நோர்வேயில் சிறப்பிடம் பெறும் இராஜன்

இராஜன் செல்லையாநோர்வே நாட்டில் தொழில் பெற்று தத்தமது துறைகளில் முன்னணி வகிக்கும் பத்து வெளிநாட்டவர்களில் ஒருவராக ஈழத்தவரான திரு. இராஜன் செல்லையா தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.

நோர்வேயில், வேலைவாய்ப்பு பெறுவதில் வெளிநாட்டவர்கள் எதிர்நோக்கும் தடைகளை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஆய்வுக்குழுவினரே தொழில்துறையில் தடம்பதித்துள்ள 10 வெளிநாட்டவர்களை வருடாவருடம் தெரிந்து விருது வழங்கி வருகிறார்கள். இவ்விதமான சிறப்பிப்பு மூலம், இவர்களினை முன்மாதிரியாகக்கொள்வதன் மூலம் மற்றய வெளிநாட்டவர்களை ஊக்குவிக்க முடியும் எனக்கருதும் இக்குழு 2007ம் ஆண்டுகான விருதினை பெறும் பத்துப் பேரில் ஒருவராக ஊடகவியலாளர் இராஜனை தெரிவு செய்துள்ளது.

1983ல் தனது 21வது வயதில், உயர்கல்வி கற்பதற்காகச் நோர்வேக்குச் சென்ற இராஜன் ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் மானிடவியல் துறையில் கல்விகற்று பட்டம் பெற்றார். கடந்த பத்தாண்டுகளாக NRK எனும் நோர்வேயின் தேசியத்தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

வீருது பெறும் 10 பேர்ஒஸ்லோவிலிருந்து வாரத்தில் சில மணிநேரம் ஒளிப்பரப்பான தமிழ் வானொலியொன்றினை ஆரம்பித்து நடாத்தி வந்த இராஜன். அவ்வொலிபரப்பில் நோர்விஜிய மொழியில் தாயகம் பற்றிய நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். தமிழ் தொலைக்காட்சி இணையத்தின் (TTN)  உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றிய அவர் நிலவன் செல்லையா என்ற பெயரில் அரசியல் ஆய்வுகளை ஐபிசி வானொலியூடாக நடாத்தியிருக்கிறார்.

இராஜன் மற்றய தயாரிப்பு குழுவினருடன் NRK  தொலைக்காட்சியில், தற்கால பல்கலாச்சாரச்சூழலில் வெளிநாட்டிலிருந்து வந்து குடியேறியவர்களின் கலாச்சாரங்களின் சந்திப்பு பற்றியதான “Migrapolis” என்ற வாராந்த சஞ்சிகை நிகழ்ச்சியின் தயாரிப்பு குழுவில் இராஜனும் பணியாற்றி வருகிறார். இது நோர்வேயில் வாழும் பல்வேறுபட்ட இனத்தவரால் விரும்பிப்பார்க்கப்படும் ஒரு நிகழ்ச்சி என்பது இங்கு குறிப்பி;டத்தக்கது.

2001ம் ஆண்டில், நோர்வே சுதந்திரநாள் நிகழ்வுகளை NRK தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கும் வாய்ப்பு இராஜனுக்கு கிடைத்தது. வெளிநாட்டு குடியேறியான ஒரு ஊடகவியலாளர் இது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியமை அதுவே முதல் தடவையாகவிருந்தது.

நோர்வேயில் வளர்ந்து வரும் தமிழ் இளையவர்களுக்கு முன்னுதாரணமாக திகழும் இராஜன் தாயகம் நோக்கிய சமூகப்பணிகளிலும்; தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார்.

தமிழ் ஊடகத்துறையானது வெறுமனே பிரச்சாரத்துக்கானது என்பதைக் கடந்து முழுமையாக செயற்படவேண்டும் என விரும்பும் அவரது அநுபவத்தையும் ஆற்றலையும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் ஊடகங்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

புலம்பெயர் தேசத்தில் தேசிய அளவில் சிறப்புப்பெறும் இராஜனுக்கு ஒரு பேப்பர் தனது வாழ்த்தினை தெரிவிக்கிறது.