கடந்த வாரம் லண்டனில் நடந்த மாவீரர் நாள் நிகழ்வு முன்னரைவிட எழுச்சியாக நடைபெற்றது. பணிக்குரிய நாளான செவ்வாய் பகலில் இருபத்தைந்தாயிரம் மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இம்முறை சிறப்புரையாற்ற வந்தவர் பேராசிரியர் சு.ப. வீரபாண்டியன். தன்னால் பாலா அண்ணாவைப்போல் தலைவரது உரைக்கு பொழிப்புரை வழங்கமுடியாது எனத்தன்னடக்கத்துடன் கூறிவிட்டு, தலைவரது பேச்சையொட்டி சில கருத்துக்களை தெரிவிப்பதாகக்கூறித் தனது உரையை நிகழ்த்தினார்.
உண்மைதான் தலைவர் தமிழிலே விளக்கமாக நிகழ்த்துகிற உரையில் பொதிந்திருக்கிற விடயங்களை, எடுக்கப்பட்ட தீர்மானங்களின் பின்னணியை, மேற்கொணடு ஆற்றவேண்டிய பணிகளை விளக்குவதற்கு பாலா அண்ணாவே தேவையாக இருக்கிறது. இது பாலா அண்ணாவின் புலமை அல்லது மொழிநடை சார்ந்தது அல்ல என்பதும் தமீழபோராட்டத்தில் அவரது பட்டறிவும், தமிழர் தலைமைபற்றிய புரிந்துணர்வு தொடர்பானது என்பதும் அனைவரும் அறிந்ததே.
ஈழதேசத்தின் குரலாக இருந்த பாலா அண்ணா மறைந்து ஒரு வருடமாகிவிட்டது இந்த ஒரு வருடகாலத்தில் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுவார்த்தைக் கதவை மீளத் திறக்கவில்லை. அதனால் பாலா அண்ணாவுக்கான தேவை எழவில்லை என யாரும் சொல்லி விடமுடியாது. நோய் தன்தேகத்தை தின்று கொண்டிருந்தபோதும் தளராது தன்தேசத்திற்காக உழைத்த தத்துவாசிரியர் பாலா அண்ணா, இன்றிருப்பின் தேசவிடுதலைக்காக பல்வேறு வழிகளிலும் இன்னமும் தன் பணியைத் தொடர்ந்திருப்பார். நோயுடன் அவதிப்பட்ட இறுதிகாலத்தில்கூட அவர் நு}ற்றுக்கணக்கான பங்கள் கொண்ட புத்தங்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். பேச்சுவார்த்தை மேசைகளில் தான்பெற்ற அனுபவங்களை பற்றி அவர் எழுதிய “போரும-சமாதானமும்” என்ற அவரது இறுதி நு}ல் இக்காலத்தில் எழுதப்பட்டதே. தனது அனுபவங்களை ஆவணப்படுத்துவதல் அவர்காட்டிய அக்கறையின் வெளிப்பாடே இந்நு}ல்.
பாலா அண்ணாபற்றி அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் பல்வேறு கருத்துக்களைச் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவை எல்லாமே ஒரேமாதிரியானவை எனக்கூறமுடியாது. அவர் மீது ஒரளவு அதிருப்தி கொண்டவர்களும் இருந்திருக்கிறார்கள். விடுதலைப்போராட்டத்தில் பங்குபற்றி காடுமேடெல்லாம் திரிந்த அவரது துறவற வாழ்வைக்கூட விமர்சிப்பவர்கள் இருக்கிறார்கள். இருப்பினும் அவர்கள் அனைவரும் பாலா அண்ணா பேச்சுவார்த்தை மேசைகளில் செய்த பங்களிப்பையிட்டு மனம்விட்டு பாராட்டுபவர்களாகவே இருக்கிறார்கள்.
