இரண்டு ஆண்டுகளுக்கு முன்னமேயே கொலை செய்யப்பட்டு பிணமாகிப் போய்விட்ட புரிந்துணர்வு ஒப்பந்ததம் தற்பொழுது மகிந்தவின் அரசு அடக்கமும் செய்யப்பட்டு விட்டது. கொலை செய்ததும் சிங்கள அரசுதான். அடக்கம் செய்ததும் சிங்கள அரசுதான்.
விடுதலைப் புலிகள்தான் முதலில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறினார்கள் என்றும், அதிகளவிலான யுத்தநிறுத்த மீறல்களை விடுதலைப் புலிகள் மேற்கொண்டார்கள் என்றும் சிறிலங்கா அரசும், அதனுடைய ஒட்டுக் குழுக்களும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றார்கள். ஆனால் இது எந்த வகையிலும் உண்மை இல்லை.
பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த காலத்திலேயே சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து விடுதலைப் புலிகளின் வணிகக் கப்பல்களை சிறிலங்கா அரசு மூழ்கடித்தது. அத்துடன் விடுதலைப் புலிகளை பிளவுபடுத்தும் முயற்சிகளை மேற்கொண்டது. தாம்தான் கருணாவை விடுதலைப் புலிகளிடம் இருந்து பிரித்ததாக ரணில் விக்கரிமசிங்க ஒப்புதல் வாக்குமூலமே கொடுத்து விட்டார்.
அத்துடன் கருணா குழு என்ற பெயரில் பல தாக்குதல்களை விடுதலைப் புலிகள் மீது சிறிலங்கா இராணுவம் நடத்தியது. இதன் பிறகு மாவிலாறு பிரச்சனையின் போது பேச்சுவார்த்தை மூலம் ஒரு சுமூக தீர்வு காணப்படும் நிலைமை இருந்தும், சிறிலங்கா அரசு வான்தாக்குதல்களை நடத்தியது. பின்பு நில ஆக்கிரமிப்புக்களை செய்தது. எல்லா வகையிலும் சிறிலங்கா அரசுதான் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறியது.
அதே வேளை அதிகளவிலான யுத்தநிறுத்த மீறல்களை விடுதலைப் புலிகளே மேற்கொண்டார்கள் என்று சிறிலங்கா அரசு சொல்கிறது. அத்துடன் கண்காணிப்புக் குழுவின் அறிக்கைகளிலும் விடுதலைப் புலிகளே அதிக யுத்தநிறுத்த மீறல்களை மேற்கொண்டதாக கணக்குகள் இருக்கும்.
இப்படி விடுதலைப் புலிகள் மீது அதிகமான யுத்த நிறுத்த மீறல் கணக்கு வந்த விதம் வேடிக்கையானும், மோசடியானதும் ஆகும். விடுதலைப் புலிகள் அரசியல் நடவடிக்கைகளுக்காக சிறிலங்கா இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பணியகங்களை திறந்து, தமிழீழ தேசியக் கொடியினை ஏற்றிய போது, இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் புலிக் கொடி ஏற்றுவது போர்நிறுத்த மீறல் என்று கண்காணிப்புக் குழு கணக்கு வைத்தது. விடுதலைப் புலிகள் ஒவ்வொரு முறை கொடி ஏற்றிய போது, விடுதலைப் புலிகளின் "யுத்த நிறுத்த மீறல்களின்" எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போனது.
மறுபுறம் ஒட்டுக் குழுக்களின் பெயரில் சிறிலங்கா இராணுவம் நடத்திய தாக்குதல்கள் எதுவும், சிறிலங்கா இராணுவத்தின் யுத்த நிறுத்த மீறல்களாக கணக்கிடப்படவில்லை. கருணா குழுவின் பெயரில் சிறிலங்காப் படையினர் தாக்குதல் நடத்திய போதும் சரி, உத்தியோகபூர்வமாக துணைப் படையினருக்கான ஊதியத்தை பெறுகின்ற மற்றைய ஒட்டுக் குழுக்கள் தாக்குதல் நடத்திய போதும் சரி, இவைகள் எதுவும் சிறிலங்கா இராணுவத்தின் யுத்தி நிறுத்த மீறல் கணக்கில் வரவில்லை.
இப்படியான பாரபட்சத்தோடுதான் கண்காணிப்புக் குழுவும் மேற்குலக நாடுகளும் நடந்து கொண்டன. இந்த நாடுகள் சிறிலங்கா அரசுக்கு சார்பாக நடந்து கொண்டும், இந்த நாடுகளில் அனுசரணையோடு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை சிறிலங்கா அரசு ரத்து செய்து விட்டது.
