சீட்டு சிவலிங்கம் சிவப்புச் சிவலிங்கமாகிய கதை

by:
அமுதன்

கடந்த வாரம் இலங்கை அரசாங்கத்துக்கு ஆலவட்டம் பிடிக்கும் எஸ்.எல்.டி.எப் என்ற கும்பல் லண்டனில் நடாத்திய ஓர் கூட்டத்திற்கு சென்றிருந்தேன். அங்கு
சிவலிங்கம் என்பவர் சிறப்புரையாற்றினார். இவர் (வயசு) மூத்த இடதுசாரி அரசியல்வாதி, அரசியல் ஆய்வாளர், என்றெல்லாம் சிலரால் வர்ணிக்கப்படுபவர். அங்கு திரண்டிருந்த விரல் விட்டு எண்ணக்கூடிய சனத்திரளில் எல்லோரும் கொட்டாவி விட்டுக்கொண்டு இருக்க நான் மூக்கில் விரலை வைக்காத குறையாய் அவரை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.


புரையோடிப்போயிருக்கும் இனப்பிரச்சனைக்கு இன்றுவரை எந்த ஒரு சிங்கள, தமிழ் அரசியல்வாதியும சொல்லாத தீர்வை, சிறப்பான முறையில் அவர் அடுக்கடுக்காக எடுத்து விட்டார். விரல் விட்டு எண்ணக்கூடிய சனத்திரளுடன் நடைபெற்ற கூட்டம் முடிவடைந்து வீடு திரும்பும் போது இனம் புரியாத மகிழ்ச்சி. எல்லாம் இதுவரை காலமும் என் முன் எழுத்த ஆயிரம் கேள்விகளுக்கு பதில் கிடைக்கப்போகிறதென்ற மகிழ்ச்சி. எம்மினப்பிரச்சனைக்கு தீர்வு கிடைத்து விட்டது என்ற பிரமை. இவையெல்லாம் அந்த அதியுயர் புத்திசாலி, அரசியல் விற்பன்னர், (வயசு) மூத்த இடதுசாரி என தன்னைத்தானே கூறிக்கொள்ளும் சிவலிங்கத்தின் உரையால் ஏற்பட்டதே.


கூட்டம் முடிந்து பணியகம் வந்த எனக்கு ஓர் தொலைபேசி அழைப்பு வந்தது. தன்னை சிவலிங்கத்தின் (அதே சிவலிங்கம்தான்) பெறாமகன் என்று கூறி ஓர் இளைஞன் என்னுடன் உரையாடினான். அவன் சிவலிங்கத்தின் மீது  பாரிய குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி விட்டு தொலைபேசியை துண்டித்துக் கொண்டான். 


என்னால் நம்ப முடியவில்லை. ஆனால் அவ்விளைஞனோ தன்னுடைய குற்றச்சாட்டை நிருப்பிப்பதற்கு, இருபதிற்கும் மேற்பட்டவர்களின் தொலைபேசி இலக்கங்களை எனக்கு தந்திருந்தான்.
அவன் தந்த இலக்கங்களை குறிப்பெடுத்து விட்டு ஒவ்வொன்;றாக தொடர்பு கொள்வோம் என எண்ணி ஓர் தொலைபேசி இலக்கத்தை அழுத்தினேன். எதிர்ப்புறத்தில் "அண்ணா,  அந்தாள் சொன்னது உண்மைதான் என்னிடம்; பதினையாயிரம் வாங்கிய மனுசனும்,  மனுசியும், இப்ப காசைக் கேட்டால்,  நீ எங்கே தந்தனீ? தந்ததற்கு ஆதாரம் உன்னிடம் இருக்கிறதா? நீ, இங்கு உந்தக் காசு, கீPசு என்று போன் எடுத்தால், பொலிஸைக் கூப்பிட்டு புலி காசு கேட்டு மிரட்டுகிறது! என்று உன்னை உள்ளுக்குள்ளை தள்ளுவன் எண்டு மிரட்டுறார். நான் என்னிடம் இருந்த எல்லாத்தையும் வட்டிக்கு ஆசைப்பட்டு கொடுத்திட்டு நடுத்தெருவில் நிற்கிறேன்" என்று எனக்கு சொல்லிக்கொண்டே அழுத அவ்விளைஞன், தன்னுடைய வதிவிட அனுமதி சம்பந்தமான சில சிக்கல்கள் இருப்பதனால் தனது பெயரை வெளியிட வேண்டாமென்றும் தெரிவித்தான். அதிர்ந்து போனேன். ...