பாலா அண்ணாவுக்கு முன்பு அரசியல் பேச்சுவார்த்தைக்கு சென்றவர்களது அரசியல் அறிவு ஒன்றும் குறைத்து மதிப்பிடக்கூடியது அல்ல. ஆனால் அவர்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வந்தார்கள் அல்லது ஏமாற்றப்படுவது தெரியாமலே பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்தார்கள். பாலா அண்ணா பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத்தொடங்கிய காலத்தில்தான் இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையை விளக்குவதற்காக உங்களை ஒன்று கேட்கிறேன். தந்தை செல்வா அவர்களோ அமிர்தலிங்கம் அவர்களோ ஈடுபாடில்லாமல் ஒப்புக்கு பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டார்கள் என தமிழர்தரப்பிலிருந்தோ. எதிர்தரப்பிலிருந்தோ குற்றச்சாட்டு வந்திருக்கிறதா? இல்லையே உள்ளார்ந்த ஈடுபாட்டுடன்தான் இவர்கள் பேச்சுக்களில் கலந்துகொண்டதாகவே அனைவரும் நம்புகிறோம். இருந்தும் இவர்களால் பேச்சுவார்த்தைகள் மூலம் எதனையும் சாதிக்க முடியவில்லை. அவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் கிழிக்கப்பட்டு, இணக்கப்பாட்டுக்கு வந்த விடயங்கள்கூட நடைமுறைப்படுத்தப்படவில்லை. இழித்தவாயர்களாக ஏமாளிகளாக இருந்த எங்கள் தலைவர்கள் அவறறை மறைத்து வீராப்பு பேசியபடி எங்கள் முன்வந்திருக்கிறார்கள்.
பாலா அண்ணாவும் அவரது பேச்சுவார்த்தைக் குழுவினர் மீதும், அவர்கள் காலத்தை கடத்துகிறார்கள் உள்ளார்த்தமாய் பேச்சுவார்ததைகளில் பங்கு பற்றவில்லை என நிறையவே குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் அவர் பேச்சுவார்த்தை மேடைகளில் தமிழர் உரிமைகளை தாரைவார்த்துவிட்டார் அல்லது ஏமாற்றப்பட்டுவிட்டார் என தமிழர் தரப்பிலிருந்து யாரும் குற்றஞ்சாட்டவில்லை.
முன்னைய தமிழர்தலைவர்களின் சோரம்போன தன்மை கண்டு மனம் புழுங்கியவர்களுக்கு பாலா அண்ணா புதுப்பிறவியாகவே தோன்றினார்.
பாலா அண்ணா வெறும் சித்தாந்தவாதியாக மார்க்சிச கோட்பாடுகளை வரித்துக் கொண்டவராக இருந்த காலம் ஒன்று இருந்திருக்கிறது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தத்துவாசிரியராக தமிழீழ தேசியத்தலைவருடன் இணைந்து செயற்பட ஆரம்பித்ததிலிருந்து தமிழ் மக்களின் வாழ்வியல் நிலைக்கேற்ப தன்னை சிறிது மாற்றிக் கொண்டு, அதற்கேற்ப அரசியல் வேலைகளைச் செய்துவந்தார்.
மண்ணின் யதார்த்தத்திற்கு ஏற்ப செயற்பட்டமையால்தான அவர் எல்லா மட்டங்களிலும் உள்ள தமிழர்களுக்கு வேறுபாடின்றி ஒரு தோழனாக இருந்தார்.
தமிழீழ தேசம் சர்வதேச அங்கீகாரத்தை நோக்கி தனது அரசியல் நகர்வுகளை மேற்கொள்கின்ற இன்றய காலகட்டத்தில், பாலா அண்ணா என்ற அரசியல் மதியுரைஞரை இழந்து தவிக்கிறது.
Recent comments
1 year 20 weeks ago
1 year 21 weeks ago
1 year 26 weeks ago
1 year 29 weeks ago
1 year 29 weeks ago
1 year 29 weeks ago
1 year 30 weeks ago
1 year 33 weeks ago
1 year 38 weeks ago
1 year 43 weeks ago