'வழி" தமிழீழப் பெண்கள் 13பேரின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பாக 2005 ஆவணி வெளியாகியது. இச் சிறுகதைத் தொகுப்பானது 2006 ஏப்ரல் மீள் வெளியீடாகவும் வந்திருக்கிறது. ஏற்கனவே தமிழீழப் பெண்களின் படைப்பாற்றலை வெளிக்கொணரும் 'கப்டன் வானதி வெளியீட்டகத்தினரின் 7வது வெளியீடாக வழி சிறுகதைத் தொகுதி தமிழீழப்பெண் எழுத்தாளர்களினால் மீளவும் ஒரு காத்திரம் மிக்க கனத்தைப் பதிந்துள்ளது. இத்தொகுப்பானது எழுத்தாளர் அமரர் சந்திரா அற்புதலிங்கம் அவர்களுக்குக் காணிக்கையாக சந்திரா அற்புதலிங்கம் அவர்களின் சிறுகதையான வழி சிறுகதையே இந்நூலின் பெயராகவும் ஆகியுள்ளது.
இத்தொகுப்பில் தாட்சாயினி , அம்புலி , அலையிசை , ஜெ.விஜயலக்சுமி , வன்னிமகள் , சிவாஜினி சிவசங்கர் , மலைமகள் , அமரர் சந்திரா அற்புதலிங்கம் , அ.காந்தா , சிரஞ்சீவி , கிருஸ்ணவேணி , அகநிலா , குமுதினி ஆகியோரின் சிறுகதைகளை உள்ளடக்கி அழகிய ஆழ்ந்த அர்த்தம் சொல்லும் ஓவியத்தை முன்னட்டையில் தாங்கி வழியை விழிதொடு என்பது போன்றதொரு அமைவில் இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தாட்சாயணியின் 'மெட்டி" இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளுக்கள் தொலைந்து போன மெட்டி போட்ட எங்கள் மங்கையரின் ஆத்மங்கள் புதைக்கப்பட்ட துயரங்களையெல்லாம் ஒரு சேரக்குவித்து வைத்திருக்கிறது. ஊர் பார்க்கப்போன சுந்தா திரும்பி வந்ததிலிருந்து பிரமை பிடித்தவனாக இருக்கிறான். அவன் தோழி மாலினியின் பொம்மையும் அதற்கு நிகழ்ந்த அவலமும் அதைத்தேடிப் போய் அந்த வளவுக்கள் புதைந்து கிடந்த பெண்ணொருத்தியின் மெட்டியும் சுந்தாவை அலைக்கழிக்க அவன் நினைவுகளில் அயல்வீட்டு அக்காக்களெல்லாம் வருவதாய் அவன் அந்தரிப்பதும் போரின் வடுக்களையும் உறவுகளின் இழப்புகளையும் அப்படியே அச்சடித்தாற் போன்றிருக்கிறது மெட்டி.
அம்புலியின் 'உள்ளே எரியும் தீ" ஒரு களத்து அனுபவமொன்றை அப்படியே கண்முன்னே நிறுத்திப் போகிறது. சமர்க்களத்தில் போராளிகள் அனுபவிக்கும் சுமைகளையெல்லாம் ஒருசேர அடுக்கி வைத்து சொல்லும் கதையானது போராளி அம்புலியின் அனுபவங்களே பகிர்வாவது போல் இருக்கிறது.
அலையிசையின் 'மௌனத்திரை விலக" கதையின் நாயகி சறோவின் மனதையும் அவளது கட்டாயத் திருமணம் அந்தத் திருமணம் தந்த சுமை அவள் மனசுக்குள் ஒளித்திருந்த சின்னராசுவும் , அவள் குடிகாரக் கணவனின் தொல்லைகளும் அவள் கணவன் கந்தையாவின் இறப்பும் , தனது பிள்ளைகளுக்காக மீன்கூடையை தலையில் சுமந்தபடி சறோவின் நினைவுத்திரை கிழிந்து அவள் துயரம் யாவும் வாசகரின் மனசில் ஒட்டவைத்து மௌனத்திரை விலக ஆனால் எங்கள் சமூகத்துப் பெண்கள் பலரது வாழ்வை அப்படியே கோதுடைத்து வெளிப்படுத்தியது போலான வகையில்
'மௌனத்திரை விலக" மனசுக்குள் உட்கார்ந்து விடுகிறது.
