வணக்கம்!
இந்த ஆண்டின் இறுதிப் பேப்பரில் உங்களைச் சந்திக்கிறோம். சினோ சுரண்டி கைகள் வலித்தாலும் உங்களுடன் எங்கள் இன்பத்தையும் துன்பத்தையும் பகிர்ந்து கொள்ள விசைப்பலகையில் தட்டும்போது வலியெல்லாம் பறந்து போகிறது. ஏற்கனவே ஊர் முழுக்க ஐஸ் இதுக்கிள்ளை நீங்கள் வேறை ஐஸ் வைக்கோணுமோ என்று நீங்கள் நினைக்கலாம் ஆனால் சொன்னது எனனவோ உண்மைதான்.
மன்னிக்கோணும், போன பேப்பர் ஐரோப்பாவிலை வெளியிடச் சுணங்கியிட்டுது. இருந்தாலும் கனடாவிலை வெளியான பேப்பரை பாத்திட்டு அதில் வெளியாள கட்டுரையைக் காரணங்காட்டி ஐரோப்பிய நாடொன்றிலிருக்கும் எங்கட தோழி ஒராளை சிலர் பயமுறுத்தியிருக்கிறார்கள். விசயம் பொலிஸ்வரை போயிருக்கிறது. சிலபேர் ஒரு பேப்பரை தாங்கள் படிக்கினமோ இல்லையோ கனடா, பிரித்தானியா, ஜெர்மனி, யப்பான் எண்டு பன்நாட்டு அதிகாரியளுக்கும் படிக்க் கொடுக்கினம். மகிழ்ச்சியிலை என்ன சொல்லிறதெண்டே தெரியேல்லை. ஆனால் அந்தாக்களுக்கு தமிழ், ஆங்கிலம் படிக்கவருமோ எண்டுதான் தெரியேல்லை.
இப்பிடி வெருட்டிற ஆக்களுக்கு ஒண்டு சொல்லிறம். ஊர்வழமை, சமயம், சாத்திரம் எண்டு தனிமனித சுதந்திரத்திலை தலையிடுற ஆக்களையும் அவர்களுக்கு ஒத்துழைப்பவர்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து இந்த மூடத்தனத்தை ஒழிப்பதில் ஒரு பேப்பர் தொடர்ந்து பங்களிக்கும். எந்த மிரட்டலுகளுக்கும் நாங்கள் அஞ்சப்போவதில்லை.
ஒரு பேப்பரில் வெளிவரும் கட்டுரைகளில் தெரிவிக்கப்படும் கருத்துக்களில் உங்களுக்கு உடன்பாடில்லை எனின் உங்கள் கருத்துக்களை எழுதி அனுப்புங்கள். உங்களது கருத்துக்களும் எங்கள் வாசகர்களைச் சென்றடையவேண்டும் என்பதில் நாங்கள் அக்கறையாக இருக்கிறோம். மாறாக உள்ளுக்குள் பொருமி உங்கள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்காதீர்கள். எல்லாரையும் எல்லா நேரமும் திருப்திப்படுத்த முடியாவிட்டாலும் உங்கள் கருத்துக்களை வெளியிடுவதில் நாங்கள் தயக்கம் காட்டுவதில்லை.
எங்கடை சமூகத்திலை நடக்கிற சில தில்லு முல்லுகளை வெளிபடுத்திறதுக்கு தங்கடை சொந்தப்பெயரை பாவிக்க சிலர் தயங்கினம். ஆதாலை மொட்டையாய் சில செய்தியள் வந்தாலும் அதுகளிலை இருக்கிற உண்மைய கூடிய வரைக்கும் விசாரிச்சுப் போட்டுத்தான் பிரசுரிக்கிறம். இருந்தாலும் சிலது பிழைச்சுப் போடுது.
வேறு ஊடகங்களில் வெளிவந்த விடயங்களை மறுபிரசுரம் செய்கிறபோது, அவற்றின் மூலப்பிரதியின் விபரத்தை வெளியிட்டு வருகிறோம். சிலசமயங்களில் அவ்விபரங்கள் தவறவிடப்படுகிறது. கடந்த பேப்பரில் 5ம் பக்கம் வெளியான “அப்பாவி என நிருபிக்கப்படும்வரை தமிழர்கள் இங்கு பயங்கரவாதிகளே” என்ற கட்டுரையின் மூலம் உதயன் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் என்பதை தெரியப்படுத்துகிறோம்.
புதிய வருடத்தில் இன்னும் பல சுவாரசியமான விடயங்களுடன் உங்களைச் சந்திக்கிறோம். அது வரை விடுமுறைக்கால வாழ்த்துக்களுடன் விடைபெற்றுக் கொள்கிறோம்.
Recent comments
2 weeks 6 days ago
7 weeks 5 days ago
8 weeks 23 hours ago
10 weeks 5 days ago
12 weeks 3 days ago
12 weeks 3 days ago
12 weeks 3 days ago
22 weeks 5 days ago
22 weeks 5 days ago
22 weeks 6 days ago