மலேசியா:எழுச்சிபெறும் தமிழர்கள்

உலகெங்கிலும் அடக்கி ஒடுக்கப்பட்ட சிறுபான்மை இனங்கள் எழுச்சி பெற்று தங்கள் உரிமைகளுக்காக போராடும் இக்காலத்தில் மலேசியா வாழ் தமிழர்களும் தமது உரிமையை வேண்டி வீதிக்கு இறங்கியிருக்கிறார்கள். அண்மையில் சுமார் ஐம்பதாயிரம் பேர் கலந்து கொண்ட அவர்களது அமைதி ஊர்வலமொன்று முன் அனுமதி பெறவில்லை (உண்மையில் மலேசிய அரசு அனுமதி வழங்கவில்லை) எனக்காரணங்காட்டி மலேசியக் காவற்துறையால் மூர்க்கதனமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இவ்வார்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களை ஊடகங்கள் இந்தியர்கள் என அடையாளங்காட்டினாலும். இவர்களில் பெரும் பகுதியினர் இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள்.

எமது மலையக மக்கள் போலவே, ஆங்கிலேயரால் தொழில் ஆசை காட்டி தமிழ்நாட்டிலிருந்து  கொண்டு வரப்பட்ட இந்தத் தமிழர்கள் கடந்த நூற்றி ஐம்பது ஆண்டுகளாக பரம்பரை பரம்பரையாக மலேசியாவில் வாழ்ந்து வருகிறார்கள். இருப்பினும் மலேசியா பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து விடுதலைபெற்ற காலந்தொட்டு தொழில்வாய்ப்பு, கல்வி போன்ற பல துறைகளிலும் புறக்கணிக்கப்பட்ட ஒரு சமூகமாகவே வாழந்து வருகிறார்கள்..

தமிழர்களது இந்தப்போராட்டம் மேற்கததைய ஊடகங்களின் கவனத்திற்கு வந்தமைக்கு, அவை மலேசிய தமிழ்த்தொழிலாளர்கள் மீது கொண்ட கரிசனைதான் காரணம் எனக்கூற முடியாது. மாறாக இறுக்கமான அரசியற் சட்டங்களை வைத்திருக்கும் சனநாயக விழுமியங்களை மதிக்காக மலேசிய அரசின் மீது அழுத்தங்களை பிரயோகிக்கவே இவ்வாறு நடந்து கொள்கின்றன. அண்மைகாலமாக மலேசியா பொருளாதார ரீதியாக பெருவளர்ச்சி கண்டுவருகிறது என்பதனையும் இங்கு கவனத்தில் எடுக்கவேண்டும்.
 
இனி எங்கள் தமிழர் விடயத்துக்கு வருவோம்…

மலேசியாவிலிருந்த பெருந்தோட்டங்களிலும், ஏனைய இடங்களிலும் தொழில் புரிவதற்காக சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து பெருமளவான மக்கள் கொண்டு செல்லப்பட்டனர். மலேசியாவில் இப்போதுள்ள 27 மில்லியன் சனத்தொகையில் கிட்டத்தட்ட 7.5 வீதமானவர்கள் இந்திய வம்சாவளியினர் ஆவர். இவர்களில் 85 வீதமானவர்கள் தமிழர்கள். அதாவது 2 மில்லியனுக்கு சற்றுக் குறைவான தமிழர்கள் இங்கு வாழ்கிறார்கள்.

1957ம் ஆண்டு பிரித்தானியர்கள் மலேசியாவை விட்டு வெளியேறும் போது ரீட் ஆணையம் என்ற சுதந்திர மலாயாவின் புதிய அரசியல் அமைப்புக் குழுவை ஏற்படுத்தினர் (ரீட் ஆணையம்). அக்குழுவிடம் தமிழர்களின் நலன்களைப் பாதுகாக்க எடுக்க வேண்டிய வழிமுறைகள் தொடர்பாகவும் பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டன. இக்குழுவுக்கு ஆர்.என்.வீரப்பன் என்பவர் தமிழர்கள் சார்பில் தமிழர் நலன் தொடர்பாக கபை;பிடிக்கப்பட வேண்டிய வழிமுறைகளை ஒரு மனு மூலம் தெரிவித்திருந்தார்.

மலேசியாவின் அரசமைப்புச் சட்டத்தை அந்த ஆணையம் உருவாக்கும்போது, அதில் தமிழர்களைப் பாதுகாக்க போதுமான வழிமுறைகளை உண்டாக்கத் தவறிவிட்டது.
சுதந்திரம் அடைந்ததிலிருந்து பல வழிகளிலும் சிறுபான்மையினர் புறக்கணிக்கப்பட்டனர். பல துறைகளிலும் அவர்கள் புறக்கணிக்கப்பட்டனர்.