விஜயலக்சுமியின் 'எல்லைக் கோடு" தமிழீழத்தின் தெற்கு எல்லைக் கிராமங்களில் ஒன்றான 'மதுரங்குளம்" கிராமத்தின் அழகுடன் இந்தியராணுவ காலத்து நிகழ்வொன்றை நேரில் பார்க்க வைக்கும்படி அமைந்துள்ளது.
வன்னிமகளின் 'கௌரவம்" ஒரு குடும்பத்தில் ஒரு பெண்மீதான குடும்பச்சுமையும் குடிகாரக் கணவனால் அடைந்த துயர்களுடன் தன் பிள்ளைகளைப் படிப்பிக்க அப்பம் சுட்டு விற்று தனது குடும்பத்தை காக்கும் பார்வதியம்மாவும் பிள்ளைகளும் ஊரில் வாழ்ந்த பல அம்மாக்களின் முகத்தை முன்னிறுத்திப் போனது.
சிவாஜினி சிவசங்கரின் 'மனிதத்துள்" மனசுக்குள் மௌனமாக ஒரு நட்பும் காதலும் சேர்ந்த ஒரு கதை. ஜீவிதா , விதுரன் இரு நண்பர்களின் நட்புக்கிடையில் ஜீவிதாவின் காதலனும் எழுத்தாளனுமான கண்ணாவின் பொய்யான எழுத்துக்கள் இறுதியில் கனடாவிலிருந்த வந்த அக்காவையும் மதத்தையும் சாட்டி ஜீவிதா விதுரனின் நட்பை நாசம் செய்த கண்ணாவை அவன் காதலை மறந்து தன்னை வாழ்வில் பதியமிடும் ஜீவிதா எம் சமூகத்துப் பெண்களிலிருந்து வித்தியாசப்படுவது மிக அற்புதம்.
மலைமகளின் 'புலிவாலைத்தேடி" இந்திய இராணுவ காலத்தை நினைவுபடுத்திய ஒரு போர்க்காலப்பதிவு. இந்தியப்படைகள் மத்தியில் விடுதலைப்புலிகளுடன் மக்கள் எவ்வாறு பங்களித்தார்கள் என்பதும் , கடலையெண்ணை மணமும் இந்தியப்படைகளின் பெண்கள் மீதான பார்வைகளும் அந்த நாட்களை முன்னிறுத்திப் போகிறது.
அமரர் சந்திரா அற்புதலிங்கத்தின் 'வழி" மெல்லியதான காதலின் வலியும் , பொறுப்பும் , கடமையும் கவனத்தில் நிறைந்தவொரு கதை. போராளிகள் திருமணம் என்பது அதிசயமானதாக , குடும்பம் என்பதையே நேசிக்காதவர்கள் , களமே அவர்கள் வாழ்வு என்ற வர்ணிப்புக்களிலிருந்து அவர்களுக்குள்ளிருக்கும் மனித நேயம் , மானுட நேசிப்பு என கதையில் உலவும் கயல்விழியும் , நாவரசனும் மனசுக்குள் உட்கார்ந்து விடுகின்ற பாத்திரங்கள்.
பொதுவாக பெண்பற்றிய கருத்துலகிலிருந்து விடுபட்ட கடற்புலிப்பெண் போராளி கயல்விழி. அவளது களவாழ்வும் காதல் வாழ்வும் இனிப்புக்கலந்த ஒரு காலமாகக் கழிய வெளிநாட்டுக்குப் பயிற்சிக்குப் போய்விட அவள் கடற்சமரில் காயமடைந்து தன் குழந்தை பெறும் ஆற்றலை இழந்து திருமணத்தை நிராகரித்தது எல்லாமே ஒரு கனவு போல அவளது மனநிலை.
