பூராயம்

ஆவணம் தேவை
பல ஊடகங்களும் மறந்து விட்ட தந்தை செல்வாவை நினைவிருத்தி அவர் தொடர்பான கட்டுரையைப் பிரசுரித்திருந்ததற்கு நன்றிகள்.
தமிழர்களிடம் இருக்கும் பெரிய பலவீனம் சம்பவங்களை ஆவணப்
படுத்தாமையே. அந்த வகையில் தந்தை செல்வா போன்றவர்களின் கருத்துக்களும் வரலாறும் ஆவணப்படுத்தப்பட வேண்டியவை என்பதில் இரண்டு கருத்து இருக்க முடியாது.
இத்தகைய பணிகளையும் உங்கள் பத்திரிகை வாயிலாக முன்னெடுக்க வேண்டும் என்று பணிவாகக் கேட்டுக் கொள்கிறேன்.
- சயந்தன்

வாழ்க!
ஒருபேப்பர் நிர்வாகிகள் அனைவருக்கும் என் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள் உரித்தாகுக. உங்கள் எல்லோரின் முயற்சியாலும் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக ஒருபேப்பர் வளர்ந்து வருவதையிட்டு பூரிப்படைகிறோம். இலவசமாக வாசிக்க எத்தனையோ பேப்பர் வந்தாலும் அதிகளவு பக்கங்களுடனும் எல்லா வயதினருக்கும் உரிய விடயங்களுடனும்  வெளிவரு
வது பாராட்டுக்குரியது. வாழ, வளர, வளமுடன் தழைத் தோங்க
வாழ்த்தி நிற்கும்
- வாசகி


ஒரு பேட்டி
ஓ வண்டிக்காரா பாடல் மூலம் ஈழத்து
மெல்லிசைப் பாடல்களுக்கு ஒரு மரியாதையை ஏற்படுத்திய திரு. மா. சத்தியமூர்த்தி அவர்களின் பேட்டியைப் பார்த்து மகிழ்ந்தேன்.
தென்னிந்திய சினிமா மாயையினால் மறக்கப்படும் இவர் போன்ற எம்நாட்டுக் கலைஞர்களின் பேட்டிகளை தொடர்ந்து உங்கள் பத்திரி
கையில் எதிர்பார்க்கிறேன்.
-நித்திலா


நம்ப முடியவில்லை
ஒருபேப்பர் ல் எழுதுகின்ற சில எழுத்தாளர்கள் தங்கள் கருத்துக்கு வலுச் சேர்ப்பதற்காக தவறான தரவுகளை முன்வைக்கிறார்கள்
சாய்ந்த கோபுரங்கள் பகுதியில் கட்டுரையாளர் சீனாவில் ஒருவருக்
குமே ஆங்கிலம் தெரியாது என்ற கருத்தை முன்வைத்திருந்தார். இது மிகவும் தவறான கருத்தாகும்.

நான் அண்மையில் சீனாவிற்குச் சென்றிருந்த போது அந்த மக்களின் ஆங்கிலப் புலமையைக் கண்டு வியந்து போனேன். அவர்களது முன்னேற்றத்திற்கு அதுவும் ஒரு காரணம்.
அவர்கள் தங்கள் தாய் மொழியில் அலாதி பிரியம் கொண்டவர்கள் என்பது உண்மைதான். ஆனால் அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதை யாரும் நம்புவார்கள் என்று நினைக்கவில்லை
- ஓவியன்

அச்சாப் படம்

அண்ணைமார் உங்கடை அறுவைப் பக்கத்திலை வாற அந்தப் படத்தைத் தெரிவு செய்யிறவரையும் அதுக்கு
அழகா வசனமெழுதிறவரையும் கூப்பிட்டு வாய் நிறைய சக்கரை
போட்டு அனுப்பி விடுங்கோ. (காசு நான் அனுப்பிவிடுறன்.) அந்த மாதிரி இருக்கு.
- சின்னவன்