வன்னி மீது மிகப் பெரும் தாக்குதலை நடத்துவதற்காகவே சிறிலங்கா அரசு யுத்த நிறுத்தத்தில் இருந்து விலகியிருப்பதாக சொல்லப்படுகின்றது. வன்னி மீது பல முனைகளில் சிறிலங்கா அரசு ஒரு பெரும் தாக்குதலை நடத்துவதற்கான ஏற்படுகளை செய்து வருவது உண்மைதான். ஆனால் யுத்த நிறுத்தத்தில் இருந்து விலகாமலே வன்னி மீதான பெரும் தாக்குதலை சிறிலங்கா அரசால் நடத்தியிருக்க முடியும்.
கிழக்கை சிறிலங்காப் படைகள் ஆக்கிரமித்த போது மேற்குலக நாடுகள் வாயை மூடிக்கொண்டுதான் இருந்தன. அத்துடன் அந்தத் தாக்குதல்களுக்கு மறைமுக ஆசீர்வாதங்களையும் வழங்கியிருந்தன. விடுதலைப் புலிகள் பலவீனம் அடைந்தால்தான் தம்முடைய அழுத்தங்களுக்கு கட்டுப்படுவர்கள் என்ற நம்பிக்கையில் இதனைச் செய்தன.
பத்து மாதங்களுக்கு மேலாக சிறிலங்காப் படையினர் மன்னார் பகுதியில் பல படை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். மடுவைக் கைப்பற்றி, அதன் பிறகு பூநகரி நோக்கி நகரும் திட்டத்தோடு இந்த நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நடவடிக்கைகளையும் மேற்குலக நாடுகள் கண்டிக்க முன்வரவில்லை.
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களிற்குப் பிறகு பேச்சுவார்த்தைக்கு தலைமை வகித்த பிரிகேடியர் தமிழ்செல்வன் சிறிலங்கா அரசு வான்தாக்குதல் மூலம் கொலை செய்த போதும் கூட இந்த மேற்குலக நாடுகள் மௌனமாகத்தான் இருந்தன.
ஆகவே வன்னி மீது சிறிலங்கா அரசு பல முனைகளில் ஒரு மிகப் பெரிய தாக்குதலை ஆரம்பிக்கின்ற போது, இந்த மேற்குலக நாடுகள் எதுவுமே சொல்லப் போவதில்லை. அந்த வகையில் வன்னி மீதான தாக்குதலுக்காகவே சிறிலங்கா அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருந்து விலகியது என்ற கருத்து முற்று முழுதாக சரியான ஒன்றல்ல.
புரிந்துணர்வு ஒப்பந்தமானது விடுதலைப் புலிகளுக்கு சர்வதேசரீதியாக சில அங்கீகாரங்களைத் தேடிக் கொடுத்தது. விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தை அங்கீகரித்திருந்தது. பயங்கரவாத இயக்கம் என்று விடுதலைப் புலிகளை பட்டியல் இட்டிருந்தாலும், மேற்குலக நாடுகளோடு ராஜதந்திர உறவுகளை வெளிப்படையாக பேணுவதற்கும் வழி செய்தது. விடுதலைப் புலிகளின் நிர்வாகம் "உள்ளக இறைமையை" கொண்டிருக்கிறது என்பதை புரிந்துணர்வு ஒப்பந்தம் அங்கீகரித்துள்ளது என்ற விடயத்தையும் நாம் முன்பொரு கட்டுரையில் பார்த்திருந்தோம்.
தமிழர் தரப்பு பெறக்கூடிய இவ்வாறான அங்கீகாரங்களை இல்லாமல் செய்யும் பொருட்டும், ஜேவிபி போன்ற கட்சிகளை திருப்தி செய்யும் பொருட்டும், யுத்தமயப்படுத்தப்பட்டுள்ள சிறிலங்காவின் அரசியலுக்கு தொடர்ந்து தீனி போட வேண்டிய அவசியத்திலும், சிறிலங்கா அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருந்து விலகியுள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிவுக்கு வந்த அன்றைய தினம் (16.01.07) சிறிலங்காவின் பிரதேசத்திற்குள் வருகின்ற மொனராகலை மாவட்டத்தில் இரண்டு கிளைமோர் குண்டுகள் வெடித்தன. நான்கு சிங்கள விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். மொனராகலை மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதியில் வைத்து சிறிலங்காவின் அதிரடிப் படையினர் தாக்குதலுக்கு உள்ளானார்கள்.
மொனராகலையில் வெடித்த ஒரு கிளைமோரில் பயணிகள் பேருந்து ஒன்று சிக்கிக் கொண்டது. அதில் 26 சிங்களப் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். 60இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள். இந்தத் தாக்குதலை சிறிலங்கா அரசு தன்னுடைய பரப்புரைக்கு பயன்படுத்தியது. விடுதலைப் புலிகள் அப்பாவி மக்களை கொலை செய்வதாக கூக்குரல் இட்டபடி தன்னுடைய பரப்புரையை முன்னெடுத்தது. காயமடைந்த சிங்கள மக்களுக்கு ரத்தம் தேவைப்படுவதாக அவசர அறிவுப்புகளை மேற்கொண்டு நிலைமையை பூதாகரமாக காட்ட முனைந்தது.
