத்திலும் குறளிலும் பரிபாடலிலும் ஆழனுபவமும், காதலும் மோகமும் இருந்தாலும் தன் படைப்புக்களில் இடத்துக்குத் தகுந்தமாதிரி ஆங்கில வசனங்களை அள்ளிவிடவும் அவர் தயங்கியதில்லை. ஆனால் அவற்றையும் தமிழில்தான் எழுதுவார், ஆங்கில வரிவடிவத்தைப் பாவிப்பதில்லை. சுஜாதாவின் எழுத்தைப்பற்றி இரண்டு முக்கியமான விமரிசனங்கள் இருந்தன, இருக்கின்றன. ஒன்று அவருக்கு இரண்டு முகங்கள் இருந்தன என்பது.  அதாவது சிற்றிலக்கியப் பத்திரிகைகளில் ஒருவிதமாகவும், ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் வேறொரு விதமாகவும் எழுதுவது. மற்றது அவரது எழுத்துக்கள் சமூகப்பிரக்ஞையும் ஆழமும் குறைந்தன என்பது. அவரது  பரந்த எழுத்துப்பரப்பு முழுவதையும் நுணுகிப்பார்த்தால் எப்போதும் அவர் எழுத்தின் அடிநாதமாக  ஊடுபாவாக மானுஷநேயமும் அன்பும் இருந்தன என்பதில் சந்தேகமில்லை. சங்கஇலக்கியங்களோ, எம்காவியங்களோ அல்லது உலகத்தின் ஏனைய பரப்புக்களில் விளைந்த ஏனைய பெரிய இலக்கியங்கள் எதைச்செய்ய விழைந்தனவோ எதன் திசையில் இருந்தனவோ அதே திசையில்தான் சுஜாதாவும் பயணித்தார் என்பதில் சந்தேகமில்லை. அவர் எழுதிய அனைவற்றுக்கும் தமிழுலகம் என்றைக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டது.

                  தமிழ் இலக்கிய உலகம் சுத்தமானது அல்ல, அது ஊழல்களும் காழ்ப்புகளும் நிறைந்த சாக்கடை. சாகித்திய அகெடமியோ, ஞானபீட கொமிட்டியோ , அல்லது இதர இலக்கிய அமைப்புக்களோ தன் பரிசுகளுக்கு தகுதிவாய்ந்தவராக இதுவரையில் சுஜாதாவைச் சிந்தித்ததே கிடையாது. ஆனால் அவரோ பரிசுகளையும் பகட்டுக்களையும் ஏறெடுத்தும் பாராத ஓயாத படைப்பாளியாகவே இறுதிவரை வாழ்ந்தார். அவருடைய வெளியீட்டாளரும் நண்பருமான கவிஞர் மனுஷ்யபுத்திரன் சொல்லுகிறார்:
"அவருடைய புத்தகங்களின் வெளியீட்டுவிழாக்களுக்குகூட அவரை மிக வற்புறுத்தியே அழைத்து வருவேன். அந்த அளவுக்கு அவருக்கு புகழுரைகளையும், வெளிச்சங்களையும் கண்டு அவர் கூச்சப்பட்டார். எந்த அளவுக்கு பிரபலமாக இருந்தாரோ அந்த அளவுக்கு தனிமையுணர்ச்சிகொண்டவராகவும் விலகியிருப்பவராகவுமே வாழ்ந்தார். படைப்பு சார்ந்த தனிமையை ஆரவாரங்கள் தீண்டலாகாது என்பதில் கவனமாக இருந்தார்."

சுஜாதாவே மொழிபெயர்த்துச் சொன்ன ஜப்பானிய ஹைக்கூ கவிதை ஒன்று பொருத்தம் கருதி இவ்விடத்தில்:-

அழகிய நெல்வயலின் பெண்ணே
இன்னும் சேறுபடியாமல் இருப்பவை
உன் கானங்கள் மட்டுந்தான்

 அவரது பிறந்த நாளன்று (03சன ஆயல) அவருக்கு 'றுiளாiபெ லழர ய புடழசழைரள னயல' என்று ஒரு மின் அஞ்சலில்  வாழ்த்து ஒன்றை அனுப்பினேன். ர்நல.......  யுசந லழர வாந றுசவைநச  ர்ழற னழ லழர னழ? என்று பதில் எழுதினார். அவர் படிப்பதில் எவரையுந்தான் விட்டுவைப்பதில்லை என்பது  எனக்கு மீண்டும் பிரத்யட்ஷம் ஆகியது. 

ராஜீவ் காந்தியின் கொலைக்குப்பிறகு தமிழகத்தில் வாழ்ந்த ஈழத்தமிழர்கட்கு சில நெருக்கடிகளும், அசௌகரியங்களும் ஏற்பட்டன. அவ்வேளையிலும் ராஜீவ் காந்தி செய்ததும் தவறுதான் ஆனால் அதற்கான தண்டனைதான் கொஞ்சம் அதிகம் என்றும், உண்மையான புறநானூற்றுத்தமிழர்கள் ஈழத்தில்தான் இருக்கிறார்கள் அவர்கள் போராட்டத்தில் நியாயம் உண்டு என்றும் எழுதினார். ஈழத்தமிழர்களின் போராட்டம் தேவையில்லாததென்றோ, அர்த்தமில்லாததென்றோ எவ்விடத்திலும் பதிவு செய்யவில்லை.