மெருகேறுகிறது
மதிப்பிற்குரிய ஒருபேப்பர் காரருக்கு,
வரவர ஒருபேப்பர் மெருகேறி வருகிறது.
இம்முறை வந்த ஆக்கங்கள் எல்லாம் நன்றாயுள்ளன. உங்களின் பணி தொடர என் வாழ்த்துக்கள்
- சுனாமி


ஒரு குழுமம்
ஒருபேப்பர் தொடங்கி ஒரு ரேடியோவும் தொடங்கி விட்டியள் இனி என்ன அடுத்தது ஒரு ரிவியையும் தொடங் கலாம் தானே.
தொடங்கி புலம்பெயர் வானில் ஒரு பெரும் வலம் வர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
சின்ன சந்தேகம் அதையும் தொடங்கி விட்டியளோ? வேற ஏதாவது பெயரில வருதோ? எதுவெண்டாலும் வெக்கப்
படாமச் சொல்லுங்கோ. நாங்க கண்டமேனிக்கு சட்டலைட்ட அரக்கி உங்களைத் தேட ஏலாது தானே. அதான் சொல்றன்.
- ரமணி


உருப்படியான பத்திரிகை
பத்திரிகை ஆசிரியர் அவர்கட்கு, தங்கள் பத்திரிகையினை இயன்றவரை தொடர்ந்து வாசித்து வருகிறேன். பொதுவாகச் சொன்னால் இங்கு வருகின்ற பத்திரிகையில் ஒரு உருப்படியான பத்திரிகை.
அந்த வகையில் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் தொடர்ந்தும் தங்கள் தரம் தாளாது தொடர்து சிறந்து இயங்கவேண்டும்.
- வவுனியன்


ஒரே ஒருபேப்பர்
ஆரம்பித்த நாள் முதல் ஒழுங்காய் வரும் எங்கள் ஒருபேப்பர் ருக்கு எம் மனம் கனிந்த வாழ்த்துக்கள். நீ தொடர்ந்தும்  வரவேண்டும் வானாய் வளர வேண்டும். எம் மனங்கள் மகிழ வேண்டும் என்று சொல்லி மறுபடியும் வாழ்த்துகிறேன். வாழ்க நீ வளர்க நீ புலத்தில் புதுமை படைக்க நீ.
- றொபிந்தன்
 

சினிமா
பொதுவாக பத்திரிகையில் என்னைக்  கவர்கிற விடயம் இரண்டு. ஒன்று அரசியல் மற்றையது சினிமா. உங்கள் பத்திரிகையில் அரசியல் சிறப்பாய் இருக்கிறது.
ஆனால் அந்தளவுக்கு சினிமாப்பகுதி இல்லை என்பது என்னுடைய கருத்து என்பதுடனான வருத்தம்.
அதுபோல விளையாட்டுத் துறையும் உங்கள் பத்திரிகையால் முழுமையாகப் புறக்கணிக்கப்படுகிறது.
ஆகவே தங்கள் பத்திரிகையில் சினிமா மற்றும் விளையாட்டுத் துறை
களுக்கும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுக்கும்படி கேட்டுக்
கொள்கிறேன்
- மதன்


அட்டைப் படம்
ஒரு ஒருபேப்பர் இல் என்னைக் மிகவும் கவர்ந்த விடயம் உங்களின்  அட்டைப் படம் ஆகும். தாயக வாசம் வீசுகின்ற இயற்கைக் காட்சிகள் அனைவரையும் கவர்ந்திழுக்கக் கூடிய சின்னக் குழந்தைகள் தாயகப் போராட்டத்திற்கு வலுச்சேர்ப்போர் என்று புதிது புதிதாய்
வித்தியாசமாய் தந்து கொண்டிருக்கிறீர்கள்.
சினிமா நடிக நடிகையரை அட்டையில் இதுவரை அலங்கரிக்காத ஒரே பேப்பர் ஒருபேப்பர்  தான்.
- சிந்துஜா