இன்னொரு தொலைபேசி இலக்கத்தை அழுத்தினேன் "அண்ணா, நானும் வடமராட்சி வல்வெட்டியைச் சேர்ந்தனான், அவரின்ர மனுசியின் நெருங்கிய உறவினர். இருபத்தைந்தைக் கொடுத்தேன். மாண்டு போனேன். எனக்கு மாமியார் முறையான அவரது மனுசி, இனிக் காசு கேட்டால் மருந்து குடித்து தற்கொலை பண்ணிப்போடுவேன், என்கிறா! நான் ஒன்றும் செய்ய இயலாமல் நிற்கிறேன். கஸ்டப்பட்டு இரவு பகலாக கண்முழித்து, இந்தியாக்காரனின் கடையில் மூட்டை தூக்கியும் சிறுகச் சிறுக சம்பாதித்தது விட்டுட்டு போயிட்டுது" விம்மினான் அடுத்தவனும்.


தொடர் தொலைபேசி அழைப்புகளில் உண்மை புலப்பட்டது. இது ஓர் இருவருக்கு மட்டும் நடந்தவையல்ல, நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். ஆயிரம் பவுண்கள் முதல் இருபத்தையாயிரம் பவுண்கள் வரை ஒவ்வொரு நபரிடமும் வட்டிக்கு என்று கூறி பணம் பெறப்பட்டிருக்கிறது. 
இந்த அற்புதங்களின் பின்னனியில் இருந்தவர் வேறு யாருமல்ல எனக்கு சற்று நேரத்துக்கு முன் விடிவெள்ளியாகத் தெரிந்த அதே சிவலிங்கம்தான். விளிம்புநிலை மக்களுக்காக போராடுவதாக மேடைக்கு மேடை கூறிக் கொண்டு அதே மக்களை சுரண்டி பிழைக்கும் இந்தக் பூர்சுவா (சும்மா சொல்லக்கூடாது அவரின் மொழி நடை எனக்கும் வருகிறது) கும்பலில் அவரது மனைவி ராஜினி. மற்றும் இன்னொரு பெறாமகனும் அடங்குவர். 

இந்தக் கும்பலின் சீட்டுத் திருவிழாவில் தங்களது உழைப்பை இழந்தவர்கள் பெரும்பாலானோர் பிரித்தானியாவில் முறையான வதிவிட உரிமையில்லாமல் அவதிப்படுபவர்கள். நம்பிக்கையின் அடிப்படையில் எந்த ஒரு அத்தாட்சிப் பத்திரமும் இல்லாமல், காசை வட்டிக்கு கொடுத்திருக்கிறார்கள். ஆதலால் வழக்கு தாக்கல் செய்ய முடியாமல் விதியை நொந்து கொணடிருக்கிறார்கள். இருந்தாலும் இவர்களது சுத்து மாத்துக்கள் எல்லோரிடமும் சரிவரவில்லை. இவர்களால் ஏமாற்றப்பட்ட கிழக்கு லண்டன் இல்பேட் (Ilford) பகுதியில் வசிக்கும் திருமதி வசந்தி ஞானசம்பந்தன் தொடர்ந்த வழக்கு நீதிமன்றில் ஏறியுள்ளது.


திருமதி வசந்தி ஞானசம்பந்தனிடம் இவர்கள் பெறாமகனுக்கு வீடு வாங்கவென கூறி இருபத்திஐந்தாயிரம் பவுண்ஸ்களை காசோலையாகவும், ஏழாயிரம் பவுண்களை காசாகவும் வாங்கியுள்ளனர். காசோலையை பெறாமகனது பெயரில் பெற்றதற்கான அத்தாட்சிகள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த இருபத்திஐந்தாயிரம் பவுண்களை பெறாமகனிடமிருந்து தாம் பெற்றுக்கொண்டதாக தற்போது இந்த திருநெல்வேலிக்கே அல்வா கொடுக்கும் சிவலிங்கம் குடும்பம் ஒத்துக் கொண்டுள்ளதாம்.


எனக்குக் கிடைத்த தகவலின்படி இந்த சிவலிங்க மோசடியில் நானூற்று ஐம்பதினாயிரம் பவுண்களுக்கு அதிகமாகமான பணம் சுருட்டப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் வடமராட்சி, வல்வெட்டிப்பகுதியை சேரந்தவர்கள் என்பதால், இந்த மோசடியில் தனக்கு எந்த தொடர்பும் கிடையாது என மனைவியின் மேல் பழியைப் போட்டுவிட்டு, ஊருக்கு உபதேசம் செய்கிறார் யாழ் கட்டுவன் பகுதியை பிறப்பிடமாகக் கொண்ட சிவலிங்கம். அவரது மனைவியோ, தன்னை பணத்தைக் கேட்டு நெருக்க வேண்டாம் என உறவினர்களிடம் மன்றாடுகிறார்.


பலமுறை முயன்றும் சிவலிங்கத்தையோ அவரது மனைவியையோ என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரது பக்க நியாயத்தையும் அறிய தந்தால் அதனையும் வெளிப்படுத்த ஆவலாக இருக்கிறேன்.


இங்கு சுருட்டப்பட்ட பணத்திற்கு என்னவானது? .. எனது புலன் விசாரணை தொடர்கிறது .. மேலதிக தகவல்களுடன் சந்திக்கிறேன்.