விழிப்புணர்வு பெற்றுள்ள தமிழர்கள் வழக்கறிஞர்களான வேதமூர்த்தி, உதயகுமார்,;மனோகரன் போன்றோர் தலைமையில் தமது உரிமைகளுக்கா அரசியற்போராட்டங்களை முன்னெடுப்பதாக ஹின்டுராப் என்ற அமைப்பை உருவாக்கினார்கள். இதில் இருபது மலேசிய தமிழ் அமைப்புக்கள் அங்கம் வகிக்கின்றன. வழக்கறிஞர் உதயகுமார் லண்டனுக்கு வந்து 1957ல் ரீட் ஆணையத்துக்கு தமிழர்கள் சமரப்பித்த மனுவின் பிரதியை இங்குள்ள ஆவணக்காப்பகத்திலிருந்து பெற்றுச் சென்றுள்ளார்.

இது தொடர்பில் பிரித்தானிய தமிழர்களது உரிமையை காக்கத் தவறிவிட்டது எனவும் பாதிக்கப்பட்ட தமிழருக்கு தலா 10 ஆயிரம்; ஸ்ரேலிங் பவுண்ஸ் நஸ்ட ஈடு வழங்குமாறும் வழக்கறிஞர் பொன்னுச்சாமி வேதமூர்த்தி பிரித்தானிய நீதிமன்றத்தில் இவ்வருடம் ஒகஸ்ட்மாதத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார்.


இக்கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்றை கோலாலம்பூரில் உள்ள பிரித்தானி உயர்ஸ்தானிகராலயத்தில் கையளிப்பதற்காகவே தமிழர்கள் இந்த ஊர்வலத்தை ஒழுங்கு செய்திருந்தனர். ஆனால் மலேசிய அரசு ஊர்வலத்திற்கு அனுமதி தர மறுத்துவிட்டது. அனுமதியின்றி நடாத்தப்பட இருந்த பேரணியில் சுமார் ஐம்பதாயிரம் மக்கள் திரண்டிருந்ததாக சுயாதீனமான செய்திகள் தெரிவிக்கின்றன. அங்கு திரண்டிருந்தவர்களை தண்ணீர் குளாய்கள் மூலம் வேகமாக தண்ணீர் பாச்சியும், ரப்பர் குண்டுகளை எய்தும், கண்ணீர் புகையைடித்தும், அடித்து துன்புறுத்தியும் மலேசிய காவல்துறையினர் பொலிசார் பேரணி செல்லவிடமால் தடுத்துவிட்டார்கள்.


அமைதிப்பேரணி தடுக்கப்பட்டமை, காவல்துறையினரின் அடாவடித்தனம் ஆகியவற்றைப்பற்றி மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியை சேரந்தவரான அமைச்சர் தேவமணியை அல்ஜசிரா பேட்டி கண்டது. நம்மூர் ஆனந்தசங்கரி பாணியில் அமைதிப்பேரணியில் ஈடுபட்டவர்களைக் கண்டித்த அவர், தமிழர்கள் மத இணக்கப்பாடடை குலைக்க முனைவதாக குற்றம் சாட்டினார். எச்சில் இலையை நக்குபவரிடம் இதற்கு அதிகமாக எதிர்பார்க்க முடியாதுதான்.

இவ்விடயம் தொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு கருத்துத் தெரிவித்த பேராசிரியர் இராமசாமி அவர்கள், பேரணியில் கலந்து கொள்ளச் சென்றவர்கள் காந்தியின் படங்கொண்ட பதாகைகளை காவிச்சென்றதை சுட்டிக்காட்டி, இதுபோன்ற அமைதிப்பேரணிகள் அடக்கப்பட்டால் தமிழர்கள் பிரபாகரனது வழியில் போராட வேண்டிவரும் என எச்சரித்தார்.

மலேசிய தமிழர்களினது உரிமைப்போராட்டத்திற்கு ஜெயலலிதா உட்பட தமிழகத்தலைவர்கள் தமது ஆதரவினைத் தெரிவித்திருப்பது ஆறதலைத் தருகிறது. ஈழத்தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களது ஆதரவு மலேசியத்தமிழர்களுக்கு என்றென்றும் இருக்கும் என்பதை உறுதியாக நமபலாம்.