ஆனால் இப்பொழுது சிங்கள மக்கள் கூட சிறிலங்கா அரசின் பரப்புரைகளை நம்புவது இல்லை என்பதுதான் உண்மை. விடுதலைப் புலிகள் அப்பாவி மக்களை இலக்கு வைக்க மாட்டார்கள், இது சிறிலங்கா அரசின் திட்டமிட்ட சதி என்று சிங்கள மக்கள் பேசிக் கொள்கிறார்கள். அவ்வாறு விடுதலைப் புலிகள் இத் தாக்குதலை நடத்தியிருந்தால் கூட, இலக்குத் தவறியே பொதுமக்கள் பலியாகியிருப்பர்கள் என்ற கருத்தே அவர்களிடம் நிலவுகின்றது. பொதுமக்களின் பேருந்துகளை தமது தேவைகளுக்கு பயன்படுத்தும் சிறிலங்காப் படையினரே இந்தத் தாக்குதலுக்கு காரணமானவர்கள் என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
பேருந்து மீதான தாக்குதலையடுத்து சிறிலங்காப் படையினரின் கவச வாகனம் ஒன்றும் கிளைமோர் தாக்குதலுக்கு இலக்கானது. இதில் நான்கு படையினர் காயமடைந்தனர். அடுத்த நாள் அதிகாலை காட்டுப் பகுதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்ட சிறிலங்காவின் அதிரப்படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் காயமடைந்தார்.
கிழக்கில் இருந்து விடுதலைப் புலிகளை விரட்டி விட்டதாக தம்பட்டம் அடித்த சிறிலங்கா அரசு, கிழக்கின் அம்பாறைக்கு எல்லையாகவுள்ள மாவட்டங்களில் சண்டை செய்ய வேண்டிய நிலைமையில் உள்ளது. அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஏற்கனவே பல தாக்குதல்கள் இடம்பெற்றன. தற்பொழுது பக்கத்தில் இருக்கின்ற மொனராகலை நோக்கியும் மோதல்கள் நகர்ந்துள்ளன.
இதையடுத்து மொனராகலையில் உள்ள சிங்களவர்களை ஆயுதபாணிகள் ஆக்குவதற்கு மகிந்தவின் அரசு முடிவு செய்துள்ளது. அங்குள்ள கிராமவாசிகளுக்கு 500 துப்பாக்கிகளை வழங்கும்படி மகிந்த உத்தரவிட்டுள்ளார். ஆனால் விரைவில் சிறிலங்காவில் உள்ள அனைத்து சிங்கள மாவட்டங்களிலும் இதே போன்ற ஒரு நடவடிக்கையை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு மகிந்த தள்ளப்படுவார் என்று எதிர்பார்க்கலாம்.
வன்னி மீதான பெருந்தாக்குதலுக்காக கிழக்கில் இருந்து சிறிலங்காப் படைகளை நகர்த்த வேண்டிய தேவை சிறிலங்கா அரசுக்கு எழுந்துள்ளது. ஒரு வருடம் யுத்தம் செய்து பல இழப்புக்களுக்கு மத்தியில் கைப்பற்றிய பகுதிகளை கைவிட்டு செல்ல வேண்டிய நிலையில் சிறிலங்காப் படைகள் தற்பொழுது நிற்கின்றன. வன்னி மீது தாக்குதலை ஆரம்பிக்கின்ற போது, கிழக்கின் பல பகுதிகளை மீண்டும் விடுதலைப் புலிகளிடம் இழப்பதோடு, சிங்கள மாவட்டங்களிலும் தாக்குதல்களை சந்திக்க வேண்டிய நிலையில் மகிந்த அரசு நிற்கின்றது.
தமிழர் தாயகத்தை ஆக்கிரமிக்கத் துடிக்கின்ற மகிந்தவின் அரசு தன்னுடைய பகுதிகளையே காப்பாற்ற முடியாது தடுமாறும் நிலைக்கு தள்ளப்படப் போகிறது. ஆயுதமயப்படுத்தப்பட்ட சிங்கள இனத்தின் மத்தியில் தோன்றப் போகும் குழப்பங்கள் தமிழர்களின் விடுதலைக்கான போராட்டத்தை மேலும் முன்னோக்கி நகர்த்தப் போகின்றது.
இந்த நிலையில் புலம்பெயர்ந்த மக்கள் தமது வேறுபாடுகளை களைந்து விட்டு, விடுதலைக்காக ஒன்று பட்டு உழைத்தால், எமது விடுதலை மேலும் விரைவுபடும்.
Recent comments
2 weeks 6 days ago
7 weeks 5 days ago
8 weeks 20 hours ago
10 weeks 5 days ago
12 weeks 3 days ago
12 weeks 3 days ago
12 weeks 3 days ago
22 weeks 5 days ago
22 weeks 5 days ago
22 weeks 6 days ago