நாவரசனுடனான முதல் சந்திப்பில் குழந்தை பெற்றுக் கொள்வதைத் தவிர அவள்தான் எல்லாம் செய்ய வேண்டுமென்ற எண்ணமில்லாத நாவரசனின் புரிதல் , சாதாரண சமூகத்து ஆண்களின் மனநிலைக்கும் போராளியான அவனுக்கும் உள்ள வேறுபாட்டை உணர்த்திவிடுகிறது. பயிற்சி முடிந்து நாடு திரும்பியவனுடனான திருமணத்தை மறுக்கும் கயல்விழியின் முடிவும் இறுதியில் பெற்றோரை இழந்த குழந்தைகள் காப்பகத்தில் இருவரும் சந்தித்ததிலிருந்து பதியமிட்டுக் கொள்ளும் அவர்களது வாழ்வு என கதையின் ஆரம்பம் முதல் முடிவுவரை கயல்விழி - நாவரசன் இருவருமே வந்து சென்று வாசித்து முடிந்த பின்னும் நெஞ்சை விட்டகலாதவர்களாகியிருக்கிறார்கள்.
அ.காந்தாவின் 'நெஞ்சுக்குள்ளே" ஒரு போராளியின் நெஞ்சுக்குள்ளேயிருந்து வருகின்ற ஊரும் ஊரின் அழகும் அங்கு வாழ்ந்த மனிதர்களும் அவர்கள் மீதான இராணுவம் செய்த அநியாயங்களும் அடம்பன் மண்ணை அப்படியே கண்ணில் இருத்திவிட்டுப் போகிறது. லெப்.கேணல் விக்ரரும் அந்த அடம்பன் தாக்குதலும் , தம்பிராசாவின் குடும்பமும் அந்தப் பதின்மூன்று பிள்ளைகளும் இலங்கை இராணுவம் முன்னர் ஊர்களில் வந்து செய்த அநியாயங்களின் வரிசையை அப்படியே அழியாத பதிவாக்கியிருக்கிறது.
சிரஞ்சீவியின் 'வதையின் கதை" அழகிய மழைக்காலமொன்றின் மாலையோடு ஆரம்பித்து பரிதினியின் துயர் தோய்ந்த நினைவுகளுடன் அவளைப் பழைய பரிதினியாக்கிய சாரதா ரீச்சரும் பரிதினியின் அம்மாவும் பெரியதொரு பாரத்தை மனசில் இறக்கிவிட்டுப் போகிறார்கள். பரிதினி அந்தப் பெயரே ஒரு பரிதியின் வடிவாக நெஞ்சுக்குள் நிலைத்து விடுகிறாள்.
கிருஸ்ணவேணியின் ' பூவொன்று புயலானது " சுபாங்கியின் தேசப்பற்றையும் தைரியத்தையும் எடுத்துச் சொல்லியிருக்கிறது. வன்னிக்குள் ஊடுருவிய இலங்கையரச புலனாய்வுப் பிரிவினன் நந்தகுமாரன் அவனது பொய்களை நம்பி அவனில் தன்னைத் தொலைத்தவள் சுபாங்கி. அவனுடன் வாழ்ந்து ஒரு குழந்தையும் ஆன பின் அவன் தனது வேலை முடித்து தனது ஊரில் நின்று அவளுக்கு வரைந்த கடிதத்தின் படி நந்தகுமாரனிடம் செல்கிறாள். அவளுக்கும் அவள் நேசிக்கும் தாயகத்துக்கும் அவன் செய்த துரோகம் அவனைப் பழிவாங்கும் நிலைக்குத் தள்ளுகிறது.
ஒரு காலை நேரம் அவனைக் கொன்றுவிட்டு நிறைவோடு ஊர் போகும் சுபாங்கி நந்தகுமாரனின் துரொகத்திற்கான பரிசைக் கொடுத்த அவள் முடிவுடன் அவள் தெளிவையும் தேசப்பற்றையும் உணர்த்திவிடுகிறது.
அகநிலாவின் 'எங்கை கண்ணைத் திறவுங்கோ" மாணவர்களின் பகிடிவதையும் அதன் வக்கிர வார்த்தைகளும் தமிழ்நிலாவை வதைப்பதிலிருந்து ஆரம்பமாகும் கதை, ரூபியின் நினைவுச் சங்கிலிகளை அறுத்தபடி கதைக்குள் வந்து நிறைந்து மனங்களுக்குள் முகமறிய மாவீரராகிறாள் தமிழ்நிலா. காதலை நிராகரித்து தேசநிர்மாணப்பணியில் தன்னை இணைத்த தமிழ்நிலாவின் தியாகம் சொல்லாத சேதியாய் சொல்லப்பட்டிருக்கிறது. பெறுதற்கரிய வாய்ப்பாய்கிடைத்த மேற்படிப்பைத் துறந்து வராமல் போன தமிழ்நிலாவின் ஞாபகமாக ரூபி தன் மகளுக்கு தமிழ்நிலாவென்று பெயர் வைத்து அவளை நினைவுகளிலும் மனசிலும் இருத்தி வைத்திருக்கும் தோழி. சமாதான காலத்தில் ஊர் பார்க்கும் புலம்பெயர்ந்தவர்களின் பயணங்களில் தமிழ்நிலாவும் வருவாளா என வினாவும் ரூபியின் குழந்தையின் விருப்பு, தமிழ்நிலாவின் தமிழ்நிலா அன்ரியும் அவள் போன்றவர்களின் தியாகமும் பலங்களையெல்லாம் மீறிய பலமாகியதன் அர்த்தங்களை அறியாத அந்தச் சின்னவளுக்குள் தமிழ்நிலாவைக் காணும் ரூபியின் சோகம் இதயம் கனக்கிறது.
இறுதியாய் குமுதினியின் 'பயணம்" பொருளாதாரத் தடை , போக்குவரத்துத் தடை , மருந்துத் தடைகளின் தாக்கங்களால் எம்மக்கள் பட்ட துயர்களின் வலிகளை துயரோடு சொல்லிச் செல்கிறது. சரியான மருத்துவமின்றி அவளது முயற்சிகள் எதுவும் பயனில்லாமல் குழந்தை ரமணா ,
காணாமற்போன அவள் கணவனின் வார்ப்பாக அவள் கைகளில் பிணமாகிக்கிடக்க ஒரு தாயின் அத்தனை துயர்களையும் ஒன்றாக்கிய இதயச்சுமையுடன் பிணமான மகனைக் கொண்டு செல்வதற்கு வாகனம் பிடித்து ஊருக்குச் செல்ல வழயில்லாது கசங்கிய எழுபது ரூபாயுடன் பயணிகளுடன் பயணியாக பிணமான குழந்தையைத் தோழில் போட்டுக் கொண்டு நெரிந்து துவண்டு ஊரையடையும் அவள் இதயச்சுமை எல்லார் இதயங்களையும் பற்றிக் கொள்கிறது.
கற்பனைகளுக்குள் கட்டுப்பட்டுக் கிடக்காமல் 'வழி" யின் விழியில் 13 தமிழீழப்பெண் படைப்பாளிகளும் கதைகளை வார்த்துள்ளார்கள். கதைகள் ஒவ்வொன்றுக்குள்ளும் ஓராயிரம் கதைகள் புதையுண்டு கிடக்கின்றன. அவை காலத்தினால் அள்ளுப்படாமல் காக்கப்பட வானதி பதிப்பகத்தின் வெளியீட்டில் தமிழீழப்பெண்களின் ஆற்றல் மிக்க படைப்புக்கள் நிறையவே எங்களை வந்தடையும் என்பதில் ஐயமில்லை. ஒவ்வொரு எழுத்தாளரும் ஒவ்வொரு வகையிலான ஊர் நினைவுகள் , இளம்பராயத்து கனவுகள் உள்ளிட களத்து அனுபவப் பகிர்தல்கள் , காதலின் சோகம் என ஒவ்வொரு கதையை வாசித்து முடிக்கும் போதும் இதய அறைகளில் துயரை நிரந்தரமாக்கிவிட்டுச் செல்கின்றன. இக்கதைகளை வாசித்து முடித்து சிலவாரங்கள் போனபின்னும் கனவுகள் முழுவதும் இக்கதைகளில் உலவிய மனிதர்களே வந்து போகின்றனர். மனசுமுட்ட துயரின் பாரம் அழுத்திப் பிடிக்கும் அளவுக்கு மனசோடும் நினைவோடும் வழி விழியிலும் மனசிலும் நிரந்தரமாக நிறைந்திருக்கிறது.
Recent comments
2 weeks 14 hours ago
2 weeks 2 days ago
5 weeks 19 hours ago
6 weeks 5 days ago
6 weeks 5 days ago
6 weeks 5 days ago
17 weeks 2 hours ago
17 weeks 3 hours ago
17 weeks 1 day ago
17 weeks 5 days ago